Tuesday 3 October 2017

தாமாகத் திருந்தவேண்டியவர்களே திருடர்கள்


திருட்டு மிகப் பெரிய பாவம் என்று அற நூல்கள் வலியுறுத்திச் சொல்கின்றன. நம் வள்ளுவமும் திருட்டை எதிர்த்து ஓர் அதிகாரத்தையே படைத்திருக்கிறது. கள்ளாமை (அதிகாரம் 29) என்ற தலைப்பில் பத்துக் குறட்பாக்களில் திருடலாகாது என்ற உயரிய அறத்தை உரத்து போதிக்கிறார் வள்ளுவப் பெருந்தகை. 

'எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் 
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.’

பிறர் தன்னை இகழாதபடி வாழவேண்டும் என எவனொருவன் எண்ணுகிறானோ அவன், பிறருக்குரிய பொருள் எதையும் கவர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம்  வராமல் தன் நெஞ்சைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 

'உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக் 
கள்ளத்தால் கள்வேம் எனல்.’

அடுத்தவர் பொருளைத் திருட்டுத்தனமாகக் கவர நினைப்பதுகூடத் தீங்கானது. எனவே திருட்டு எண்ணம்கூட வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

'களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து 
ஆவது போலக் கெடும்.’

திருடுவதால் உண்டாகும் செல்வம் மென்மேலும் வளர்ந்து பெருகுவதுபோல் தோன்றினாலும் கடைசியில் அந்தச் செல்வம் முழுவதும் அழிந்துவிடுவது உறுதியாகும்.

'களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் 
வீயா விழுமம் தரும்.’

களவின் வழி பிறர் பொருளைப் பெறலாம் என நினைக்கும் எண்ணம் பலிக்கும்போது அது தீராத துன்பத்தைத் தருவதாகத்தான் இருக்கும்.  

'அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதி 
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.’

பொருளையே முதன்மையாகக் கருதி அதைப் பறித்துக் கொள்ள விரும்புபவரிடத்தில் அன்பும் அருளும் இருக்க வாய்ப்பே இல்லை. 

'அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின் கண்
கன்றிய காத லவர்.’

திருடி வாழும் வாழ்க்கையில் ஆசையுடையவர்கள், தம் வருவாய்க்கு ஏற்பச் செலவு செய்யும் சிக்கன நடவடிக்கையை அறிய மாட்டார்கள்.  

'களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்க்கண் இல்.’

பிறர் பொருளைக் களவின் வழிக் கொள்வதாகிய அறியாமை என்னும் மயக்கம், அளவறிந்து சிக்கனமாக வாழும் ஆற்றல் உடைய பெரியோர்களிடம் இல்லை. 

'அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் 
களவறிந்தார் நெஞ்சில் கரவு.’

தன் வருவாயை அறிந்து அதற்கேற்பச் சிக்கனமாக வாழ்வோர் நெஞ்சில் அறம் வாழும். ஆனால், களவு செய்பவர் நெஞ்சில் வஞ்சகம் தான் நிற்கும்.

'அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல 
மற்றைய தேற்றா தவர்.’

களவு செய்வதைத் தவிர வேறு எந்த நல்ல வழியினையும் அறிய மாட்டாதவர்கள் அளவில்லாத தவறுகளைச் செய்து அப்போதே கெட்டழிவர். 

'கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
கள்ளாது புத்தேள் உலகு.’

திருட்டுக் குணம் உடையவர்களுக்கு உயிர்போகும் வாய்ப்பும் உண்டு. ஆனால், களவில் நாட்டமில்லாதவர்களுக்கு புகழ்நிறைந்த உலகு உறுதியாக வாய்க்கும். தொடக்கத்தில் திருடனாக இருந்து பின்னர் பக்தனாக மாறிய பலரது சரிதங்கள் நம் புராணங்களில் உண்டு. ராமாயணம் என்ற ஆதி காவியத்தை எழுதிய வால்மீகியே திருடனாக வாழ்ந்தவர்தான். பின் நாரதரால் அறிவுறுத்தப்பட்டு நல்ல நெறியில் வாழத் தொடங்கினார். நாரதர் உபதேசித்த ராம நாமத்தைக் கூட அவரால் சரிவரச் சொல்ல இயலவில்லை. எனவே மரா மரத்தை நினைவு வைத்துக்கொண்டு 'மரா மரா’எனச் சொல்லுமாறு நாரதர் பணித்தார். அவ்விதமே சொல்லத் தொடங்கி ராம நாம இனிமையில் தோய்ந்தார் வால்மீகி. திருடனாயிருந்த வால்மீகி பன்னெடுங்காலம் கடும் தவம் இயற்றி புகழ்பெற்ற முனிவராகப் பரிணாம வளர்ச்சி பெற்றார். 

