Saturday, 21 October 2017

உண்மைத் துறவு எது, பொய்த் துறவு எது?

Image result for munivar

போலித் துறவிகள் இக்காலத்தில் மட்டுமல்ல, வள்ளுவப் பெருந்தகை காலத்திலும்கூட உண்டு என்பதையே `கூடா ஒழுக்கம்’ என்ற திருக்குறளின் இருபத்தெட்டாம் அதிகாரம் விவரிக்கிறது. போலித் துறவின் பொய்மையை எடுத்துச் சொல்வதே அந்த அதிகாரத்தின் நோக்கம். 

'வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் 
ஐந்தும் அகத்தே நகும்.’ 

ஒழுக்கசீலர் போல் உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவர்கள் உடலில் கலந்திருக்கும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற ஐம்பூதங்களும் தமக்குள்ளே நகைக்கும். 

'வானுயர் தோற்றம் எவன் செய்யும் தன்நெஞ்சம் 
தான்அறி குற்றப் படின்.’

தன்மீது தன் நெஞ்சே குற்றம் சொல்லுமானால் அந்தத் துறவு நிலையால் பயன் என்ன?

'வலியில் நிலைமையால் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்து மேய்ந்தற்று.’ 

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொள்ளும் தவக்கோலம், புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரைப் பசு மேய்ந்தது போலாகும். 

'தவமறைத்து அல்லவை செய்தல் புதல் மறைந்து 
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.’ 

தவக்கோலத்தில் மறைந்துகொண்டு கீழான செயல்களைச் செய்பவன் புதரில் மறைந்துகொண்டு பறவைகளைப் பிடிக்கும் வேடனைப் போன்றவன்தான். 

'பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று 
ஏதம் பலவும் தரும்.’ 

எத்தகைய பற்றுக்களும் இல்லாதவன் என்று வாயால் சொல்லிக் கொண்டே தவறாக வாழ்பவர், ஏன் அப்படிச் செய்தோம் என வருந்தும் நிலைக்குப் பின்னாளில் ஆளாவர். 

'நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து 
வாழ்வாரின் வன்கணார் இல்.’ 

மனத்தில் எதையும் வெறுக்காமல் வெளியே வெறுப்பவர்போல் வஞ்சித்து வாழ்பவர்களை விடக் கொடியவர் இந்த உலகில் யாரும் இல்லை. 

'புறங்குன்றிக் கண்டனைய ரேனும் அகங்குன்றி 
மூக்கிற் கரியா ருடைத்து.’ 

குன்றிமணியின் செம்மையைப் போல் மேலே செம்மையானவர் போன்ற தோற்றம் காட்டினாலும், அகத்தில் குன்றிமணியின் மூக்கு கறுத்திருப்பதைப் போல் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு. 

'மனத்தது மாசாக மாண்டார் நீராடி 
மறைந்தொழுகு மாந்தர் பலர்.’ 

மனம் முழுவதும் இருட்டு. தூய நீரில் நீராடி விட்டு வருபவர் போல வெளியே மட்டும் வெளிச்சம். இப்படி உள்ளும் புறமும் முற்றிலும் 
மாறுபட்டு வாழ்பவர் பலர் உண்டு. 

'கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கன்ன
வினைபடு பாலால் கொளல்.’ 

அம்பு நேராகத்தான் இருக்கிறது. ஆனால், அந்த நேரான அம்பு உயிரைக் கொல்லக் கூடியது. யாழ் என்னவோ வளைந்துதான் இருக்கிறது. ஆனால், அந்த வளைந்த யாழ்தான் இனிய இசையைத் தரக் கூடியது. எனவே வெளித் தோற்றத்தைப் பார்த்து ஒருவரை மதிப்பிடுதல் சரியல்ல. செயலைப் பார்த்தே மதிப்பிட வேண்டும். 

'மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
பழித்தது ஒழித்து விடின்.’ 

உலகம் பழித்துச் சொல்பவற்றை ஒழித்து வாழ்ந்தாலே போதும். முடியை முழுமையாக மழித்தலோ, நீள வளர்த்தலோ இரண்டும் தேவையில்லை.  

