திருக்கல்யாண கோலத்தில் இருக்கும் அன்னை வாலாம்பிகையை தரிசிக்கவும், திருமணத் தடை நீங்கவும் ஒரு முறை நீங்களும் இளங்காடு சென்று இறைவன் இறைவியை தரிசித்து வரலாமே.
இளங்காடு ஒரு சிறிய கிராமம். வான்பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி ஆற்றின் தெற்கிலும், பிள்ளை வாய்க்காலுக்கு வடக்கிலும் அமைந்திருக்கிறது இந்த ஊர். ராஜகிரி, வாலவனம், இளங்காடு என இந்த ஊருக்கு பல பெயர்கள் உண்டு. எல்லாம் காரணப் பெயர்களே.
சோழ மன்னர்களுக்கும், இந்த ஊருக்கும் நிறைய தொடர்பு உண்டு. சோழ மன்னன் சுந்தர சோழனுக்கும், மலையமான் மகளான வானவன் மாதேவிக்கும் பிறந்த இரண்டாவது மகன் முதலாம் ராஜராஜ சோழன். இம்மன்னன் தான் போரிட்ட காந்தளூர் சாலைப் போரில் பெரிய வெற்றி பெற்றான். இந்த வெற்றிக்கு அடையாளமாக இளங்காட்டில் ஒரு சிவாலயத்தை கட்டினான். கி.பி.989-க்கு மேல் கி.பி 998-க்குள் இந்த ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டது. அதுவே விஜயவிடங்கேஸ்வரர் ஆலயம்.
தனது முதல் வெற்றியின் அடையாளமாக தனது முதல் பட்டமான ராஜகேசரி என்ற பெயரையே இவ்வூருக்கு வைத்துள்ளான். அதன்பின்னர் கி.பி. 1004 முதல் கி.பி 1010 வரை தஞ்சை பெரிய கோவிலைக் கட்டி முடித்தான். தனது வெற்றிக்கு அடையாளமாக மட்டுமல்லாமல், தஞ்சை பெரிய கோவிலுக்கு முன்னோடியாகவும் இளங்காடு திருத்தலம் அமைந்ததாக கூறப்படுகிறது.
ஆலய அமைப்பு :
1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த சிவாலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் விஜய விடங்கேஸ்வரர் என்பதாகும். வாலவனேஸ்வரர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இறைவி பெயர் வாலாம்பிகை அம்மன். இந்தப் பெயரின் காரணமாக இவ்வூருக்கு வாலைவனம் என்ற பெயர் வந்திருக்கலாம். வாலைவனம் என்பதை தமிழ்படுத்தி இளங்காடு என தற்போது அழைப்பதாகக் கூறுகின்றனர்.
இந்த சிவாலயத்தின் அமைப்பு தஞ்சை பெரிய கோவிலின் அமைப்பைப் போன்றே உள்ளது. இக்கோவிலின் கருவறையின் மேல் எழுப்பப்பட்டுள்ள விமானம் தஞ்சை பெரிய கோவிலின் கருவறையின் மேலுள்ள விமானம் போலவே காட்சியளிக்கிறது.
இக்கோவிலின் கருவறையைச் சுற்றி ஒரு பிரகாரம் போல், சுமார் இரண்டு அடி அகல சாந்தாரம் எனும் திருச்சுற்று அமைந்துள்ளது. ஆலய திருச்சுற்றுக்கும் கருவறைக்கும் இடையே உள்ள இந்த திருச்சுற்றின் அமைப்பு நம்மை வியக்க வைக்கிறது. தெற்கு பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி சன்னிதியின் அருகே உள்ள ஒரு நுழைவாசலில் நுழைந்து, இந்த திருச்சுற்று வடக்கில் திரும்பி, மறுபடியும் கிழக்கில் திரும்பி, வடக்கு பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கு முன்பாக பிரகார வலம் நிறைவு பெறுகிறது. முற்றிலும் இறைவனின் கருவறையை சுற்றிய திருச்சுற்றாகவே இது உள்ளது.
ஆலய விமானம் எத்திசையிலிருந்து பார்த்தாலும் ஒரே மாதிரியாகவே காட்சி அளிக்கிறது. ஆலய முகப்பில் ராஜகோபுர மண்டபம் நுழைவு வாசலாக அமைந்துள்ளது. இந்த வாசலின் இடதுபுறம் விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்துடனும், வலதுபுறம் முருகப்பெருமானும் காட்சி தருகின்றனர்.
உள்ளே நுழைந்ததும் நந்தி மண்டபம் உள்ளது. இங்கு நான்கடி உயரமும், நாலரை அடி நீளமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட ஒரே கல்லால் ஆன நந்தி காணப்படுகிறது. இந்த நந்தி தனது கால்களை மடக்கி படுத்த நிலையில் இறைவனை பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. அடுத்து மகாமண்டபம். அதையடுத்த கருவறைக்கு தென்புறம் விநாயகரும், வடபுறம் ஆதி விஜயவிடங்கேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். இந்த இறைவனின் ஆவுடை சதுர வடிவமானது. மண்டபத்தின் தென்பகுதியில் நால்வர் திருமேனி உள்ளன. வடகிழக்கு பகுதியில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.
அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் விஜயவிடங்கேஸ்வரர் லிங்கத்திருமேனியில் கீழ்திசை நோக்கி வீற்றிருக்கிறார்.
திருச்சுற்றில் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி, சூரியன், சந்திரன், பைரவர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். தேவக் கோட்டத்தில் பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் அருள்கிறார்கள். வடக்கில் சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது.
அன்னை வாலாம்பிகை :
ஆலய பிரகாரத்தில் வடமேற்குப் பகுதியில் வாலாம்பிகை அம்மன் சன்னிதி உள்ளது. மகாமண்டபத்தையும் அர்த்த மண்டபத்தையும் அடுத்துள்ள கருவறையில் அன்னை வாலாம்பிகை நின்ற திருக்கோலத்தில் புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கும் அழகே அழகு. இங்கு அன்னை நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள்.
மேல் இரு கரங்களில் தாமரை மலரை ஏந்திய படியும், கீழ் இருகரங்கள் அபய வரத முத்திரையுடனும் காட்சி தருகிறாள். பெரும்பாலும் சிவாலயங்களில் இறைவி தெற்கு நோக்கியே அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் திருவையாறு, திருவானைக்கோவில், திருவண்ணாமலை தலங்களைப் போல, இங்கும் அன்னை கீழ்திசை நோக்கி அருள்பாலிப்பது ஓர் அபூர்வ அமைப்பாகும். இக்கோலத்தை திருக்கல்யாண கோலம் என்று அழைப்பார்கள். எனவே இங்குள்ள இறைவி வாலாம்பிகையை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் தலவிருட்சமான வில்வ மரமும் சிவபெருமான் சடையில் சூடும் சரக்கொன்றை மரமும் உள்ளன. கோவிலுக்கு உரிய தீர்த்தங்கள் மூன்று. ஊரின் வட புறம் ஓடும் காவிரி. ஊரின் தென்புறம் உள்ள முழங்கான் குளம். கோவிலின் ஈசானிய மூலையில் உள்ள தீர்த்தக்கிணறு.
திருவிழாக்கள் :
புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா, ஐப்பசி மாத கந்தசஷ்டி விழா, கார்த்திகை மாதத் திருநாள், மார்கழி மாத திருவாதிரை, தை மாதப் பூசத்திருநாள், மாசி மாத மகா சிவராத்திரி விழா, ஐப்பசியில் அன்னாபிஷேகம் என திருவிழாக்கள் மிக சிறப்பாக இங்கு நடைபெறுகின்றன. இது தவிர மாதப் பிரதோஷங்கள், சஷ்டி, கிருத்திகை வழிபாடுகளும் நடைபெறுகின்றன. துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கில் 3 கிலோமீட்டர் தொலைவிலும் கல்லணையில் இருந்து 8 கி.மீ தொலைவிலும் உள்ளது இளங்காடு கிராமம். திருக்காட்டுப்பள்ளியில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.
திருக்கல்யாண கோலத்தில் இருக்கும் அன்னை வாலாம்பிகையை தரிசிக்கவும், திருமணத் தடை நீங்கவும் ஒரு முறை நீங்களும் இளங்காடு சென்று இறைவன் இறைவியை தரிசித்து வரலாமே.
No comments:
Post a Comment