Saturday 9 December 2017

கிருஷ்ணருக்கு பிடித்த புளியம்பிஞ்சு


காஞ்சிப்பெரியவருக்கும் கார்மேக வண்ணனுக்கும் நிறையவே தொடர்புண்டு. 
கிருஷ்ணஜெயந்தியன்று காஞ்சிப்பெரியவர் என்னென்ன செய்வார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஜெயந்திக்கு ஒருவாரம் முன்னதாகவே காஞ்சிமடத்தில் மகாபெரியவர் முன்னிலையில், காலையில் பாகவத பாராயணம், மாலையில் உபன்யாசம் நடக்கும். பொறுமை, சகிப்புத்தன்மை, துன்பங்களை ஏற்கும் மனப்பக்குவம் குறித்து பகவத்கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகள் குறித்து, "கிருஷ்ண தத்துவம்' என்ற தலைப்பில், பெரியவர் உரையாற்றுவார். பஜகோவிந்தம், விஷ்ணு சகஸ்ரநாமம், கிருஷ்ணதுதி பாடல்கள் பாடப்படும். 

கிருஷ்ணஜெயந்தியன்று அதிகாலையில் அவர் ஜபம், தபஸ், பூஜைகளை மேற்கொள்வார். அன்று முழுவதும் அவர் சாப்பிடமாட்டார். உபவாசமே மேற்கொள்வார். இரவு 11 மணிக்கு, ஜெயந்தி பூஜை துவங்கும். காரணம், கிருஷ்ணர் பிறந்தது இரவு வேளை என்பதால்!

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால்... நாம் எல்லாருமே கிருஷ்ணருக்கு பிடித்தது வெல்லச்சீடை, உப்புச்சீடை, தட்டை, முறுக்கு, தேன்குழல், வெண்ணெய், நாவல்பழம், பால் பாயாசம், லட்டு, வடை என்று தான் நினைத்துக் கொண்டிருப்போம். பெரியவர் இவை எல்லாவற்றையுமே கிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்வார். ஆனால், அநேகருக்கு தெரியாத இன்னொன்றும் நைவேத்யத்தில் இடம் பெற்றிருக்கும். அதுதான் புளியம்பிஞ்சு.

கிருஷ்ணர் கோகுலத்தில் வசித்த போது அல்லது சுதாமாவுடன் குருகுலத்தில் படித்த காலத்தில் புளியம்பிஞ்சு சாப்பிட்டிருக்க வேண்டும். பக்தர்களின் மனங்களில் ஏறி நின்றவருக்கு, மரம் ஏறுவது பெரிய விஷயமா என்ன!

குழந்தைகள் கிருஷ்ணர் வேடமணிந்து கோலாட்டம், கும்மி அடிப்பதை ரசித்துப் பார்ப்பார். மறுநாள் காலையில் ஸ்நானம் முடித்து, திரிபுரசுந்தர சமேத சந்திர மவுலீஸ்வரர் பூஜை முடிந்த பிறகே, பிக்ஷை ஏற்க வருவார். 

No comments:

Post a Comment