-இப்படி பத்துக் குறள்களில் போலித் துறவு எத்தகையது என்பதைச் சொல்லி அதன் மூலம் உண்மைத் துறவின் மேன்மையை விவரிக்கிறார் வள்ளுவர். வள்ளுவர் காலம்தொட்டு இன்றுவரை ஆன்மிகத்தில் உண்மைத் துறவிகளைவிட கூடுதலாக போலித் துறவிகளின் எண்ணிக்கை வளரக் காரணம் என்ன? இந்தக் கேள்விக்கான பதில் இதுதான். மிக உயர்ந்த விஷயங்கள் இருந்தால் அவற்றைப் போலப் போலிகளும் தோன்றத் தான் தோன்றும். இது இயல்புதான். கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் ஆடுகிற கதைதான். ஆனால் வான்கோழி மயிலைப் போல் ஆடினாலும் தன்னை மயில் என்று ஒருபோதும் சொல்லிக் கொள்வதில்லை. மற்ற பறவைகளைத் தன்னை மயில் என நம்பவைக்க அது முயல்வதும் இல்லை. போலித் துறவிகள் தங்களைத் தூய துறவிகள் என்றே அறிவித்துக் கொள்கிறார்கள். சுலபத்தில் எதையும் நம்பும் பாமர மக்கள் ஆராயாமல் அவர்களை நம்பித் தங்கள் வாழ்வை அழித்துக் கொள்கிறார்கள். போலிகளின் தோற்றமே அதன் போலியல்லாத உண்மை மிக உயர்ந்தது என்பதற்கான அடையாளம். 

போலித் துறவிகள் அதிக எண்ணிக்கையில் தோன்றக் காரணம், உண்மைத் துறவின் மதிப்பையே உணர்த்துகிறது. சிக்கல் எங்கே வருகிறது என்றால் உண்மைத் துறவு எது, போலித்துறவு எது என்பதை நாம் அறிவது மிகக் கடினமாக இருக்கிறதே, அங்கேதான். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர், வள்ளலார் போன்றோரை நாம் மதிக்கக் காரணம் அவர்கள் உண்மைத் துறவியர் என்பதே. உண்மைத் துறவின் அடையாளம் பெண்ணாசையைத் துறப்பது மட்டுமல்ல, பொருளாசையை, அதாவது, செல்வம் சேர்க்கும் ஆசையையும் அவர்கள் துறந்திருக்க வேண்டும் என்பதே. செல்வம் சேர்க்காத துறவியரை இன்று காண்பது மிக அரிது. எல்லா ஆசைகளையும் துறந்த துறவியரால்கூட, புகழாசையைத் துறக்க இயலவில்லை. தனக்குக் கட்அவுட் வைக்க வேண்டும், தன் புகைப்படத்தோடு போஸ்டர் அடித்து ஒட்டப்பட வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டு, அதைத் தங்கள் சீடர்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளும் துறவியர் இன்று பெருகியுள்ளது கண்கூடு. இன்றைய உலகில் பூக்கடைக்கும்கூட விளம்பரம் தேவைப்படுகிறது என்றும், இப்படியெல்லாம் தங்களை விளம்பரப் படுத்திக் கொண்டால்தான் மக்கள் தங்களை அடையாளம் கண்டு தேடிவருவார்கள் என்றும், 

