Saturday, 28 October 2017

அதர்மத்துக்குள் தர்மத்தைக் காணத் தெரிந்தவனே யோகி


கிருஷ்ணன் சொன்ன ‘முன்னோர்’கள் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். திருமண சம்பிரதாயங்களில் ஒன்று - மணமகன், மணமகள் இருவர் பக்கத்திலிருக்கும் இரு புரோகிதர்கள், அவரவருடைய ஏழு மூதாதையர்களைப் பற்றிச் சொல்லி, அந்தப் பெரியவர்களின் ஆசிர்வாதம் இந்த புதுமணத் தம்பதிகளுக்குக் கிடைக்குமாறு மந்திரங்கள் மூலம் வேண்டிக்கொள்வார்கள். அதாவது, நம் மூதாதையரை நம் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் நினைத்துக்கொள்ள வேண்டும் என்பது நமது நாகரிகமாக இருந்திருக்கிறது, இருந்துவருகிறது. அதுமட்டுமல்ல, நாம் கோயிலுக்குப் போவதும், முக்கியமாக குலதெய்வக் கோயிலுக்குப் போவதும் இந்த அடிப்படையில்தான். நம் மூதாதையர் வழிபட்ட கோயிலுக்குச் சென்று நாமும் வழிபடும்போது அவர்களை நாம் நினைத்துக்கொள்ளவேண்டும். 

அதுதான் இத்தகைய வழிபாட்டின் மூல நோக்கம். நம் பெரியவர்கள் வணங்கியிருக்கக்கூடிய தெய்வம், அவர்களுடைய பக்தியைத் தான் ஈர்த்துக்கொண்டு, வேண்டிய அருளினைச் செய்திருக்கிறது. அதாவது அந்த விக்ரகத்தில் அவர்களுடைய உணர்வுகள் ஐக்கியமாகியிருக்கின்றன. ஆகவே அந்த விக்ரகத்தை நாம் தரிசிக்கும்போது நம் மூதாதையரையும் மனமகிழ்வோடு தரிசிக்கும் உணர்வை நாம் பெறுகிறோம். அதனால்தான் காஞ்சி மகா பெரியவர், புதிது புதிதாகக் கோயில்களை நிர்மாணிப்பதைவிட, பழைய, புராதனக் கோயில்களைப் புனருத்தாரணம் செய்யுங்கள், போதும், என்று பக்தர்களைக் கேட்டுக்கொண்டார். பிரபல எழுத்தாளர், அமரர் சுஜாதா தன் அனுபவமாக இப்படிச் சொல்லியிருக்கிறார்: ‘இந்தப் பெருமாளை சேவிக்கும்போது நம் தாய், தந்தையர், பாட்டனார், முப்பாட்டனார்களை இந்தப் பெருமாளின் மூலம் பார்க்கிறோம் என்பதை அன்று உணர்ந்தோம். 

அவர்கள் பலப்பல வருடங்களாக இந்தப் பெருமாளின் முக விலாசத்தைப் பார்த்துப் பார்த்து, இவனையே சிந்தித்து வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இன்னமும் இவனுக்குள்ளேயே வாழ்கிறார்கள். நம் வாழ்வுகளுக்கு ஓர் இடைவெளியற்ற தொடர்பை இவனே ஏற்படுத்திக் கொடுக்கிறான்.’ - தன் இறப்புக்கு முன் இறுதி தரிசனமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசித்தபோது தமக்குத் தோன்றியதாக திரு சுஜாதா அவர்கள் தெரிவித்த உணர்வு இது. ஆகவே ‘உன் முன்னோர்கள் செய்ததுபோல நீயும் கர்மாக்களை நிறைவேற்று,’ என்று கிருஷ்ணனிடம் அர்ஜுனன் சொல்வதன் முக்கியத்துவத்தை நம்மால் உணர முடிகிறது. 

