Monday 9 October 2017

என் அன்னையே, எப்பிறப்பிற் உனைக் காண்பேன்


அர்த்தமுள்ள இந்துமதம்

‘வீடிருக்க, தாயிருக்க, வேண்டுமனை யாளிருக்க, பீடிருக்க, ஊணிருக்க, பிள்ளைகளுந் தாமிருக்க, மாடிருக்க, கன்றிருக்க வைத்த பொருளிருக்க, கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமே?’ - என்று ஆயிரக்கணக்கானவர்கள் வேடிக்கை பார்க்க, தாயின் இல்லத்தின் முன்னாலே நின்று, ‘தாயே பிச்சை’ என்று கோஷம் கொடுத்தேன். கையில் ஏதும் இல்லாமல் வந்த என் தாயார், என்னைப் பார்த்துச் சிரித்தபடி ‘‘மகனே இன்னும் நீ பணக்காரனா?’’ என்றார்கள். ‘‘ஏன் தாயே அப்படிச் சொல்கிறீர்கள்?’’ என்றேன். ‘‘வீடு உனக்கு அந்நியமாகிவிட்டது; ஆனால், ஒரு ஓடு உனக்குச் சொந்தமாகிவிட்டதே!’’ என்றார்கள். எனக்கு ஐந்தாவது ஞானம் பிறந்தது. அந்த ஓட்டைத் தூக்கியெறியப் போனேன். ‘‘நில், ஓட்டை வைத்துக் கொள். ஆனால், அதன் மீது பாசம் வைக்காதே! அது காணாமல் போனால், ‘என் ஓடு எங்கே?’ என்று தேடாதே!’’ என்றார்கள். பிறகு பிச்சை இட்டார்கள்.

அடுத்தது மனைவியின் இல்லம். அவள் கண்ணீராலே பிச்சையிட்டாள். அடுத்துத் தமக்கையின் இல்லம். எனது குரல் கேட்டதுதான் தாமதம். ஆச்சி வீட்டின் கதவு அகலத்தில் திறந்தது. எனக்காக. காத்திருந்தவள்போல் ேதாற்ற மளித்தாள் என் தமக்கை. ‘‘உள்ளே வா தம்பி. அக்காளின் கையால் பிச்சையிடும்போது, வாசற்படி தாண்டி நிற்கக் கூடாது.  ஒருவேளை சாப்பிட்டுவிட்டுப் போ!’’ என்றார்கள். அந்த பந்தத்தில் நான் உருகி விட்டேன். விட்ட குறை தொட்ட குறை! உள்ளே போனேன். தடுக்கு ஒன்று போட்டாள். இலை விரித்தாள். காய்கறி வைத்தாள். அன்னம் படைத்தாள். அள்ளி உண்ணப் போகும்போது ‘‘தம்பி!’’ என்றாள். ‘‘என்ன?’’ என்றேன். ‘‘நானும் நீயும் பெற்றோர்களுக்கு ஒரு மகள், ஒரு மகனாகப் பிறந்தோம். உன் மனம் ஏனோ இப்படி மாறிவிட்டது. 

அதற்காகக் கோடிக்கணக்கான நம் பூர்வீகச் சொத்தை நாய் பேய்கள் தின்னக் கூடாது தம்பி, ‘என்னுடைய சொத்துக்களெல்லாம் என் ஆச்சி மக்களையே சேர வேண்டும்’ என்று ஒரு ஓலை நறுக்கில் எழுதி ஊர் பெரியவரிடம் சாட்சிக் கையெழுத்து வாங்கிக் கொடுக்கக்கூடாதா?’’ என்றாள். நான் சிரிக்கவில்லை; அவள் அள்ளியிட்ட அன்னம் சிரித்தது. பிச்சைக்காரனுக்கு அள்ளி இட்டாலும், பிரதிபலனை எதிர்பார்க்கின்ற சமூகம். நான் என்ன பதிலைச் சொல்வேன்? ‘‘நான் இறந்துபோய்விட்டால் சொத்துக்கள் உங்களுக்குத்தானே வரப்போகிறது!’’ ‘‘உன் மனைவி...’’ என்றாள். ‘‘அவளையும் கொன்றுவிடலாமா...?’’ என்றேன். ‘‘போகின்ற கோயில்களில் எங்காவது உனக்குப் புத்தி கெட்டு, தர்மச் சொத்தாக்கிவிட்டால் எனக்கு எப்படிக் கிடைக்கும்?’’ என்றார்கள்.

