Saturday, 21 October 2017

பஞ்ச பாண்டவர்களின் பெருமை பேசும் ஆலயம்


திருமங்கலம்: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கிராமத்தில் புண்ணியமூர்த்தி பஞ்சபாண்டவர் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் புண்ணியமூர்த்தியாகவும், இவருடன் மகாபாரத நாயகர்கள் தருமன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரவுபதி தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலுக்கான பழங்கதை அற்புதமானது. வனவாச காலத்தில் தென்னிந்திய பகுதிக்கு வந்த பஞ்சபாண்டவர்கள், முழுவதும் காடாக இருந்த நல்லமரம் பகுதியில் வசித்ததாக கூறப்படுகிறது. இவ்வூர் காட்டுப்பகுதிக்குள் அக்காலத்தில் ‘சைந்தவர்’ எனும் முனிவர் வாழ்ந்துள்ளார். இவ்வனத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே காய்க்கிற நெல்லிக்கனியை அவர் உண்டு, தொடர் தவத்தில் இருந்திருக்கிறார். 

முனிவரை தவிர்த்து வேறு யாருடைய கண்களுக்கும் இந்த நெல்லிக்கனி தெரியாது. இப்பகுதிக்கு வந்த திரவுபதி தாகத்தில் தவிக்க, வில் வீரரான அர்ஜூனன், பூமியை நோக்கி பாணத்தை எய்ய நீர் பெருக்கெடுத்திருக்கிறது. அந்த நீரினைக் குடித்து தாகம் தணித்த திரவுபதியின் கண்களில், சைந்தவர் முனிவரின் கண்களுக்கு மட்டுமே தெரிகிற நெல்லிக்கனி தெரிந்திருக்கிறது. திரவுபதியின் விருப்பத்தில், அர்ஜூனனும் அந்த கனியை தன் பாணத்தை எய்து வீழ்த்தியுள்ளார்.

இதையறிந்த தருமர், அந்த கனியின் மகத்துவம் அறிந்து அதனை மீண்டும் மரத்திற்கே அனுப்பும்படி கூறவே, பரமாத்மா கிருஷ்ணபிரானின் உதவியில் கனியை மரத்தில் சேர்த்திருக்கிறார். வனவாசம் முடிந்து மகாபாரத போருக்கு பின்பு மீண்டும் பஞ்சபாண்டவர்கள், மகாராணி திரவுபதியுடன் வந்து சைந்தவர் முனிவரிடம் ஆசிபெற்று சென்ற வரலாறு காலம்தோறும் பேசப்படுகிறது.

அர்ஜூனன் பாணம் செலுத்தி உருவான நீரூற்று வற்றாத நிலையில் இன்றும் இவ்வூரில், ‘அர்ஜூனன் கிணறு’ பெயரில் இருக்கிறது. நல்லமரத்தில் சைந்தவர் முனிவர், கிருஷ்ணன், பேச்சியம்மன் ஆலயம் தனி சன்னதியாக இருக்கிறது. அருகில் புண்ணிய மூர்த்தியாக சிவபெருமான், பஞ்சபாண்டவர்கள் 5 பேர், திரவுபதிக்கு தனி சன்னதியும் இருக்கின்றன. மூலஸ்தானத்தில் சிவபெருமானுடன், பஞ்சபாண்டவர்களும் காட்சி தருகின்றனர். பரிவார தெய்வங்களான வள்ளி,  தெய்வானையுடன் முருகபெருமான், விநாயகர், வடக்கு அம்மன், உச்சி கருப்பசாமி,  துவார பாலகர்கள் மற்றும் தேரடிகருப்பசாமி ஆகியோரும்  எழுந்தருளியுள்ளனர். சைந்தவர் முனிவர் ஆலயத்தில் முனிவருடன் கிருஷ்ணன், பேச்சியம்மன்  வீற்றிருக்கின்றனர். கோயிலில் சிவராத்திரி, ஆனித்திருவிழா  சிறப்பாகும். இங்கு வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். 

தம்பதியினருக்கு மழலைச்செல்வம்  வாய்க்கும் நம்பிக்கை இருக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலம்  கிடைக்கும் என்கிற ஐதீகமும் உள்ளது.

கோயில் கோபுரத்திலும் பஞ்சபாண்டவர்கள், கிருஷ்ணன், திரவுபதியுடன், சைந்தவர் முனிவர் கருநெல்லிமரத்தின் அடியில் தவம் இருப்பது, அர்ஜூனன் நெல்லிக்கனிக்காக பாணம் செலுத்துவது, உடன் திரவுபதி இருப்பது உள்ளிட்டவை சிற்பவடிவில் கதை சொல்கின்றன. கோயில் குறித்து கிராம மக்கள் கூறும்போது, ‘‘மகாபாரத கதையுடன் தொடர்புடைய இக்கோயிலில் தற்போது  ஒருகால பூஜை மட்டுமே நடந்து வருகிறது. பக்தர்கள் வருகை அதிகமிருப்பதால், முக்கால பூஜை நடத்தப்பட வேண்டும். கோயிலுக்கு போதுமான போக்குவரத்து வசதி இல்லை. 

அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலின் தொன்மை அறிந்து மேம்படுத்த வேண்டும் ராஜகோபுரம் இல்லை. உட்புறமாக மண்டபங்கள் கட்டினால் வெளியூர் வரும் பக்தர்கள் தங்கிச் செல்லலாம். திருக்கோயில் அன்னதான திட்டத்தினை செயல்படுத்த வேண்டும். ஆலயத்தைச் சுற்றி பக்தர்கள் தரிசனத்திற்கு நடைபாதை அமைத்துத்தர வேண்டும். மகாபாரத காலத்துடன் கருநெல்லிமரங்கள் அடர்ந்து காணப்பட்ட இவ்வனப்பகுதியில், அந்த பழைய நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக நெல்லிமரங்களையும் வளாகப்பகுதியில் வளர்க்க வேண்டும்,’’ என்கின்றனர்.

No comments:

Post a Comment