அப்போதுதான் அவர்களுக்குத் தாங்கள் நல்ல அறிவுரைகளைச் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்த முடியும் என்றும்  விளம்பர மோகம் படைத்த சில துறவிகள் இந்தப் போக்கிற்கு சமாதானமும் சொல்கிறார்கள். ஆனால், குருதேவர் பரமஹம்சர் எந்த விளம்பரத்தையும் தேடவில்லை. ஒளிவீசுகிற ஒரு வைரம் இருந்தால் அதன் பிரகாசத்தாலேயே அது மக்களைக் கவரும். அதை வைரம் என்று யாரும் விளம்பரப்படுத்தத் தேவையில்லை. பரமஹம்சரைத் தேடிவந்த விவேகானந்தர் உள்ளிட்ட சீடர்களாலேயே இன்று ஆன்மிக நிறுவனங்களாக மட்டுமல்லாமல் உயர்ந்த சமூக சேவை நிறுவனங்களாகவும் ராமகிருஷ்ண மடங்கள் தழைத்துள்ளன. இதில் நாம் அறிய வேண்டிய இன்னும் ஒரு செய்தி, பரமஹம்சர் ஸித்தி அடைந்த பின் தோன்றிய இந்த மடங்களை நிறுவியவர் பரமஹம்சரின் பிரதான சீடரான விவேகானந்தர். விரும்பியிருந்தால் இந்த மடங்களுக்கு விவேகானந்தர் தம் பெயரையே வைத்திருக்கலாம். பெயராசை அறவே அற்ற அவர் தம் குரு பெயரையே இம்மடங்களுக்குச் சூட்டி ராமகிருஷ்ண மடங்கள் என்ற பெயரிலேயே இன்றளவும் அவை தழைக்க வழிவகுத்தார். விவேகானந்தரின் உண்மைத் துறவு அத்தகைய பெருமை வாய்ந்தது. பெண்ணாசை, பொன்னாசை போன்ற ஆசைகளை மட்டுமல்ல, புகழாசையையும் துறந்த மாபெரும் துறவி அவர். 

ஆன்மிகத்தில் சில எல்லைகளைக் கடக்கும்போது அது போலித் துறவுக்கு வழிகோலிவிடுகிறது என்பதும் ஞானியர் சொல்லும் உண்மைதான்.மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தி விழிப்படையும்போது மனிதனின் ஆழ்மனத்தில் ஒளிந்திருக்கும் இயல்பூக்கங்ளை அது அளவுகடந்து தூண்டி விடுகிறது. அது ஒரு நிலை. தொடர்ந்த ஜபத்தின் மூலமும் இடையறாத ஆன்மிகப் பயிற்சிகள் மூலமும் கசிந்துருகும் இறை பக்தியின் மூலமும் அந்த இடைப்பட்ட நிலையை ஆன்மிகத்தில் கடக்க வேண்டும். அப்படிக் கடக்கும் ஆற்றல் இல்லாதவர்கள் அந்நிலையில் எழும் ஆசைகளுக்கு பலியாகி துறவு நெறியில் பிறழ்ந்து கீழான நிலையை அடைகிறார்கள். இவர்களில் பலர் பெண் பித்தர்களாக மாறி சமூகத்தைக் கெடுத்துத் தாங்களும் வீணாகிறார்கள். உயர்ந்த தவநெறிக்கும் அழியாத அவமானத்தைத் தேடித் தருகிறார்கள். விஸ்வாமித்திரரும் அப்படிப்பட்ட நிலைக்கு ஆளானவர்தான். பின்னர் மனக்கட்டுப்பாட்டின் மூலம் தன்னைச் சமன் செய்துகொண்டு தூய துறவி ஆகிப் பெரும்புகழ் பெற்றார். அவர் வாழ்வில் கீழான ஓர் இடைக்காலம் இருந்தது. தொடர்ந்து செய்த தவத்தின் மூலம் அவரது குண்டலினி ஆற்றல் மூலாதாரத்திலிருந்து எழுச்சி பெற்று மேலோங்கியபோது, அவரின் கீழான ஆசைகளும் அதிக வலிமையோடு கிளர்ந்தெழுந்தன. 