நம் வாழ்வில் பின்பற்றத் தக்க அத்தனை அறநெறிகளையும் பேசும் இதிகாசமான ராமாயணத்தைப் படைத்தவர் தொடக்க காலத்தில் திருடனாக வாழ்ந்தவர் என்பது விந்தைதான். ராமாயண காவியம் பயில்பவர் உள்ளங்களையெல்லாம் 'கொள்ளை' கொள்கிறதே, அதற்குக் காரணம் அதைப் படைத்தவர் `திருடனாக’ இருந்தவர் என்பது தானா! தமிழில் பல சிறந்த நாவல்களின் கதையைத் திருடிப் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன என்பது பரவலாக அனைவரும் அறிந்த உண்மைதான்! ஆனால், திருட்டையே தொழிலாகக் கொண்ட கதாநாயகனை மையப்படுத்தி ஒரு புகழ்பெற்ற நாவல் எழுதப்பட்டது. அது திருட்டுக் கதையல்ல. ஆனால், திருடனைப் பற்றிய கதை. அந்தக் கதை திரைப்படமாகிப் பெரும்புகழ் பெற்றது. 

கதையை எழுதியவர் சிறந்த ஓவியரும், கவிஞரும் சுதந்திரத் தியாகியுமான நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை. படத்தின் பெயர் 'மலைக் கள்ளன்’. நடித்தவர்கள் முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி. ராமச்சந்திரனும், தெலுங்கு எழுத்தாளரும், நடிகையுமான பானுமதியும். திரைக்கதை வசனம்: கலைஞர் மு. கருணாநிதி. ஜவகர்லால் நேருவுக்காக அளிக்கப்பட்டது ஒரு விருந்து. நேருவின் அருகே அமர்ந்திருந்த பிரமுகர் ஒருவர் திருட்டுப் பழக்கம் உள்ளவர். எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது யாரும் பார்க்காத ஒரு சந்தர்ப்பத்தில அங்கிருந்த வெள்ளி ஸ்பூன்களில் ஒன்றை அவர் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டுவிட்டார். ஆனால் நேரு அதை கவனித்துவிட்டார் என்று அவருக்குத் தெரியாது. 

விருந்து முடிந்ததும் 'நான் ஒரு மாஜிக் செய்து காட்டுகிறேன்!' என்றார் நேரு. ஜவகர்லால் நேருவுக்கு மாஜிக் கூடத் தெரியுமா என எல்லோரும் வியப்பாகப் பார்த்தார்கள். 'இதோ இந்த வெள்ளி ஸ்பூனை நான் என் கோட்டுப் பையில் போட்டுக் கொள்கிறேன்!’ என எல்லோர் முன்னிலையிலும் ஒரு வெள்ளி ஸ்பூனை எடுத்துத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டார். பின், 'நான் என் கோட்டுப் பையில் போட்டுக்கொண்ட அதே வெள்ளி ஸ்பூனை என் நண்பர் கோட்டுப் பையிலிருந்து வரவழைக்கிறேன்!’ என்றவாறே அருகிலிருந்த அந்தப் பிரமுகரின் கோட்டுப் பையில் கைவிட்டு அவர் ஏற்கெனவே திருடி வைத்திருந்த வெள்ளி ஸ்பூனை வெளியே எடுத்தார். எல்லோரும் நேருவின் அபாரமான மாஜிக் திறமை கண்டு கைதட்டினார்கள். 

