கேரளாவில் நாலம்பலம் என்று அழைக்கப்படும் ராம சகோதரர்களுக்கான 4 கோவில்களில், பாயம்மல் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் சத்துருக்கனன் கோவில் 4-வது தலமாக வழிபடப்படுகிறது.
கேரளாவில் நாலம்பலம் என்று அழைக்கப்படும் ராம சகோதரர்களுக்கான நான்கு கோவில்களில், பாயம்மல் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் சத்துருக்கனன் கோவில் நான்காவது தலமாக வழிபடப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை வழிபடுபவர்களுக்கு எதிரிகளால் வரும் துன்பங்கள் எல்லாம் குறைந்து, செல்வங்கள் குவிந்து வாழ்க்கை வளமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
கோவில் அமைப்பு :
பாயம்மலில் அமைந்திருக்கும் சத்துருக்கனன் கோவில், திருப்பிரையார் ராமர், இரிஞ்சாலக்குடா பரதன், திருமூழிக் குளம் லட்சுமணர் கோவில்களைப் போல் பெரிய கோவில் இல்லை. சிறிய அளவிலான ஆலயமாக இருந்தாலும், மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்பதைப் போல, இத்தல இறைவனின் சக்தியும் பெருமைக்குரியதுதான்.
இந்த ஆலயத்தின் கருவறை செவ்வக வடிவிலும், மேற்கூரை பிரமிடு வடிவத்திலும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆலய கருவறையில் வீற்றிருக்கும் சத்துருக்கனன் நான்கு கரங்களுடன், வலதுபுறம் மேற்கரத்தில் சக்கரம், கீழ் கரத்தில் தாமரை மலர், இடதுபுறம் மேற்கரத்தில் சங்கு, கீழ் கரத்தில் கதை ஆகியவைகளைக் கொண்டு, நின்ற நிலையில் காட்சி தருகிறார். இந்தக் கோவில் வளாகத்தில் கணபதி, அனுமன் ஆகியோருக்குத் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
சத்துருக்கனனாக பிறந்த சக்கரம் :
விஷ்ணு, பூலோகத்தில் ராமனாகப் பிறப்பெடுத்த போது, வைகுண்டத்தில் அவரைத் தாங்கும் அனந்தன் எனும் பாம்பு, லட்சுமணனாகப் பிறந்து, எப்போதும் அவருக்குத் துணையாக இருந்து அவரைக் காத்தது. விஷ்ணுவின் கைகளில் இருக்கும் சங்கு பரதனாகவும், சக்கரம் சத்துருக்கனனாகவும் பிறந்து வாழ்ந்தனர்.
ராமனின் மூன்று சகோதரர்களுமே, ராமனின் மீது அதிகமான அன்பு கொண்டிருந்தனர். அவர்களில், லட்சுமணன் பிறந்தது முதல் ராமனின் நிழலாகவே வாழ்ந்து வந்தான். ராமன் காட்டுக்குச் சென்ற போதும், தன்னுடைய மனைவியைப் பிரிந்து, ராமருடன் காட்டுக்குச் சென்றான். மேலும் காட்டில் ராமனுக்கும் சீதைக்கும் பாதுகாப்பாகவும், பணிவிடை செய்பவனாகவும் இருந்தான். ராமனின் மனைவியான சீதையைக் காட்டிலும், ராமனுடன் அதிகக் காலம் உடனிருந்தவன் என்ற பெருமை லட்சுமணனுக்குக் கிடைத்தது.
ராமனை உடனிருந்து பார்த்துக் கொண்ட லட்சுமணனை விட, பரதனே உயர்ந்தவன் என்று பாரதம் சொல்கிறது. பரதன் ஆசையே இல்லாதவன், அண்ணன் காடு சென்றதும், அவனுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித் திருக்கலாம், அரசனாகி இருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல், அண்ணனின் காலணியைப் பெற்று வந்து, அதையே அரியாசனத்தில் வைத்து நாட்டை ஆண்டவன் அவன். பக்தனைப் பாகவதன் என்பர். பகவானை விடப் பாகவதனே உயர்ந்தவன் என்பதை உணர்த்தியவன் பரதன்.
பகவான் ராமனுக்குப் பாகவதனானப் பரதன் சேவை செய்தான் என்றால், அந்தப் பாகவதனுக்குச் சேவை செய்தவன் சத்துருக்கனன். பரதன், ராமன் மேல் கொண்ட பக்தியை வழிமொழிந்து வாழ்ந்தவன் சத்துருக்கனன் என்றால் அது மிகையல்ல. காட்டுக்குச் சென்ற ராமன், பதினான்கு ஆண்டுகள் கடந்தும் அயோத்திக்கு வராததால், மனமுடைந்த பரதன் நெருப்பில் விழுந்து உயிர் விடத் துணிந்தான்.