(மூலாதாரத்தில் மூண்டெழு கனலைக் 'காலால்’ - (மூச்சுக் காற்றால்) - எழுப்பும் கலை என தியானக் கலை பற்றி விநாயகர் அகவலில் மூதாட்டி அவ்வை எழுதுகிறார்.) இந்திரன் விஸ்வாமித்திர மகரிஷியின் உக்கிரமான தவத்தைக் கண்டு அஞ்சினான். கடும் தவ ஆற்றல் காரணமாக அவரே இந்திர பதவியைப் பெற்று விடுவாரோ எனக் கவலை கொண்டான். அவர் தவத்திற்கு இடையூறாக தேவருலக நடன மணிகளில் ஒருத்தியான பேரழகி மேனகையை அவரைக் கவரும்பொருட்டு மண்ணுலகிற்கு அனுப்பினான். அழகிய பெண்ணைக் கண்டால் எப்பேர்ப்பட்ட திடமனம் படைத்தவரும் சபலம் கொள்வர் என்பது ஏற்கெனவே அகலிகையிடம் சபலப்பட்ட இந்திரனின் சரியான கணிப்பு! மேனகை விரித்த மோகவலையில் மிகச் சுலபமாக வீழ்ந்தார் விஸ்வாமித்திரர். துறவுநெறி பிறழ்ந்து இல்லறம் கண்டார். தாம் வசிஷ்டரிடம் சபதம் செய்து பிரம்மரிஷி ஆகும்பொருட்டு பல்லாண்டு காலம் தவம் நிகழ்த்தியவர் என்பதையும் மறந்தார். அந்த இடைப்பட்ட காலத்தில்  சகுந்தலை என்ற பெண் மகவுக்குத் தந்தையும் ஆனார். 

குழந்தை பிறந்த பிறகுதான் அவருக்கு புத்தி வந்தது. தவ ஆற்றலை வீணடித்துக் காம சுகத்திற்கு ஆட்பட்டோமே எனத் தன்னைப் பற்றியே தாளாத கழிவிரக்கம் கொண்டார். ஒரு கணத்தில் மீண்டும் வைராக்கியம் வரப்பெற்று மேனகையைத் துறந்து மறுபடியும் தவத்தில் ஈடுபட்டார். ஆனால் என்ன கொடுமை! தந்தை விஸ்வாமித்திர முனிவர் மட்டுமல்ல, தாய் மேனகையும் தான் பெற்ற  பெண்குழந்தையை அப்படியே மண்ணுலகில் கைவிட்டு வானுலகம் சென்றாள். புறக்கணிக்கப்பட்ட அந்தப் பச்சிளம் பெண் குழந்தை அநாதரவாகக் கானகத்தில் அழுது கொண்டிருந்தது. மான்களால் காப்பாற்றப்பட்ட அந்தக் குழந்தையைப் புல் தரையில் கண் டெடுத்த கண்வ மகரிஷி பாசத்தோடு அள்ளியெடுத்து அணைத்துக் கொண்டார். அவரே அவளின் வளர்ப்புத் தந்தையானார். அந்த சகுந்தலை வளர்ந்து பருவ வயதடைந்ததும் மன்னன் துஷ்யந்தனைக் காந்தர்வ மணம் செய்துகொண்டாள். தாயாலும் தந்தையாலும் புறக்கணிக்கப்பட்ட அவளைக் கணவனும் புறக்கணிக்க நேர்ந்ததுதான் சகுந்தலை சரித்திரத்தின் அவலம். அந்த சரிதத்தை நயம்பட விவரித்து உயர்ந்த காவியமாக எழுதி சம்ஸ்க்ருதத்தில் அழியா இடம்பெற்றார் காளிதாசர். 

அவர் எழுதிய சாகுந்தலம் என்ற அந்த சம்ஸ்க்ருத நாடகத்தால் கவரப்பட்டு அதைத் தமிழில் மொழி பெயர்த்தார் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையான மறைமலை அடிகள். ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் இரு துறவியர் வந்து சேர்கிறார்கள். அவர்கள் கொஞ்ச காலம் அவரோடிருந்து பின் காணாமல் போகிறார்கள். என்ன ஆயிற்று அவர்களுக்கு என்று அன்பர்கள் பரமஹம்சரிடம் விசாரித்தபோது, அவர் விளக்குகிறார்: ஒரு ஸித்தி மூலம் பிறர் கண்ணுக்குத் தெரியாமல் மறையும் ஆற்றல் பெற்ற அவர்கள் பல அழகிகளின் அந்தப்புரங்களுக்குச் சென்று காம சுகத்தில் ஈடுபடுகிறார்கள். தங்கள் ஆற்றலை இழிவான இச்சைக்குப் பயன்படுத்திய காரணத்தால் அந்த ஆற்றல் அவர்களிடமிருந்து மறைந்து போகிறது. அந்த ஆற்றல் தங்களிடம் இருப்பதாகவே தொடர்ந்து நம்பி அவர்கள் சென்ற சில இடங்களில் அவர்கள் கடுமையாக அடித்து விரட்டப்படுகிறார்கள். அளவற்ற போகத்தின் காரணமாக பெருவியாதிக்கும் ஆட்படுகிறார்கள். முன்பு பிறர் கண்ணுக்குப் புலப்படாமல் மறையும் ஆற்றல் பெற்ற அவர்கள், வெட்கத்தால் இப்போது யார் கண்ணிலும் படாமல் ஒளிந்து வாழ்கிறார்கள். இதை அன்பர்களிடம் விவரித்த பரமஹம்சர் போக இச்சை வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது ஆன்மிகப் பயிற்சியாளர்களின் அடிப்படைக் கடமை என வலியுறுத்துகிறார்.

