Tuesday 31 October 2017

குடும்ப பிரச்னை தீர பைரவர் வழிபாடு


திங்கட்கிழமையன்று வரும் சங்கடஹரசதுர்த்தியன்று பைரவருக்கு மஞ்சள் நிற பூக்களாலான மலர்மாலை அணிவித்து ஜவ்வரிசிப்பாயசம், அன்னம் படையல் இட்டு அர்ச்சிக்க தாயாரின் உடல்நலனில் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய்க்கிழமை ராகுவேளையில் (மாலை 3-4.30) பைரவருக்குச் செவ்வரளி மாலை சாத்தி, துவரம்பருப்புப் பொடி சாதம், செம்மாதுளம்பழம் படையலிட்டால் சகோதரப் பகை நீங்கி ஒற்றுமை நிலைக்கும். புதன் கிழமை மாலை, பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை சாத்தி புனுகுபூசி பாசிப்பருப்புப் பொடி கலந்த அன்னம், பாசிப்பருப்புப் பாயசம் படையல் செய்ய மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெறுவர். கிரகிப்புத்திறன் அதிகரித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவர். புதன்கிழமை காலை 10.30- 12க்குள் பைரவருக்குச் சந்தனக்காப்பு செய்து மரிக்கொழுந்து மாலை சூட்டி, பாசிப்பயறு பாயாசம், கொய்யாப்பழம், பாசிப்பருப்புப் பொடி சாதம் படைக்க வியாபாரத்தில் அமோகவளர்ச்சி உண்டாகும். வெள்ளிக்கிழமை ராகுவேளையில் பைரவருக்கு சந்தனக்காப்பு செய்து, தாமரை மலர் மாலை சூட்டி, அவல் கேசரி, பானகம், சர்க்கரைப்பொங்கல் படைத்து அர்ச்சனை செய்தால் மனதிற்குப் பிடித்த வகையிலும், தடையின்றியும் திருமணம் கைகூடும்.

மண்சுமந்த "ஆசுதோஷி'


பக்தர்களின் எளிய பிரார்த்தனைக்குக் கூட மகிழ்ச்சி அடைந்து விரைவில் அருள்புரிவதால், சிவனுக்கு "ஆசுதோஷி' என்ற சிறப்புப் பெயருண்டு. இவர் 64 திருவிளையாடல்களைப் புரிந்த தலம் மதுரை. மற்ற தலங்களில் சிவனின் திருப்பாதம் மண்ணில் பட்டது. ஆனால், மதுரை மண்ணைச் சிவனே தன் தலையில் தாங்கி நின்றதுடன், இந்த மண்ணை அரசாட்சியும் செய்தார். வந்தியம்மை என்னும் பக்தைக்காக கூலியாளாக வந்த இவர் பிட்டுக்காக மண் சுமந்தார். இவரது தேவியான மீனாட்சி சந்நிதியில் வழிபட்ட பின்னரே, சுந்தரேஸ்வரர் என்னும் பெயர் கொண்ட இவரது சந்நிதிக்குச் செல்லும் வழக்கம் இருக்கிறது.

அறிவுக்கும் அலைமகளே ஆதாரம்


அறிவு மிக்கவரை "இவர் பெரிய பிருகஸ்பதி' என்று சொல்வதுண்டு. வால்மீகி ராமனின் அறிவுத்திறத்தைக் குறிப்பிடும்போது, "பிருஹஸ்பதி சமோ புத்யா' என்கிறார். "தேவகுருவான பிருகஸ்பதிக் குச் சமமான அறிவுடைய வர்' என்பது இதன் பொருள். மக்கள் அனைவரும் பிருகஸ்பதி(தேவகுரு) போல ஞானம் கொண்டவராகவோ அல்லது வனஸ்பதி (காட்டில் உள்ள மரம்) போல அறியாமை பெற்றவராகவோ வாழ்வதற்கான காரணத்தை கூரத்தாழ்வார், தான் பாடிய ஸ்ரீஸ்தவத்தில் கூறியுள்ளார். 

செல்வத்திற்கு அதிபதியான திருமகளின் பார்வை ஒருவர் மீது பட்டால், அவருக்கு பிருகஸ்பதி போல ஞானமும், படாவிட்டால் மரம் போல நிற்கும் அஞ்ஞானமும் உண்டாகிறது. இதை "லோகே பிருஹஸ்பதி வனஸ்பதி' என்கிறார். செல்வச்செழிப்புக்கு மட்டுமின்றி, ஞானத்திற்கும் (அறிவு) திருமகளே ஆதாரம் என்பது அவரது கருத்து. 

முருகனே மும்மூர்த்தி

Image result for murugan

அழகென்ற சொல்லுக்கு முருகா என்பர். முருகன் என்பதன் பொருள் "அழகன்'. "முருகு' என்னும் சொல்லில் தமிழின் வல்லினம்,மெல்லினம், இடையினம் ஆகிய மூன்று இன எழுத்துக்கள் உள்ளன. மெல்லினமாகிய "மு' விஷ்ணுவையும், வல்லினமாகிய "ரு' சிவனையும், இடையினமாகிய "கு' பிரம்மனையும் குறிக்கும் என்பர். முருகப்பெருமானை வழிபட்டால் 
மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலன் கிடைக்கும். 

உலகிலேயே "வெயிட்'டான ஊர்!


பரம்பொருளான விஷ்ணு அயோத்தியில் ராமராக அவதரித்த போது தேவதைகள் எல்லாம் பூலோகத்தில் ஒன்றுகூடினர். கையில் தராசை வைத்துக் கொண்டு அயோத்தியை ஒரு தட்டிலும், வைகுண்டத்தை மற்றொரு தட்டிலும் வைத்து நிறுத்துப் பார்த்தனர். வைகுண்டம் மேலே இருக்க, அயோத்தி இருந்த தட்டு கீழே இருந்தது. ராமர் பிறந்த இடம் புனிதமானது என்பதால் அயோத்தியின் எடை அதிகரித்தது. ராமாயணத்தில், வால்மீகி முனிவர் அயோத்தியின் பெருமையைப் பாடியுள்ளார். நம்மாழ்வாரும் இவ்வூர் பெருமையைப் புகழ்ந்திருக்கிறார். ""இவர்களெல்லாம் சொல்லியபிறகு அடியேன் அற்ப புத்தி கொண்டவன். என்னால் இவ்வூர் பெருமை பற்றி என்ன சொல்லிவிட முடியும். இருந்தாலும் சொல்கிறேன்' என்று அயோத்தி பற்றி கம்பர் வர்ணிக்கிறார். 

கங்கை நீரில் வீணை


நமது மகான்களினிடம் இருந்த தெய்வசக்திக்கு ஈடு இணை இல்லை என்பதற்கு <உதாரணமாக நடந்த நிகழ்ச்சி இது. திருவாரூர் முத்துசுவாமி தீட்சிதர் இளம் வயதிலேயே வேதம், இலக்கணம், பாட்டு, வீணை கற்றுத்தேர்ந்தார். சிதம்பர சுவாமி என்பவருடன் காசி சென்றார். அவரிடம் பல கலைகளைக் கற்றார். ஸ்ரீவித்யா மந்திர உபாசனை பெற்றார். ஐந்தாண்டு கடந்ததும், சிதம்பர சுவாமி அவரை சொந்த ஊருக்குச் செல்லும்படி உத்தரவிட்டார்.

""சுவாமி! ஊருக்குப் போகச் சொல்கிறீர்களே! நான் கற்றவித்தைகளில் தேர்ந்து விட்டேன் என்பதை எப்படி தெரிந்து கொள்வது?'' என்றார் தீட்சிதர். ""நீ கங்கைக்குச் செல். இரண்டு கைகளிலும் தண்ணீரை அள்ளி, மனதில் ஏதோ பொருளை நினைத்துக் கொண்டு, தண்ணீரைப் பார். அதில் நீ நினைத்தது தெரிந்தால், கலைகளில் தேர்ந்து விட்டதாக அர்த்தம்,'' என்றார் சுவாமி.

தீட்சிதரும் கங்கை நீரை கையில் அள்ளி, மனதில் வீணையை நினைத்தபடியே பார்த்தார். என்ன ஆச்சரியம்! தண்ணீரில் வீணை தெரிந்தது. அதன் குடப்பகுதியில் "ஸ்ரீராம்' என்ற மந்திரமும் தெரிந்தது. உணர்ச்சியின் விளிம்புக்கே சென்று விட்ட தீட்சிதர் சென்னை வந்தார். திருத்தணி முருகனின் அருளால் பல கீர்த்தனைகளைப் பாடினார். 

கண்ணுக்கு கண்ணானவர்கள்


கண் என்றால், அதில் கருணை இருக்கவேண்டும். "கண்ணுக்கு அணிகலன் தாட்சண்யம்' என்பர். இதை வெளிப்படுத்தும்விதத்தில் பல தலங்களில் அம்பிகையின் பெயர் கண்ணோடு சேர்த்து வழங்கப்படுகிறது. தேவிதலங்களில் மதுரை, காஞ்சிபுரம், காசி மூன்றையும் சேர்த்துச் சொல்லும் மரபு உண்டு. இம்மூன்றிலும் அம்பிகையின் திருநாமத்தில் கண் இடம் பெற்றுள்ளது.

மதுரையில் அம்பிகை மீனாட்சியாக இருக்கிறாள். இவள் மீன் போன்ற கண்களைக் கொண்டவள். மீன் தன் குஞ்சுகளைக் கண்ணால் காப்பது போல, இவள் தன் கயல்விழிகளால் உயிர்களைக் காக்கிறாள். அடியவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் கண்களைக் கொண்டவளாக இருப்பதால் காஞ்சியில் காமாட்சி என்று பெயர் பெறுகிறாள். காசியில் விசாலமான அகன்ற கண்களைக் கொண்டு விசாலாட்சியாக அருள்பாலிக்கிறாள்.

வல்லவருக்கு நகமும் ஆயுதம்


கஜாசுரன் என்பவன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். விண்ணில் இருக்கும் அண்டத்தை காலால் உதைத்தான். அண்டச்சுவர் உடைந்து ஆகாசகங்கை பூலோகத்தை நோக்கி வந்தது. உயிர்கள் அனைத்தும் மரண பயத்தால் கலங்கின. தேவர்கள் விநாயகரிடம் சரணடைந்தனர். கஜாசுரனைக் கொல்ல ஆயத்தமானார் விநாயகர். முதலில் பூலோகத்தைக் காக்க, கால்பெருவிரல் நகத்தால் அண்டச்சுவரில் ஏற்பட்ட துளையை அடைத்தார். ஆகாச கங்கை தடைபட்டது. பின், கஜாசுரனை ஒரே நொடியில் வீழ்த்தினார். கலக்கம் தீர்ந்த தேவர்கள் விநாயகரை பூஜித்து மகிழ்ந்தனர். தேவர்களின் கலக்கம் தீர்த்த இவர் "கலங்காமல் காத்த விநாயகர்' என பெயர் பெற்றார். குரு தலமான ஆலங்குடியில் (திருவாரூர் மாவட்டம்) அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் மனக்கலக்கம், எதிரிபயம் நீங்கும். மனநிம்மதி உண்டாகும். 

Monday 30 October 2017

சண்டிகேஸ்வரர் முன் நூல் போடாதீங்க!


சிவனடியார்களில் எப்போதும் தியானத்தில் ஆழ்ந்திருப்பவர் சண்டிகேஸ்வரர். சிவன் கோயிலுக்குச் சென்று, இவரை தரிசிக்காமல் திரும்பினால், கோயிலுக்கு சென்ற பலன் கிடைக்காது என்பது ஐதீகம். வலக்கையின் நடுவிரல்கள் மூன்றையும் இடக்கையால் தட்டுவது போல கையை வைத்து இவரை வழிபட வேண்டும். ஆனால், சத்தம் வரக்கூடாது. சிவதியானம் கலைந்து விடும் என்பதால் இவர் சந்நிதியில் ஒலி எழுப்புவதோ, நூலைப் பிய்த்து போடுவதோ கூடாது. இவரைச் சுற்றி வந்து வழிபடவும் கூடாது. இவர் நாயன்மார்களில் ஒருவர். 12வயது சிறுவனாக இருந்தபோதே சிவனருள் பெற்றவர். பன்னிரு திருமுறைகளில், கண்ணப்பருக்கு அடுத்தபடியாக போற்றப்படுவர் இவர் தான்.

அனுமனும் ரகுவம்சம் தான்!


ரகுவம்சத்தில் (சூரியவம்சம்)பிறந்ததால் ராமருக்கு "ரகுராமர்' என்ற பெயர் உண்டு. அவரைப் போலவே, ராமதூதரான அனுமனும் ரகுவம்சத்தில் அவதரித்ததாக அனுமன் சாலீஸா குறிப்பிடுகிறது. துளசிதாசர் இயற்றிய ராமாயணத்தில், சீதையும், ராமரும் தத்தெடுத்துக் கொண்ட பிள்ளையே அனுமன் என்று குறிப்பிடப்படுகிறது. அவர் சீதையைத் தேடி இலங்கை சென்ற போது, சீதை அனுமனைச் "சுத' என்று அழைக்கிறாள். "சுத' என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு "மகன்' என்று பொருள். அனுமனும் சீதாதேவியைத் "தாயே' என்று அழைத்து வணங்குகிறார். அனுமனை ராமரே முதலில் சந்தித்தாலும், தன் மகனாக ஏற்று அன்பு காட்டியவள் சீதையே. இந்த வகையில், அனுமனும் ராமர் பிறந்த ரகுவம்சத்தில் பிறந்தவராகவே கருதப்படுகிறார். இதனை நிரூபிக்கும் விதத்தில் துளசிதாசர் அனுமன் சாலீஸாவில் "ரகுபர' என்று அனுமனைப் போற்றியுள்ளார். இதற்கு "ரகுவம்சத்தில் சிறந்தவர்' என்று பொருள்.

பன்றியாய் வந்த பரந்தாமன்


ஆந்திராவைச் சேர்ந்த நாராயணதீர்த்தர், தன் நோய் தீர வேண்டி தலயாத்திரை புறப்பட்டார். தஞ்சாவூர் வந்தபோது, வெள்ளை பன்றி ஒன்று இவர் முன்னால் சென்றது. அதை தீர்த்தர், பின்தொடர்ந்தார். பூபதிராஜபுரம் வெங்டேசப் பெருமாள் கோயிலை அடைந்தார். அப்போது வானில், "உன்னை அழைத்து வந்தது நான் தான்' என்று வானில் அசரீரி ஒலித்தது. பெருமாளே வராகமாக தன்னை அழைத்து வந்தது குறித்து அவர் பெருமைப்பட்டார். பன்றியாக பெருமாள் காட்சி அளித்ததால் இத்தலத்திற்கு "வராகபுரி" என்ற பெயர் ஏற்பட்டது. தற்போது "வரகூர்' என்று அழைக்கப்படுகிறது. அங்கேயே தங்கிய நாராயணதீர்த்தரின் நோய் நீங்கி குணமடைந்தார். பாகவதத்தில் உள்ள கிருஷ்ணரின் வரலாற்றை, "கிருஷ்ணலீலா தரங்கிணி'யாகப் பாடினார். இப்பாடலைக் கேட்ட பெருமாள் காலில் சலங்கை ஒலிக்க ஆடினார். ஆஞ்சநேயர் பாட்டுக்கேற்ப தாளம் போட்டார். இக்கோயில் அர்த்தமண்டபத்தில் "தாளம்கொட்டி ஆஞ்சநேயர்' வீற்றிருக்கிறார். தஞ்சாவூரில் இருந்து 25கி.மீ., தொலைவில் வரகூர் உள்ளது. 

சிக்கிக் கொண்ட சிவன்!


பெண்ணாடத்தில் வசித்த சிவபக்தரான அச்சுதகளப்பாளருக்கு மகப்பேறு இல்லை. தன் குருநாதர் அருள்நந்தி சிவாச்சாரியாரிடரிடம் முறையிட்டார். அவர், நாயன்மார்கள் பாடிய பன்னிருதிருமுறைகள் மீது அபார நம்பிக்கை கொண்டவர். அவர் "கயிறு சாத்துதல்' என்னும் முறை மூலம் களப்பாளருக்கு குழந்தை பாக்கியம் உண்டா என சோதித்தார். அதாவது, திருமுறை ஏடுகளை சிவன் முன் வைத்து, அதில் கயிறு போட்டு பார்ப்பதாகும் (நாடி ஜோதிடம் போல) அதில் சம்பந்தரின் திருவெண்காட்டுப்பதிகம் வந்தது. அப்பதிகத்தை தினமும் பாராயணம் செய்ய சீடரிடம் கூறினார்.

ஆனால், சிவன் களப்பாளரின் கனவில் தோன்றி, ""நீ என்ன செய்தாலும், உனக்கு புத்திர பாக்கியம் இல்லை'' என்று கூறிவிட்டார்.

களப்பாளர் அவரிடம்,""சுவாமி! என் ஊழ்வினைப்பயனால் எனக்கு குழந்தை இல்லாமல் போனாலும், தங்கள் அருள்பெற்ற சம்பந்தரின் வாக்கும், நான் இதைப் படிக்க காரணமான என் குருநாதரின் வாக்கும் பொய்யாகலாமா?'' என்று வருத்தத்துடன் கேட்டார். இந்த நியாயமான கேள்வியில் சிக்கிக் கொண்ட சிவன், அவருக்கு பிள்ளைவரம் அளித்தார். சைவத்துக்கே சாஸ்திரமாக விளங்கும் "சிவஞானபோதம்' என்னும் அரிய நூலை இயற்றிய மெய்கண்டார் தான் அந்தக் குழந்தை.

