Sunday, 14 January 2018

ஒரே நாளில் ஐந்து பூஜைகள், ஐந்து தலங்கள்! வாழ்வை வளமாக்கும் பஞ்ச ஆரண்ய தலங்கள்!


ஒரே நாளில் ஐந்து ஆலயங்களைத் தரிசித்தால், மகா புண்ணியம் என்கீறார்கள் பக்தர்கள். தஞ்சாவூரைச் சுற்றியுள்ள இந்தத் தலங்களை ஒருநாள்... ஒரேநாளில்... தரிசிக்கலாம். அப்படித் தரிசித்து எல்லா வளங்களையும் பெறுங்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

உஷத் கால பூஜை எனப்படும் அதிகாலையில் நடைபெறும் பூஜை தொடங்கி அர்த்தஜாம பூஜை வரை தரிசிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன பஞ்ச ஆரண்ய திருத்தலங்கள். இந்தத் தலங்களுக்குச் சென்று தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும் என்பது ஐதீகம்!

திருக்கருகாவூர், திரு அவளிவநல்லூர், அரித்துவாரமங்கலம், ஆலங்குடி, திருக்கொள்ளம்புதூர் என ஐந்து தலங்களை, பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று போற்றுகிறார்கள். ஆரண்யம் என்றால் வனம். ஒருகாலத்தில் வனமாகத் திகழ்ந்து, இன்றைக்கு கிராமங்களாகவும் ஊர்களாகவும் அமைந்திருக்கின்றன, இந்தத் திருத்தலங்கள்.

தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பஞ்ச ஆரண்யத் தலங்களைப் பார்ப்போமா?

தஞ்சாவூரில் இருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கருகாவூர். இங்கே சிவபெருமானின் திருநாமம் ஸ்ரீமுல்லைவனநாதர். அம்பாளின் பெயர் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை! ‘அடடா... இந்தக் கோயில்தான் தெரியுமே...’ என்பீர்கள். கர்ப்பத்தைக் காத்தருளும் அம்பிகை குடிகொண்டிருக்கும் அற்புதமான கோயில்.

குழந்தைப் பேறு, சுகப் பிரசவம் வேண்டி வழிபடும் அருமையான திருத்தலம். இங்கே காலை 5.30 முதல் 6 மணிக்குள் உஷத் காலம் எனப்படும் அதிகாலை பூஜையை முதலில் தரிசிக்க வேண்டும்!

இதையடுத்து திருக்கருகாவூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள திரு அவளிவநல்லூரை அடையலாம். அங்கே ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீசாட்சி நாதர் ஆலயம் அமைந்து உள்ளது.

இந்தத் தலத்துக்கு வந்து சிவபார்வதியை வேண்டிக் கொண்டால், குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்வார்கள்! அமைதியே உருவான அழகிய கோயில். அம்பாள், கொள்ளை அழகுடன் கருணைத் ததும்பக் காட்சி தருகிறாள்.

காலை 8.30 முதல் 9.30 மணி வரை காலைவேளை பூஜை சிறப்புற நடைபெறும். அந்த நேரத்தில் இங்கு வந்து தரிசிப்பது சிறப்பு!

அதன் பிறகு அப்படியே அருகில் உள்ள அரித்துவாரமங்கலம் தலத்தை வந்தடையலாம். இங்கே ஸ்ரீஅலங்காரநாயகி சமேத ஸ்ரீபாதாளேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அற்புதமான ஆலயம்! புராதனப் பெருமைகள் கொண்ட திருக்கோயில் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

அரித்துவாரமங்கலம் தலத்துக்கு வந்து, ஸ்ரீபாதாளேஸ்வரரையும் ஸ்ரீஅலங்காரநாயகியையும் கண்ணாரத் தரிசித்து, மனதாரத் வேண்டிக் கொண்டால், நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்!

இங்கே, 11 முதல் 12.30 மணி வரை உச்சிக் கால பூஜை நடைபெறும். அப்போது மூன்றாவதாக இந்தத் தலத்தை தரிசித்து விடலாம்!

இதையடுத்து, திருஇரும்பூளை எனப்படும் ஆலங்குடி திருத்தலத்துக்கு வந்துவிடலாம். பேருந்து வசதிகள் நிறையவே உண்டு. இங்கே ஸ்வாமியின் திருநாமம் & ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர். அம்பாள் & ஸ்ரீஏலவார்குழலி.

நீங்கள் நினைத்தது சரிதான். குரு தட்சிணாமூர்த்தி, கோயில் கொண்டிருக்கும் குரு ஸ்தலம்தான் இது. குருவின் ஆதிக்கம் நிறைந்த திருத்தலம். இந்தத் தலத்தின் முக்கியமான சிறப்பு... குரு தட்சிணாமூர்த்தி அழகுற கோயில் கொண்டிருக்கிறார்! இங்கு வந்து வேண்டிக் கொண்டால், குரு பலம் கிடைக்கும். கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கலாம்!

மாலை 5.30 மணிமுதல் 6 மணிவரை சந்தியா கால பூஜையின் போது ஆலங்குடி தலத்தில் வழிபட்டுவிடலாம்.

பிறகு ஐந்தாவதாக, அப்படியே அருகில் உள்ள திருக்கொள்ளம்புதூர் தலத்தை அடையலாம். இங்கே சிவபெருமானின் திருநாமம் & ஸ்ரீவில்வாரண்யேஸ்வரர். அம்பாளின் பெயர் ஸ்ரீசௌந்தரநாயகி.

சித்த பிரமை உள்ளவர்கள், மனக்குழப்பத்தில் தவிப்பவர்கள், எப்போதும் பயத்துடன், எதற்கெடுத்தாலும் பயத்துடன் கலங்குபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் மனதில் தெளிவு பிறக்கும், மனநோய் நீங்கும் என்பது ஐதீகம்! மனோபலத்தைத் தந்தருளும் அற்புதமான திருத்தலம் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

இரவு 7.30 மணி முதல் 8.30 மணிவரை அர்த்தஜாம பூஜை நடைபெறும். பஞ்ச ஆரண்ய தலங்களில் ஐந்தாவதாக இந்தத் தலத்தை தரிசித்து, நிறைவு செய்யலாம்!

இந்த ஐந்து திருத்தலங்களையும் ஒரே நாளில் தரிசித்துப் பிரார்த்தனை செய்து கொண்டால், வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறலாம். சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழலாம் என்பது ஐதீகம்!

1 comment:

  1. It is pleasure to see all the places without any disturbances

    ReplyDelete