நெருப்புக் குண்டத்தில் குதிக்க தயாரான நிலையில், சத்துருக்கனனைப் பார்த்து, ‘நீயே இனி இந்த நாட்டை ஆள வேண்டும்’ என்றான் பரதன். ஆனால் மண்ணின் மீது ஆசையில்லாத சத்துருக்கனன் பேசாமல் இருந்து அமைதி காத்தான். அவன் அதிகம் பேசியதில்லை. ஆனாலும் கூட தான் கொண்ட ராம பக்தியை அமைதியாக இருந்த உயர்வாக்கிக் காட்டியவன் என்கிறது ராமாயண இதிகாசம். அத்தகைய சிறப்பு வாய்ந்த சத்துருக்கனனுக்கு, கேரளாவின் பாயம்மலில் தனியாகக் கோவில் ஒன்று அமைக்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்புக்குரியதாகவே கருதப்படுகிறது.
வழிபாடு :
பாயம்மலில் இருக்கும் சத்துருக்கனன் கோவில் அதிகாலை 4.30 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் தினமும் உஷா பூஜை, ஒச்சி கால பூஜை, அதழ பூஜை என்னும் மூன்று கால பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
சத்ருகனன் என்றால் சத்ருக்களை (எதிரிகளை) வெல்பவன் என்று பொருள். பொதுவாக, இவரை வழிபடுபவர்களுக்கு எதிரி களால் வரும் துன்பங்கள் எல்லாம் குறைந்து, செல்வங்கள் குவிந்து வாழ்க்கை வளமடையும் என்கின்றனர்.
சத்துருக்கனன் விஷ்ணுவின் கையிலிருக்கும் சக்கரத்தின் தோற்றம் என்பதால், இக்கோவிலில் இவரைச் சுதர்சன மூர்த்தியாகவே வழிபட்டுச் செல்கின்றனர். இங்கு சுதர்சன மலரஞ்சலி, சக்கர சமர்ப்பணம் ஆகியவை முக்கியமான வழிபாடுகளாக இருக்கின்றன. மனிதனின் பல்வேறு பாதிப்புகளுக்குக் காரணமாக இருக்கும் கடன், நோய், எதிரி ஆகியவைகளால் துன்பமடைபவர்கள் இவ்வழிபாடுகளில் கலந்து கொண்டால், அனைத்துத் தொல்லைகளும் நீங்கி மன அமைதியோடு நல்ல பலனையும் பெற முடியும்.
விழாக்கள் :
இந்தத் திருத்தலத்தில் மலையாள நாட்காட்டியில் கும்பம் மாதத்தில் (மாசி மாதம்) பூசம் நட்சத்திர நாளில் தொடங்கி ஐந்து நாட்கள் விழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்நாட்களில் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கேரளாவில் ஆடி மாதம் முழுவதையும் ராமாயண மாதம் என்று சொல்கின்றனர். இந்த மாதம் முழுவதும் நாள்தோறும் இறைவனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இம்மாதத்தில் ஆலயத்துக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.
ரிஷிகேஷ் சத்துருக்கனன் :
கேரளாவின் பாயம்மல் தவிர, உத்ரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷிலும் சத்துருக்கனனுக்கு ஒரு கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் ராம் ஜூலா எனும் பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கோவில் ‘ஆதி பத்ர நாராயணன் கோவில்’ என்றும் ‘ஸ்ரீ சத்துருக்கனன் கோவில்’ என்றும் அழைக்கப்படுகிறது.
சக்கரத்தாழ்வார் :
திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே ‘சக்கரத்தாழ்வார்’. இவர் திருமாலுக்கு இணையானவர் என்கின்றது புராணங்கள். இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்று வேறு பெயர் களாலும் அழைக்கப்படுகிறார். விஷ்ணு கோவில் களில் சக்கரத்தாழ்வாருக்கு என்று தனிச் சன்னிதி அமைக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும்.
சக்கரத்தாழ்வாரைத் தினமும் தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால், கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் கூட அழிந்து போவர். மனதில் தோன்றும் பயம் அனைத்தும் இல்லாமல் போகும். தீர்க்க முடியாத நோய்களும் குணமாகும். திரு மணத்தடைகள் நீங்கும், வறுமை ஒழிந்து செல்வம் குவியும்.
அமைவிடம் :
சத்துருக்கனன் கோவில் அமைந்திருக்கும் பாயம்மல், பரதன் கோவில் அமைந்திருக்கும் இரிஞ்சாலக்குடாவில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த திருத் தலத்திற்குச் செல்ல இரிஞ்சாலக்குடாவிலிருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
No comments:
Post a Comment