மதயானையை சாந்தமாக்கிய நரசிம்மர் தீர்த்தம்


ஆந்திராவிலுள்ள அகோபிலம் நரசிம்ம ஆராதனைக்கு பெயர் பெற்றது. இங்கு நாற்பதாவது ஜீயராக இருந்தவர் ரங்கநாத சடகோப யதீந்திர தேசிகர். காரைக்குறிச்சி அழகியசிங்கர் என்று இவரைக் குறிப்பிடுவர். இவர் நரசிம்ம உபாசனையில் தீவிரமாக இருந்தார். திருக்கச்சி நம்பிகள் காஞ்சிபுரம் தேவாதிராஜபெருமாளோடு பேசுவது போல, அகோபிலத்திலுள்ள மாலோல நரசிம்மனோடு பேசுவார். ஒருமுறை, அகோபில மட யானைக்கு மதம்பிடித்தது. அனைவரும் பயந்து ஓடத்துவங்கினர். ஆனால், ஜீயர் தன் கையில் திரிதண்டத்துடன் யானையை நோக்கி நடந்தார். நரசிம்மரின் திருமஞ்சன (அபிஷேகம்) தீர்த்தத்தை அதன் மீது தெளித்தார். யானை ஸ்தம்பித்து நின்றுவிட்டது. பின்னங்கால் இரண்டையும் மடக்கிக் கொண்டு துதிக்கையைத் தூக்கி "நரசிம்ஹா' என்று மூன்றுமுறை கத்தியது. ""என்னடா உனக்கு ஆச்சு!'' என்று அன்போடு தடவிக் கொடுத்து பெருமாள் தீர்த்தத்தை வாயில் கொடுத்தார். தீர்த்த மகிமையால் யானை ஒருநொடியில் சாந்தமாகி விட்டது.

பெருமாள் நெற்றியில் அக்னி


சென்னை சூளைமேட்டில் உள்ள பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் மிகவும் பழமையானது.ஏராளமான மகான்கள், அடியார்கள்,சித்தர்கள் திருவடி பட்ட தலம். இங்கு மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது நெற்றியிலிருந்து தீப்பொறி வெளிப்பட்டது. ஆகவே இது அக்னி தலமாக கருதப்படுகிறது. தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், திருவோண நட்சத்திர நாட்களில் கருடசேவை நடத்துகின்றனர். சின்ன கருட வாகனத்தில் பவனி வரும்பெருமாள் பக்தர்கள் தேங்காய் நெய்தீபம் ஏற்றியும் வேண்டுதல் வைக்கிறார்கள். தன்வந்திரி,லட்சுமி ஹயக்கிரீவர், தட்சிணாமூர்த்தி சந்நிதிகளும் உள்ளன. அஸ்த நட்சத்திரம் அன்றும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் அர்ச்சனை செய்வது விசேஷம். கோயிலினுள் அரசமர வேர் விநாயகர் போல தோற்றமளிக்கிறது. சுயம்பு அரசமர விநாயகராக அவர் போற்றப்படுகிறார்.

பிரகலாதனின் தாயைப் பார்க்க வேண்டுமா


திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் பிரசன்னவெங்கடாஜலபதி கோயிலில், பதினாறு கரங்களுடன் புடைப்புச் சிற்பமாக நரசிம்மர் உள்ளார். கஷ்யபமுனிவர், வருணன், சுகோஷ முனிவர் ஆகியோரின் தவத்தை ஏற்ற விஷ்ணு இங்கு இரண்யனை மடியில் கிடத்தி வதம் செய்த கோலத்தில் தரிசனம் அளித்தார். சூரியன், சந்திரன் வெண்சாமரம் வீசி பெருமாளை சாந்தப்படுத்தும் நிலையில் உள்ளனர். இவரை நாரதர், பிரகலாதர், பிரகலாதனின் தாய் கயாது ஆகியோர் வணங்கியபடி உள்ளனர். நரசிம்மரின் சீற்றத்தைத் தணிக்கும்வித்தில் நரசிம்மதீர்த்தக்குளம் கோயிலின் முன் உள்ளது. லட்சுமி தினமும் இக்குளத்தில் நீராடி நரசிம்மரை பூஜிப்பதாக ஐதீகம். பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த சடாவர்மன் வல்லபபாண்டியன் இக்கோயிலுக்கு நிலம் வழங்கிய செய்தி கோயில் கல்வெட்டில் உள்ளது. தென்காசி- திருநெல்வேலி சாலையில் உள்ள பாவூர்சத்திரத்தில் இருந்து 2கி.மீ., தொலைவில் கோயில் உள்ளது.

போற்றலும் தூற்றலும் அவருக்கே


பக்தனின் அடையாளம் என்ன என்பதை பக்தியில் சிறந்த பிரகலாதன் விஷ்ணு புராணத்தில் கூறுகிறான். ""எக்காரணம் கொண்டும் யார் மீதும் வெறுப்பு காட்டக்கூடாது. மற்றவர்களைப் பரிகாசம் செய்யக்கூடாது. விவேகம் இல்லாதவர்களிடம் தான் இதுபோன்ற இழிகுணங்கள் இருக்கும், எல்லா உயிர்களிலும் அந்தர்யாமியாக (மறைபொருள்) விஷ்ணு இருக்கிறார். அவரே உனக்குள்ளும், எனக்குள்ளும் உறைந்திருக்கிறார். யார் மீது அன்பு காட்டினாலும், அது அந்த பரம்பொருளையே சேரும். யாரை வெறுத்தாலும், நிந்தனையாகப் பழித்தாலும் அதுவும் அவரையே சேரும்,''

Sunday 29 October 2017

ராமானுஜரை வணங்குங்க!


யதிராஜர் என்பது ராமானுஜரின் இயற்பெயர். சுவாமிதேசிகன், அவர் மீது இயற்றிய ஸ்தோத்திரம் "யதிராஜ சப்ததி'. அதில் ராமானுஜரின் திருவடியைப் பற்றுவது ஒன்றே சிறந்த வழி என்று விளக்கம் தருகிறார். ""பிரம்மாவைச் சரணடைய சத்தியலோகம் சென்றால், அவர் நாவிலே சரஸ்வதி நர்த்தனம் செய்கிறாள். கைலாயத்திற்குச் சென்றால் சிவன்தன் உடம்பில் சரிபாதியை பார்வதிக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகிறார். வைகுண்டம் சென்றால் விஷ்ணுவையே காணவில்லை. ஆயர்பாடியில் கோபியருடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். மும்மூர்த்திகளும் பெண்களுக்காக வாழ்வதால், யதிராஜராகிய ராமானுஜரின் திருவடியைப் பற்றுவது ஒன்றே நல்லது. அவரைச் சரணடைந்தவர்க்கு ஆசை ஒருபோதும் உண்டாகாது,'' என்று போற்றுகிறார்.

இல்லை என மறுக்காத எல்லையம்மன்


சென்னை பாரிமுனையில் இருந்து 9 கி.மீ., தூரத்திலுள்ள திருவொற்றியூரில் எல்லையம்மன் கோயில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், அங்கு வசித்த மக்களை அம்மை தாக்கியது. ஊரைவிட்டு வெளியேற மக்கள் முடிவெடுத்தனர். அப்போது பெரியவர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்மன், ""நான் உங்களைக் காப்பாற்றுகிறேன். யாரும் என் எல்லையை தாண்டிச் செல்ல வேண்டாம்,'' என்று வாக்களித்தாள். இதனால், இவளுக்கு "எல்லையம்மன்' என பெயர் வந்தது. பங்குனியில் நடக்கும் ஐந்து நாள் விழாவில், அம்மனுக்குக் காப்பு கட்டி பொங்கலிடுவர். தீச்சட்டி ஏந்தி வழிபாடு செய்வர். தன்னை நாடி வந்தவர்க்கு இல்லை என்று மறுக்காமல் அருளை வாரி வழங்குவதால் இந்த அம்மனுக்கு "இல்லையம்மன்' என்றும் பெயர் உண்டு. சுனாமி வந்த போது இப்பகுதி மக்களுக்கு சிரமம் வராமல் பாதுகாத்தவள் இவளே என்கின்றனர் பக்தர்கள்.

புத்தமதத்தில் குபேரன்

Image result for kuberan

சீனா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் குபேரனை "சிரிக்கும் சிருஷ்டியாக' வணங்குகின்றனர். குள்ளமான, கள்ளமில்லாத, சிரித்த முகமாக கனத்த தொப்பையும், கையில் கலசமும், பொன்மூட்டை, ஆபரணங்கள் என ஸ்வர்ண நிறமாக பல்வேறு அமைப்புகளில் ஆராதிக்கின்றனர். மதங்கள் மாறுபட்டாலும் குபேர அம்சம் ஒன்றுதான். புத்தமதத்திலும் குபேர வழிபாடு இருப்பதால், சீனர்களும் குபேர வழிபாடு செய்கின்றனர். 

திருப்பதி செல்லும் முன் ரத்தினமங்கலம் வாங்க


திருப்பதி செல்லும் முன், சென்னை வண்டலூர் அருகிலுள்ள ரத்னமங்கலம் குபேரனை வழிபட்டுச் செல்வது மிகவும் விசேஷமானது. வளமான வாழ்வுக்காக, அட்சய திரிதியை அன்று இங்கு லட்சுமி குபேர பூஜை செய்வது நன்மை தரும்.சிரித்த முகம், இடது கையில் சங்கநிதி, வலது கையில் பதுமநிதி அடங்கியகலசத்தை அணைத்துக் கொண்டு அன்னை லட்சுமி, துணைவி சித்தரிணீயுடன் குபேரன் தரும் காட்சியை காண கண் கோடி வேண்டும். பிரகாரத்தில் லட்சுமி கணபதி, குபேரலிங்கம், செல்வமுத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. பசுக்களைப் பராமரிக்கும் கோசாலையும் உள்ளது. பிரம்மாவின் புத்திரரான புலஸ்தி யருக்கும், திருவண விந்துவின் புத்திரிக்கும் விஸ்வாரா என்பவர் பிறந்தார். இவரது மகனே குபேரன். இவரது மாற்றாந் தாய்க்கு பிறந்தவன் ராவணன். இலங்கை அதிபதியாக இருந்தவர் குபேரனே. குபேரனின் விமானம் எங்கு பறந்தாலும் அந்த விமானம் தங்கம், முத்து ஆகியவற்றை சிந்திக் கொண்டே செல்லும். சிவபக்தரான குபேரனுக்கு ஒரு சமயம் சிவபார்வதி தரிசனம் கிடைத்தது. பார்வதியைக் கண்ட குபேரன், "ஆஹா இப்படியொரு தேவியை இதுநாள் வரை துதிக்கவில்லையே' என்று எண்ணினான். இந்த நினைப்பில் குபேரனின் ஒரு கண் துடித்து அடங்கியது. இதைப் பார்த்து பார்வதி மிகவும் ஆத்திரமடைந்து, குபேரனின் துடித்த கண்ணை வெடிக்கச் செய்தாள். பின், அவளிடம் மன்னிப்பு கேட்க, பெருந்தன்மை யுடன் மன்னித்தாள். போன கண் போனது தான் என்றாலும் அதற்குப் பதிலாக சிறிய கண் ஒன்றை குபேரனுக்கு தந்தார் சிவபெருமான். குபேரனின் தவத்தை மெச்சி வடக்குதிசை காவலராக நியமித்தார். லட்சுமிதேவி குபேரனை தன தானிய அதிபதியாக்கினாள்.

திறக்கும் நேரம் : காலை 5.30- பகல்12, மாலை 4- இரவு 8.

இருப்பிடம் : தாம்பரத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து, கேளம்பாக்கம் செல்லும் ரோட்டிலுள்ள ரத்னமங்கலத்தில் கோயில் உள்ளது.

ராமனின் உண்மை நிலை அறிந்த ஒரே பெண்

Related image

ராவணன் இறந்ததும், அவனது மனைவி மண்டோதரி பதட்டமாக வந்தாள். ""வாழ்வில் நன்மை செய்தவன் நற்கதி அடைகிறான். தீமை செய்தவன் கீழ்நிலை பெறுகிறான். விபீஷணன் ராமனோடு சேர்ந்து நற்கதி பெற்றான். நீங்கள் தீமை செய்து மாண்டு விட்டீர்களே!''என்று கதறினாள்.

அவளுக்கு எதிரில் மரவுரியும், ஜடையும் தரித்த ராமன் வில்லேந்தி நின்றார். அவரைப் பார்த்ததும் ""பராத்மா'' என்றாள். மனிதனாக வாழ்ந்த ராமனை ராமாயணத்தில் "பரமாத்மா' என்று கடவுளாக வணங்கிய ஒருத்தி இவள் மட்டுமே. அவள் பதிவிரதை (கணவன் சொல்லுக்கு மறுசொல் பேசாதவள்) என்பதால், அவளுக்கு மட்டும் இந்த ரகசியம் தெரிந்தது. தன்னுடைய பரதத்துவத்தை(கடவுள் நிலையை) ராமனால் மண்டோதரியிடம் மறைக்க முடியவில்லை. ராமாயணத்தின் 24 ஆயிரம் ஸ்லோகங்களில் மண்டோதரி மட்டுமே, ராமனை "பரமாத்மா' என்று சொல்கிறாள். 

சென்னையில் அஷ்டசாஸ்தா கோயில்


சிவமைந்தர்களான விநாயருக்கு சித்தி, புத்தி என்ற மனைவியரும்,சுபம், லாபம் என்ற ஆண் குழந்தைகளும், சந்தோஷி என்ற மகளும் பிறந்ததாக வடமாநிலங்களில் நம்புகிறார்கள். தென்னகத்தில், விநாயகர் பிரம்மச்சாரியாக உள்ளார். முருகனுக்கு வள்ளி, தெய்வானை என்ற துணைவியர் இருந்தாலும், குழந்தைகள் பிறந்ததாக புராணத்தில் இல்லை. ஆனால், சாஸ்தாவின் ஒரு வடிவமான சந்தான தாயக சாஸ்தாவுக்கு பிரபா என்ற மனைவியும், சத்யகன் என்ற மகனும் இருந்ததாக "சில்பரத்தினம்' என்ற நூலில் குறிப்பு இருக்கிறது. பொதுவாக, சாஸ்தாவுக்கு பூர்ண, புஷ்கலாவுடன் கூடிய சிலை பல இடங்களில் உள்ளது. ஆனால், பிரபை மற்றும் சத்யகனுடன் கூடிய சிலை இல்லை.இந்தச் சிலை உட்பட மேலும் பல வடிவங்களில் சாஸ்தா சிலை வடிக்கவும், அவற்றை ஒரே கோயில்கட்டி பிரதிஷ்டை செய்யவும் சென்னை வில்லிவாக்கம் விஸ்வநாதசர்மா அஷ்ட சாஸ்தா டிரஸ்ட் முடிவெடுத்துள்ளது. 

மாட்டுத்தொழுவத்துக்குள்ளே "இவ்ளோ' விஷயம் இருக்கா


தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியன. பொன்னிறம், கருமை, வெண்மை, புகைநிறம், சிவப்பு நிறமானவை. இவற்றின் சந்திகளே பூலோகத்தில் வாழும் பசுக்கூட்டமாகும். இந்த ஐந்தும் கிருஷ்ணருக்குரிய கோலோகத்தில் இன்றும் இருப்பதாக ஐதீகம்.

பசுதானம் செய்தால் பிதுர்சாபம், முன் வினைப்பாவம் நீங்கும். திருமந்திரத்தில் திருமூலர் தினமும் பசுவிற்கு புல் இடும்படி வேண்டுகோள் விடுக்கிறார். இதனை வேதம் "கோக்ராஸம்' என்று குறிப்பிடுகிறது. ஒருவர், தானம் தரும் பசுவின் உடம்பில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கைக்கு ஈடான ஆண்டுகள் கோலோகத்தில் கிருஷ்ணருடன் வாழும் பாக்கியத்தை அடைவார் என சில நூல்களிலும் தகவல் உள்ளது.

அவ்வையார், "ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று கோயில் வழிபாட்டோடு, பசுவின் சிறப்பையும் பாடியுள்ளார். ஆலயம் என்ற சொல்லை ஆ+ லயம் என்று பிரித்து "பசுக்கள் சேர்ந்திருக்கும் இடம்' என்று பொருள் கூறுவர். அவ்விடத்தை தொழுவது நன்மையைத் தரும் என்பதே இதன் பொருள். பசுமாடுகள் கட்டியிருக்கும் இடம் தொழுவதற்குரிய (வழிபாட்டுக்குரிய) இடமாக இருப்பதால் "மாட்டுத் தொழுவம்' எனப்படுகிறது. 

உதிக்கின்ற செங்கதிராய் விளங்குகின்ற உமையே

Image result for abirami amman

பூஜையை, யாகத்தை, தியானத்தை (சமாதி) துவக்கும்போது முதலில் புறத்தில் சிவனாகிற சூரியனையும், அகத்தில் சக்தியாகிற உமையம்மையை ஒளி வடிவாகவும் (தீயாகவும்), உமையம்மையோடு நிலவில் கூடிய சிவனையும் புருவ நடுவில் தியானிப்பர் (சமாதி நிலை) இதையே தான் அபிராமி பட்டர் செய்தார்.

ஆகமமானது இதயத்தில் பூஜையையும், வயிற்றில் ஹோமத்தையும், புருவ நடுவில் சமாதியையும் (தியானத்தை) செய்யச் சொல்கிறது.

ஹ்ருந் நாபி பிந்து ஸ்தானானி 
பூஜா ஹோம சமாதி ஸ்தானானி சங்க்கல்ப்ய
எந்த பூஜையை துவங்கினாலும், அந்தணர்கள் சந்தியாவந்தனம் என்ற அனுஷ்டானத்தை செய்து விட்டுதான் துவங்க வேண்டும் என்கிறது ஆகம நெறி. ‘வைதீகந்து புராகுர்யாத் பச்சாத் சைவிகம் ஆசரேத்’

‘‘உதிக்கின்ற செங்கதிர் உச்சித்
திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்
போது மலர்கமலை
துதிக்கின்ற மின் கொடி மென்கடிக்
குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி
என்தன் விழத்துணையே’’ (1)

உதித்தல் என்கின்ற செயல் சூரியன், சந்திரன், ஞானம் இவற்றோடு தொடர்புடையது. ‘உதிர்க்கின்ற செங்கதிர்’ (1) என்றும் - காலை சூரியன் ‘வந்துதித்த வெளிலாய்’ (99) மதிய சூரியன் ‘மறைகின்ற வாநிதியோ’ (20) மாலை மறையும் சூரியன் -என்று மூன்று நிலையிலும் உமையம்மையை வழிபடுகிறார்கள். சூரியனில் சிவனையும், கெளரி காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயரில் சக்தியையும் வழிபடுகிறார்கள்.ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கும்போது முதலில் சிவசூரியனையே பூஜிக்கின்றனர். பின்னரே மூலஸ்தானத்தில் சிவபெருமானை பூஜிக்கின்றனர். ஆலய நெறியிலும், வீட்டு வழிபாட்டு நெறியிலும் சூரியனே முக்கியத்துவம் பெறுகிறது என்பதால் இரு நெறியையும் சூட்டுகின்ற பொருளில் உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் என்று ஆரம்பித்தார், அபிராமி பட்டர். 

சுவாசினிகள் மட்டுமே உச்சித் திலகம் இட்டுக் கொள்வார்கள். சுவாசினி என்பதன் பொருள் பதி புத்திரவதி - யுக்தா என்று பொருள். கணவனோடும், புதல்வரோடும் நித்தியமாய் கூடி இருப்பதே அபிராமியின் தனி சிறப்பு. ஐந்து புதல்வர்களோடும், ஐந்து முகத்தோடு கூடிய சதாசிவத்தோடும் கூடியிருப்பதால் உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்’’ என்று குறிப்பிடுகின்றார். உதிக்கின்ற செங்கதிர் என்ற பாடலில் உள்ள சொல்லானது சூரியனில் இருக்கின்ற உமையம்மையை காலந்தோறும் வழிபடுதல் என்பது அறிவையும், செயலையும், விழைவையும் விளைவிக்கும். அபிராமி பட்டரின் விழைவானது, அமாவாசையன்று சந்திரனை வானில் உதிக்கச்செய்வது. உதிக்கச் செய்வதற்கு அவர் செய்ய வேண்டிய செயலானது உமையம்மையை சதசூத்திர பிரமாணத்தின்வழி வழிபடுவது. 

வழிபடுவதால் ஏற்படும் விளைவுதான், தன் இதயத்தில், ஞானத்தையும், உமையம்மையின் இதயத்தில் கருணையையும் உதிக்கச்செய்து, அதன்வழி விண்ணிலே நிலவை உதிக்க செய்து பரசமயத்தாரின் மனதில் (மக்கள் மற்றும் மன்னனுக்கு) ஞானத்தை உதிக்கச்செய்து, அதற்கான ஞான அனுபவத்தை பெறுவதற்காக, உதிக்கின்ற சூரியன் வடிவிலே, உமையம்மையின் உச்சித்திலகமாக திகழும் செங்கதிர் பரமனை (சிவ சூரியன்) முதலில் வணங்கி துவக்குகின்றார்.அதன் பயனாக முடிவில் அவருக்குள் ஞானம் உதித்ததையும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றதே (பாடல் 100) என்பதன் மூலம் நமக்கு உறுதியும் செய்கிறார். ஸ்ரீவித்யா உபாசகர்கள் (உமையம்மையை முழு முதற் பொருளாக கொண்டு வழிபடுபவர்களுக்கு) முதலில் கணபதியையும், சிவ மூர்த்தங்களுள் ஒன்றையும் உபதேசித்த பிறகு உமையம்மை மந்திரத்தை உபதேசிப்பர். அப்படி இல்லை எனில் கேடு விளையும்.

‘உச்சித் திலகம்’ என்பது சீமந்த சடங்கில் ஆண் மகவு பெறும் பொருட்டு மனைவிக்கு கணவன் மட்டுமே வைக்கும் பொட்டாகும். அதைத்தான் ‘உச்சித் திலகம்’ என்று அபிராமி பட்டர் குறிப்பிடுகிறார். இதனால் கணபதியையும் (உச்சிஷ்டகணபதி), அவள் கணவனான சிவ சூரியனையும் வணங்குகின்றார்.
தாம் பின்பற்றுகிற முறையில் தவறு வந்தாலும், அம்பாளின் அருளை உறுதியாக பெறுவதற்கு உதவுகின்ற வகையில், அதிதேவதையான சிவனையும், உபதேவதையான கணபதியையும் முதலில் வரவழைத்து வணங்குகிறார். ஒரு தேவதையை உபாசிக்கும்போது அது முதலில் தடை செய்யும், பின்னர் எதிர்க்கும், அதன் பிறகே அது உபாசனையை ஏற்று அருள் செய்யும். அந்தத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கு கணபதியையும், எதிர்ப்பை நிவர்த்தி செய்ய சிவனையும் ஸ்ரீவித்யா உபாசகர்கள் வணங்குவார்கள்.

உபாசனை செய்வதால், ‘நன்றே வருகினும் தீதே விளையினும்’ (95) ‘மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே’ (45) என்ற பாடலின் மூலம் உறுதி செய்கிறார். பெண் தேவதைகளை வணங்குகின்றபோது புகுந்த வீடு, பிறந்த வீடு என்று இரண்டாகப்பிரித்து தியானித்து வணங்குவார்கள். பிறந்த வீட்டில் தான் விளங்கியும், புகுந்த வீட்டில் தான் ஒடுங்கி, தான் சார்ந்த கணவனை விளங்க செய்தும் அருள்புரிவாள். இலக்குமி, புகுந்த வீடான பாற்கடலில் பரந்தாமனுடனும், பார்வதி தன் புகுந்த வீடான ஹிமாச்சலத்தில் சிவபெருமானுடனும் வசிக்கின்றனர். ‘‘ஹரி: சேத் மகோததி: ஹர: சேத் ஹிமாசல:’’ இதை நன்கு உணர்ந்த அபிராமி பட்டர் உபாசனையில் சித்தி பெறுவதற்காக ‘உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்’ என்றும், ‘ஆதிக்கடவூரின் வாழ்வே’ என்றும் சொல்வதிலிருந்து தெரிகிறது.

தேவதைகளை உருவங்களாக வடிவமைத்து, நாம் வணங்குவதற்காக வழங்கும் சிற்பசாஸ்திரமானது நிறங்களையும் வலியுறுத்துகிறது - வெள்ளை சாத்வீக குணத்தையும், சிவப்பு ராஜஸ குணத்தையும், கருப்பு தாமச குணத்தையும் உணர்த்தும். மஞ்சள் (பொன் நிறம்) செல்வம் மற்றும் மங்களத்தையும், நீலம் வானமும் கடலும் போன்ற இறைவனின் பரந்தத் தன்மையையும், பச்சை வளம், செழிப்பையும் குறிக்கும். அந்தாதியில் ராஜஸ குணத்தை குறிப்பிடும்வகையில் ‘மாணிக்கம்’, ‘மாதுளம் போது’, ‘குங்கும தோய மென்ன’ என்ற று, சிவப்பு வண்ணத்தினால் மாணிக்கம் போன்று செவ்வொளி படர்ந்ததும், மாதுளம்பூ போன்று மென்மையானதும், குங்கும தோய மென்ன என்பதனால் குளிர்ச்சி பொருந்தியதாகவும், அவளுடைய திருமேனியை தியானிக்க வேண்டும். 

இதையே ‘விதிக்கின்ற மேனி’ என்றும், ‘பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே’ (பாடல் 6) என்றும் தெளிவு செய்கிறார் அபிராமி பட்டர். ‘பொன்பார் புனல் வெண்மை, பொங்கும் அனல் சிவப்பு வன்கால் கருமைவளர் வான் தூமம்’  என்கிறது சித்தாந்த சாஸ்திரம். அதாவது, பார் - பொன் நிறம், புனல் - வெண்மை, பொங்கும் அனல் - சிவப்பு, வன்கால் - கருமை, வளர் வான் - புகை நிறம் (பச்சையையும் குறிப்பிடுவதுண்டு) ஸ்ரீவித்யா உபாசகர்கள் பூமியையும், காற்றையும் உமையம்மைக்கு கட்டுப்பட்ட சிவமாகவும் (சக்திபரம்), தீயையும் நீரையும் சிவனுக்கு கட்டுப்பட்ட உமையம்மையாகவும் (சிவபரம்), ஆகாயத்தை சக்தி, சிவம் இருவருக்கும் சமமாகவும் (சர்வ சமம்) என்றும் நினைத்து வணங்குவார்கள். இதையே அபிராமி பட்டர், ‘சக்தி தழைக்கும் சிவமும்’ (பாடல் 29) ‘சங்கரனார் மனன மங்களமாம்’ (பாடல் 44) ‘தில்லை ஊரர் தம் பாகத்து உமை’ (காப்பு) என்ற வரிகளால் வலியுறுத்தியுள்ளார்.

சிவப்பு நிறத்தை தியானித்து வணங்குவது சிவனுக்கு கட்டுப்பட்ட சக்தியைக் (சிவபரம்) குறிக்கும் என்பதனால் ‘உதிக்கின்ற செங்கதிர்’ என்ற பாடலில் சிவப்பு நிறத்தை ஐந்து வகையிலும் வலியுறுத்தியுள்ளார்: 1. உதிக்கின்ற செங்கதிர், 2. உச்சித் திலகம், 3. மாதுளம் போது, 4. குங்கும தோயம், 5. மாணிக்கம் அழல் வடிவிலுள்ள உமையம்மையை சிவனுக்கு கட்டுப்பட்ட சக்தியாய் (சிவபரமாய்) வணங்குவது என்பது நாம் எண்ணிய எண்ணத்தை விரைவாக முடிக்க உதவுகிறது. இது உமையம்மையின் ராஜஸ குணத்தை குறிப்பிடுவதாக அமைகிறது.

‘மின் கொடி’ (1), ‘மின் குறை காட்டி’ (72), ‘மின் போலும்’ (67), ‘மின் ஆயிரம் கூடி ஒரு மெய் வடிவாகி’ (55), ‘மின் அணையாளை’ (91) - மின்னலானது ஒரே நொடியில் தோன்றி மறையக்கூடிய பேராற்றலுடைய ஒரு சக்தி. அதையே அபிராமிபட்டர் ‘மின் கொடி’ என்று அபிராமி அம்மையின் ஆற்றலோடு ஒப்பிடுகிறார். துக்கத்தை நிவர்த்தி செய்து தேவைகள் அனைத்தையும் கொடுத்து மோட்சத்தையும் தரவல்லது. செளந்தர்யலஹரியும் இதையே வலியுறுத்துகிறது. ‘பவானித்வம்’ - நான் நீயாக வேண்டும் என்ற பொருளுடைய பாடல் ஒரு நொடியில் அம்பாள் சாயுஜ்ய பதவி கொடுத்ததாக கூறுகிறது.

இதே கருத்தை எதிர்மறையாக ‘மாத்திரை பொழுது மனதில் வையாதார்’ (பாடல் 67), ஒரு நொடியாவது நினைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். மின் கொடி என்பது சுஷும்னா நாடி என்பதன் சூட்டு சொல்லாகும். சுஷும்னா நாடியானது பாதக்கட்டை விரல்களில் ஆரம்பித்து இரண்டாக இருந்தது ஒன்றாகி, மூன்றாக பிரிந்து (இடகலா, பிங்கலா, சுஷும்னா), கவிழ்ந்த தாமரை மொட்டு போல் திகழ்ந்து, தலை உச்சி முடிவில் ஒன்றாகி பரவி தாமரைத் தண்டு போல் உள்ளீடு அற்றதாகவும், மின்னல்போல் தோற்றம் கொண்டதாகவும் அதன் நடுவே பராசக்தி தியானிக்கப்படுகிறாள். இப்படி தியானிப்பது என்பது இறைவியோடு நேரடியான தொடர்பையும் அருள் அனுபவத்தை தரும்.

‘‘பாதாங்குஷ்ட த்வயாதாரப்ய
யாவதஸ்தி த்வி ரூபாம் ஊர்த்வம்
ப்ரம்ம பிலாந்தம் ஹ்ருத் கண்டா
திஷு இடா பிங்கலாப்பயாம்
சம்யுக்தாம் அதோ முக பத்ம
முகுல யுக்தாம் சுஷிர ரூபாம்
சுஷும் நாம் சஞ்ச் சிந்த்ய’’

‘மலர் கமலை’ என்பது இதய கமலத்தின் சூட்டு சொல். வேதத்தில் இதே கருத்தை நாராயணரை குறிக்கும் வகையில், நாரயண சூக்தம் - 13.2.6-8ல் சொல்லப்பட்டிருக்கிறது. அது உள்ளங்கால் முதல் உச்சந்தலைரை உடலை சூடுள்ளதாகச் செய்கிறது. அதன் நடுவில் மெல்லியதான அக்னி ஜ்வாலை மேல் நோக்கி அமைந்திருக்கிறது. கருத்த மேகத்தின் நடுவிலிருந்து ஒளிவீசுகின்ற மின்னல் கொடி போலும், செந்நெல்லின் உருவம் போல் மெல்லியதாயும், பொன்னிறமாயும், அணுவைப் போல் சூக்ஷ்மமாயும் அது பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஜ்வாலையின் நடுவில் பரமாத்மா நிலை பெற்றிருக்கிறார்.

ஸந்தா பயதி ஸ்வந்தேஹ மாபாத தலமஸ்தக : |
தஸ்ய மத்த்யே வஹானிசிகா அணீயோர்த்த்வா வ்ய வஸ்த்தித:
நீல தோயத் மத்த்யஸ்த்தாத் வித்யுல்லேகேவ
பாஸ்வரா நீவார சூகவத் தன்வீ பீதா பாஸ்வத்யணூ பமா
தஸ்யா சிகாயா மத்த்யே பரமாத்மா வ்யவஸ்த்தித:

-என்ற வேத வரிகள் மூலம் இவை நாராயணரை உறுதி செய்கிறது என்றாலும், அந்த நாராயணரையே பராசக்தியாக கருதுகிறது சாக்தம்.
‘தரங்கக் கடலுள் வெங்கட் பணியனையேல் துயில் கூறும் விழப்பொருளே’ (பாடல் 35) என்று அபிராமியே விஷ்ணு என்று நிறுவுகிறார் பட்டர். மேலும் திருக்கடையூர் தலபுராணத்தின்படி அலங்கார பிரியரான விஷ்ணு தனது நகைகளை எல்லாம் கழற்றி அதையே அபிராமியாக ஆவாகித்து பூஜை செய்தார். இதையே அபிராமி பட்டர் ‘நகையே’ (93) என்று அபிராமியை அழைக்கிறார். உமையம்மையின் வழிபாட்டு நூலான தேவி மாஹாத்மியம், கோபேச காளி - கோவத்தில் காளி, சமரேது துர்கா - போரில் துர்க்கை, போகே பவானி - இன்பம் துய்ப்பதில் பவானி, பும் சேதி விஷ்ணு - ஆணாக விஷ்ணு என்று வர்ணிக்கிறது. ஸ்ரீவித்யா உபாசகர்கள் உமையம்மையை ஏழு பருவம் உடையவளாகவும் தியானிப்பர். அந்த வகையில்

பேதை (வயது 7) தயங்கு நுண் நூல் இடையாள் (84)
பெதும்பை (வயது 11) மெல்லிய நுண்ணிடை (91)
மங்கை (வயது 13) சின்னஞ்சிறிய மருங்கினில் (53)
மடந்தை (வயது 19) மெலிகின்ற நேரிடை (72)
அறிவை (வயது 25) வந்திய வஞ்சி (5)
தெரிவை (26 முதல் 31) துடியிடை (38)
பேரிளம் பெண் (வயது 40) சிற்றிடையும் (85)
அதற்கு மேல் வயது உள்ளவளாக தியானிப்பதில்லை. இதையே சகஸ்ரநாமம் ‘வயோ வஸ்தா விவர் ஜிதா’ என்கிறது.

அபிராமி பட்டர் ‘மென்கடி’ என்று எதிர்மறையாய், அம்பாள் மீதுள்ள உரிமையால் குறிப்பிடுகிறார். ஆகமங்கள் மற்றும் சிற்பநூற்கள் இடையை விளக்கி வயதைச் சொல்வது உண்டு. அந்த வகையில் இந்த வயதிற்கு உடையவர்களை இந்த சொல்லால் சொல்ல வேண்டும் என்பது தனித்தனியே இருக்க, 40 வயதிற்கு உரிய சொல்லைப் பயன்படுத்தாமல் 7 வயதிற்குரிய மென் கடி என்று குறிப்பிடுவதன் காரணம் ‘காத்யாயினி சேவிதம்’ - ஏழு வயதுடைய பெண்ணாக இறைவனுக்கு தொண்டு செய்கிறாள் என்று திருக்கடையூர் தியானம் சொல்வதால்தான். காத்யாயினி சமேத ம்ருத்யுஞ்ஜயர் என்றும் பாலாம்பிகா சமேத காலசம்ஹார மூர்த்தி என்றும் சொல்லப்பட்டதிலிருந்து அறிய முடிகின்றது. பாலாம்பிகையாக (7 வயதுடையவளாக) உமையம்மை திகழ்கிறார். அவளையே தன் காரியம் நிறைவேறும் பொருட்டு 40 வயதுடைய, மணமாகி சீமந்தமான பெண்ணாக அவர் தியானித்து வருகிறார். 