கிம் கர்ம கிமகர்மேதி கவயேப்யத்ர மோஹிதா
தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஞாத்வா மோக்ஷயஸேசுபாத் (4:16)

‘‘கர்மம் என்பது எது, கர்மம் அல்லாதது என்பது எது? இதைத் தீர்மானிப்பதில் புத்திமான்களுக்கும்கூட குழப்பம் வந்து விடுகிறது. அந்த வித்தியாசத்தை நான் உனக்குச் சொல்கிறேன், தெளிவாக்குகிறேன்.’’ எதைச் செய்தால் கர்மம் செய்வதாகச் சொல்லப்படும், எந்தச் செயல் கர்மம் அல்லாததாகக் கருதப்படும்? நம் தினசரி நடவடிக்கைகள் கர்மா சார்ந்தவையா? அப்படியென்றால் கர்மா அல்லாதது என்பது எது? சும்மா உட்கார்ந்திருப்பதா, ஓய்வெடுப்பதா, தூங்குவதா? 
அப்படியானால் பார்ப்பது, கேட்பது, நுகர்வது, ருசிப்பது, பேசுவது, நடப்பது, ஓடுவது, படி ஏறுவது-இறங்குவது, கைகளால் சைகை காட்டுவது - இதெல்லாம்தான் கர்மாக்களா? நன்கு படித்தவர்கள்கூட இப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் கிருஷ்ணன். உடல்ரீதியான, அவயவங்கள் மேற்கொள்ளும் பணிகள் கர்மாக்கள் அல்ல என்பது அவர் கருத்து. சரி, எது கர்மா, எது கர்மா இல்லை?

கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண
அகர்மணஸ்ச பொத்தவ்யம் கஹனா கர்மணோ கதி (4:17)

‘‘சாஸ்திரம் எதைச் செய்யச்சொல்லி அனுமதிக்கிறதோ அதுதான் கர்மம். அது எதை விலக்கச் சொல்கிறதோ அதை ஒருவன் விலக்கவேண்டும். ஆகவே கர்மம் எது என்று தெரிந்துகொள்ளவேண்டும். கர்மத்தின் கடந்த நிலையையும் புரிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால், கர்மத்தின் போக்கு அவ்வளவு ஆழமானது, அறிந்துகொள்ள அரியது.’’மீண்டும், எது சரி, எது சரியில்லை என்ற தர்க்கத்துக்குள்ளேயே போகவேண்டியிருக்கிறது. சாஸ்திரம் அனுமதிக்கும் ஒரு செயலே கிருஷ்ணன் சொல்லும் கர்மம் என்று வைத்துக்கொண்டால், அந்தச் செயலை மேற்கொள்ளாவிட்டால் அது அகர்மமாகிவிடுமா? ஒருவருக்கு சரியெனப்படுவது, இன்னொருவருக்கு சரியல்லாததாகிவிடுகிறதே, அப்போது கர்மாவுக்கான உண்மையான பொருள் என்ன? கொலை செய்வது பாபமான செயல்தான். அது கோபத்தின் உச்சகட்ட வெளிப்பாடு. வன்மத்தின் முதிர்ந்த நிலை. பழிவாங்கும் எண்ணத்தின் அதிகபட்சப் பரிமாணம். தனிப்பட்ட விரோதத்தின் தனிமனிதத் தீர்ப்பு. ஆனால் இந்தக் கர்மாவுக்கு வழக்கு உண்டு, விசாரணை உண்டு, சாட்சி உண்டு, முடிவாக, தண்டனையும் உண்டு.