விருந்து முடிந்த பின் அந்தப் பிரமுகரைத் தனியே அழைத்தார் நேரு. 'எல்லோருக்கும் தெரிந்து நான் எடுத்த ஸ்பூன் இதோ என்னிடம் இருக்கிறது. இதை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். யாருக்கும் தெரியாமல் நீங்கள் எடுத்த ஸ்பூன் உங்களை விட்டுப் போய்விட்டது. பார்த்தீர்களா? திருட்டுச் சொத்து நிலைக்காது!’ என்று சொல்லிவிட்டு அவரைத் தட்டிக் கொடுத்து விடைபெற்றார். அதன் பிறகு அந்தப் பிரமுகர் திருடியிருக்க வாய்ப்பே இல்லையல்லவா? திருட்டுப் பழக்கம் என்பது ஒருசிலருக்கு ஒருவகை மனநோயால் வருவது என்று இன்றைய உளவியல் விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கிறது. க்ளிப்டோமேனியா (Kleptomania) என்று அந்தநோய்க்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த நோயுள்ளவர்கள் தங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாதவர்கள். எங்காவது ஏதாவது பொருளைப் பார்த்தால் அக்கம் பக்கம் பார்த்து யாரும் இல்லையென்பதைத் தெரிந்துகொண்டு சடக்கென அந்தப் பொருளை எடுத்துத் தங்கள் பையில் போட்டுக் கொண்டு விடுவார்கள். 

இந்த நோய் உள்ளவர்கள் பெரும்பாலும் குடிக்கு ஆட்பட்டவர்களாகவும் நிறையச் சாப்பிடுபவர்களாகவும் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. எப்படியானாலும் தொடர்ந்து மனநல ஆலோசனை பெறுவதன் மூலம் இந்த நோயை குணப்படுத்தி விட முடியும். திருடக் கூடாது என்று குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லும் அருமையான பாடல் ஒன்று எம்.ஜி.ஆர். நடித்த `திருடாதே!’ என்ற திரைப்படத்தில் உண்டு. பிரபல திரைப்பட இயக்குநர் ப. நீலகண்டன் இயக்கிய அந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம்: கவிஞர் கண்ணதாசன். அதில் இடம்பெறும் 'திருடாதே பாப்பா திருடாதே’ என்று தொடங்கும் பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். பாடலைத் தம் கணீரென்ற குரலில் பாடியிருப்பவர் புகழ்பெற்ற பாடகரான டி.எம். செளந்தரராஜன். பாடலின் முக்கியமான வரிகள் இவை:

'திட்டம் போட்டுத் திருடுற கூட்டம் 
திருடிக் கொண்டே இருக்குது - அதைச் 
சட்டம் போட்டுத் தடுக்குற கூட்டம் 
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் 
திருட்டை ஒழிக்க முடியாது!
திருடாதே பாப்பா திருடாதே!’ 

இந்த வரிகள் சாதாரண சராசரித் திருடர்களுக்கு மட்டுமல்ல, மாபெரும் அரசியல் திருடர்களுக்கும் கூடக் கச்சிதமாய்ப் பொருந்துகிறது என்பது உண்மைதானே! பல ஆண்டுகள் முன்னால் உஜ்ஜைன் நகரில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம். ஓடுகிற ரயிலில் தாவி ஏறினான் கம்பளியால் தன்னைப் போர்த்துக் கொண்டிருந்த ஒரு முரட்டு ஆசாமி. ரயில் பெட்டியில் உட்கார இடமில்லை. சிலர் நகர்ந்து இடம்தர முன்வந்தாலும் அவன் ஏனோ உட்காரவில்லை. அவன் போர்த்தியிருந்த கம்பளியின் தோள்பட்டைப் பகுதியில் கீழே ஈரம் கசிந்துகொண்டிருந்தது. அவனுக்கு ஏதேனும் பெரிய காயம் பட்டிருக்கலாம் என நினைத்தார் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு மருத்துவர். கம்பளியை விலக்கச் சொன்னார். ஆனால் அவன் அதற்குச் சம்மதிக்க மறுத்தான். மருத்துவருக்கு சந்தேகம் எழுந்தது. 

சடாரென எழுந்து பலவந்தமாக அந்தக் கம்பளியை நீக்கினார் மருத்துவர். அவன் கக்கத்தில் ஒரு துண்டிக்கப்பட்ட கையை இடுக்கிக் கொண்டிருந்தான். அப்போதுதான் வெட்டி எடுக்கப்பட்ட அந்தக் கையில் பத்துப் பன்னிரண்டு தங்கவளையல்கள் இருந்தன. வளையல்களைத் திருடும் ஆசையில் ஒரு பெண்ணின் கையையே துண்டித்து எடுத்து வந்திருந்தான் அவன்! பிறகு காவல் துறை அவனுக்குத் தகுந்த தண்டனை கொடுத்திருக்கும். ஆனால், அந்தப் பெண்ணுக்கு போன கை போனதுதானே? 'காஞ்சன ஆசையை, அதாவது பொன்னாசையைத் துறந்துவிடுங்கள். அப்போதுதான் ஆன்மிகத்தில் முன்னேற முடியும்!’ என அறைகூவுகிறார் பரமஹம்சர். ஆன்மிக வளர்ச்சிக்காகப் பொன்னாசையைத் துறக்கிறோமோ இல்லையோ, இன்றைய சூழலில் நம் உயிர்ப் பாதுகாப்புக்காகவே பொன்னாசையைத் துறக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. 