அப்படி வணங்குவதால் விரைவான பலன் கிடைக்கும் என்கிறது ஆகமம். அதனாலேயே மென்கடி என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றார்.அபிராமி என்ற சொல்லானது, விளையாட்டாய் இந்த உலகத்தை  எளிமையாக, புத்துணர்வோடும், மிகச் சரியாகவும், குறுகிய காலத்தில் கஷ்டப்படாமலும் படைத்து காத்து அழித்து மறைத்து அருளுவதாளும் ‘ஈரேழ் உலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும்’ (26) வேலையை அகமகிழ்ச்சியுடனும் செய்வதாலும், மிகவும் அமைதியோடும், தெளிவோடும், ஒவ்வொரு ஆன்மாவின் உள்ளிருந்தும், புறமிருந்தும், அகம், புறம், இரண்டு இடத்திலும், விரவி இருந்து செய்வதனாலும் இறைவனோடு (சிவபெருமானோடு) ஒன்றாய் வேறாய், உடனாய் புணர்ந்து, பிரிந்தும், திரிந்தும், ‘பஞ்ச கிருத்யம்’ என்று சொல்லக்கூடிய ஆன்மாக்களுக்கான, உடல் (தனு) உள்ளம் (கர்ணம்), புற உலகு (புவனம்), அனுபவம் (போகம்) இவற்றை தருகிறார்.

பஞ்ச கிருத்தியங்களுக்காக தான் எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதனால் அபிராமி என்று பெயர் பெறுகிறாள்.
ரமு ரஞ்சனே - அக மகிழ்தல்
ரமுக்கிரிடாயாம் - விளையாடுதல்
ரமு ஆஸ்வாதனே - அமைதியுறல்
அபி அந்தர் முகே - உள்நோக்குதல்
அபி ரம்யதே இதி அபிராமி - மாறிக் 
கொண்டேயிருக்கக் கூடியவள்.

‘என்தன்’ (1) - என் என்ற வார்த்தையால் உரிமை பொருளான உடலையும், தன் என்ற வார்த்தையால் உயிரையும், என்தன் என்ற வார்த்தையால் உடைமையாவற்றையும் குறிப்பிடுகின்றார். இவை எல்லாவற்றிற்கும், இறைவியை துணை என்கிறார். இதையேதான் மாணிக்கவாசகர், அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்ேற அணையாய் என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையே நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகனே - என்கிறார். ‘விழு’ என்பதனால் உள்ளத்தில் நினைப்பதையும், நினைவுகளின் வழி தொகுத்த கருத்துகளையும், அப்படி தொகுத்தவற்றை தன் வாயின் வழி சொற்களாகவும், அந்த சொற்களின் வழி பிறர் செவி மற்றும் மனதிற்கு புலப்படும் வகையில் யாப்பில் அமைந்த பாட்டாகவும், இறைவியை பற்றி தான் உணர்ந்ததை பிறருக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக இறைவியை துணையாக உள்ளத்துள் ஞானஒளியையும் புறத்து பிறர் காணும்படி நிலவு ஒலியையும் உதிக்க தியானிக்கிறார்.‘உதிக்கின்ற செங்கதிர்’ என்று ஆரம்பிக்கும் முதல் பாடலிலேயே இறைவனை புறத்தில் சூரியனில் சிவனை தியானித்தால் ‘நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றதே’ என்று அகத்தில் தான் மட்டும் காணும் வகையில் ஒளிர்கின்ற உமையம்மையின் அருள் உதிக்கும். அப்படி அகத்தில் அருள் ஒளி உதித்தால் புறத்தில் யாவரும் காண நிலவு உதிக்கும்! 

Saturday 28 October 2017

அதர்மத்துக்குள் தர்மத்தைக் காணத் தெரிந்தவனே யோகி


கிருஷ்ணன் சொன்ன ‘முன்னோர்’கள் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். திருமண சம்பிரதாயங்களில் ஒன்று - மணமகன், மணமகள் இருவர் பக்கத்திலிருக்கும் இரு புரோகிதர்கள், அவரவருடைய ஏழு மூதாதையர்களைப் பற்றிச் சொல்லி, அந்தப் பெரியவர்களின் ஆசிர்வாதம் இந்த புதுமணத் தம்பதிகளுக்குக் கிடைக்குமாறு மந்திரங்கள் மூலம் வேண்டிக்கொள்வார்கள். அதாவது, நம் மூதாதையரை நம் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் நினைத்துக்கொள்ள வேண்டும் என்பது நமது நாகரிகமாக இருந்திருக்கிறது, இருந்துவருகிறது. அதுமட்டுமல்ல, நாம் கோயிலுக்குப் போவதும், முக்கியமாக குலதெய்வக் கோயிலுக்குப் போவதும் இந்த அடிப்படையில்தான். நம் மூதாதையர் வழிபட்ட கோயிலுக்குச் சென்று நாமும் வழிபடும்போது அவர்களை நாம் நினைத்துக்கொள்ளவேண்டும். 

அதுதான் இத்தகைய வழிபாட்டின் மூல நோக்கம். நம் பெரியவர்கள் வணங்கியிருக்கக்கூடிய தெய்வம், அவர்களுடைய பக்தியைத் தான் ஈர்த்துக்கொண்டு, வேண்டிய அருளினைச் செய்திருக்கிறது. அதாவது அந்த விக்ரகத்தில் அவர்களுடைய உணர்வுகள் ஐக்கியமாகியிருக்கின்றன. ஆகவே அந்த விக்ரகத்தை நாம் தரிசிக்கும்போது நம் மூதாதையரையும் மனமகிழ்வோடு தரிசிக்கும் உணர்வை நாம் பெறுகிறோம். அதனால்தான் காஞ்சி மகா பெரியவர், புதிது புதிதாகக் கோயில்களை நிர்மாணிப்பதைவிட, பழைய, புராதனக் கோயில்களைப் புனருத்தாரணம் செய்யுங்கள், போதும், என்று பக்தர்களைக் கேட்டுக்கொண்டார். பிரபல எழுத்தாளர், அமரர் சுஜாதா தன் அனுபவமாக இப்படிச் சொல்லியிருக்கிறார்: ‘இந்தப் பெருமாளை சேவிக்கும்போது நம் தாய், தந்தையர், பாட்டனார், முப்பாட்டனார்களை இந்தப் பெருமாளின் மூலம் பார்க்கிறோம் என்பதை அன்று உணர்ந்தோம். 

அவர்கள் பலப்பல வருடங்களாக இந்தப் பெருமாளின் முக விலாசத்தைப் பார்த்துப் பார்த்து, இவனையே சிந்தித்து வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இன்னமும் இவனுக்குள்ளேயே வாழ்கிறார்கள். நம் வாழ்வுகளுக்கு ஓர் இடைவெளியற்ற தொடர்பை இவனே ஏற்படுத்திக் கொடுக்கிறான்.’ - தன் இறப்புக்கு முன் இறுதி தரிசனமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசித்தபோது தமக்குத் தோன்றியதாக திரு சுஜாதா அவர்கள் தெரிவித்த உணர்வு இது. ஆகவே ‘உன் முன்னோர்கள் செய்ததுபோல நீயும் கர்மாக்களை நிறைவேற்று,’ என்று கிருஷ்ணனிடம் அர்ஜுனன் சொல்வதன் முக்கியத்துவத்தை நம்மால் உணர முடிகிறது. 

கிம் கர்ம கிமகர்மேதி கவயேப்யத்ர மோஹிதா
தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஞாத்வா மோக்ஷயஸேசுபாத் (4:16)

‘‘கர்மம் என்பது எது, கர்மம் அல்லாதது என்பது எது? இதைத் தீர்மானிப்பதில் புத்திமான்களுக்கும்கூட குழப்பம் வந்து விடுகிறது. அந்த வித்தியாசத்தை நான் உனக்குச் சொல்கிறேன், தெளிவாக்குகிறேன்.’’ எதைச் செய்தால் கர்மம் செய்வதாகச் சொல்லப்படும், எந்தச் செயல் கர்மம் அல்லாததாகக் கருதப்படும்? நம் தினசரி நடவடிக்கைகள் கர்மா சார்ந்தவையா? அப்படியென்றால் கர்மா அல்லாதது என்பது எது? சும்மா உட்கார்ந்திருப்பதா, ஓய்வெடுப்பதா, தூங்குவதா? 
அப்படியானால் பார்ப்பது, கேட்பது, நுகர்வது, ருசிப்பது, பேசுவது, நடப்பது, ஓடுவது, படி ஏறுவது-இறங்குவது, கைகளால் சைகை காட்டுவது - இதெல்லாம்தான் கர்மாக்களா? நன்கு படித்தவர்கள்கூட இப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் கிருஷ்ணன். உடல்ரீதியான, அவயவங்கள் மேற்கொள்ளும் பணிகள் கர்மாக்கள் அல்ல என்பது அவர் கருத்து. சரி, எது கர்மா, எது கர்மா இல்லை?

கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண
அகர்மணஸ்ச பொத்தவ்யம் கஹனா கர்மணோ கதி (4:17)

‘‘சாஸ்திரம் எதைச் செய்யச்சொல்லி அனுமதிக்கிறதோ அதுதான் கர்மம். அது எதை விலக்கச் சொல்கிறதோ அதை ஒருவன் விலக்கவேண்டும். ஆகவே கர்மம் எது என்று தெரிந்துகொள்ளவேண்டும். கர்மத்தின் கடந்த நிலையையும் புரிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால், கர்மத்தின் போக்கு அவ்வளவு ஆழமானது, அறிந்துகொள்ள அரியது.’’மீண்டும், எது சரி, எது சரியில்லை என்ற தர்க்கத்துக்குள்ளேயே போகவேண்டியிருக்கிறது. சாஸ்திரம் அனுமதிக்கும் ஒரு செயலே கிருஷ்ணன் சொல்லும் கர்மம் என்று வைத்துக்கொண்டால், அந்தச் செயலை மேற்கொள்ளாவிட்டால் அது அகர்மமாகிவிடுமா? ஒருவருக்கு சரியெனப்படுவது, இன்னொருவருக்கு சரியல்லாததாகிவிடுகிறதே, அப்போது கர்மாவுக்கான உண்மையான பொருள் என்ன? கொலை செய்வது பாபமான செயல்தான். அது கோபத்தின் உச்சகட்ட வெளிப்பாடு. வன்மத்தின் முதிர்ந்த நிலை. பழிவாங்கும் எண்ணத்தின் அதிகபட்சப் பரிமாணம். தனிப்பட்ட விரோதத்தின் தனிமனிதத் தீர்ப்பு. ஆனால் இந்தக் கர்மாவுக்கு வழக்கு உண்டு, விசாரணை உண்டு, சாட்சி உண்டு, முடிவாக, தண்டனையும் உண்டு.

இதே கொலை ஒரு யுத்தக் களத்தில் நிகழுமானால் அது போர் தர்மமாகிவிடுகிறது! இது குற்றமல்ல. இதற்கு விசாரணையும் கிடையாது, தீர்ப்பும் கிடையாது. இது சாஸ்திரம் அனுமதிக்கும் கர்மம்! இந்த நியதியிலிருந்து விலகுவதுதான் விகர்மம். முன்னோர்கள் இதைத்தான் செய்தார்கள். கொலை செய்வது பாபம் என்று கருதினார்கள். ஏன், அடுத்தவருக்குச் செய்யும் சிறு மன, உடல் உபாதைகளும் தவறானவை, ஏற்றுக்கொள்ளத் தகாதவை என்று கருதினார்கள். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று ராமலிங்க அடிகளார் மனமுருகியது இந்த ஜீவகாருண்யத்தால்தான். மகாவீரர் சிந்தனைகளைப் பின்பற்றுபவர்கள், இன்றும் தம் வாய்க்கு ஒரு துணி மறைப்பு அணிகிறார்கள் என்றால், தம் வாயிலிருந்து புறப்படும் உஷ்ண சுவாசத்தால், வெளிச்சூழலில் காற்றில் மிதக்கக்கூடிய கிருமிகள் மடியக்கூடாதே என்ற இரக்கத்தால்தான். இரவில் விளக்கு வைப்பதற்கு முன் அவர்கள் இரவு உணவை முடித்துக்கொண்டு விடுவதும் இந்த கிருமிவதையைத் தவிர்க்கும் உயரிய எண்ணத்தால்தான். 

ஆனால், இந்த ஜீவகாருண்யம் போர்க்களத்திற்குப் பொருந்துமா? இப்போது சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுபவர்கள் மீது காவல்துறையினர் பிரயோகிக்கும் தடியடிக்கும்கூடப் பொருந்தாதே! ஆக, எங்கெங்கு எந்தெந்த கர்மாக்களைச் செய்யவேண்டுமோ அங்கங்கு அவற்றைச் செய்யத்தான் வேண்டும். இப்படித்தான் சாஸ்திரமும் சொல்கிறது, முன்னோர்களும் செய்துவந்தார்கள் என்று கிருஷ்ணன் வலியுறுத்திச் சொல்கிறார். செய்யவேண்டிய கர்மாவிலிருந்து பின்வாங்குவது என்பது இயற்கைக்கு முரணானது மட்டுமல்ல, நம் முன்னோர்களின் செயல்களை அவமதிப்பதாகவும் ஆகும். ஆகவே எது கர்மா, எது கர்மா இல்லை என்ற பாகுபாட்டைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். பணம் சம்பாதிப்பது என்பது ஒரு வினையாற்றலின் விளைவு, பலன். ஆனால் இந்தப் பணம் ஒரே நிலைத்த தன்மை கொண்டது. அதன் மதிப்பு ஒரே மாதிரியானது. கை மாறினாலோ, அழுக்கடைந்துவிட்டாலோ, கசங்கியிருந்தாலோ எந்த நிலையிலும் அதன் மதிப்பு குறைவதேயில்லை.

ஆனால் இந்தப் பணம் எந்த வழியிலும் சம்பாதிக்கப்படலாம். பணம், ஒருவன் செய்யும் கர்மாவைப் பார்ப்பதில்லை. தன்னை சம்பாதிக்க அவனுக்கு என்னத் தகுதி இருக்கிறது என்று கேட்பதில்லை. தான் அவனைச் சேரவேண்டும் என்றிருந்தால், உடனே ஓடிப்போய் அவனிடம் சேர்ந்துவிடுகிறது. நியாயத்துக்கும், நீதிக்கும் புறம்பாகச் செயல்படுகிறானே இவனிடம் போய்ச் சேருவதா என்ற எண்ணம் கொள்ள அதற்கு உரிமையில்லை. அது வெறும் ஜடம். யாரிடம் கொடுக்கப்படுகிறதோ அவரிடம் போய்ச்சேரும். அவ்வளவுதான்.ஆனால், அது எங்கேனும் மிகுந்திருக்குமானால் அங்கே அது ஆணவத்தையும், அகங்காரத்தையும் வளர்க்கவல்லதாக இருக்கிறது! எங்கேனும் தேவைக்கும் கீழாகக் குறைந்திருக்குமானால் அங்கே கவலையையும், பொறாமையையும் உண்டுபண்ணுகிறது! இத்தனைக்கும் அது ஒரு ஜடம்! இப்படி, தன்னை வைத்திருப்பவர்களிடம் பல்வேறு உணர்வுகளை உருவாக்குகிறதே தவிர, தான் குறிப்பிட்ட ஒருவரால் நேர்மையாக சம்பாதிக்கப்பட்டதில்லை என்று அதற்குத் தெரியாது. ஏனென்றால் அது வெறும் ஜடம்.

ஒரு செயலினால் பணம் ஈட்டுபவருக்கு, தான் மேற்கொள்ளும் செயல் நேர்மையற்றது என்று நிச்சயமாகத் தெரிந்தாலும் அவர் தொடர்ந்து அதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்றால், அவருக்கு சம்பாத்தியத்தில் மட்டுமே நாட்டம் என்பது புரிகிறது. அதேசமயம் நேர்மையாகப் பணியாற்றுபவர் தன்னுடைய அந்தப் பணியால், தன் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடியாத மிகக் குறைந்த அளவே பணம் சம்பாதிக்கிறார். என்றாலும், அப்போதும் அவர் சந்தோஷமாகவே இருக்கிறார் என்றால் இவர் இயற்றும் கர்மா சரியானது, சாஸ்திரம் அனுமதிப்பது, முன்னோர்கள் மேற்கொண்டது என்று அர்த்தம்.

கர்மண்யகர்ம ய பச்யேதகர்மணி ச கர்ம ய
ஸ புத்திமான் மனுஷ்யேஷு ஸ யுக்த க்ருத்ஸ்னகர்மக்ருத் (4:18)

‘‘இயற்றும் கர்மத்தில் அதர்மம் நிலவுவதையும், அகர்மத்திலும் தர்மம் நிலவுவதையும் யார் பார்க்கிறானோ அவனே புத்திமான். அவன்தான் யோகி. அவனே பரிபூரணமான கர்மங்களைச் செய்பவன்.’’ நற்செயல்களாகத் தோன்றுவனவெல்லாம் நல்கர்மாக்களா? அதேபோல துர்செயல்களாகத் தோன்றுவனவெல்லாம் துர்கர்மாக்களா?ஒரு கசாப்பு கடைக்காரன் தன் வாழ்வுக்காக ஆடுகளைக் கொன்று, வெட்டி வியாபாரம் செய்கிறான். தன் வாழ்வாதாரத்துக்காக அவன் செய்யும் இந்தச் செயல் தர்மம் சார்ந்ததா? உயிர்கள் பறிக்கப்படும் இந்தச் செயல் அதர்மம் சார்ந்ததா? இது தர்மத்துக்குள்ளேயே இருக்கும் அதர்மம்! சமூகத்துக்குப் பெருங்கேடு விளைவித்த ஒருவனை காவல்துறையினர் கைது செய்கிறார்கள். அந்தக் குற்றத்தின் பின்னணி, இனிமேலும் அதேபோலத் தொடரக்கூடிய குற்றங்களுக்கான அவனுடைய திட்டங்கள் இவற்றைத் தெரிந்துகொள்வதற்காக அவனை அடித்துத் துன்புறுத்துகிறார்கள். 

சமுதாயத்துக்கு வன்முறையால் அவன் கேடுவிளைவித்தது அதர்மம்; அதேமாதிரியான வன்முறையால் குற்றவாளியிடமிருந்து உண்மையை அறிய முற்படுவது தர்மம்! அதாவது, அதர்மத்துக்குள்ளேயே இருக்கும் தர்மம்! பேருந்துப் பயணத்தில் நாம் முன்னேறிச் செல்கிறோம். அதேசமயம் ஜன்னல் வழியாக நம்மை எதிர்நோக்கிக் கடந்து செல்லும் மரங்களைக் காண்கிறோம். நாம் பயணிப்பது ஒரு செயல். ஆனால் மரங்கள் நமக்குப் பின்னோக்கி ‘ஓடுவது’ அவை புரியும் செயலா? அவை அப்படிச் செயல்படவேயில்லையே! உண்மையில் அவை தத்தமது இடங்களில் நகரவேயில்லாமல் நின்றுகொண்டுதானே இருக்கின்றன! அவை பின்னோக்கி ஓடுவதாகிய மாயையை நாம் நம்புகிறோமே? இல்லை. நமக்குத் தெரியும், அது பேருந்து பயண வேகத்தின் மாயத் தோற்றம் என்பது. 

இது புரிகிறது. ஆனால், தர்மத்துக்குள்ளேயே ஒளிந்திருக்கும் அதர்மத்தையும், அதர்மத்துக்குள்ளேயே புகுந்துகொண்டிருக்கும் தர்மத்தையும் பாகுபடுத்ததான் மனசுக்குத் தெரியமாட்டேனென்கிறது, குழப்பமடைகிறது. ஒரு திருடனை நாலைந்துபேர் துரத்தி வருகிறார்கள். ஓடிவரும் திருடனைப் பார்க்கும் ஒரு பெரியவர், அவன் ஒரு வளைவில் திரும்பி, ஒரு சுவர் பொந்துக்குள் புகுந்துகொள்வதை கவனித்துவிடுகிறார். துரத்தி வந்தவர்கள் அவரிடம் திருடன் அந்தப் பக்கமாக வந்தானா என்று கேட்கிறார்கள். அவர் என்ன பதில் சொல்வார்? சமுதாய தர்மத்துக்கு உட்பட்டு அவர்களிடம் திருடனைக் காட்டிக் கொடுக்கலாமா அல்லது திருடனுக்குப் பச்சாதாபப்பட்டு, ‘தெரியாது’ என்று பொய் சொல்லிவிடலாமா? இதில் எது தர்மம் சார்ந்த கர்மம்? சமுதாய நலனை உத்தேசித்துத் திருடனைக் காட்டிக்கொடுப்பது என்பது இந்த யுத்த களத்தில் யார் எவர் என்று பார்க்காமல் எதிரிகளை அழிப்பதற்கு சமம்; திருடன் மீது இரக்கப்பட்டு அவனைக் காட்டிக்கொடுக்காமல் விட்டுவிட்டால் அது உறவுகள், குருபந்தங்கள், நட்பு என்ற உணர்வுகளுக்கு மதிப்பளித்து போரைப் புறக்கணிப்பதற்குச் சமம்.

எது சரி? இதனாலேயே கர்மத்தில் அகர்மத்தைப் பார்ப்பதும், அகர்மத்தில் கர்மத்தைப் பார்ப்பதும் ஒரு யோகியாலேயே முடியக்கூடிய செயலாகும். சமுதாயத்துக்கு நல்லது செய்வதா, தனி மனிதனுக்கு அவனுடைய குற்றத்தை மறந்து இரக்கம் காட்டுவதா என்பதில் சரியான முடிவெடுக்க ஒரு யோகியால்தான் முடியும். அதனால்தான் நீதிமன்றங்களில் நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டிருக்கின்றன. நீதிபதிகளும் தம் விருப்பம்போல தீர்ப்பளித்துவிட முடியாது; வாதப் பிரதிவாதங்களில் வெளிப்படும் ஆதாரங்களை அடிப்படையாக வைத்துதான் சொல்ல முடியும். நீதிபதியால் தண்டனைக்குட்பட்டவர், விசாரணையின்போதே தன் நிலைகுறித்து அழலாம், வேதனையை வெளிப்படுத்தலாம், ஆனால் நீதிபதியால் அதைக் கண்டு மனசஞ்சலப்பட இயலாது. அவர் ஒரு யோகியாகத்தான் செயல்படவேண்டும். அதாவது, சாஸ்திரம் அனுமதித்த கர்மாவை இயற்றவேண்டும்!

பாண்டவர்கள் வணங்கிய மகாதேவன்


மகாபாரத யுத்தம் முடிந்த பிறகு, பாண்டவர்கள், வெற்றி மிதப்பில் களியாட்டம் ஆடிக்கொண்டிருக்கவில்லை. மாறாக, மகாபாரதப்போரினால் நிகழ்ந்த இறப்பினால் உண்டானதோஷம் கருதி துயரம் அடைந்தனர். தங்களின் ரட்சகனான கிருஷ்ணரிடம் பாவவிமோசனம் தீரவழி கேட்டனர். அவர் ஒரு கரியநிற தண்டமும், கருப்பு மாடு ஒன்றையும் வரவழைத்து, இக்கருப்பு தண்டத்தினை கையிலெடுத்துக் கொண்டு, இம்மாட்டினைப் பின் தொடருங்கள். இவ்விரண்டும், எங்கு வெள்ளை நிறமாக மாறுகின்றதோ, அங்கு, இறைவனை மனமுருகி வழிபடுங்கள். உங்களின் போரினால் உருவான பாவங்கள் விலக இறைவன் அருள்புரிவான் என்றார். அதன் படியே, அவர்கள் மாட்டினைப் பின்தொடர, கோலியாத்தில் தண்டமும், மாடும் வெள்ளை நிறம் அடைந்தது. 

அவ்விடத்திலே ஒரு குளம் வெட்டி, நீராடி, ஐவரும் இறைவனைக் குறித்து தியானித்தனர். ஐவருக்கும் ஐந்து சிவலிங்கம் நந்தியுடன் சுயம்புவாக எழுந்தருளி, பாவ விமோசனம் அளித்தான் இறைவன். கோலியாக் நிஷ்கலங்க் மகாதேவ் கோயில். ஆர்ப்பரிக்கும் ஆக்ரோஷ அலைகள் காணப்படும். காலை 8:30 வரை ஆர்ப்பரிக்கும் அலைகள் சிறிதுசிறிதாக உள்வாங்க ஆரம்பிக்கின்றது. கோயிலை நோக்கி. அதுவரை பொறுமை காத்திருந்த மக்கள், கோயிலை நோக்கி நடக்க ஆரம்பிக்கின்றனர். கோலியாக் கடலின் நடுவே அமைந்துள்ள இறைவனை உற்சாகத்துடன் சரண கோஷமெழுப்பி, ஆர்வத்துடன் தரிசிக்கச் செல்கிறார்கள். 

பகல் பன்னிரண்டு முப்பது நெருங்கும் நேரத்தில் அமைதி காத்த கடல் மறுபடியும், ஆர்ப்பரிக்க சிறிது சிறிதாக கரையை நோக்கி முன்னேற ஆரம்பிக்க பக்தர்களும் கரையை நோக்கி விரைந்து வருகின்றனர். சிலநிமிடங்களில் , கோயிலின் பட்டொளிவீசும் கல்தூண், கொடிமரம் புள்ளியாகத் தெரிகின்றது. இத்தகைய சிறப்பு பெற்ற தலம்  குஜராத் மாநிலம்  பாவ் நகரம்  கோலியாக்கில் உள்ளது. சென்னை   சென்ட்ரலில் இருந்து குஜராத்தின் அஹமதாபாத்திற்கு, நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. அங்கிருந்து, பாவ்நகர். பாவ்நகரில் இருந்து கோலியாக்கிற்கு நிறைய பேருந்துகள் செல்கின்றன. எத்தனை புயல் சீற்றம் கொண்ட போதிலும், பூகம்ப நிகழ்வு நடந்தபோதிலும், கொடி மரமோ, கல் தூணோ பாதிக்கப் படவில்லை என்பது ஆச்சரியப்பட வைக்கும் செய்தி.

புனித யாத்திரை புறப்படுவோம்

Related image

மனிதனைப் புதுப்பிக்கக் கூடிய மிகப் பெரிய சக்தி பயணங்களுக்கு உண்டு. அந்தப் பயணத்தை பக்தி சிரத்தையாக புண்ணிய தலங்களை நோக்கி ஒருவர் மேற்கொள்ளும்போது அது ‘யாத்திரை’யாகிறது. ஒவ்வொரு மதத்தவரும் அவரவர் மரபுப்படி புனிதப் பயணம் மேற்கொள்ள பிரத்யேகமான தலங்கள் உள்ளன. தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் அத்தலங்களுக்குச் சென்றுவர வேண்டும் என ஒவ்வொருவரும் நினைத்தாலும் அக்காலங்களில் அது அத்தனை அவ்வளவு சாத்தியமாய் இருக்கவில்லை. இன்றோ அத்தகைய நிலைமை இல்லை. அக்காலங்களில் மேற்கொண்ட பிரயாத்தனங்கள் இப்போது தேவையில்லை.  ஆனால், இப்போதோ, நவீன வசதிகள், சிறுதொலைவு பயணங்களைப் போல நீண்டதூர யாத்திரைகளையும் எளிமையாக்கி விட்டன. வாகன வசதிகளால் வழித்தடங்களும், பயண நேரங்களும் சுருங்கிவிட்டன. இதனால் எல்லோராலும் நினைத்த நேரத்தில் யாத்திரைகளை மேற்கொள்ள முடிகிறது. ஆகமங்கள் தீர்த்த யாத்திரை, தல யாத்திரை என யாத்திரையை இரண்டாக வகைப்படுத்துகின்றன. தீர்த்த யாத்திரை என்பது புனிதமான நீர்நிலையை ஒட்டி அமைந்திருக்கும் தலங்களைக் குறிக்கும். 

தல யாத்திரை என்பது அவ்வாறு நீர்நிலையை ஒட்டியதாக இல்லாத திருத்தலங்களைக் குறிக்கும். தெய்வங்கள் அனைத்தும் நீரில் உறைவதாக வேதங்கள் குறிப்பிடுகின்றன. அதனாலயே ஆலய வழிபாடுகளிலும், தெய்வ காரியங்களிலும் இறைவனை நீரில் ஆவாகனம் செய்கின்றனர். அப்படி இறைவன் உறைந்திருக்கும் புண்ணிய நதிகளை நோக்கிய யாத்திரைகளினால் மனிதர்களாகிய நம்மைப் பிடித்திருக்கும் நோய்கள் மட்டுமல்ல பாவங்களும் நீக்கப்படுகின்றன. அதன் காரணமாகவே அக்காலங்களில் மன்னர்களும் சாதாரண குடிமக்களைப் போலவே தீர்த்த யாத்திரைகளை மேற்கொண்டனர். பொதுவாகவே இத்தகைய யாத்திரையை மேற்கொண்டு மீண்டும் தங்கள் இருப்பிடம் திரும்புபவர்கள் புண்ணியம் செய்தவர்களாக போற்றப்பட்டனர். யாத்திரைகளை, பயணங்களைப் போல சட்டென மேற்கொண்டுவிட முடியாது. அதற்கென பல நியதிகளை, வழிமுறைகளை சாஸ்திரங்கள் வகுத்திருக்கின்றன. அத்தகைய நியதிகளின்படி மேற்கொண்டால் மட்டுமே அந்த யாத்திரையின் பலனை முழுமையாகப் பெறமுடியும். 

இஸ்லாமியர் மெக்காவுக்கும், கிறிஸ்தவர் ஜெருசலத்துக்கும், பெளத்தர் கயாவுக்கும் சென்று வருவதை தன் வாழ்நாள் கடமையாக அத்தகைய மதங்கள் விதித்திருப்பதைப் போல ஒவ்வொரு இந்துவுக்கும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் காசி-ராமேஸ்வரம் சென்று வருவது ஆன்மிகக் கடமையாக விதிக்கப்பட்டிருக்கிறது. காசி, ராமேஸ்வரம் இரண்டும் தனித்தனி அல்ல. ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஒன்றில் இருந்தே இன்னொன்று தொடங்குகிறது. இவ்விரு தலங்களில் ஏதாவது ஒரு தலத்துக்கு மட்டும் யாத்திரை சென்றுவந்தால், அந்த யாத்திரை முழுமை பெறாது, அதனால் பலனில்லை என்பார்கள். அதனால்தானோ என்னவோ காசி, ராமேஸ்வரம் இரண்டையும் தனித்தனியாக குறிப்பிடாமல் இரண்டையும் சேர்த்தே குறிப்பிடும் வழக்கம் இப்போதும் வழக்கில் உள்ளது. இந்து மதத்தவர் மட்டுமல்ல மற்ற மதத்தவராலும்கூட காசியோடு ராமேஸ்வரத்தை இணைத்தே பார்க்க முடிகிறது. ‘யாத்திரை போகிறேன்’ என யாரிடமாவது சொல்லிப் பாருங்கள், உடனே அவர் ‘காசியா? ராமேஸ்வரமா?’ என்று தனித்தனியாகக் கேட்பதில்லை. 

மாறாக ‘காசி-ராமேஸ்வரமா?’ என்று சேர்த்தே கேட்பார். காஞ்சி முனிவர் மஹாஸ்வாமிகளுக்கு வண்டி ஓட்டிச்சென்ற ஒரு சிறுவன் இவ்வாறு கேட்டதனாலேயே ராமேஸ்வர அக்னிதீர்த்தக் கடலில் ‘சங்கர மடம்’ உருவானது என்று சொல்லப்படுகிறது. காசி யாத்திரை என்பது நியதிப்படி ராமேஸ்வரத்தில் தொடங்கி, காசிக்குச் சென்று மீண்டும் ராமேஸ்வரத்தில் முடிவடைகிறது. அத்தகைய நியதிகளோடு காசி யாத்திரையை அக்காலகட்டத்தில் ஒருவர் செய்து முடித்து திரும்புவதற்குப் பல வருடங்கள் தேவைப்பட்டன. சென்றவர்களில் சிலர் திரும்பாமலேயும் போயிருக்கிறார்கள். அத்தனை கஷ்டப்பட்டு மேற்கொள்ளும் இத்தகைய தீர்த்த யாத்திரையை, தருமங்களிலேயே தலையாயது என வேதங்கள் சுட்டுகின்றன. வாகன வசதிகள் பெரிய அளவில் இல்லாத நிலையில் கூட்டம், கூட்டமாக தீர்த்த யாத்திரைகளை மக்கள் மேற்கொண்டனர். மன்னர்கள் அந்த யாத்ரீகர்களுக்குப் பல வசதிகளைச் செய்து கொடுத்தனர்.

நடைப்பயணமாய் வருபவர்கள் இளைப்பாற, உண்டு, உறங்க மன்னர்களோடு வசதிபடைத்தவர்களும் பாதைதோறும் சத்திரங்களைக் கட்டிவைத்தனர். இந்தவகையில் சேதுயாத்திரை என்ற ராமேஸ்வர யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு அப்பகுதியை ஆட்சி செய்துவந்த சேதுபதிகள் பல வசதிகளை செய்து கொடுத்தனர். அவர்கள் கட்டித்தந்த சத்திரங்களின் சிதைவுகளை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் சில கிலோமீட்டர் இடைவெளிகளில் வரிசையாக  இன்றும் காணலாம். சத்திரங்கள் மட்டுமல்ல அந்தச் சத்திரங்களின் பின்னணியில் ஒரு சரித்திர சம்பவமும் உண்டு. ராமநாதபுரத்தை விஜயரகுநாத சேதுபதி ஆட்சி செய்தபோது ராமேஸ்வரம் செல்ல படகில் வந்திறங்கும் பக்தர்களுக்காக பாம்பனில் நிறைய சத்திரங்களைக் கட்டி அதன் ஆளுனராக தண்டத்தேவர் என்பவரை நியமித்திருந்தார். அவருக்கு தன் இரு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்திருந்தார். 

அந்தகாலத்தில் பாம்பனுக்கும், ராமேஸ்வரத்திற்கும் இடையே சரியான சாலைவசதிகள் இல்லாததால் புதிய சாலைகளை உருவாக்க நினைத்த தண்டத்தேவர் யாத்திரைக்கு வரும் பக்தர்களிடம் சிறுதொகையை வரியாக வசூல் செய்தார். இதைக் கேள்விப்பட்ட சேதுபதி, தண்டத்தேவர் தன்னைக் கேட்காமல் வரிவசூல் செய்ததோடு சிவத்துரோகமும் செய்து விட்டார் எனக்கூறி அவருக்கு மரண தண்டனை விதித்தார். இதையறிந்த சேதுபதியின் மகள்கள் இருவரும் தன் கணவனின் சிதையில் விழுந்து  உயிரை விட்டனர். அவர்கள் இவ்வாறு உடன்கட்டை ஏறிய இடம் ‘தீப்பாஞ்சகாணி’ (காணி - இடம்; தீப்பாஞ்சகாணி -தீயில் பாய்ந்த இடம்) என்ற பெயரில் தண்டத்தேவரின் அரண்மனை இருந்த இடத்தின் (இப்போதைய தங்கச்சி மடம்) எதிரே அமைந்துள்ளது. தீயில் விழுந்து உயிர் விட்ட அக்காள், தங்கை இருவரின் நினைவாக இருமடங்கள் உருவாக்கப்பட்டன. அக்காள் மடத்தை சிவக்குமார முத்து விஜயரகுநாத தேவரும், தங்கச்சி மடத்தை கட்டையத் தேவரும் கட்டினர். அம்மடங்களைச் சுற்றி எழுந்த ஊர்கள் பின்னர் அம்மடங்களின் பெயர்களாலயே அழைக்கப்பட்டன.

வேறு சில நூல்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: தண்டத்தேவர் பக்தர்களின் உணவிற்காக பணமும், வரியும் வசூலித்து வந்ததையறிந்த சேதுபதி மருமகனைத் தண்டித்தால் மகள்கள் கவலைப்படுவார்களே என நினைத்தார். எனவே, மகள்களை அழைத்து குற்றவாளி யாரென்று கூறாமல் இதற்கு என்ன தண்டனை கொடுக்கலாம் எனக் கேட்க, அவர்களோ பணம் வாங்கியவரின் கையை வெட்டி விடும்படி கூறினர்.  அதன்பின் குற்றவாளி யாரென தெரிந்தும் தங்களின் முடிவை அவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சியின் நினைவாக உருவாக்கப்பட்டவைகளே அக்காள் மடமும், தங்கச்சி மடமும்.

சுற்றுலாவிற்கும், யாத்திரைக்கும் உணர்வுபூர்வமாக வித்தியாசம் உண்டு. சுற்றுலா என்பது பொதுவாக கேளிக்கை, களியாட்டம், குதூகலம், வேடிக்கை, பிரமிப்பு, சாகசம், கொண்டாட்டம் என்றெல்லாம் உற்சாகப் பொழுதுபோக்காகவே அமையும். ஆனால், யாத்திரை ஆன்மிகம் சார்ந்தது. மன அமைதி, பரிபூரண நிம்மதி, இறையருளை உணர்வது, ஒழுங்கைக் கடைப்பிடிப்பது, நிதானமாகவும், விவேகத்துடனும் நடந்துகொள்வது, அடுத்து ஒருமுறை வரமுடியுமோ, முடியாதோ என்ற ஆதங்கத்தில் இப்போதே மனநிறைவாக ஈடுபடுவது எல்லாம் யாத்திரையின் இலக்கணங்கள். ஆக, யாத்திரை நியதிகளின்படி நாமும் ராமேஸ்வரம் நோக்கிப் பயணத்தைத் தொடங்குவோம், வாருங்கள்.

குன்று தோறாடும் குமரனின் தரிசனம்

Image result for thiruthani murugan

தமிழகத்தில் அறுபடை வீடுகள் என்று ஆறு முக்கியத் தலங்களில் முருகப் பெருமானை வழிபடுகிறார்கள். இவை தவிர ‘குன்று தோறாடல்’ என்ற தத்துவப்படி குன்றங்களின் மீதும் மலைகளின் மீதும் எழுந்தருளி விளங்கும் பெருமானாகவும் அவர் தரிசனம் தருகிறார். முருகன் குறிஞ்சி நிலத் தலைவன். எல்லா மலைகளுக்கும் தெய்வம். அப்படி குன்றுதோறும் குடியிருக்கும் குமரன் அருள்பாலிக்கும் திருத்தலங்கள் சிலவற்றைக் காண்போம் வாருங்கள்! திருத்தணி: ஐந்தாவது படை வீடான குன்றுதோறாடலில் மிகவும் விசேஷமானது திருத்தணிகை. இது அரக்கோணத்துக்கு வடக்கே 16 கி.மீ. தொலைவில் உள்ளது. திருத்தணி நகரின் நடுவே சுமார் 400 அடி உயரத்தில் தணிகை மலை அமைந்துள்ளது. 

அங்கே மலை உச்சியில் நான்கு பிராகாரங்களுடன் எழில் மிகுந்த ஆலயம் இருக்கிறது. தேவர்களது துயர் தீர்க்கும் பொருட்டு சூரபத்மனுடன் செய்த பெரும் போரும், வள்ளியைக் கரம் பிடிக்க வேடர்களுடன் செய்த சிறுபோரும் முடிந்து முருகப் பெருமானின் சீற்றம் தணிந்து அமர்ந்த தலமாதலால், இது தணிகை எனும் பெயர் பெற்றது. தேவர்களது அச்சம் தணிந்த தலம். அடியவர்களது துன்பம், கவலை, பசி, பிணி, வறுமை ஆகியவற்றை தணிக்கும் தலம் என்றும் பெயர் பெற்றதாகக் கூறுவர். மலையின் அடிவாரத்தில் சரவணப் பொய்கை உள்ளது. இந்த தீர்த்தம் குமரவேள் தனது சிவபூஜைக்காக வரவழைத்த கங்கா தீர்த்தம் என்று சொல்வார்கள். 

கருவறையில் திருத்தணிகைப் பெருமான் திவ்விய சுந்தர வடிவினராய், இடக்கரத்தைத் தொடையில் அமைத்து, வலக்கரத்தில் ஞான சக்தியான வேலைத் தாங்கி, வள்ளி  தெய்வானை, மயில் முதலியோர் இன்றித் தனித்து நின்று தரிசனம் தருகிறார். திருமால் ஆலயங்களைப் போன்று பக்தர்களின் தலையில் சடாரி வைத்து ஆசி வழங்குவது இக்கோயிலின் தனிச் சிறப்பு. இங்கு சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. கந்த சஷ்டி விழா மட்டும் நடைபெறுகிறது.  சென்னிமலை : ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலிருந்து தெற்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது, சென்னிமலை. 1750 அடி உயரம் கொண்ட மலைக் கோயில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது சிரகிரி, சிகரகிரி, மகுடகிரி, புஷ்பகிரி, சென்னியங்கிரி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. 

இந்தத் தலவரலாற்றை இயற்றியவர் சரவண முனிவர் ஆவார். இது 23 மான்மியங்களையும் 667 திருவிருத்தங்களையும் கொண்டதாகும். சென்னிமலை என்றாலே தலைமையான மலை என்று பொருள். இம்மலை 1300 படிகளைக் கொண்டதாகும். வாகனங்கள் செல்ல 4 கி.மீ. தூரம் தனிப் பாதையும் உள்ளது. ஆலயத்தின் நடுநாயகமாக சென்னிமலையாண்டவரின் திருச்சந்நதி உள்ளது. வலது கரத்தில் ஞான தண்டாயுதத்தை ஏந்தியபடி இடது கரத்தை இடுப்பில் வைத்தபடி பெருங்கருணை கொண்ட பேரழகனாக, பேரருளாளனாக பேரொளியுடன் காட்சி தருகிறார். சென்னிமலை ஆண்டவர் செவ்வாய் கிரகத்துக்குரிய அதிதேவதையாகும் சிறப்பைப் பெறுவது சென்னிமலையில்தான். கருவறையில் நடுநாயகமாக செவ்வாய் கிரகமாக அமைந்து மூலவரைச் சுற்றியுள்ள தேவ கோஷ்டங்களில் பிற எட்டு கிரகங்களும் இடம் பெற்றுள்ள சிறப்பு சென்னிமலையில் மட்டுமே உள்ளது. 

‘சஷ்டியை நோக்கச் சரவண பவனார்’ என்று துவங்கும் ‘கந்த சஷ்டி கவசத்தை’ உலகம் முழுவதும் முருக பக்தர்கள் மனமுருகிப் பாராயணம் செய்வதைக் காண்கிறோம். அதனை இயற்றிய தேவராய சுவாமிகள் பாப்பினி என்ற ஊரையடுத்த மடவிளாகத்தைச் சேர்ந்தவர். அவர் இயற்றிய இந்த அரிய ‘கவசம்’ சென்னிமலை ஆண்டவர் திருக்கோயிலில்தான் அரங்கேற்றப்பட்டது என்பது பெருமைக்குரிய செய்தியாகும். சென்னிமலை ஆண்டவர்மீது அற்புதமான ‘திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் முருகப் பெருமானிடம் படிக்காசு பெற்றார். பக்தர்கள் தங்கள் இல்லங்களில் நடைபெறும் மங்கள நிகழ்ச்சிகளைத் துவங்கிட, முருகனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து ‘சிரசுப்பூ’ கேட்டு நல்ல உத்தரவு கிடைத்த பின்புதான் மனநிறைவு அடைகிறார்கள்.

மருதமலை : கோவை மாநகருக்கு மேற்கே சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது மருதமலை. இங்கு மருதாசலனாக முருகப் பெருமான் கொலுவிருக்கிறார். பழனியைப்போல இங்கும் முருகன் வேல் ஏந்தி ஆண்டியாகவே திருக்கோலம் கொண்டிருக்கிறார். இந்த மலையில் மராமரம் என்ற மருத விருட்சம் மற்றும் அநேக மூலிகைச் செடிகளும் நிறைந்துள்ளன. அதனால் இதை ‘மருந்துமலை’ என்றும் அழைப்பதுண்டு. இங்கு மூர்த்தி விசேஷத்தோடு தீர்த்த விசேஷமும் உண்டு. இங்குள்ள ஆறு தீர்த்தங்களிலும் பக்தி சிரத்தையுடன் நீராடி, மருதாசலனைத் தரிசித்து வேண்டிக் கொண்டால் தீராத வினைகளும், பிணிகளும் தீர்ந்துவிடும் என்றும் நம்புகிறார்கள். பதினெண் சித்தர்களில் பாம்பாட்டிச் சித்தர் வாழ்ந்த இடம் இந்த மலை. அதனால் இதற்கு பாம்பாட்டிச் சித்தர்மலை என்ற பெயரும் உண்டு. வருடந்தோறும் தைப்பூச ரதோற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.

கபிலர்மலை: நாமக்கல் அருகே பரமத்தி வேலூரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது, கபிலர்மலை என்ற முருகன் திருத்தலம். இங்கு அவர் குழந்தை குமார சுவாமியாகக் காட்சி தருகிறார். அவரது உருவம் ஞான வடிவானது. கலவைச் சந்தனமும் மார்பில் புரிநூலும் எழில் சேர்க்கின்றன. வேற்படையே அவருக்குரிய ஆயுதமாகக் கரங்களில் மிளிர்கிறது. மலையைச் சுற்றி காவிரிநதி ஓடுகிறது. மலைக் கோயிலில் முண்டிதம் செய்யப்பட்ட முடியுடனும் இடையில் கோவணத்துடனும், வேலாயுதத்துடனும் பெருமான் தோற்றம் கொண்டுள்ளார். இந்த வடிவம் பழனி ஆண்டவர் தோற்றத்தை ஒத்துள்ளது. 
சுருளி மலை: மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பிரிவான சுருளி மலை சிறந்த முருகன் தலமாகத் திகழ்கிறது. 

இங்குள்ள சுருளி தீர்த்தம் அருவியாக விழுகிறது இம்மலையில் இருக்கும் வனத்தில் மூலிகைகள் நிறைந்திருப்பதால் இங்கு நிலவும் குளிர்ந்த காற்று உடலுக்குப் புத்துணர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. முருகப் பெருமானுக்கு இயற்கையாக அமைந்துள்ள கோயில்களில் சுருளிமலை குறிப்பிடத்தக்கது. இங்கு முருகப் பெருமான் குகையொன்றில் கோயில் கொண்டு விளங்குகிறார். இதற்குக் கீழே மற்றொரு குகையில் கைலாசநாதர் இருக்கிறார். இக் குகைக்கு ‘கைலாசப்புடவு’ என்று பெயர். சனி தோஷத்திலிருந்து தேவர்களைக் காக்க முருகன் இத்தலத்தில்தான் அவர்களுக்குத் தஞ்சம் கொடுத்ததாக தல வரலாறு கூறுகிறது. சனிக் கிரகத்தால் பாதிப்பு உடையவர்கள் சுருளி மலை சென்று தரிசித்தால் சுருளி மலை பாலமுருகன் அருளால் சுகம் பெறலாம். 

திண்டல் மலை: ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து கோவை செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம் திண்டல்மலை வட்ட வடிவமாகத் திகழும் அழகியமலை மீது வேலாயுதசுவாமி எழுந்தருளியுள்ளார். ஈரோடு பெருநகரைப் பார்த்தபடி ஈசான்ய மூலையில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் மூலவர் வேலாயுதசுவாமி வேலைப் பிடித்தபடி இடது கரத்தை இடுப்பில் வைத்தபடி காட்சி தருகிறார். இங்கு அரச மரத்தடி விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இடும்பன், தன்னாசி சித்தர் இருவரும் தனிச் சந்நதி கொண்டுள்ளனர். தங்கக் கவசம் சாத்தியுள்ளபடி, வேலாயுதசுவாமியை தரிசனம் செய்தவர்கள் மிகுந்த பாக்கியம் பெற்றவர்கள். ஒருபுறம் ஆறுமுகப் பெருமானும் திண்டல் மலையில் இடம் பெற்றுள்ளார். 300 செவ்வரளிப் பூக்களால் இவருக்கு அமாவாசை சஷ்டி, கிருத்திகை நாட்களில் ‘திரிசதீ’ வழிபாடும் நடைெபறுகிறது. 

திருச்செங்கோடு: ஈரோட்டிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் கிழக்குத் திசையில் அமைந்துள்ள திருச்செங்கோடு. இங்கே அர்த்தநாரீஸ்வரர் செங்கோட்டு வேலன், ஆதிகேசவப் பெருமாள் ஆகிய மூவருக்கும் தனித்தனி சந்நதிகள் உள்ளன. இங்கே நாகாசல மலையின் மீது கோயிலில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் வலது கையில் சக்தி வேலும், இடது கையில் சேவலும் தாங்கி நின்ற திருக்கோலத்தில் செங்கோட்டு வேலனாக, செங்கோடனாக காட்சி தருகிறார். விராலிமலை: திருச்சி மாவட்டத்தில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது விராலிமலை. இந்த மலையில் முனிவர்களே குரா மரங்களின் வடிவில் இருந்து வழிபடுகிறார்கள். 

அதனால் மரங்களை யாரும் வெட்டுவதில்லை. மலைமீது ஷண்முக மூர்த்தி மண்டபத்தை ஒட்டிய ஆறுமுகப் பெருமானின் திருச்சந்நதி அமைந்துள்ளது. கருவறையில் ஆறுமுகப் பெருமான் மயில்மீது அமர்ந்து காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி தெய்வானை தேவியர் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்கள். பச்சைமலை: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்திற்கு மிக அருகில் 3 கி.மீ. தொலைவில் பவானி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது, பச்சைமலை. மலைமீது அழகிய படிகள் உள்ளன. 350 அடி உயரத்தில் அழகுற அமைந்திருக்கும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வாகனங்கள் செல்ல சாலை வசதியும் உண்டு. 

ஐந்துநிலை கொண்ட ராஜகோபுரம், அதன் மத்தியில் ஒளிர்விடும் ‘சக்திவேல்’ கண்ணைக் கவருவதாக அமைந்துள்ளது. திருக்கோயில் எதிரே கொங்கு நாட்டிற்கே உரித்தான தீபஸ்தம்பம் கொண்ட நாற்கால் மண்டபம் உள்ளது. அதன் நான்கு மூலைகளிலும் மயில்கள் சுதை வடிவில் அமைந்துள்ளன. மேற்கு திசை நோக்கிய திருக்கோயில். உள்ளே அழகிய திருச்சுற்றும் அமைந்துள்ளது. கருவறையில்  வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகப் பெருமான் காட்சி தருகிறார். வெள்ளிக் கிழமைகளில் முருகனிடம் ‘பூவாக்கு’ கேட்டிட பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடுவர். பவளமலை: பவளமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் என அழைக்கப்படும் அழகிய இத்திருக்கோயில் துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறுகிறார்கள். 

இங்கு சிவபெருமான் கயிலாயநாதராகவும், அம்பிகை பெரிய நாயகியாகவும் எழுந்தருளியுள்ளனர். இங்கே கருவறையிலுள்ள முருகப் பெருமான் இளமை தோற்றத்துடன் கையில் தண்டுடன் இடையில் கோவணத்துடன் உச்சிக் குடுமியுடன் முத்துக்குமாரசுவாமியாக கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இத்தலம் கோபிசெட்டி பாளையத்திற்கு அருகில் உள்ளது. தீர்த்தகிரி: சென்னை  பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றின் தென்கரையில் வேலூருக்கு அருகேயுள்ள மலைமீது தீர்த்தகிரி முருகன் ஆலயம் அமைந்துள்ளது. முகப்பு கோபுரம், சுற்றுப் பிராகாரம், நுணுக்கமான கலை வேலைப்பாடுகளுடன் கூடிய மகா மண்டபம், அர்த்த மண்டபம், மூலவர் விமானம், எழில்மிகு கருவறை என அழகுடன் காட்சி தருகிறது. 

கோயிலுக்குள் அன்னை விசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர், மகாவிஷ்ணு, அன்னபூரணி, சரஸ்வதி, மகாலட்சுமி, துர்கா மற்றும் நவகிரகங்கள் அமைந்துள்ளன. கருவறையில் தேவியருடன் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை தரிசிக்கக் கண் கோடி வேண்டும். அவ்வளவு அழகு. இவர் மகா வரப்பிரசாதி என்கிறார்கள். இங்கு முருகனுக்கு ஆடிக் கிருத்திகை விழா வெகு சிறப்பு. கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், ஆண்டு விழா ஆகியன சிறப்பாக நடைபெறுகின்றன. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பர். வள்ளிமலை: வேலூரிலிருந்து 27 கி.மீ. தொலைவில் உள்ளது. வள்ளி பிறந்து வளர்ந்து தினைப்புனத்தில் ஆயலோட்டி முருகனை மணந்து திருத்தணி செல்லும் வரையிலுள்ள எல்லா நிகழ்ச்சிகளும் வள்ளியை  சிற்பமாகக் கண்டு வணங்கலாம். குடைவரை கோயில் குகையில் முருகன் இருப்பதால் அவனை குகன் என்று அழைக்கிறார்கள். 

