திருநெல்வேலி மாவட்டம் அத்தாளநல்லூரில் உள்ள கஜேந்திரவரத பெருமாள் கோவில் பழமைவாய்ந்ததாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் இருந்து முக்கூடல் செல்லும் வழியில் அமைந்து உள்ளது அத்தாளநல்லூர். இங்குள்ள அருள்மிகு கஜேந்திரவரத பெருமாள் கோவில் பழமைவாய்ந்ததாகும். இத்தலத்து இறைவனின் பெயர் கஜேந்திர வரதர். இறைவியர் ஸ்ரீதேவி, பூதேவி. தீர்த்தம் விஷ்ணுபாத தீர்த்தம், கஜேந்திர மோட்ச தீர்த்தம். தல விருட்சம் நெல்லி மரம்.
இந்திரத்துய்மன் என்னும் மன்னன், அகத்தியரின் சாபத்தால் யானை வடிவம் பெற்றான். அந்த யானை கஜேந்திரன் என பெயர் பெற்று யானைகளுக்கெல்லாம் தலைமை தாங்கியது. இந்த யானை, பொதிகை மலைக்கு சென்று அங்கு தீர்த்தத்தில் நீராடி, சூரியனை வணங்கி, திருக்குற்றாலத்திற்கு சென்று சிவமது கங்கையில் நீராடி, திருக்குற்றாலநாதரை வணங்கியது. பின்னர் மகாவிஷ்ணுவை வணங்குவதற்காக அத்தாளநல்லூருக்கு வந்தது. அத்தாளநல்லூரில் உள்ள தாமரை குளத்தில் நீராடி, தாமரை பூக்களை பறித்து திருமாலுக்கு சூட்ட எண்ணியது.
குளத்தில் இறங்கி தாமரையை பறிக்கும்போது நாரத முனிவரின் சாபத்தால் முதலையான ஊர்த்துவன் என்கிற கந்தர்வன், கஜேந்திர யானையின் காலை பிடித்துக்கொண்டான். யானை பகீரத முயற்சியில் ஈடுபட்டும் முதலை தனது பிடியை விடவில்லை. உடனே யானை தனது துதிக்கையில் தாமரை மலரை வைத்து ‘ஆதிமூலமே’ என்று அழைத்தது.
யானையின் அழைப்பை ஏற்று மகாவிஷ்ணு கருட வாகனத்தில் அங்கு வந்து, தனது சக்ராயுதத்தால் முதலையை கொன்று யானைக்கு அருள்பாலித்தார். எனவே இந்த தலத்தை ஆனைக்கு அருள் செய்த தலம் என்றும், ஆனையை காத்த தலம் என்றும் சொல்வார்கள். அத்தி என்றால் யானை என்று பொருள். யானையை ஆட்கொண்டதால் அத்தாள நல்லூர் என்று இவ்வூர் பெயர் பெற்றது. கல்வெட்டுக்களில் இவ்வூரை அத்தாணி நல்லூர், கரிகாத்தபுரி, பொய்மாம் பூம்பொழில் எனவும், இத்தலத்து இறைவனை ஆனைகாத்தருளிய பிரான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருமாள், யானைக்கருள் செய்த திரு விளையாடல் நடந்த வரலாற்றுடன் தொடர்புடையதாக இந்தியா முழுவதும் 24 தலங்கள் குறிப்பிடப்பட்டாலும், ஸ்ரீமத் பாகவத்தில் கஜேந்திர மோட்ச திருவிளையாடல் பொதிகை மலையடிவாரத்தில் நடந்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதுவே கஜேந்திர மோட்ச தலமாகும்.
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த திருத்தலம் பரிகார தலம் என்ற புனிதம் பெற்றது. திருக்கோவிலின் மேற்கே தாமிர பரணி தெற்கு-வடக்காக பாய்கிறது. இதனால் இந்த தீர்த்த கட்டம் கங்கைக்கு நிகரானது. நின்ற கோலத்தில் காட்சி தரும் இப்பெருமானை வழிபடுவதால் திருப்பதியில் வழிபட்ட பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இத்திருக்கோவிலின் பின்பகுதியில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு தூணில் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாக கருதப்பட்டு அந்த தூணே நரசிம்மராக கருதி வழிபடப் படுகிறது. இந்த தூணிற்கு சந்தனம் மற்றும் மல்லிகை மலர் களால் ஆன சட்டை சாற்றுதல் என்கிற நேர்த்திக்கடன் பக் தர்களால் செய்யப்படுகிறது.
நாள்தோறும் இத்திருக்கோவில் நடை காலை 5.30 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும். தினசரி நான்கு கால பூஜைகள் இக்கோவிலில் நடைபெறுகிறது. புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையும், ஆவணி மாத கிருஷ்ண ஜெயந்தியும், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியும், தைப்பூசமும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படு கிறது.
இத்தலத்திற்கு செல்வதற்கு வீரவநல்லூர் மற்றும் முக்கூடலில் இருந்து பஸ் வசதி உள்ளது. அருகில் உள்ள வீரவநல்லூரில் ரெயில் நிலையம் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து வீரவநல்லூருக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது.
No comments:
Post a Comment