இதே கொலை ஒரு யுத்தக் களத்தில் நிகழுமானால் அது போர் தர்மமாகிவிடுகிறது! இது குற்றமல்ல. இதற்கு விசாரணையும் கிடையாது, தீர்ப்பும் கிடையாது. இது சாஸ்திரம் அனுமதிக்கும் கர்மம்! இந்த நியதியிலிருந்து விலகுவதுதான் விகர்மம். முன்னோர்கள் இதைத்தான் செய்தார்கள். கொலை செய்வது பாபம் என்று கருதினார்கள். ஏன், அடுத்தவருக்குச் செய்யும் சிறு மன, உடல் உபாதைகளும் தவறானவை, ஏற்றுக்கொள்ளத் தகாதவை என்று கருதினார்கள். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று ராமலிங்க அடிகளார் மனமுருகியது இந்த ஜீவகாருண்யத்தால்தான். மகாவீரர் சிந்தனைகளைப் பின்பற்றுபவர்கள், இன்றும் தம் வாய்க்கு ஒரு துணி மறைப்பு அணிகிறார்கள் என்றால், தம் வாயிலிருந்து புறப்படும் உஷ்ண சுவாசத்தால், வெளிச்சூழலில் காற்றில் மிதக்கக்கூடிய கிருமிகள் மடியக்கூடாதே என்ற இரக்கத்தால்தான். இரவில் விளக்கு வைப்பதற்கு முன் அவர்கள் இரவு உணவை முடித்துக்கொண்டு விடுவதும் இந்த கிருமிவதையைத் தவிர்க்கும் உயரிய எண்ணத்தால்தான். 

ஆனால், இந்த ஜீவகாருண்யம் போர்க்களத்திற்குப் பொருந்துமா? இப்போது சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுபவர்கள் மீது காவல்துறையினர் பிரயோகிக்கும் தடியடிக்கும்கூடப் பொருந்தாதே! ஆக, எங்கெங்கு எந்தெந்த கர்மாக்களைச் செய்யவேண்டுமோ அங்கங்கு அவற்றைச் செய்யத்தான் வேண்டும். இப்படித்தான் சாஸ்திரமும் சொல்கிறது, முன்னோர்களும் செய்துவந்தார்கள் என்று கிருஷ்ணன் வலியுறுத்திச் சொல்கிறார். செய்யவேண்டிய கர்மாவிலிருந்து பின்வாங்குவது என்பது இயற்கைக்கு முரணானது மட்டுமல்ல, நம் முன்னோர்களின் செயல்களை அவமதிப்பதாகவும் ஆகும். ஆகவே எது கர்மா, எது கர்மா இல்லை என்ற பாகுபாட்டைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். பணம் சம்பாதிப்பது என்பது ஒரு வினையாற்றலின் விளைவு, பலன். ஆனால் இந்தப் பணம் ஒரே நிலைத்த தன்மை கொண்டது. அதன் மதிப்பு ஒரே மாதிரியானது. கை மாறினாலோ, அழுக்கடைந்துவிட்டாலோ, கசங்கியிருந்தாலோ எந்த நிலையிலும் அதன் மதிப்பு குறைவதேயில்லை.

ஆனால் இந்தப் பணம் எந்த வழியிலும் சம்பாதிக்கப்படலாம். பணம், ஒருவன் செய்யும் கர்மாவைப் பார்ப்பதில்லை. தன்னை சம்பாதிக்க அவனுக்கு என்னத் தகுதி இருக்கிறது என்று கேட்பதில்லை. தான் அவனைச் சேரவேண்டும் என்றிருந்தால், உடனே ஓடிப்போய் அவனிடம் சேர்ந்துவிடுகிறது. நியாயத்துக்கும், நீதிக்கும் புறம்பாகச் செயல்படுகிறானே இவனிடம் போய்ச் சேருவதா என்ற எண்ணம் கொள்ள அதற்கு உரிமையில்லை. அது வெறும் ஜடம். யாரிடம் கொடுக்கப்படுகிறதோ அவரிடம் போய்ச்சேரும். அவ்வளவுதான்.ஆனால், அது எங்கேனும் மிகுந்திருக்குமானால் அங்கே அது ஆணவத்தையும், அகங்காரத்தையும் வளர்க்கவல்லதாக இருக்கிறது! எங்கேனும் தேவைக்கும் கீழாகக் குறைந்திருக்குமானால் அங்கே கவலையையும், பொறாமையையும் உண்டுபண்ணுகிறது! இத்தனைக்கும் அது ஒரு ஜடம்! இப்படி, தன்னை வைத்திருப்பவர்களிடம் பல்வேறு உணர்வுகளை உருவாக்குகிறதே தவிர, தான் குறிப்பிட்ட ஒருவரால் நேர்மையாக சம்பாதிக்கப்பட்டதில்லை என்று அதற்குத் தெரியாது. ஏனென்றால் அது வெறும் ஜடம்.

ஒரு செயலினால் பணம் ஈட்டுபவருக்கு, தான் மேற்கொள்ளும் செயல் நேர்மையற்றது என்று நிச்சயமாகத் தெரிந்தாலும் அவர் தொடர்ந்து அதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்றால், அவருக்கு சம்பாத்தியத்தில் மட்டுமே நாட்டம் என்பது புரிகிறது. அதேசமயம் நேர்மையாகப் பணியாற்றுபவர் தன்னுடைய அந்தப் பணியால், தன் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடியாத மிகக் குறைந்த அளவே பணம் சம்பாதிக்கிறார். என்றாலும், அப்போதும் அவர் சந்தோஷமாகவே இருக்கிறார் என்றால் இவர் இயற்றும் கர்மா சரியானது, சாஸ்திரம் அனுமதிப்பது, முன்னோர்கள் மேற்கொண்டது என்று அர்த்தம்.

கர்மண்யகர்ம ய பச்யேதகர்மணி ச கர்ம ய
ஸ புத்திமான் மனுஷ்யேஷு ஸ யுக்த க்ருத்ஸ்னகர்மக்ருத் (4:18)

‘‘இயற்றும் கர்மத்தில் அதர்மம் நிலவுவதையும், அகர்மத்திலும் தர்மம் நிலவுவதையும் யார் பார்க்கிறானோ அவனே புத்திமான். அவன்தான் யோகி. அவனே பரிபூரணமான கர்மங்களைச் செய்பவன்.’’ நற்செயல்களாகத் தோன்றுவனவெல்லாம் நல்கர்மாக்களா? அதேபோல துர்செயல்களாகத் தோன்றுவனவெல்லாம் துர்கர்மாக்களா?ஒரு கசாப்பு கடைக்காரன் தன் வாழ்வுக்காக ஆடுகளைக் கொன்று, வெட்டி வியாபாரம் செய்கிறான். தன் வாழ்வாதாரத்துக்காக அவன் செய்யும் இந்தச் செயல் தர்மம் சார்ந்ததா? உயிர்கள் பறிக்கப்படும் இந்தச் செயல் அதர்மம் சார்ந்ததா? இது தர்மத்துக்குள்ளேயே இருக்கும் அதர்மம்! சமூகத்துக்குப் பெருங்கேடு விளைவித்த ஒருவனை காவல்துறையினர் கைது செய்கிறார்கள். அந்தக் குற்றத்தின் பின்னணி, இனிமேலும் அதேபோலத் தொடரக்கூடிய குற்றங்களுக்கான அவனுடைய திட்டங்கள் இவற்றைத் தெரிந்துகொள்வதற்காக அவனை அடித்துத் துன்புறுத்துகிறார்கள். 

சமுதாயத்துக்கு வன்முறையால் அவன் கேடுவிளைவித்தது அதர்மம்; அதேமாதிரியான வன்முறையால் குற்றவாளியிடமிருந்து உண்மையை அறிய முற்படுவது தர்மம்! அதாவது, அதர்மத்துக்குள்ளேயே இருக்கும் தர்மம்! பேருந்துப் பயணத்தில் நாம் முன்னேறிச் செல்கிறோம். அதேசமயம் ஜன்னல் வழியாக நம்மை எதிர்நோக்கிக் கடந்து செல்லும் மரங்களைக் காண்கிறோம். நாம் பயணிப்பது ஒரு செயல். ஆனால் மரங்கள் நமக்குப் பின்னோக்கி ‘ஓடுவது’ அவை புரியும் செயலா? அவை அப்படிச் செயல்படவேயில்லையே! உண்மையில் அவை தத்தமது இடங்களில் நகரவேயில்லாமல் நின்றுகொண்டுதானே இருக்கின்றன! அவை பின்னோக்கி ஓடுவதாகிய மாயையை நாம் நம்புகிறோமே? இல்லை. நமக்குத் தெரியும், அது பேருந்து பயண வேகத்தின் மாயத் தோற்றம் என்பது. 