நான் கையில் எடுத்த அன்னத்தை அப்படியே இலையில் போட்டு விட்டு வெளியேறினேன். வழியிலே ஒரு குடும்பச் சண்டை. மூன்று சகோதரர்கள் சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்கள். ஒருவன் சொன்னான்: ‘‘உங்களோடு பிறந்த பாவத்தை அங்கப் பிரதட்சணம் செய்துதான் தீர்க்க வேண்டும்!’’ என்று எனக்கு எவ்வளவோ தோன்றிற்று. மறுநாள் நகர் முழுவதும் அங்கப் பிரதட்சணம் செய்ய முடிவு செய்தேன். பிறகு திருத்தலங்களுக்குச் செல்வது என்று முடிவு கட்டினேன். அன்று இரவு சிவானந்த மடத்தில் படுத்திருந்தேன். காலையில் அங்கப் பிரதட்சணம் தொடங்கினேன். என்னுடைய வேலையாட்கள் எல்லாம் பக்கத்திலேயே வந்து கொண்டிருந்தார்கள். என் தாய் வீட்டருகே செல்லும்போது, என் தாயாருடன் என் தமக்கை சண்டையிட்டுக் கொண்டிருப்பது நன்றாகக் கேட்டது. ‘‘பட்டினத்துச் செட்டி பரதேசி ஆனாண்டி’’ என்று தெருவிலே ஒரு பெண் பாட்டுப் பாடிக்கொண்டு போனாள்.

அனுபவங்கள் சேகரிக்கப்பட்டன. ஆனந்த மார்க்கம் என் கண்ணுக்குத் தெரிந்தது. கடைகளில் குலுக்கிய நாணய ஓசை என் காதுகளில் விழவில்லை. தன் வீட்டில் ஒருவேளை அதிதியாக இருக்கும்படி என்னைக் கேட்டவர்கள் ஏராளம். ஆனால், அன்றும் நான் சிவானந்த மடத்து அதிதியே. இரவு நேரம். மடத்தில் நான் சாப்பிடப் போகிறேன். என் சகோதரி மக்கள் இருவரும் ஓடி வந்து என் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். ‘‘அம்மான்! அம்மான்!’’ என்று அழுதார்கள். பழையபடியும் பந்த பாசமா? சொத்துகளுக்காகவே என் சகோதரி தன் பிள்ளைகளை அனுப்பி இருக்கிறார்களா? குழந்தைகளைப் பார்த்துதான் பரிதாபப்பட்டேன். தங்கள் தாயை மன்னித்துவிடும்படி கேட்டுக் கொண்டார்கள். ‘‘பரமன் மன்னிப்பான்’’ என்றேன். ஓட்டிலேயே ஊற்றிச் சுடும் அப்பம் இரண்டைக் ெகாடுத்து ஆத்தாள் கொடுத்தாகச் சொன்னார்கள். அவர்களை அனுப்பிவிட்டு, அந்த அப்பத்தைப் பிட்டுப் பார்த்தேன்.

அப்பத்துக்கு நடுவே ஒரு சாண உருண்டை. அதுவும் நீல நிறத்தில் காட்சி அளித்தது. அதன் உள்ளே இருந்தது, எரி நஞ்சு! அப்பத்தைச் சாப்பிட்டால் அந்த எரி நஞ்சு உள்ளே ெசன்று சாணம் கரைந்ததும் ஆளைக் கொன்றுவிடும். அதைச் சோதித்துப் பார்க்க விரும்பினேன். இரவோடு இரவாக அதை எடுத்துக் கொண்டு போய் என் தமக்கை வீட்டுக் கூரையின் ேமல் போட்டுவிட்டு, ‘தன் வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.  மறுநாள் தமக்கை வீடு எரிவதாகச் செய்தி வந்தது. வெயிலில் சாணம் காய்ந்ததும், விஷத்தால் அது எரிந்துவிட்டது. வீட்டுக்குத்தான் சேதம்! அவர்களுக்கல்ல. பிறகு நான் அங்கிருந்து திருத்தல யாத்திரைக்குப் புறப்பட்டேன். எனக்கு ஒரு பிள்ளையைக் கொடுத்து, அதன் மூலம் ஞானத்தைக் கொடுத்த, தில்லையிலே விளையாடும் சிவகாமிநாதனைக் காண விழைந்தேன். நேரே சிதம்பரம் சென்றேன். ஆனந்தக் கூத்தனின் முன்னால் மெய்மறந்து பாடினேன்.

காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினுக்குந்
தாம்பினங் கும்பல வாசையும் விட்டுத் தனித்துச் செத்துப்
போம்பிணந் தன்னைத்திரளாகக் கூடிப்புரண் டினிமேற்
சாம்பிணங் கத்துதை யோ? வென் செய்வேன் தில்லைச் சங்கரனே!
காடே திரிந்தென்ன? காற்றே புசித்தென்ன! கந்தைசுற்றி
ஓடே எடுத்தென்ன? உள்ளன்பி லாதவ ரோங்கு விண்ணோர் 
நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் 
நாரியர்பால்
வீடே யிருப்பினு மெய்ஞ்ஞான வீட்டின்ப மேவுபவரே!

என் மகனைச் சுமந்து வந்த பிராமணர்கள், எந்தத் திருவிடைமருதூரில் இருந்து வந்தார்களோ, அந்தத் திருவிடைமருதூரில் நான் மெய்மறந்து பாடிக்கொண்டே இருந்தபோது, என் உடம்பில் ஏதோ ஊர்வது போல் தோன்றிற்று. கண்ணை விரித்துப் பார்த்தேன். என் தாயார் என் இடுப்பில் கட்டிவிட்ட சேலைத்துணி முடிச்சு அவிழ்ந்திருந்தது. அதில் இருந்து அரிசியும், உப்பும் என் தொடையில் உருண்டு கொண்டிருந்தன. ‘‘ஆத்தா!’’ என்று அலறினேன். நல்லவேளை, நான் திருவொற்றியூரில் இருக்கும்போது ஆண்டவன் இந்தச் சோதனையைக் காட்டி இருந்தால், மரணம் நிகழ்ந்து சடலம் எரிந்த பின்தானே நான் புகாருக்குப் போயிருக்க முடியும்? திருவிடைமருதூரில் இருந்து கால்நடையாகவே புகாருக்கு ஓடினேன். வீட்டை நெருங்க, நெருங்க ‘கடைசியாக ஒரு மொழியாவது தாயுடன் உரையாட மாட்டோமா?’ என்று மனம் அடித்துக் கொண்டது. வெளியிலே ஏராளமான கூட்டம். விலக்கிக் கொண்டு உள்ளே ஓடினேன்.

என் தாயாரின் ஆவியைத் தில்லைக்கூத்தன் எனக்காகவே நிறுத்தி வைத்திருந்தான். என் தந்தை இறந்த நாளில் இருந்து என் தாயார், தன் கணவனோடு தூங்கி இருந்த கட்டிலில் தூங்குவது இல்லை. பாயை விரித்துத் தரையிலேதான் தூங்குவார்கள். இப்போது இருப்பது மரணப் படுக்கை அல்லவா! அதனால் கடைசியாக அந்தக் கட்டிலில் போட்டிருந்தார்கள். பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். ‘‘ஆத்தா’’ என்றேன். ‘‘சுவேதா!’’ என்றார்கள். ‘‘வந்துவிட்டாயா?’’ ‘‘வந்துவிடுவேன் என்றபடி வந்துவிட்டேன்!’’ என்றேன். ‘‘இனி நான் வெந்துவிடுவேன்!’’ என்றார்கள். என் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். என்னைக் குனியச் சொல்லிக் கன்னத்தில் முத்தம் இட்டார்கள். நான் மறுபடியும் குழந்தையானேன். பிடித்திருந்த கையை எடுக்க முயன்றேன். முடியவில்லை. ‘‘ஆத்தா!’’ என்றேன். திறந்திருந்த அவர்கள் கண்களை மூடினேன்.

நான் அழுதேன். என் தமக்கையும் அழுதாள். என் அழுகை ஓயவில்லை. அவள் அழுகை ஓய்ந்துவிட்டது. சடலத்தைத் தூக்குவதற்கு முன்பாகவே, ‘‘எந்தப் பெட்டகத்தையும் யாரும் திறக்கக்கூடாது’’ எனறு சத்தம் போட்டார்கள் தமக்கை. என்னையே நினைத்து எனக்காகவே உருகி, வெள்ளைக் கலை உடுத்தி விதவைபோல் நின்ற என் மனைவியைப் பார்த்துத்தான் அப்படிச் சத்தம் போட்டார்கள். நான் எதுவும் பேசவில்லை. என்னைப் பெற்றவள் போய்விட்டாள் நான் இனிப் பெற முடியாதவள் போய்விட்டாள். நான் லெளகீகத்தில் இருந்து எனக்குப் பிள்ளை பிறக்குமானால் என் தாயே வந்து பிறக்கக் கூடும். அதற்கும் வழியில்லை. ஊரார் கூடினர். உறவினர் கூடினர். சடலத்தை வைத்துக் கொண்டே சொத்துத் தகராறு நடந்தது. பங்காளிகள் இரவுவரை வாதிட்டனர். முழுவதும் தனக்கே என்றாள் தமக்கை. குறுக்கே நிற்கவில்லை என் மனைவி. ஆயினும் பங்காளிகள் சம்மதிக்கவில்லை.

‘நான்கில் ஒரு பங்கு தமக்கைக்கு. மூன்று பங்கு என் மனைவிக்கு என்று தீர்ப்பளித்தார்கள். ஆனால், நான் சொல்வதே முடிவு என்றார்கள். நான் ‘‘எல்லாம் கோயிலுக்கே!’’ என்று கூறிவிட்டே ன். பிறகு நான் கொள்ளி வைக்கக்கூடாது என்று தடுத்தாள் தமக்கை. அதுவும் ஏற்கப்படவில்லை. கேளுங்கள். நீங்கள் சொத்து வைத்துவிட்டு இறந்தால் உங்களைப் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். சொத்தைப் பற்றியேதான் கவலைப்படுவார்கள். சொத்து இல்லாமல் இறந்தால்தான் உங்களுக்காக அழுவார்கள். ‘சொத்துள்ளவன் சீக்கிரம் சாகமாட்டானா?’ என்று சுற்றத்தார் நினைப்பார்கள். ‘சொத்தில்லாதவன் உயிரோடு இருந்தால்தானே நம்மைக் காப்பாற்றுவான்’ என்று உங்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். சடலம் குளிப்பாட்டப்பட்டது. அப்போது தான் எனக்கொரு பாடல் தோன்றிற்று.

அத்தமும் வாழ்வு மகத்துமட்டே! விழி யம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மியிரு
கைத்தல மேல் வைத்தழு மைந்தருஞ்சுடு காடுமட்டே
பற்றித் தொடரு மிருவினைப் புண்ணியப் பாவமுமே!
தாய்க்குச் சிதை!

என்னைப் பெற்று வளர்த்துப் பேணிய மாதா எரியப் போகிறாள்! நான் பிள்ளையானேன். ஞானி என்பதை மறந்தேன். அழுதேன்; துடித்தேன்; பாடிப்பாடிப் புலம்பினேன்.

ஐயிரண்டு திங்களா யங்கமெலா நொந்து பெற்றுப் 
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்ய
விருகைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை 
எப்பிறப்பிற் காண்பேன் இனி?
முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாளளவும்
அந்திபக லாச்சிசுவை யாதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ 
எரியத் தழல் மூட்டுவேன்?
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்
மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறுகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீ மூட்டுவேன்?
நொந்து சுமந்து பெற்று நோவாம லேந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே - அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றுந்தாய் தனக்கோ மெய்யிலே தீ மூட்டுவேன்?
அரிசியோ நானிடுவே னாத்தாள் தனக்கு;
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள
தேனே! அமிர்தமே! செல்வத் திரவியப்பூ
மானே! எனவழைத்த வாய்க்கு?
அள்ளி இடுவ தரிசியோ? தாய் தலைமேற்
கொள்ளிதனை வைப்பேனோ? கூசாமல் - மெள்ள
முகமேல் முகம் வைத்து முத்தாடி யென்றன்
மகனே! எனவழைத்த வாய்க்கு?
முன்னை யிட்டதீ முப்பு ரத்திலே 
பின்னை யிட்டதீ தென்னி லங்கையில்
அன்னை யிட்டதீ அடிவ யிற்றிலே
யானு மிட்டதீ மூள்க! மூள்கவே!
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்ப
லாகுதே பாவியே னையகோ! - காகம்
குருவி பறவாமல் கோதாட்டி யென்னைக் 
கருதி வளர்ந்தெடுத்த கை!
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்ப
லாகுதே பாவியே னையகோ! - காகம்
குருவி பறவாமல் கோதாட்டி யென்னைக் 
கருதி வளர்ந்தெடுத்த கை!
வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ? சந்தகமும் 
உன்னையே நோக்கி யுகத்து வரங்கிடந்தென்
தன்னையே ஈன்றெடுத்த தாய்!
வீற்றிருந்தாள் அன்னை; வீதிதனி லிருந்தாள்
நேற்றிருந்தாள், இன்றுவெந்து நீறானாள் - பாற்றெளிக்க எல்லாரும் வாருங்கள்! ஏதென்றி ரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்
ஈன்றெடுத்த மாதாவின் சடலம் எரிந்து முடிந்தது.

யுக யுகாந்தரங்களுக்கு வாழப்போவது போல் தாய்க்கு மகளாகி, பின்பு மகனுக்குத் தாயாகி, ‘எல்லாம் இவ்வளவு தான்’ என்று சொல்லும்படி எரிந்து சாம்பலாகி…. யாக்கை நிலையாமையிலிருந்துதானே இறைவனின் நிலைத்த தன்மை தெரிகிறது. இனி என் அன்னைக்கு இன்ப துன்பங்களில்லை. எனக்கு அந்த நிலை எப்பொழுதோ? ஆனால், தளதளவென்றிருக்கிற இந்த உடம்பு சாம்பலான பின்னால் மீண்டும் ஒரு வயிற்றில் பிறக்கும் துயரத்தை இறைவா எனக்குத் தராதே என்று திருவிருப்பைச் சிவனை நான் வேண்டிக் கொண்டேன்.

மாதா வுடல் சலித்தாள்; வல்லினையேன் கால்சலித்தேன்
வேதாவுங் கைசலித்துவிட்டானே - நாதா
இருப்பையூர் வாழ்சிவனே, இன்னுமோ ரன்னை
கருப்பையூர் வாராமற் கா!

நான் தெற்கே நகர்ந்தேன். சோழ நாட்டுத் திருப்பதிகளை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு இறுதியில் சிதம்பரம், சீர்காழி மார்க்கமாக திருவொற்றியூர் சென்று அங்கே அமைதி பெற்று விடுவதென்று முடிவு கட்டினேன். சோழ நாட்டில் நான் சுற்றி வரும்போது என்னுடைய இறுதிக்காலம் திருவொற்றியூரில் இல்லை என்பதை முடிவு கட்டினேன். எங்கள் செல்வத்தின் மீதே கண்ணாக இருந்த என் தமக்கையின் கணவர், என்னைப் பின் தொடர்ந்து பல ஆட்களை அனுப்பி இருந்தார். ஒரு சத்திரத்தில் ஒருவர் என் பக்கத்திலேயே வந்து உட்கார்ந்தார். அங்கிருந்த பிற அன்னக் காவடியினருக்கு நான் சொன்னபோது, அவர்கள் அவனைத் துரத்தியடித்தார்கள். பொன்னுக்கு வேலை செய்கிறவர்களைவிட, அன்புக்குப் பணி செய்கிறவர்கள் ஆண்மை மிக்கவர்களாக இருப்பார்கள். திருக்காட்டுப் பள்ளியில் எனக்கு ஏராளமான சீடர்கள் சேர்ந்தார்கள். அவர்களிலே பலர் இளைஞர்கள்.  இளமையிலேயே லெளகீகத்தை வெறுத்தார்கள். ஆனால், உடல் வலுமிக்கவர்கள்.

அவர்களுடைய துணையோடு நான் சோழ நாட்டைவிட்டு வெளியேற முயன்றேன். சிதம்பரம் எல்லை அருகே என் மைத்துனரின் அடியாட்கள் எங்களை வழிமறித்தார்கள். என்னுடன் இருந்த சீடர்கள் கடுமையாகப் போரிட்டார்கள். அவர்களைத் துரத்தி அடித்தார்கள். இனித் தெற்கே இருப்பதை விட வடக்கே சென்று உஜ்ஜைனி மாகாளியைத் தரிசிக்கலாம் என்று முடிவு கட்டினேன். உஜ்ஜைனி - ஊழித் தாண்டவத்தின் நாயகி, மாகாளி உலா வரும் பூமி. பரத கண்டம் முழுவதும் காளி வணக்கம் தோன்றுவதற்குக் காரணமான உஜ்ஜைனி. சக்திதேவியின் ருத்திர வடிவம். தான் அழிப்பவள் மட்டுமின்றி அளிப்பவளும் என்பதைக் காட்டிக் கொண்டிருக்கும் உஜ்ஜைனி. பல நூற்றாண்டுகளாகச் சோழநாட்டு மக்கள் வடதிசையிலும், வடமேற்கிலும் சென்று கொண்டிருந்த நாடுகள் இரண்டு. ஒன்று கலிங்கம்; இன்னொன்று உஜ்ஜைனி. அகன்ற சாலைகள், கூடல் நகரத்தைப் போல் நான்கு மாடங்கள் இல்லை என்றாலும், இரண்டு மாட வீதிகள்.

