நாகதோஷம் இருப்பவர்கள், பாம்பு தெய்வங்களுக்கு முட்டையைப் படைத்து வழிபடும் தலமாகக் கேரள மாநிலம், பேரளச்சேரியில் உள்ள சுப்பிரமணியா கோவில் அமைந்திருக்கிறது.
நாகதோஷம் இருப்பவர்கள், தங்களுடைய தோஷத்தைப் போக்கி வளமான வாழ்க்கையைத் தர வேண்டி, பாம்பு தெய்வங்களுக்கு முட்டையைப் படைத்து வழிபடும் தலமாகக் கேரள மாநிலம், பேரளச்சேரியில் உள்ள சுப்பிரமணியா கோவில் அமைந்திருக்கிறது.
தல வரலாறு:
படைப்புக் கடவுளான பிரம்மனுக்குத், தன்னைத் தவிர வேறு எவராலும் படைப்புத் தொழிலைச் சிறப்பாகச் செய்ய முடியாது என்கிற கர்வம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர், தன்னுடைய படைப்புத் தொழிலின் பெருமைகளைப் பற்றிச் சிவபெருமானிடம் சொல்லி, அவரது பாராட்டுகளைப் பெற்றுச் செல்லலாம் என நினைத்துக் கயிலாய மலைக்கு வந்தார்.
அவர் வந்த வேளையில், இறைவன் சிவபெருமான் தியானத்தில் இருந்தார். அதனால், கயிலாய மலையில் இருந்த விநாயகர், முருகன், நந்தி, சிவகணங்கள், முனிவர்கள் என்று அனைவரும் வெளியில் காத்திருந்தனர். அங்கிருந்த அனைவருக்கும் மரியாதை செலுத்திய பிரம்மன், சிறுவனாக இருந்த முருகனுக்கு மட்டும் மரியாதை செலுத்தவில்லை.
இதனால் கோபமடைந்த முருகன் பிரம்மனிடம் சென்று, ‘படைப்புத் தொழில் செய்யும் உமக்கு ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா?’ என்று கேட்டார்.
அந்தக் கேள்விக்குப் பிரம்மனால் பதில் சொல்ல முடியவில்லை. அவர் பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழித்தார். உடனே, ‘பிரணவத்தின் பொருள் தெரியாமல் படைப்புத் தொழில் செய்வது மட்டுமில்லாமல், அதை நினைத்துப் பெருமை கொள்கிறாயா?’ என்று சொல்லியபடி அவரைத் தலையில் குட்டிச் சிறையில் அடைத்தார் முருகன்.
தியானத்திலிருந்து எழுந்த சிவபெருமான், பிரம்மனை முருகன் சிறை வைத்திருப்பதை அறிந்து அங்கே வந்தார். அவர் முருகனிடம் பிரம்மனை விடுவிக்கும்படி வேண்டினார். தனது தந்தையே நேரில் வந்து வேண்டியதால் முருகனும் பிரம்மனை விடுதலை செய்தார். அதன் பின்னர், சிவபெருமான், ‘பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?’ என்று முருகனிடம் கேட்டார்.
உடனே முருகன், ‘நன்றாகத் தெரியுமே’ என்றார்.
‘அப்படியானால் அப்பொருளை எனக்குச் சொல்ல முடியுமா?’ என்று கேட்டார் இறைவன்.
அதைக் கேட்ட முருகன், ‘உரிய முறையில் கேட்டால் உங்களுக்கு விளக்கமாகச் சொல்வேன்!’ என்றார்.
இதையடுத்து சிவபெருமான் முருகன் முன்பாகச் சீடனாக அமர்ந்து, பிரணவம் குறித்து விளக்கம் கேட்டார். முருகனும் சிவபெருமானுக்குப் பிரணவ மந்திரத்தின் முழுப் பொருளையும் விளக்கினார். அன்று முதல், சுவாமியாகிய சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனார். அதனால் முருகன், சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன் சுவாமி என்றும் பல பெயர்களால் போற்றப்பட்டார். இந்தக் கதை நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
முருகன் படைப்புக் கடவுளைச் சிறை வைத்ததால், பிரம்மன் படைப்புத் தொழிலைச் செய்ய முடியாமல் போனது. அதனால், முருகனுக்கு ஒருவரின் தொழிலைச் செய்ய விடாமல் தடுத்த பாவம் வந்து சேர்ந்தது. அதனால், முருகன் அந்தப் பாவத் திலிருந்து விடுபடுவதற்காகத் தந்தை சிவபெருமானின் அறிவுறுத்தலின்படி, நாகப்பாம்பாக உருவம் கொண்டு, பூமியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கிணறு ஒன்றில் வாழ்ந்து வந்தார். அவரைச் சூரிய வெப்பம், மழை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பல பாம்புகள் அவருக்குக் குடையாக நின்று அவரைக் காத்துக் கொண்டிருந்தன.
தனது மகனின் நிலையை நினைத்து வருந்திய பார்வதி தேவி, சிவபெருமானிடம், முருகனை நாகப்பாம்பு உருவிலிருந்து விடுவிப்பதற்கான வழிமுறைகளைக் கேட்டார். சிவ பெருமான் சொன்ன வழிமுறைகளின்படி, பார்வதி தேவி பதினெட்டு சஷ்டி விரதங்களை மேற்கொண்டு, கிணற்றில் பாம்பு வடிவிலிருந்த முருகனைத் தொட்டதும் முருகன் உண்மையான தோற்றத்தைப் பெற்றார்.
