Friday 1 December 2017

நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு


உதவி பெற்றதற்கு நன்றி செலுத்துவது ஒரு சிறந்த கடமை.

ஒரு சிறு புல்லைக் கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு, இத்தனை உணவும், உடையும் மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி காட்டுவது நமது கடமை. இவ்வாறு நன்றி கூறும் அடையாளமாகவே, நாம் உண்பதை அவனுக்கு முன் காட்டி நிவேதனம் செய்ய வேண்டும். அவனுக்குக் காட்டி விட்டுப் பிறகு நாம் தான் உண்ணப் போகிறோம். நாம் பலவிதமான ஆடை, ஆபரணங்கள் அணிவதற்கு அருள் செய்யும் ஆண்டவனுக்குத் திருவாபரணங்களையும், வஸ்திரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

எல்லாருமே இவ்விதம் வீட்டில் பூஜை செய்து, திரவியங்களை ஈசுவரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக கோயில்கள் எழுந்தன.

ஆதியில் மகரிஷிகள் மந்திர சக்தியால் எங்கும் நிறைந்த பரம்பொருளைச் சில விக்ரஹங்களில் விசேஷ சாந்நித்தியம் கொள்ளச் செய்தனர். அப்படிப்பட்ட மூர்த்திகளைச் சுற்றிக் கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. வீட்டில் பூஜை செய்கிறவர் உள்பட அனைவரும் கோயிலுக்குப் போவது என்று கட்டுப்பாடாகப் பழக்கம் வைத்துக் கொண்டால் தான் அங்கு பூஜைகள் குறைவின்றி நடக்கும்.

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்னும் புண்ணிய மொழி வழங்கும் நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் கோயில் வழிபாடு நடக்கச் செய்ய வேண்டும். இதுதான் நம் முதல் கடமை.

No comments:

Post a Comment