இந்தச் சம்பவம் சுவாமி சாரதானந்தர் எழுதிய குருதேவரின் ஆராய்ச்சி பூர்வமான வாழ்க்கை வரலாறு என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது. பெரிய புராணத்தில் ஒரு போலி வேடதாரி வருகிறான். அந்த மன்னன் பெயர் முத்தநாதன். திருக்கோவிலூரை ஆண்டுவந்த மெய்ப்பொருள் நாயனாரின் பக்கத்து நாட்டைச் சேர்ந்தவன். மெய்ப்பொருள் நாயனாரைப் போரில் வெல்ல முயன்றான். எவ்வளவு முயன்றும் இயலவில்லை. நாயனார் சிவ பக்தர் என்ற விவரத்தை அறிந்தான். சிவனடியார் போல மேனியெல்லாம் திருநீறு பூசி நாயனாரைத் தனித்துக் கண்டான். தன்னைச் சிவனடியார் என்றே நம்பவைத்து கத்தியால் குத்திக் கொன்றான் அவன். 

'மெய்யெலாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டி 
கையினில் படைகரந்த புத்தகக் கவளி ஏந்தி
மைபொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்ப வைத்து
பொய்த்தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்து நாதன்.’

விளக்கின் சுடரில் கருமையும் இருப்பது மாதிரி அவன் வேடத்தின் உள்ளே மறைந்திருந்த கருமையை மன்னன் அறியவில்லை. 'மைபொதி விளக்கே அன்ன மனத்திடைக் கறுப்பு வைத்து’ என அவனின் சூழ்ச்சி குறித்துப் பாடுகிறார் சேக்கிழார். பொய்த்தவ வேடம் உண்மையைச் சாய்த்துவிட்ட கொடூர சம்பவம் இது. மகாத்மா காந்தியைக் கும்பிட்டு வணங்கித் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கோட்சேயின் முன்னோடி அந்த முத்தநாதன்! 'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!’ எனப் பாடினார் அண்மைக் காலத்தில் வாழ்ந்த உண்மை ஞானியான வள்ளலார். உள்ளும் புறமும் ஒன்றாக இருப்பவராலேயே உலகம் உயர்கிறது. ஆனால், துறவிபோல் வேடமிட்டு எல்லா சுகங்களையும் அனுபவிக்க அந்த வேடத்தையே போர்வையாக்கிக் கொள்ளும் போலி சன்யாசிகளை இன்று நாம் எண்ணிக்கையில் முன் எப்போதும் உள்ளதைவிட அதிகம்  பார்க்கிறோம். 

வடக்கிலும் தெற்கிலும் அப்படிப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்படும் செயல்கள் அடுத்தடுத்து நடந்துகொண்டே இருக்கின்றன. நாளிதழ்களில் போலித் துறவிகளைப் பற்றிய செய்திகள் இல்லாத நாட்கள் குறைவு. போலித் துறவியர் இல்லாவிட்டால் இன்று அகில இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் வெளிவரும் புலனாய்வு இதழ்களுக்குத் தீனியே கிடைக்காமல் போய்விடும் என்றல்லவா தோன்றுகிறது! இந்தப் போலித் துறவை நம் வள்ளுவர் அந்தக் காலத்திலேயே வன்மையாகக் கண்டித்திருக்கிறார் என்பதே வள்ளுவத்தின் பெருமை!

No comments:

Post a Comment