‘திரேதா யுகத்தில்’ சீதையைத் தேடி இந்தப் பகுதிக்கு வந்தார் ராமபிரான். அந்த இடம் சுப்பிரமணியர் கோவில் இருக்க வேண்டிய பகுதி என்பதை அறிந்தார். அங்கு சுப்பிரமணியர் கோவில் அமைக்கத் திட்டமிட்ட அவர், அனுமனை இமய மலைக்குச் சென்று சுப்பிரமணியர் சிலையைச் செய்து கொண்டு வரும்படி அனுப்பினார்.
ராமர், சுப்பிரமணியருக்குக் கோவில் அமைத்துக் கும்பாபிஷேகம் செய்யத் திட்டமிட்டிருந்த நாளுக்குள் அனுமன் அங்கு வந்து சேராததால், ராமர் தன் கையில் அணிந்திருந்த வளையல் ஒன்றினை எடுத்துக் கோவில் கருவறையில் சிலையாக நிறுவிக் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்து விட்டார். அதனால், இந்தப்பகுதிக்கு இளவரசனின் (ராமனின்) வளையல் என்பதன் மலையாள மொழிச் சொல்லான ‘பெருவலா’ என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் இந்தப்பெயர் மருவிப் ‘பேரளச்சேரி’ என்று மாற்றமடைந்து விட்டது என்கின்றனர்.
கோவில் அமைப்பு :
இங்கு சுப்பிரமணியர் நாக வடிவில் இருந்ததால், இக்கோவிலில் தாமிரம் மற்றும் வெண்கலத்தால் ஆன பாம்பு சிலைகளே முதன்மைக் கடவுளாக இருக்கின்றன. கோவில் வளாகத்தில் பல இடங்களில் பாம்புகளின் கற்சிலைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன.
இக்கோவில் தினமும் அதிகாலை 4 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.15 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள், இக்கோவிலில் தினமும் நடைபெறும் நாகபூஜையில் கலந்து கொண்டு தங்களுடைய தோஷத்தைப் போக்கி வளமான வாழ்க்கையை வழங்கும்படி வேண்டிச் செல்கின்றனர். இக்கோவிலில் வழிபடும் பக்தர்கள் ‘முட்ட ஒப்பிக்கல்’ எனப்படும் நடைமுறையினைப் பின்பற்றி, கோவிலிலுள்ள பாம்புக் கடவுள்களுக்கு முட்டையைப் படைத்து வழிபடுகின்றனர்.
ஆலயத்தில் மலையாள மாதமான தனுர் மாதத்தில் (தமிழ் மார்கழி) ‘கொடியேற்றம் விழா’ எனப்படும் எட்டு நாள் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா நாட்களில் சாக்கையர் கூத்து, கதகளி, பரயன் துள்ளல், ஓட்டன் துள்ளல் சீதாங்கன் துள்ளல் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பெறுகின்றன.
கோவில் வளாகத்தில் சுப்பிரமணியர் நாகப்பாம்பு வடிவத்தில் வாழ்ந்த கிணறு என்று கருதப்படும் மிகப்பெரிய படிக்கிணறு இருக்கிறது. இந்தப் படிக்கிணறை மலையாளத்தில் ‘சிரா’ என்றழைக்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் படிக்கிணற்றைப் போல் மிகப்பெரியதாகவும், அந்தக் கட்டுமானத்தைப் போன்ற தோற்றமுடையதாகவும் இருக்கும் இந்தக் கிணறு, தென்னிந்தியாவின் மிகப்பெரிய படிக்கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.
நாக தோஷம் :
ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கும் பல வகையான தோஷங்களில் நாக தோஷமும் ஒன்று. லக்னத்திலிருந்து 1,5,9 இடங்களில் சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தால் அது ‘நாக தோஷம்’ எனப்படுகிறது. ஒருவரின் முந்தைய பிறவியில், ஆண் நாகமும், பெண் நாகமும் ஒன்றாக இணைந்திருக்கும் நிலையில் அதைத் துன்புறுத்தியிருந்தால், இந்தப் பிறவியில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாமிடத்தில் ராகு என்ற கரு நாகம் நின்று, கணவனுக்குத் தோஷத்தை உண்டாக்கும்.
பாம்பு தன்னுடைய பசிக்காக இரையைத் தேடிச் செல்லும் பொழுது, அதைத் துன்புறுத்தியிருந்தால், இந்தப் பிறவியில் அவருடைய ஜாதகத்தில் தொழில் இடமான லக்னத்துக்குப் பத்தாமிடத்தில் ராகுவோ, கேதுவோ நின்று தொழில் நிலைக்குத் தோஷத்தை ஏற்படுத்தும். பாம்பு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலத்திலோ அல்லது பாம்பு தனது குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும் காலத்திலோ அதைத் துன்புறுத்தியிருந்தால், இந்தப் பிறவியில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாமிடமான புத்தி நிலையில் ராகுவோ, கேதுவோ நின்று புத்திர நிலையில் தோஷத்தையும் ஏற்படுத்தும் என்கின்றன ஜோதிட நூல்கள்.
அமைவிடம் :
கேரளாவில் கண்ணூர் நகரிலிருந்து கூத்தம்பாரா செல்லும் வழியில் 14 கிலோமீட்டர் தொலைவில் பேரளச்சேரி சுப்பிர மணியர் கோவில் அமைந்துள்ளது. கண்ணூர் பேருந்து நிலையத்தில் இருந்து இக்கோவிலுக்குச் செல்லப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
No comments:
Post a Comment