ராம லட்சுமணரை அழைத்துக் கொண்டு விஸ்வாமித்திரர், அயோத்தியில் இருந்து புறப்பட்டார். இருவருக்கும் பசி, தாகம், களைப்பு மூன்றையும் தடுக்கும் "பலை அதிபலை' என்னும் மந்திரத்தை உபதேசித்தார். அவர்கள் ஒரு வனத்தை அடைந்தனர். "இந்த காட்டில் யாருமே வசிக்கவில்லையே ஏன்?'' எனக் கேட்டார் ராமர்.
"முன்பொரு காலத்தில் இப்பகுதியை சுகேது என்பவன் ஆட்சி செய்தான். அவனுக்கு ஒரு மகள் பிறந்தாள். ஆயிரம் யானை பலமும், நினைத்த உருவம் அடையும் ஆற்றலும் பெற்ற அவளது பெயர் தாடகை. சுந்தன் என்பவனை மணந்து மாரீசன் என்ற மகனைப் பெற்றாள். அவர்கள் இந்தக் காட்டில் தான் வசிக்கின்றனர். தாயும், மகனும் நினைத்த வடிவத்தில் தோன்றி, தவம் செய்யும் முனிவர்களுக்கு இடையூறு செய்கின்றனர். நீ மனம் வைத்தால் இப்போதே தாடகையை வதம் செய்ய முடியும்,'' என்றார் விஸ்வாமித்திரர் தயங்கிய ராமர்,"தாடகை ஒரு பெண். அவளைக் கொல்வது தர்மம் இல்லையே!'' என்றார்.
" நன்மை செய்வது போல, தீமையைத் தடுப்பதும் தர்மமே. பெண் வடிவில் பேயாகத் திரியும் தாடகையைக் கொல்வதால் அனைவருக்கும் நன்மையே உண்டாகும்,'' என்றார் விஸ்வாமித்திரர். ரிஷியின் கட்டளையை ஏற்ற ராமர், அவளைக் கொன்றார். முனிவர்கள் நிம்மதியாக தவம் செய்யத் தொடங்கினர்.
No comments:
Post a Comment