Sunday, 14 January 2018

தனம் தரும் தடாக பிரதிஷ்டை


`மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாய் தொடங்கினர்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே` என்பது தாயுமானவர் பாடிய பராபரக்கண்ணி. இவை மூன்றும் அமைந்த தலம் கீழப்பாவூர்.

வினைகளைத் தீர்க்கும் தீர்த்தம் :

வினைகளைத் தீர்ப்பதினாலேயே தீர்த்தம் எனப் பெயர் பெற்றதாக வாரியார் சுவாமிகள் கூறுவார். தீர்த்தங்களைப் பகவத் சொரூபமாக வணங்குவது பழங்கால மரபு. ஆலயத்திலுள்ள தெய்வத்துக்கு எந்தளவு சான்னித்யம் உண்டோ அதே அளவு சான்னித்யம் அங்குள்ள தீர்த்தத்துக்கும் உண்டு என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு தலத்தில் இறைவன் விரும்பி உறைவதற்கு அங்குள்ள புனிதத் தீர்த்தங்கள் காரணமாக அமைகின்றன. அவ்வகையில் கீழப்பாவூரில் சிங்கப்பெருமாள் வீற்றிருப்பதற்கு இங்குள்ள தெப்பக்குளமும் மிக முக்கியக் காரணம்.

ஆகம விதிப்படியும் சிற்ப சாஸ்திரப்படியும் ஒவ்வோர் ஆலயத்துக்கும் ஈசான்ய திக்கில் தீர்த்தக்குளம் அமைவதுதான் முறை. இங்கு மேற்குத் திக்கில், நரசிம்மர் சன்னிதி முன்பாகவே அமைந்துள்ளது சிறப்பு. ஸ்ரீவைகானஸ பகவத் சாஸ்திரப்படி, ஒவ்வொரு விஷ்ணு ஆலயத்தின் நான்குத் திக்குகளிலும் நான்கு நதிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆலயத்தின் கிழக்கே கங்கை, மேற்கே நர்மதை, தெற்கே யமுனை, வடக்கே சிந்து நதி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

வேங்கடாஜலபதி சந்நிதிக்கு மேற்கில் தெப்பக்குளம் அமைந்துள்ளதால் அது நர்மதை எனவும், நரசிம்மர் சந்நிதிக்கு முன்புறம் உள்ளதால் இக்குளம் கங்கையாகவும் கருதப்படுகிறது. இவ்வாறு ஒரே தெப்பக்குளம் நர்மதை ஆகவும் கங்கை ஆகவும் விளங்குவது இந்தத் தீர்த்தக் குளத்தின் இரட்டைச் சிறப்பு. கங்கா நர்மதா சம்யுக்த ஸ்ரீநரசிம்ஹ புஷ்கரணி என அழைக்கப்படும் இந்தத் தீர்த்தமே நரசிம்மர் அபிஷேகத்திற்கும், நிவேதனம் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

கங்கையின் மறுபெயர் திரிபதி :

பரந்தாமனின் பாதக் கமலங்களிலிருந்து உற்பத்தியான அருள்நதி கங்கை என்கிறது விஷ்ணு புராணம். கங்கை பூலோகத்துக்கு மட்டுமல்ல, மூவுலகத்துக்கும் பொதுவான நதி. ஆகையால் கங்கையைத் திரிபதி எனச் சொல்வார்கள். இத்தகைய கங்கைக்குச் சமமான நரசிம்மர் தீர்த்தத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவோண நட்சத்திரத்தன்று ஏகதின தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. இந்த நரசிம்ம புஷ்கரணியை மையமாகக்கொண்டே ஆலயத்தின் உற்சவங்கள் அனைத்தும் நடத்தப் பெறுகின்றன. ஒவ்வொரு மாதமும் சுவாதி, திருவோண நட்சத்திரத்தன்றும், பிரதோஷம், வளர்பிறை சதுர்த்தசி, செவ்வாய், சனி ஆகிய நாட்களிலும் மாலை வேளையில், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற மகா மந்திரத்தைப் பாராயணம் செய்துகொண்டே ஆலயத்தோடு சேர்த்து நரசிம்ம புஷ்கரணியை மும்முறை வலம் வந்து வழிபாடு செய்கின்றனர் பக்தர்கள்.

மகாலக்ஷ்மி அம்சமாக, சதுர வடிவில் அமைந்துள்ள இந்தத் தீர்த்தத்தில் நரசிம்மரின் அருள்பார்வை படுவதால், இதில் புனித நீராடுதல், தீர்த்தத்தைத் தலைமேல் தெளித்துக் கொள்ளுதல் ஆகியன பாவங்களைப் போக்கும், முக்தியைத் தரும் என்பது ஐதிகம். கங்கையில் நீராடிய பலனும் உண்டு என்கிறது தல புராணம்.

நரசிம்மரின் சினத்தைத் தணித்த இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் வேண்டாத கோபம், பதற்றம், மனக்கவலை ஒழியும், ஓம் அச்சுதாய நமக, அனந்தாய நமக, கோவிந்தாய நமக என்னும் ‘நாம த்ரயம்’ உச்சரிக்கப்பட்டு தீர்த்தம் பருகினால் சரீரம் சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்குவதுடன், ஆன்மபலமும் ஏற்படும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் கிட்டும் என்பன போன்ற பல நம்பிக்கைகள் நிலவுகின்றன.

இறைவனைப் பிரியாமல் இருக்கும் பொருட்டே மகாலஷ்மி இந்தத் திருக்குளத்தில் தினமும் நீராடிப் பகவானைப் பூஜித்து வருவதாக நம்பிக்கை நிலவுகிறது.

எப்படிப் போகலாம் ? :

திருநெல்வேலி-தென்காசி நெடுஞ்சாலையில், தென்காசியிலிருந்து கிழக்காக 10 கி.மீ., திருநெல்வேலியிலிருந்து மேற்காக 40 கி.மீ., தொலைவில் பாவூர்சத்திரம் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., அருகில் சுரண்டை என்னும் ஊருக்குச் செல்லும் வழியில் சாலையருகே கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது.

புஷ்கரணிக்குப் பிரதிஷ்டை  :

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலைச் சேர்ந்த புனரமைக்கப்பட்டுள்ள, ஸ்ரீநரசிம்ஹ புஷ்கரணி என்ற பெயருடைய தடாகத்திற்குப் பிரதிஷ்டை 19.01.2018 வெள்ளிக்கிழமை காலை 9.30-10.20 மணிக்குள் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment