ஒருவர் தலைமை பொறுப்பில், கையெழுத்திடும் இடத்தில் இருக்க வேண்டும் என்றால் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்து இருந்தால்தான் அவரவர் ஜாதக பலத்துக்கு ஏற்ப பதவி கிடைக்கும்.
உலகில் பரவலாக காணப்படும் வழிபாடுகளில் சூரிய வழிபாடு ஒன்று. பண்டைய நாகரிகங்கள் பலவற்றிலும் சூரிய வழிபாடு இருந்ததென்பதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன. எந்த கடவுளையும் நாம் கண்ணால் காண முடியாது. ஆனால் சூரிய வழிபாட்டில் மட்டும் வழிபடும் கடவுளான சூரியனை நேரில் காணமுடியும்.
அதிர்ஷ்டம், ராஜயோகம், பட்டம், பதவி, பணம், பங்களா, நிலபுலன்கள் போன்ற அமைப்புகளை ஒருவருக்கு வழங்குவதில் நவக்கிரகங்களுக்கு பெரும் பங்கு உண்டு. ஒரு இடத்தில் நின்றும் இடம் பெயர்ந்தும் கிரகங்கள் தரும் பலன்களே ஒருவருக்கு நன்மை, தீமைகளை ஏற்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு வலிமை உண்டு.
நவக்கிரகங்களின் நாயகன் என்றழைக்கப்படுபவர் சூரியன். தினமும் நமக்கு தரிசனம் கொடுக்கும் கிரகம். ஒளியை தந்து உயிர்களை வாழவைத்து இந்த உலகையே வாழவைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம்.
அதிகாரம், ஆட்சி, ஆளுமை போன்றவற்றுக்கு அதிகாரம் உள்ளவர் இவர். சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், அதிகாரிகள், தலைமை செயலாளர்கள், மிகப்பெரிய அதிகார பதவிகள் ஆகியவற்றில் ஒருவர் அமர்வதற்கு சூரியனின் அனுக்கிரகம் அவசியம்.
இவை மட்டுமல்லாமல், ஒரு நிகழ்ச்சிக்கோ, 10 பேர் கொண்ட குழுவுக்கோ தலைமை வகிக்க வேண்டும் என்றாலும் சூரியனின் அருள் தேவை. தலைமை பீடம் என்பது சூரிய பலத்தினால்தான் கிடைக்கும்.
ஒருவர் ஏதாவதொரு வகையில் நம்பர் ஒன்னாக தலைமை பொறுப்பில், கையெழுத்திடும் இடத்தில் இருக்க வேண்டும் என்றால் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்து இருந்தால்தான் அவரவர் ஜாதக பலத்துக்கு ஏற்ப பதவி கிடைக்கும். நல்ல யோகமான சூரிய திசை நடக்கும்போது பட்டம், பதவி தேடி வரும்.
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறப்பது யோகம். சிம்ம லக்னம், சிம்மராசியில் பிறந்தால் கூடுதல் யோகம் கிடைக்கும். லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் நல்ல யோகம் உடையவர்கள்.
சூரியன் உச்சத்தில் இருக்கும் சித்திரை மாதம், ஆட்சியில் இருக்கும் ஆவணி மாதம் பிறந்தவர்கள் யோகம் உடையவர்கள். கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய சூரியனின் நட்சத்திரத்தில் பிறப்பது சிறப்பானது.
சூரியனை உதய காலத்தில் வெறுங் கண்ணால் பார்த்து தரிசித்து சூரியனின் காயத்ரி, தியான மந்திரம், அஷ்டோத்ரம் ஆகியவற்றைச் சொல்லி வணங்க வேண்டும். உதயகால சூரியன் அதிக வெப்பமின்றி, ஒளிக்கதிர்கள் இன்றி முழுவட்ட வடிவில் இளஞ் சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பார், இத்தரிசனம் அளப்பறிய சூரிய- ஆற்றலை பெற்றுத் தரும்.
கண்களின் மூலம் சூரியனின் ஆற்றல் உடலுக்குள் சென்றடையும். இதனால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். ஆத்ம பலம், மன பலம், தேக பலம், எதிர்ப்பு சக்தி, நோய் நிவர்த்தி, எதையும் சந்திக்கும் மனதைரியம், ஆண்மை, வீரியம் அதிகரித்தல், அறிவாற்றல், நினைவாற்றல், சிந்தனாசக்தி அதிகரித்தல், நிர்வாகத்திறன் கூடுதல், மனத்தூய்மை, முகத்தில் தேஜஸ் (ஒளி), வசீகரம், பேச்சாற்றல், எதிலும் வெற்றி பெறும் மன நிலை, நம்மால் முடியும் என்ற நம்பிக்கை, தாழ்வு மனப்பான்மை விலகுதல், ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், எண்ணங்களுக்கு வலிமை உண்டாகும், சத்ருக்களை ஜெயித்தல், எத்தகைய பிரச்சினைகளிலிருந்தும் வெற்றி பெறுதல், கண் பார்வை சக்தி அதிகரித்தல், கண் நோய் நீங்குதல் உள்ளிட்ட ஏராளமான பலன்களைப் பெறலாம்.
சிவாலய வழிபாடும், சூரிய நமஸ்காரமும் நல்ல பலன் தரும். தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். கோதுமையில் செய்த சப்பாத்தி, ரொட்டி, சாதம் போன்ற பண்டங்களை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.
‘ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்ய பிரசோதயாத்’ அல்லது ‘ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி தந்நோ ஆதித்ய பிரசோதயாத்’ என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம்அம் நமசிவாய சூரிய தேவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.
No comments:
Post a Comment