கருவறையின் உச்சியில் உள்ள பாறை மேல் கருவறை விமானம் அழகாகக் கட்டப்பட்டிருக்கின்றது. இம்மலையில் முருகப்பெருமான் காலடி படாத இடமே இல்லை. அங்குள்ள ஒரு பிடி மணலை வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைத்துப் போற்றினால் முருகனின் அருள் கிடைக்கும் என்பார் வாரியார் சுவாமிகள். குன்றக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ளது, குன்றக்குடி. திருவண்ணாமலை ஆதின மடத்துக்கு உட்பட்ட கோயில் இது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்தான் கோயிலைத் திறம்பட நிர்வாகித்து வருகிறார். இங்கு முருகனுக்கு ஷண்முகநாதர் என்று பெயர். இங்கே மயிலின் தலை வடக்கு நோக்கியபடி இருக்கிறது மிகவும் விசேஷம். வள்ளி, தெய்வானை, ஷண்முகநாதன் மூன்று பேரும் தனித்தனியாக மயில் வாகனத்திலே உட்கார்ந்து அருள்பாலிக்கும் அழகே அழகு. மலையடிவாரத்திலே குடைவரை கோயிலில் அப்பன் சிவன் ஸ்ரீ தேனாற்றுநாதராகவும், அம்மை பார்வதி அழகுடைய நாயகியாகவும் இருக்க, மகன் ஷண்முகநாதன் மலையில் காட்சி தருகிற கோயில் இது. அதனால் பிள்ளை வரமும் தந்து அருள் வழங்குகிறார் முருகப்பெருமான். 

மகளிர் துயர் நீக்கும் உண்ணாமுலை அம்மன்


மாங்கல்யம் நிலைத்துத் தழைக்க வேண்டும் என்றும் கணவன் நீண்ட ஆயுளுடன்வாழ வேண்டும் என்றும், விரும்பாத பெண் இருக்க முடியாது. இப்படிப்பட்ட பெண்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கிறாள், அன்னை உண்ணாமுலை அம்மன். அம்மனின் பெயரைக்கேட்டதும் திருவண்ணாமலை உங்களுக்கு நினைவுக்கு வரலாம். ஆனால், அதே பெயரோடு அம்பிகை அருள்வது திருச்சி ஜே.ஜே நகாில் உள்ள அருணாசலேஸ்வரர் ஆலயத்தில்! ஆம்! இறைவன் பெயரும் அருணாசலேஸ்வரர்தான். ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைக் கடந்ததும் நூறு தூண்களுடன் கூடிய மகா மண்டபம் பிரமாண்டமாகக் காட்சி தருகிறது. வலதுபுறம் கால பைரவரின் தனிச் சந்நதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த வழிபாட்டில் கலந்து கொள்வதால் ஏவல், பில்லி, சூன்யம் போன்ற பாதிப்பிலிருந்து பூரணமாக விடுபடலாம் என்பது நம்பிக்கை.

சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மகாமண்டபத் தூண்களை ரசித்தபடி நடந்தால் நந்தியை தரிசித்து, அர்த்த மண்டப நுழைவாயிலில் உள்ள கம்பீரமான துவாரபாலகர்களின் அனுமதி பெற்று, கருவறையில் இறைவன் அருணாசலேஸ்வரரின் லிங்கத் திருமேனி முன்சென்று நிற்கலாம். கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் இறைவனின் முன்நின்று கரங்குவிக்கும்போது மனம் முழுதும் வெற்றிடமாகி, மெல்லிய மலர்களால் வருடப்படும் உணர்வு தோன்றுகிறது.சிவராத்திரியின் போது இறைவனுக்கு நான்குகால ஆராதனைகளும் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. கார்த்திகை மாதம், அனைத்து சோமவார நாட்களிலும் இறைவனுக்கு 108 வலம்புரிச் சங்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. 

இறைவனின் தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர்; அருள்பாலிக்கின்றனர். சண்டேசர் சந்நதியும் உள்ளது. அன்னை உண்ணாமுலை அம்மன் தனிச் சந்நதியில் நின்ற கோலத்தில் இருகரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறாள். புன்சிரிப்பு மலர காட்சி தரும் அன்னையின் அருள்முகம் நம்மை வசீகரிக்கச் செய்வது நிஜம். இறைவியின் தேவகோட்டத்தில் இச்சா, கிரியா, ஞான சக்தியரும், எதிரே சண்டிகேஸ்வரியும் அருள்பாலிக்கின்றனர். இறைவன், இறைவியை சேர்ந்தே வலம் வரும் வகையில் உட்பிராகாரம் அமைந்துள்ளது. நிருருதி விநாயகர், மகாலட்சுமி, சரஸ்வதி, முருகன், வள்ளி, தெய்வானை, நால்வர், நவகிரக நாயகர்கள் அருள் பாலிக்கின்றனர். 

இறைவியின் சந்நதியை அடுத்து ஜெயம் கொண்ட விநாயகரின் சந்நதி உள்ளது. ஆனை முகன் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்க, கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, லிங்கோத்பவர் உள்ளனர். அடுத்துள்ளது பாலமுருகனின் சந்நதி. சஷ்டியின்போது ஆறு நாட்களும் முருகனுக்கு சத்ரு சம்ஹார திரிசதீ அர்ச்சனை நடைபெறும். சுதையாலான திருவடிவங்களுடன் ஆலயத்தைச் சுற்றியுள்ள மதிற்சுவர் அழகுற காட்சியளிக்கிறது. பக்தர்களின் நலம் காக்கும் அருணாசலேஸ்வரரையும், மகளிர் துயர் நீக்கும் உண்ணாமுலை அம்மனையும் ஒருமுறை தரிசித்து நன்மை பெறலாமே! திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள ஜே.ஜே நகரில் இந்த அருணாசலேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

திருக்குறுங்குடி வல்லி நாச்சியார்


திருக்குறுங்குடி தலத்தில் தாயார், குறுங்குடி வல்லி நாச்சியார் என்ற பெயரில் தனியே சந்நதி கொண்டிருக்கிறாள். வராக அவதாரத்தின்போது, தன் பிராட்டியுடன் ஒரு சிறு குடிலில் பகவான் தங்கியிருந்ததாலும், தன் நெடிய உருவத்தைக் குறுக்கிக் கொண்டதாலும் இத்தலம் குறுங்குடி என்றழைக்கப்பட, தாயாரும் குறுங்குடி நாச்சியாரானார். அன்னை, பெருமாளுக்குச் சற்றும் குறைவிலாதபடி அருள் வழங்கி பக்தர்களுக்குப் பவித்திரம் சேர்க்கிறார். வராகரின் மடியில் அமர்ந்தபடி, கைசிக புராணத்தை அவர் சொல்லக்கேட்டுப் பெரிதுவந்து, தானும் பூலோகத்தில் ஏதேனும் ஒரு வகையில் பரந்தாமனின் புகழ் பரப்ப வேண்டுமென்று விரும்பினார், தாயார். 

அதன் விளைவாகவே ஸ்ரீவில்லிப்புத்தூரில், பூமித்தாயின் குழந்தையாக, ஆண்டாளாக அவதரித்தார். அதாவது ஆண்டாளின் அவதாரம் நிகழ இந்த திருக்குறுங்குடி மூல ஆதாரமாக இருந்திருக்கிறது. திருநெல்வேலி நான்குநேரி ஏர்வாடி வழியாக வந்தால் நான்குநேரியிலிருந்து 13 கி.மீ. நான்குநேரிகளக்காடு வழியாகவும், திருநெல்வேலிநாகர்கோவில் பாதையில் வள்ளியூரில் இறங்கியும் வரலாம். கோயில் தொடர்புக்கு: 04635265291; 04635265011; 04635265012; 9443205739; 9443408285.

முருகப்பெருமானுக்கு சக்தி வேல் வழங்கிய வெயிலுகந்தம்மன் கோவில்

முருகப்பெருமானுக்கு சக்தி வேல் வழங்கிய வெயிலுகந்தம்மன் கோவில்

திருச்செந்தூரில் மற்றொரு சிறப்பு வாய்ந்த வெயிலுகந்தம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வரலாற்றை இன்று அறிந்து கொள்ளலாம்.

திருச்செந்தூர் என்றாலே அறுபடை வீடுகளில் 2-ம் படை வீட்டில் அமர்ந்திருக்கும் செந்திலாண்டவ பெருமான்தான் அனைவரது கண்முன்பும் வந்து நிற்கும். அதேபோல் சிறப்பு வாய்ந்த மற்றொரு கோவிலும் திருச்செந்தூரில் அமைந்து உள்ளது என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கிறதா?. ஆம்! அந்த கோவிலின் பெயர் வெயிலுகந்தம்மன் திருக்கோவில்.

இந்த கோவிலில் கொலு வீற்றிருக்கும் அம்மனின் பெயர் ஸ்ரீ வெயிலுகந்தம்மன். தல விருட்சம் பன்னீர் மரம். தீர்த்தம்-வதனாரம்ப தீர்த்தம். திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது இக்கோவில்.

இனி இந்த கோவிலை பற்றியும், இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அம்மனின் சிறப்புகளையும் காண்போம்!.

கந்தபுராணத்தின்படி, முருகப்பெருமான் பத்மாசூரனை அழிப்பதற்கு முன்பே அவருடைய தாய் பராசக்தியானவள் திருச்செந்தூரில் அமர்ந்தருளியிருக்கின்றார். பத்மாசூரனை பற்றி தெரிந்து கொண்ட பிறகு அவனை அழிப்பதற்கு முருகப்பெருமான் இங்கு வந்து தன் தாயை வணங்கி வேண்டி நிற்க, அன்னையும் கருணை கூர்ந்து தன் மகனுக்கு வெற்றி தரும் சக்தி வேலை கொடுத்தபடியினால், ‘வேல் உகந்த அம்பாள்’ என்று இந்த அம்பாள் அழைக்கப்பட்டார். அதுவே பின்பு பேச்சு வழக்கில் “வெயிலுகந்தம்மன்” என்று மருவி வழங்கலாயிற்று. அதன்பிறகே அன்னையின் ஆணைப்படி இந்நகரை முருகப்பெருமான் நிர்மாணித்ததாக கூறப்படு கிறது.

சூரபத்மனுடன் நடந்தபோரின் போதும் அன்னையே பல வடிவம் கொண்டு போருக்கு உதவினாள். சூரனை அழித்ததினால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட, சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்து தவம் இயற்றும்படி அன்னை ஆணையிட, அதன்படியே சுப்பிரமணியரும் செய்திட்டார்.

பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தையும், ஜபமாலையுடன் தவமியற்றும் கோலத்தில் சுப்பிரமணியர் இருக்கும் கோலத்தையும், திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்றும் காணலாம். அன்னையும், கிழக்கு முகமாக சிவபூஜை செய்யும் தன் மகனை ஆசீர்வதிக்கும் கோலத்தில் பத்திரகாளி அம்மன் அம்சத்தில் அருள்பாலிப்பதை(கோவிலுக்கு சற்று தொலைவில்) காணலாம்.

அன்னைக்கு சிறப்பு மரியாதை அளிக்கும் விதமாக முருகப்பெருமானுக்கு நடைபெறும் ஆவணி மற்றும் மாசி திருவிழாவிற்கு முன்பாக வெயிலுகந்தம்மனுக்கு பத்து நாட்கள் உற்சவம் நடைபெறுகிறது. மேலும் தினந்தோறும் முருகப்பெருமானுக்கு நிவேதன பொருட்கள் எடுக்கும் முன்பாக அன்னை வெயிலுகந்தம்மனுக்கு முதல் மரியாதையாக நிவேதன பொருட்கள் கொடுத்த பிறகே எடுக்கப்படுகிறது.



சூரசம்ஹாரம் நடை பெறும் நாளுக்கு முந்தைய இரவு, முருகப்பெருமானே சூட்சும உருவில் இத்திருக்கோவில் வந்து தன் அன்னைக்கு பூஜை செய்து அருள் பெற்று வேல் வாங்கி செல்வதாக ஐதீகம். எனவே அன்று இரவு பூஜை செய்யும் பாத்திரங்கள் தயாராக வைக்கப்பட்டு கோவில் திருக்காப்பிடப்படுகிறது.

அம்மன் இவ்வூரின் வடக்கே கோவில் கொண்டுள்ளதால், இவளே ஊர் காளியாகவும் வணங்கப்பட்டு வருகிறாள். சித்திரை மாதத்தில் திருச்செந்தூரில் மற்ற பிற அம்மன் கோவில்களில் கொடை விழா தொடங்கும் முன்பாக அன்னை வெயிலுகந்தம்மனுக்கு மரியாதை செய்த பின்பே கொடை விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

திருச்செந்தூரின் முக்கியமான பிரசித்தி பெற்ற தீர்த்தமான வதனாரம்ப தீர்த்தம் இங்குள்ளது. இந்த தீர்த்தம் ஏற்பட ஒரு சுவையான கதையும் உண்டு.

கி.பி.எட்டாம் நூற்றாண்டில் வரகுணபாண்டியன் என்ற மன்னனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமலே இருந்து வந்தது. திருச்செந்தூர் வந்து கந்த சஷ்டி விரதம் இருந்த பின் மன்னனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தையின் உடல் மனித உடலாகவும், முகம் குதிரை முகமாகவும் காணப்பட்டது. இதனால் மன்னன் மிகவும் கவலை கொண்டு முருகப்பெருமானிடம் வேண்டினான். ஒருநாள் மன்னனின் கனவில் கந்தன் தோன்றி, “ இந்த குறையை போக்கிட என் அன்னையினால் மட்டுமே முடியும். ஊரின் வடக்கில் உள்ள என் அன்னையை வேண்டிக்கொள். குறை நீங்கும்” என கூறினான்.

மன்னனும் மறுநாளே சென்று அன்னையை தேட, காட்டினில், கயிலாய மலையை போன்ற இடத்தினில் அன்னையை கண்டு தன் குறையை நீக்கும்படி மனமுருக வேண்டினான். அன்னையின் அருகிலேயே குடில் ஒன்றும் அமைத்து அங்கேயே தங்கி விரதம் இருந்தான். இதனால் மன மகிழ்ந்த அன்னை மன்னனிடம், “ஆடி மாதம் செவ்வாய்க்கிழமையன்று தன் எதிரில் இருக்கும் கடலினில் குழந்தையுடன் சென்று நீராடினால் குழந்தையின் குதிரை முகம் நீங்கி அழகிய உருவம் பெறுவாள்” என்று அசரீரியாக கூறினாள்.

அதன்படி வரகுணபாண்டிய மன்னனும் தன்னுடைய பச்சிளம் குழந்தையை எடுத்துக்கொண்டு அன்னையை நினைத்தபடி கடலுக்குள் இறங்கினான். அதுவரை பெரும் அலைகளாக வந்து கொண்டு இருந்த கடலில் இருந்து சிறிய அலைகள் மட்டுமே வர தொடங்கியது. மன்னன் குழந்தையோடு கடலில் தீர்த்தமாடி வரவும், குழந்தையின் முகம் அழகிய பெண் முகமாக மாறியது. இவ்வாறு ஆனபடியினால்தான் இந்த இடம் வதனாரம்ப(வதனம்+ஆரம்பம்=வதனாரம்பம்) தீர்த்தம் என வழங்கப்படலாயிற்று.

இதனால் மனமகிழ்ச்சி அடைந்த மன்னன், குழந்தையின் உடலில் ‘நலுங்கு மஞ்சள்‘(மஞ்சள் மற்றும் குங்குமம் கலந்து) பூசி, செவ்வரளி மாலை அணிவித்தும் அலங்காரம் செய்து அன்னையை தரிசனம் செய்ய சென்றான். அங்கே அன்னையோ, அவளது முகம் மாறி குதிரை முக தோற்றத்தோடு வீற்றிருப்பதை கண்ட மன்னன், ‘என் குழந்தையின் குதிரை முகத்தைப் பெற்றுக்கொண்டு உன் முகத்தை என் குழந்தைக்கு கொடுத்து விட்டாயே. இந்த பாவத்தில் இருந்து என்னை காக்க வேண்டும்’ என்று அழுது வேண்டினான்.

அதற்கு அன்னை, “என்னிடம் வந்து, யார் என்னை ‘அம்மா’ என்று அழைத்தாலும் அவர்கள் வேண்டியதை கொடுக்காமல் இருக்க என்னால் முடியாது” என்றும், மேலும் நீ செய்த கர்ம பலனின்படி, என்ன துன்பம் அனுபவிக்க வேண்டும் என்று இருக்கிறதோ, அதை நான் பெற்றுக்கொண்டேன். உன் கர்ம பலன் தீர்ந்ததும், நான் பெற்ற குதிரை முகம் மாறி விடும்” என்றும் அன்னை கூறினாள். அதுபோலவே சில காலம் கழிந்தபின் அன்னையின் முகம் மாறி தன் முகத்தோடு காட்சியளித்தாள்.

அதன்பிறகு வரகுணபாண்டியமன்னன், அன்னைக்கு கோவில் எழுப்பி, கோவிலுக்காக நிலங்களும், மானியங்களும் எழுதி வைத்தான். இந்த நிகழ்வை குறிக்கும் விதமாக இன்றும் பெண் பக்தர்கள் ஒவ்வொரு ஆடி மாதமும் செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலையில், அம்மனுக்கு எதிரில் இருக்கும் வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி நலுங்கு மஞ்சள் பூசி, செவ்வரளி மாலை அணிந்து அன்னையை வணங்குகின்றனர். இப்படி வேண்டினால் அழகு வடிவம் பெறுவதோடு, தீர்க்க சுமங்கலிகளாக இருப்போம் என்பது பெண்களின் நம்பிக்கை. 