இது புரிகிறது. ஆனால், தர்மத்துக்குள்ளேயே ஒளிந்திருக்கும் அதர்மத்தையும், அதர்மத்துக்குள்ளேயே புகுந்துகொண்டிருக்கும் தர்மத்தையும் பாகுபடுத்ததான் மனசுக்குத் தெரியமாட்டேனென்கிறது, குழப்பமடைகிறது. ஒரு திருடனை நாலைந்துபேர் துரத்தி வருகிறார்கள். ஓடிவரும் திருடனைப் பார்க்கும் ஒரு பெரியவர், அவன் ஒரு வளைவில் திரும்பி, ஒரு சுவர் பொந்துக்குள் புகுந்துகொள்வதை கவனித்துவிடுகிறார். துரத்தி வந்தவர்கள் அவரிடம் திருடன் அந்தப் பக்கமாக வந்தானா என்று கேட்கிறார்கள். அவர் என்ன பதில் சொல்வார்? சமுதாய தர்மத்துக்கு உட்பட்டு அவர்களிடம் திருடனைக் காட்டிக் கொடுக்கலாமா அல்லது திருடனுக்குப் பச்சாதாபப்பட்டு, ‘தெரியாது’ என்று பொய் சொல்லிவிடலாமா? இதில் எது தர்மம் சார்ந்த கர்மம்? சமுதாய நலனை உத்தேசித்துத் திருடனைக் காட்டிக்கொடுப்பது என்பது இந்த யுத்த களத்தில் யார் எவர் என்று பார்க்காமல் எதிரிகளை அழிப்பதற்கு சமம்; திருடன் மீது இரக்கப்பட்டு அவனைக் காட்டிக்கொடுக்காமல் விட்டுவிட்டால் அது உறவுகள், குருபந்தங்கள், நட்பு என்ற உணர்வுகளுக்கு மதிப்பளித்து போரைப் புறக்கணிப்பதற்குச் சமம்.

எது சரி? இதனாலேயே கர்மத்தில் அகர்மத்தைப் பார்ப்பதும், அகர்மத்தில் கர்மத்தைப் பார்ப்பதும் ஒரு யோகியாலேயே முடியக்கூடிய செயலாகும். சமுதாயத்துக்கு நல்லது செய்வதா, தனி மனிதனுக்கு அவனுடைய குற்றத்தை மறந்து இரக்கம் காட்டுவதா என்பதில் சரியான முடிவெடுக்க ஒரு யோகியால்தான் முடியும். அதனால்தான் நீதிமன்றங்களில் நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டிருக்கின்றன. நீதிபதிகளும் தம் விருப்பம்போல தீர்ப்பளித்துவிட முடியாது; வாதப் பிரதிவாதங்களில் வெளிப்படும் ஆதாரங்களை அடிப்படையாக வைத்துதான் சொல்ல முடியும். நீதிபதியால் தண்டனைக்குட்பட்டவர், விசாரணையின்போதே தன் நிலைகுறித்து அழலாம், வேதனையை வெளிப்படுத்தலாம், ஆனால் நீதிபதியால் அதைக் கண்டு மனசஞ்சலப்பட இயலாது. அவர் ஒரு யோகியாகத்தான் செயல்படவேண்டும். அதாவது, சாஸ்திரம் அனுமதித்த கர்மாவை இயற்றவேண்டும்!

No comments:

Post a Comment