தங்க நகைகள் அணிந்துகொண்டு நள்ளிரவில் ஓர் இளம்பெண் இந்திய வீதிகளில் எந்த அச்சமும் இல்லாது தன்னந்தனியே நடந்து செல்ல முடிந்தால் அதுவே ராமராஜ்யம் எனக் கனவு கண்டார் மகாத்மா காந்தி. அவ்வளவு வேண்டாம், ஒரே ஒரு தங்க நகை அணிந்து பட்டப் பகலில் போகும்போது கூட இருசக்கர வாகனங்களில் பாய்ந்து வரும் திருடர்கள் நகையைப் பறித்துச் செல்லும் பொல்லாத காலமல்லவா இது! அதேசமயம், இன்றும் நம் வாழ்க்கையைப் பற்றி நாம் நம்பிக்கை கொள்ளும் சில சம்பவங்கள் எப்போதாவது நடக்கத்தான் செய்கின்றன. ஆட்டோவில் மறந்து வைத்துவிட்டுப் போன பெருந்தொகை அடங்கிய பையை, உரியவரிடம் ஒப்படைக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் இந்தக் கலி காலத்தில் கூட இருக்கத்தானே செய்கிறார்கள்? அத்தகைய செய்திகளை செய்தித்தாளில் படிக்கிறபோது நம் மனம் அடையும் பெருமிதம் கொஞ்ச நஞ்சமல்ல. 

வள்ளலார் சித்த புருஷர். அவரிடம் இரும்புக் கம்பியைத் தங்கமாக்கித் தர வேண்டினார் ஒருவர். வள்ளலார் நகைத்தவாறே கம்பியின் ஒரு முனையைப் பிடித்தார். பாதிக் கம்பி தங்கமாயிற்று. மறுமுனையை மாற்றிப் பிடித்தார். மீதிப் பகுதியும் பொன்னாய் மாறியது. அப்படியே அந்தத் தங்கக் கம்பியைத் தூக்கிக் கிணற்றில் வீசினார். 'தங்கத்தால் என்ன பயன்? தொடர்ந்து பக்தி செய்து சொக்கத் தங்கமான கடவுளைத்தேடு!’ என்று சொல்லிவிட்டு நடந்தார் அவர். தங்கம் வைரம் முதலிய விலைமதிப்புள்ள பொருட்கள் மனிதர்களைத் திருடத் தூண்டுகின்றன. உண்மையான ஆன்மிகவாதிகள் இத்தகையவற்றின் மேல் எள்ளளவும் ஆசை கொள்வதில்லை. அந்தச் சின்னப் பையன் பக்கத்துப் பையன்களின் பென்சில் ரப்பர் போன்றவற்றையெல்லாம் திருடி விடுகிறான் என்று ஒரு ஆசிரியைக்குப் பெரிய கவலை. இவனை எப்படித் திருத்துவது? எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனால், அவன் திருந்துவதாய்க் காணோம். 

ஒருநாள் அந்தப் பையனின் தந்தையைப் பள்ளிக்கு வரச் சொன்னார். பையனையும் அருகில் வைத்துக் கொண்டு தந்தையிடம் பையனைப் பற்றிப் புகார் செய்தார். 'பக்கத்துப் பையன்களின் பென்சில்களைத் திருடுகிறான் உங்கள் பிள்ளை. ஒவ்வொரு நாளும் இத்தகைய புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நீங்கள் சற்றுக் கண்டித்து வைக்கக் கூடாதா?’ தந்தைக்குத் தன் மகன்மேல் கடும் கோபம் வந்தது. ஆசிரியை முன்னிலையிலேயே அவர் மகனைத் திட்டினார்: 'எப்படியடா வந்தது உனக்கு இந்தத் திருட்டுப் பழக்கம்? ஏன் திருடுகிறாய்? உனக்கு எவ்வளவு பென்சில் வேண்டுமானாலும் நான் என் அலுவலகத்திலிருந்து எடுத்து வந்து தருகிறேனே? அது போதாதா?!

No comments:

Post a Comment