அம்மன் மீது வீசப்படும் தின்பண்டம்

இந்த கோவிலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னைக்கு ஆவணி மற்றும் மாசி மாதத்தில் பத்து நாட்கள் உற்சவம் நடைபெறும். அப்போது தினமும் காலையில் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகள் கடந்து கோவிலுக்குள் நுழையும்போது, ஊரில் இருக்கும் சிறு குழந்தைகள் தாங்கள் கொண்டு வந்த தின்பண்டங்களை அன்னைக்கும் கொடுப்பது போல், அன்னையின் மீது தின்பண்டங்களை எறிகிறார்கள். அதன்பின் கோவிலில் சிறிது நேரம் விளையாடி விட்டு திரும்புகிறார்கள். வீட்டினில் செய்த தின்பண்டங்களை எந்த கோவிலிலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதற்கு மாறாக இங்கு மட்டும் அனுமதிக்கப்படுவது வேறெந்த தலங்களிலும் நடைபெறாத அற்புதமாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு நடைபெறும் மண்டபத்தினை ‘அம்மன் மண்டபம்’ என்று ஊர் மக்கள் அழைக்கிறார்கள்.

ஆவணி மற்றும் மாசி திருவிழாவின் பத்தாம் திருநாள் அன்று அம்மன் கடலில் தீர்த்தவாரி செய்து முருகப்பெருமான் எதிரில் சண்முகவிலாசம் மண்டபத்தில் எழுந்தருளி சண்முகருக்கு நேர் எதிர் சேவையாகி தன் மகனுக்கு ஆசிகளை வழங்கி, ‘இனி உனது உற்சவம்(திருவிழா) சிறப்பாக நடைபெற நான் உறுதுணையாக இருப்பேன்’ என்று உறுதி கூறுவதாக ஐதீகம். பின்பு அன்னை மற்றும் சண்முகருக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெறுகிறது. 

துன்பம் போக்கும் சிவபெருமான் துதி

துன்பம் போக்கும் சிவபெருமான் துதி

தினமும் அல்லது சிவனுக்கு உகந்த நாட்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் துன்பம் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர
 சிவசிவ ஹரஹர மஹாதேவா

வில்வதள ப்ரிய சந்த்ர கலாதர
 சிவசிவ ஹரஹர மஹாதேவா

கங்காதர ஹர சாம்ப சதாசிவாய
 சிவசிவ ஹரஹர மஹாதேவா

த்ரியம்பகாய லிங்கேஸ்வராய
 சிவசிவ ஹரஹர மஹாதேவா

மௌலீஸ்வராய யோகேஸ்வராய
 சிவசிவ ஹரஹர மஹாதேவா

குஞ்சேஸ்வராய குபேரேஸ்வராய
 சிவசிவ ஹரஹர மஹாதேவா

நடேஸ்வராய நாகேஸ்வராய
 சிவசிவ ஹரஹர மஹாதேவா

கபாலீஸ்வரய்யா கற்கடகேஸ்வராய
 சிவசிவ ஹரஹர மஹாதேவா

சர்வேஸ்வராய சாம்ப சதாசிவாய
 சிவசிவ ஹரஹர மஹாதேவா

போலோ ஹரஹர சிவசிவ மஹாதேவா .....

Friday 27 October 2017

விடிய விடிய கீதை கேட்டு....!


விடிய விடிய ராமாயணம் கேட்ட ஒருவனிடம், ""சீதைக்கு ராமன் யார்?'' என்று கேள்வி கேட்டார் உபன்யாசகர். "சித்தப்பா' என்றாராம் அந்த நபர்.

வேதனையின் உச்சத்திற்கே போய்விட்டார் உபன்யாசகர். இவ்வளவு நேரம் ராமாயணம் சொல்லியும் பலனில்லையே! இருந்தாலும், மற்றவர்கள் மனது புண்படும் அல்லவா! நிலைமையை இப்படி சமாளித்தார்.

""இவர் சொல்வது உங்களுக்கு புரியவில்லையா! "சித்தம்+அப்பா' என்று அவர் சொல்கிறார். "சித்தம்' என்றால் "மனம். "அப்பா' என்றால் "தலைவன்'. '"சீதையின் மனதிற்கு ராமன் தானே தலைவன்' என்று பேசி கைத்தட்டல் வாங்கி விட்டார்.

எந்த நல்ல விஷயத்தையும் கவனமாகக் கேட்க வேண்டும். கேட்டால் மட்டும் போதாது. அதை வாழ்வில் கடைபிடிக்கவும் வேண்டும்.

அர்ஜுனனுக்கு கீதையைப் போதித்தான் கிருஷ்ணன். கீதை முடிந்ததும், தேரின் மேற்பகுதியில் ஏறி அமர்ந்து கொண்டான். இந்த நேரத்தில், அர்ஜுனனின் மகன் அபிமன்யு கொல்லப்பட்டான். அர்ஜுனனுக்கு சோகம் தாங்கவில்லை. கண்ணீர் வழிந்தது. சிறிது நேரத்தில், அவன் மீது, மேலிருந்து சில சொட்டு தண்ணீர் சூடாக விழுந்தது. அர்ஜுனன் ஏறிட்டுப் பார்த்தான். கிருஷ்ணனின் கண்களில் இருந்து விழுந்த கண்ணீர் தன் மீது பட்டதை அறிந்து, ""கிருஷ்ணா! என் மகன் இறப்புக்காக நான் அழுகிறேன். நீ ஏனப்பா அழுகிறாய்?'' என்று கேட்டான்.

""இவ்வளவு நேரம், வாழ்வின் நிலையாமை பற்றி உனக்கு கீதை சொன்னேனே! அதை நினைத்து கண்ணீர் வடிக்கிறேன்,'' என்றானாம் கிருஷ்ணன்.

அவளது கருணையே கருணை!


ராமன், வாலி மீது மறைந்திருந்து அம்பு விடுத்தார். அது அவன் மேல் பாய்ந்தது. குற்றுயிராகக் கிடந்த வாலி, அம்பு தொடுத்தது ராமர் என்பதை அறிந்து ஆச்சர்யப்பட்டான். ""சக்கரவர்த்தி திருமகனான நீ, என் மீது என்ன குற்றம்கண்டு இவ்வாறு செய்தாய்! உன்னிடம் இரக்கம் இல்லாமல் போனது ஏன் என்பது இப்போது தான் புரிகிறது. காகாசுரன், உன் மனைவிக்கு துன்பம் செய்த போது, அவனைக் கொல்ல முயன்றாய். ஆனால், துன்பம் செய்த சீதையிடமே சரணடைந்து தப்பினான். அவள் தாயன்புடன் அவனைக் காத்தாள். இன்றோ, சீதை உன் அருகில் இல்லை. அவளைப் பிரிந்து துன்பப்படுகிறாய். என்னைக் காப்பாற்ற அவள் இன்று இல்லை. அதனால், ஒரு தவறும் செய்யாத எனக்கு மரணம் கிடைத்தது!'' என்று சொல்லி உயிர் விட்டான்.

சிரித்துச் சிரித்து நம்மைச் சிறையிலிடுபவர்


ஆழ்வார்திருநகரியில் இருந்த புளியமரப்பொந்தை விட்டு எங்கும் போகாதவர் நம்மாழ்வார். எல்லா திவ்யதேசப் பெருமாள்களும், இவர் வாயால் பாசுரம் பெற வேண்டும் என்பதற்காகப் போட்டியிட்டனர். அவருக்கு காட்சியளித்து பாசுரம் பெற்றனர். ஆழ்வார்களில் உட்கார்ந்தபடி காட்சி தருபவர் இவர் மட்டுமே. ஸ்ரீரங்கத்தில் நடக்கும் மார்கழி அத்யயன உற்ஸவத்தில், எல்லா ஆழ்வார்களும் நம்மாழ்வார் சந்நிதியைத் தேடி எழுந்தருள்வர். அதன் பின்னர், நம்மாழ்வார் அவர்களோடு சேர்ந்து கிளம்புவார். ""எப்போதும் சிரித்த முகத்துடன் இதழில் புன்னகை ததும்ப காட்சி தருபவர் கிருஷ்ணர். மறந்தும் அவரை சோகமாகப் பார்க்க முடியாது. அவருடைய அவதாரத்தில் ஏற்பட்ட சந்தோஷ அனுபவத்தை எல்லாம் ஒன்றாக்கி, அதற்கு உருவம் கொடுத்தால் அதுவே நம்மாழ்வார்,'' என்கிறார் பராசரபட்டர். சிரிப்பால் நம்மை ஈர்த்து, தன் மனச்சிறையில் அடைத்து வைப்பவர் இந்த ஆழ்வார். 

பெருமாளை அலங்கரித்த நட்சத்திரங்கள்


மகாபலியிடம் தானம் பெறுவதற்காக திருவடியால் உலகளந்த பெருமாளை, "ஓங்கி உலகளந்த உத்தமன்' என்று ஆண்டாள் போற்றுகிறாள். அவர் விஸ்வரூபம் எடுத்து தலை வானைத் தொட்ட போது, நட்சத்திரங்கள் முத்துப்பந்தலைப் போல அவரது கிரீடத்தின் மேல் ஜொலித்தன. அதற்கு மேலும் அவர் வளர்ந்த போது, முத்துமாலை போல சுழன்றன. அதற்கு அப்பால் வளர்ந்ததும், இடுப்பில் ஒட்டியாணம் போல் ஒட்டிக் கொண்டன. இறுதியில் அவர் திருவடியில் சிலம்புகளாக அணி செய்தன. வேதாந்த தேசிகர் தன்னுடைய "தேஹளீச ஸ்தவம்' என்னும் நூலில் நட்சத்திர மண்டலம் விஷ்ணுவை பூஜித்த விதத்தை இப்படி வர்ணித்துள்ளார். 

உன் பாட்டுக்கு நான் அடிமையப்பா!


கர்நாடகத்தில் உள்ள திருநாராயணபுரத்தில் சம்பத்குமாரர் என்ற திருநாமத்தோடு பெருமாள் அருள்புரிகிறார். இங்குள்ள உற்சவருக்கு "செல்லப்பிள்ளை' என பெயர். ராமானுஜர் "இதோ! என் செல்லப்பிள்ளை!' என்று இவரை அழைத்ததால் இப்பெயர் ஏற்பட்டது. சோமயாஜியாண்டான் என்ற பக்தர் செல்லப்பிள்ளையைப் பாடி மகிழ்வது வழக்கம். அவருடைய பக்திக்கு மயங்கிய பெருமாள், நேரில் வந்து ஆடத் தொடங்கினார். 

ஒருநாள் பெருமாள் ஆடி முடித்ததும், "சுவாமி! எனக்கு மோட்சம் கொடுங்கள்,'' என்று கேட்டார். 

""நீர் பாடினீர்! நான் ஆடினேன்! பாட்டுக்கு ஆட்டம் சரியாகி விட்டது. இதைக் கொண்டு மோட்சம் கேட்பது நியாயமா? மோட்சம் பெற விரும்பினால் ராமானுஜரின் திருவடியைப் பிடித்துக் கொள்,'' என்றார். குரு இல்லாமல் இறையருளைப் பெற முடியாது என்பதை இதன் மூலம் உலகிற்கு உணர்த்தினார். "பாஷ்யக்காரர்' என்னும் பெயருடன் ராமானுஜர் தனி சந்நிதியில் இங்கு வீற்றிருக்கிறார்.

இதைப்படிக்காதீங்க! பால் கிடைக்காது!

Image result for kannan god

கம்சன் கண்ணனைக் கொல்ல, கொடிய அரக்கியான பூதனையை ஏவினான். அவளைக் கண்ட கண்ணன் கண்களை மூடிக் கொண்டான். மலர்ந்த தாமரை மலர் போன்ற தன் கண்களைக் கண்டால், கடவுள் என்பதை அறிந்து கொள்வாள் என மூடிக் கொண்டான். பூதனை, கண்ணனை மார்போடு அணைத்து, பால் கொடுத்தாள். அவனோ, பாலோடு அவள் உயிரையும் குடித்து விட்டான். பூதனை இறந்ததும், ஆயர்பாடி மக்கள், அவளது சிதைக்கு தீ மூட்டினர். கண்ணனின் ஸ்பரிசம் பட்டதால், சிதையில் எழுந்த புகையில் நறுமணம் கமழ்ந்தது. பாகவதத்தில் உள்ள இந்த கதையைப் படித்தாலும், கேட்டாலும் மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறந்து பால் பருகாத முக்தி நிலை அடைவர் என்பது ஐதீகம். பால் கொடுத்த பூதனை, கண்ணன் அருளால் மோட்சம் அடைந்தாள்.

இப்படியும் உத்தமர்கள்

Image result for தர்மர்

தீமை செய்தவருக்கும் நன்மை செய்தவரை "உத்தமோத்தமன்' என்பர். அப்படிப்பட்ட குணம் கொண்டவர் பாண்டவர்களில் மூத்தவரான தர்மர். பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்த போது, அவர்களை ஏளனம் செய்யும் விதத்தில், துரியோதனன் பகட்டாக உடையணிந்து தன் பரிவாரங்களோடு வந்தான். பாண்டவர்கள் பார்க்கும் விதத்தில், இனிய பதார்த்தங்களைச் சாப்பிட்டபடியே அலட்சியமாக சிரித்தான். அவனைக் கண்டும் காணாததுபோல தர்மர் அமைதி காத்தார். அதன்பின் துரியோதனன், அடுத்த வனப்பகுதிக்கு சென்றான். அப்பகுதியின் தலைவன் சித்திரசேனனுக்கும், துரியோதனனுக்கும் தகராறு ஏற்பட்டது. சித்திரசேனன் அனைவரையும் மாடு போல பிணைத்துக் கட்டினான். தூதர்களின் மூலம் விஷயம் அறிந்த தருமர், ""என் தம்பிக்கு இப்படியாகி விட்டதே! அவனைக் காப்பாற்றியாக வேண்டுமே!'' என வருந்தினார். பீமனையும், அர்ஜுனனையும் அனுப்பி துரியோதனனைக் காப்பாற்றியதோடு ஆறுதல் சொல்லி வழியனுப்பி வைத்தார். தன்னை ஏளனம் செய்தவனுக்கும் உதவி செய்த தர்மரின் உத்தமகுணம் உலகில் எத்தனை பேருக்கு வரும்!

இங்கே இவை இரண்டு


ஒரே கோயிலில் இரட்டை சிற்பங்கள், சிலைகள்,கொடிமரங்கள், கோபுரங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றைக் காண்போமா! 

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், கோயிலின் முன்னும் பின்னுமாக இரண்டு கொடிமரங்கள் அமைந்துள்ளது.
* மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மன் மூலஸ்தானத்தின் வலப்புறத்திலும், தென்மேற்கு மூலையிலும் இரட்டை கணபதி வீற்றிருக்கின்றனர்.
* நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் ராஜகோபுரத்தின் உட்புறம் இரண்டு கணபதிகள் நின்ற கோலத்தில் உள்ளனர். 
* சென்னை திருவேற்காடு கருமாரி, தேனி வீரபாண்டி கவுமாரி அம்மன் கருவறையில் அம்மன் இரட்டை வடிவங்களில் காட்சி 
தருகிறாள்.
* கடலூர் மாவட்டம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர், நாகப்பட்டினம் மாவட்டம் திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர், விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அகஸ்தீஸ்வரர், தஞ்சாவூர் மாவட்டம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர், தஞ்சாவூர் மாவட்டம் தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில்களில் இரட்டை பைரவர் அருள்பாலிக்கின்றனர்.
* திண்டுக்கலிலிருந்து நத்தம் செல்லும் வழியிலுள்ள தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயிலில், மூலஸ்தானத்தில் மாணிக்கவல்லி, மரகதவல்லி அம்மன்கள் உள்ளனர்.
* சேலம் தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் மாரியம்மனும், காளியம்மனும் ஒரே பீடத்தில் அமர்ந்த கோலத்தில் அருள்புரிகின்றனர். 
* திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தில் இரண்டு சிவலிங்கம் உள்ளன.
* திருச்சி மாவட்டம் நெடுங்குளம் நெடுங்குளநாதர் கோயில் மூலஸ்தானத்தில் இரட்டை விமானங்கள் உள்ளன.
* தஞ்சாவூர் மாவட்டம் திருவாப்பாடி பாலுகந்தநாதர் கோயில் வடக்கு பிரகாரத்திலும், அர்த்த மண்டபத்திலும் இரண்டு சண்டிகேஸ்வரர்கள் காட்சி தருகின்றனர்.
* காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோயிலில், ஒரே கோபுரத்தின் கீழே, கிழக்கு நோக்கியவாறு கைலாசநாதரும், தெற்கு நோக்கியவாறு தட்சிணாமூர்த்தியும் அருள்பாலிக்கின்றனர். 
* தஞ்சாவூர் மாவட்டம் நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில், இரண்டு தட்சிணாமூர்த்திகள் அருகருகே காட்சியளிக்கின்றனர். 
* கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் மூலவர் ஒருவர் என்றாலும், அலங்காரவல்லி, சவுந்தர நாயகி என இரண்டு அம்மன் சந்நிதிகள் உள்ளன.
* கடலூர் திருக்கூடலையாற்றூர் நர்த்தன வல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன்கள் காட்சியளிக்கின்றனர். 
* தஞ்சாவூர் மாவட்டம் நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் ஒரே ஆவுடையாரில் இரண்டு லிங்கங்கள் உள்ளன.
* கும்பகோணத்துக்கருகிலுள்ள கொருக்கை பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மூலவரையும், அம்மனையும் நோக்கியவாறு இரண்டு நந்திகள் உள்ளன. 
* கேரளா திருச்சூர் பெருவனம் இரட்டையப்பர் கோயிலில் ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கம் அமைந்திருப்பது சிறப்பு.
* புதுச்சேரி வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் அம்மன் எதிரே இரண்டு நந்திகள் உள்ளன.
* சிவகங்கை சாக்கோட்டை வீரசேகரன், மதுரை புட்டுத் தோப்பு புட்டு சொக்கநாதர் கோயில்களில் பைரவருக்கு இரண்டு நாய்கள் வாகனமாக உள்ளன.
* கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து 21 கி.மீ. தூரத்தில் உள்ள திருக்கடித்தானம் அற்புத நாராயணன் கோயிலில் இரண்டு கொடிமரங்கள் உள்ளன.