மாங்கல்யம் நிலைத்துத் தழைக்க வேண்டும் என்றும் கணவன் நீண்ட ஆயுளுடன்வாழ வேண்டும் என்றும், விரும்பாத பெண் இருக்க முடியாது. இப்படிப்பட்ட பெண்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கிறாள், அன்னை உண்ணாமுலை அம்மன். அம்மனின் பெயரைக்கேட்டதும் திருவண்ணாமலை உங்களுக்கு நினைவுக்கு வரலாம். ஆனால், அதே பெயரோடு அம்பிகை அருள்வது திருச்சி ஜே.ஜே நகாில் உள்ள அருணாசலேஸ்வரர் ஆலயத்தில்! ஆம்! இறைவன் பெயரும் அருணாசலேஸ்வரர்தான். ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைக் கடந்ததும் நூறு தூண்களுடன் கூடிய மகா மண்டபம் பிரமாண்டமாகக் காட்சி தருகிறது. வலதுபுறம் கால பைரவரின் தனிச் சந்நதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த வழிபாட்டில் கலந்து கொள்வதால் ஏவல், பில்லி, சூன்யம் போன்ற பாதிப்பிலிருந்து பூரணமாக விடுபடலாம் என்பது நம்பிக்கை.
சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மகாமண்டபத் தூண்களை ரசித்தபடி நடந்தால் நந்தியை தரிசித்து, அர்த்த மண்டப நுழைவாயிலில் உள்ள கம்பீரமான துவாரபாலகர்களின் அனுமதி பெற்று, கருவறையில் இறைவன் அருணாசலேஸ்வரரின் லிங்கத் திருமேனி முன்சென்று நிற்கலாம். கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் இறைவனின் முன்நின்று கரங்குவிக்கும்போது மனம் முழுதும் வெற்றிடமாகி, மெல்லிய மலர்களால் வருடப்படும் உணர்வு தோன்றுகிறது.சிவராத்திரியின் போது இறைவனுக்கு நான்குகால ஆராதனைகளும் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. கார்த்திகை மாதம், அனைத்து சோமவார நாட்களிலும் இறைவனுக்கு 108 வலம்புரிச் சங்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.
இறைவனின் தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர்; அருள்பாலிக்கின்றனர். சண்டேசர் சந்நதியும் உள்ளது. அன்னை உண்ணாமுலை அம்மன் தனிச் சந்நதியில் நின்ற கோலத்தில் இருகரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறாள். புன்சிரிப்பு மலர காட்சி தரும் அன்னையின் அருள்முகம் நம்மை வசீகரிக்கச் செய்வது நிஜம். இறைவியின் தேவகோட்டத்தில் இச்சா, கிரியா, ஞான சக்தியரும், எதிரே சண்டிகேஸ்வரியும் அருள்பாலிக்கின்றனர். இறைவன், இறைவியை சேர்ந்தே வலம் வரும் வகையில் உட்பிராகாரம் அமைந்துள்ளது. நிருருதி விநாயகர், மகாலட்சுமி, சரஸ்வதி, முருகன், வள்ளி, தெய்வானை, நால்வர், நவகிரக நாயகர்கள் அருள் பாலிக்கின்றனர்.
இறைவியின் சந்நதியை அடுத்து ஜெயம் கொண்ட விநாயகரின் சந்நதி உள்ளது. ஆனை முகன் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்க, கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, லிங்கோத்பவர் உள்ளனர். அடுத்துள்ளது பாலமுருகனின் சந்நதி. சஷ்டியின்போது ஆறு நாட்களும் முருகனுக்கு சத்ரு சம்ஹார திரிசதீ அர்ச்சனை நடைபெறும். சுதையாலான திருவடிவங்களுடன் ஆலயத்தைச் சுற்றியுள்ள மதிற்சுவர் அழகுற காட்சியளிக்கிறது. பக்தர்களின் நலம் காக்கும் அருணாசலேஸ்வரரையும், மகளிர் துயர் நீக்கும் உண்ணாமுலை அம்மனையும் ஒருமுறை தரிசித்து நன்மை பெறலாமே! திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள ஜே.ஜே நகரில் இந்த அருணாசலேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment