திருப்பதி செல்லும் முன், சென்னை வண்டலூர் அருகிலுள்ள ரத்னமங்கலம் குபேரனை வழிபட்டுச் செல்வது மிகவும் விசேஷமானது. வளமான வாழ்வுக்காக, அட்சய திரிதியை அன்று இங்கு லட்சுமி குபேர பூஜை செய்வது நன்மை தரும்.சிரித்த முகம், இடது கையில் சங்கநிதி, வலது கையில் பதுமநிதி அடங்கியகலசத்தை அணைத்துக் கொண்டு அன்னை லட்சுமி, துணைவி சித்தரிணீயுடன் குபேரன் தரும் காட்சியை காண கண் கோடி வேண்டும். பிரகாரத்தில் லட்சுமி கணபதி, குபேரலிங்கம், செல்வமுத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. பசுக்களைப் பராமரிக்கும் கோசாலையும் உள்ளது. பிரம்மாவின் புத்திரரான புலஸ்தி யருக்கும், திருவண விந்துவின் புத்திரிக்கும் விஸ்வாரா என்பவர் பிறந்தார். இவரது மகனே குபேரன். இவரது மாற்றாந் தாய்க்கு பிறந்தவன் ராவணன். இலங்கை அதிபதியாக இருந்தவர் குபேரனே. குபேரனின் விமானம் எங்கு பறந்தாலும் அந்த விமானம் தங்கம், முத்து ஆகியவற்றை சிந்திக் கொண்டே செல்லும். சிவபக்தரான குபேரனுக்கு ஒரு சமயம் சிவபார்வதி தரிசனம் கிடைத்தது. பார்வதியைக் கண்ட குபேரன், "ஆஹா இப்படியொரு தேவியை இதுநாள் வரை துதிக்கவில்லையே' என்று எண்ணினான். இந்த நினைப்பில் குபேரனின் ஒரு கண் துடித்து அடங்கியது. இதைப் பார்த்து பார்வதி மிகவும் ஆத்திரமடைந்து, குபேரனின் துடித்த கண்ணை வெடிக்கச் செய்தாள். பின், அவளிடம் மன்னிப்பு கேட்க, பெருந்தன்மை யுடன் மன்னித்தாள். போன கண் போனது தான் என்றாலும் அதற்குப் பதிலாக சிறிய கண் ஒன்றை குபேரனுக்கு தந்தார் சிவபெருமான். குபேரனின் தவத்தை மெச்சி வடக்குதிசை காவலராக நியமித்தார். லட்சுமிதேவி குபேரனை தன தானிய அதிபதியாக்கினாள்.
திறக்கும் நேரம் : காலை 5.30- பகல்12, மாலை 4- இரவு 8.
இருப்பிடம் : தாம்பரத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து, கேளம்பாக்கம் செல்லும் ரோட்டிலுள்ள ரத்னமங்கலத்தில் கோயில் உள்ளது.
No comments:
Post a Comment