திருப்பாவை - 28
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன் தன்னை
பிறவிபெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்!
அதாவது, இடையர் குலத்தில் பிறந்த நாங்கள், பசுக்கூட்டங்களின் பசு, ஆடு, மாடு ஆகியவற்றை மேய்த்தபடியே காடு சென்றோம். வலக்கை இடக்கை அறியாத ஆயர்குலத்தில், பிறந்தவர்கள் நாங்கள்.
கண்ணா, நீயும் பசுக்கூட்டங்களோடு உன் இடுப்பில் கச்சை கட்டிக் கொண்டு, கானகம் வந்துள்ளாய் (கண்ணன் ஒருமுறை யமுனை நதிக்கரையில் மாடுகளை மேய்ப்பதை, யமுனையின் மறுகரையில் இருந்த பெண்ணொருத்தி, தன்னிடம் சொர்க்கம் எங்கு உள்ளது என்று கேட்டதாக, தனது குழந்தையிடம் மறுகரையில் உள்ள கண்ணன் மற்ற கோபியருடன் சேர்ந்து மாடு மேய்த்துக் கொண்டு, தாங்கள் கொண்டு வந்த தின்பண்டங்களை, உண்ணும் காட்சியை விளக்கி சொர்க்கம் இங்கேதான் உள்ளது என்று கூறினாளாம்.
ஆனால் ஏதுமறியாத கோபியர் சிறுவர்கள் கண்ணனை நண்பனாக பாவித்து விளையாடி மகிழ்ந்தனராம்! இதையே நினைவு கூரும் வகையில், ஆண்டாள் கூறுகிறாள்.
அங்கு ஆயர்குலத்தவருடன் சேர்ந்து உணவு (வெண்ணெய்) உண்கிறாய். இதுவே நாங்கள் பெற்ற பெரும்பேறு! நீ ஆயர்குலத்தில் பிறந்ததே நாங்கள் இப்பிறப்பில் செய்த பெரும் புண்ணியம். குறைவொன்றும் இல்லாத கோவிந்தனே! உமக்கும் எமக்கும் உள்ள இந்த உறவு பந்தம், யாராலும் எப்போதும் பிரிக்க இயலாதது.
இந்தப் பிறப்பில் மட்டுமல்ல... முற்பிறப்பிலிருந்தே ஏற்பட்ட பந்தம். நாங்களோ சிறுபிள்ளைகள். படிப்பறிவில்லாத ஆயர்குலத்தில் தோன்றியவர்கள். உம்மை மரியாதையாக, உயர்வாக, உமது லட்சணத்துக்கு ஏற்றவாறு உனது ஆறு குணங்களையும் விளக்கக்கூடிய சொற்களால் உன்னை துதிக்க எமக்குத் தெரியாது.
எனவே, உனது பெயரை முழுமையாகக் கூட்ட சொல்லத் தெரியாமல் சிறிய பெயரால், கண்ணா என்று அழைக்கிறோம். அதைக் கண்டு கோபம் கொள்ளாமல், எங்களது இறைவனே! நீயே எமக்கு அரு:ள்புரிய வேண்டும் என்கிறாள் ஆண்டாள்.
பகவானையே உபாயமாகக் கொள்ள, நற்கதியாகக் கொள்ள, ஆறு குணங்கள் விளக்கப்படுகிறது. அதாவது...
1.தங்களை வழிகாட்டும் குருவுக்குப் பின்னால், குருகுல வாசம் செய்ய ரிஷிகளுக்குப் பின்னால், செல்வதைப் போல் பசுக்கூட்டங்களுக்குப் பின்னால் சென்றது.
2. பகவானே. கண்ணனாகப் பிறந்தபோதும் அதை அறியாமல் அறிவு ஒன்றுமில்லாத ஆயர்குலத்தில் பிறந்தோம் என்கிற தன்மை (தாஸ பாவம்).
3. உமது மேன்மை குணங்களை (பாற்கடலை விட்டு பசு மேய்ப்பவனாகப் பிறந்தது) உனது வள்ளல் தன்மையை உணர்ந்தோம் அல்லவா. நீயே குறைவற்றவன் என உணர்ந்த ஞானம்.
4. உமக்கும் எமக்கும் உள்ள சம்பந்தம் ஒழிக்க முடியாதது. அதாவது பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள உறவு பிரிக்கவே முடியாது எனும் தத்துவம்.
5. செய்த பிழைகளை பொறுத்தருள மன்னிப்பு வேண்டுதல்.
6. அன்பின் மேலீட்டால் நாங்கள் செய்த பிழைகளை பொறுத்தருளி, நாங்கள் வேண்டி வந்ததை வேண்டிய வண்ணமே எங்களுக்கு அருள வேண்டும் என பக்தர்களுக்குத் தேவையான ஆறு குணங்களையும் விளக்குகிறாள் ஆண்டாள்.
ஆண்டாள் அருளிய இந்தப் பாடலை, சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பாடுங்கள். வேண்டும் வரங்களைத் தந்தருள்வான் மகாவிஷ்ணு!
No comments:
Post a Comment