வணிகர்களுக்கு கடமை (வரி) இல்லாத காரணத்தால் பாரத கண்டத்தின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வாணிப வண்டிகள். கடைகளில் குவிந்து கிடக்கும் பல்வேறு பொருட்களில் பாண்டிய நாட்டு முத்துக்கள், மலைநாட்டு யானைத் தந்தங்கள், அகில், நன்னாரி வேர்கள், சுக்கு, மிளகு வகைகள் இவற்றைக் காணலாம். நான்குக்கு ஒரு கடையிலாவது தமிழ் பேசுகிறவர்களைக் காணலாம்; அவர்களிடம் பழகிப் பழகி கொச்சைத் தமிழ் பேசும் உஜ்ஜைனி மக்களையும் காணலாம். அந்தக் கடைத் தெருவுக்கு மத்தியில் நாங்கள் நடந்து சென்றபோது எங்களைக் கண்டு பலர் சிரித்தார்கள்! 

காரணம் கோவணான்டிகளாக அங்கே சாலையில் நடப்பவர் எங்களைத் தவிர வேறு யாருமில்லை. ‘‘கோவணமே சுமை’’ என்று கருதுவது ஒருவகை ஞானம். தலை முதல் கால்வரை மூடி இருப்பது ஒரு வகை ஞானம். திடீரென்று, ‘விலகுங்கள், விலகுங்கள்’ என்ற ஒலி கேட்டது. எல்லாரும் விலகினார்கள். நாங்கள் விலகவில்லை. யாருக்காக விலகுகிறார்கள் என்பதைப் பார்க்க விரும்பினோம். மகாராஜா, அரண்மனையில் இருந்து ஆற்றங்கரை வசந்தமாளிகைக்குப் போகிறாராம். விஷயம் அவ்வளவுதான். அரசரின் ரதம் வந்தது. காவலர்கள் பிடித்துத் தள்ள முயன்றார்கள். கண்டுகொண்டார் மகாராஜா. என்னைப் பார்த்துக் கேட்டார்: ‘‘யார் நீ?’’ நான் சொன்னேன்:  ‘‘மனித உயிர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்கின்ற கேள்வி!’’

‘‘எங்கிருந்து வருகிறாய்?’’
‘‘கருப்பையில் இருந்து!’’
‘‘எங்கே போகிறாய்?’’
‘‘இடுகாட்டுக்கு!’’
‘‘இங்கென்ன வேலை?’’
‘‘இடையில் ஒரு நாடகம்!’’
‘‘தங்குவது எங்கே?’’
‘‘வானத்தின் கீழே!’’
‘‘ஒழுங்காகப் பதில் சொல். கேட்பது அரசன்!’’
‘‘பதில் சொல்பவனும் அவனே!’’
மகாராஜா யோசித்தார்.

‘‘திமிரா உனக்கு?’’ என்று சேவகர்கள் நெருங்கினார்கள். ‘‘அவனைவிட்டு விடுங்கள்’’ என்று சொல்லிவிட்டு மகாராஜா போய்விட்டார். அவர் போனதும் கடைத் தெருவே என்னை ஆச்சரியமாகப் பார்த்தது. அங்கிருந்த தமிழர்கள் எல்லாம் எங்கள் கால்களிலேயே விழுந்தார்கள். அவர்கள் என்னைப் பார்த்து ‘பட்டினத்துச் செட்டி’ என்று அழைத்தார்களே, தவிர யாரும் ‘திருவெண்காடர்’ என்று அழைக்கவில்ைல. வெகுநாளைக்கு முன்பே உஜ்ஜைனிக்கு வந்துவிட்டவர்கள் அவர்கள். தங்கள் இல்லங்களில் தங்கும்படி வேண்டினார்கள். ‘இருபது சீடர்களோடு இல்லங்களிலே தங்க விரும்பவில்லை’ என்று கூறி காளிகோயில் விடுதிக்கே போய்விட்டோம். அங்கேயும் செட்டியார்கள் கட்டிய விடுதி ஒன்றிருந்தது. காவிரிப் பூம்பட்டினத்துச் செட்டியார் ஒருவர் தான் அங்கே கணக்காயராகவும் இருந்தார். நாங்கள் பெரும் உபசாரத்தோடு அங்கே வரவேற்கப்பட்டோம்.

இரவு நேரம் நான் உட்கார்ந்து ஏடு படித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சத்திரத்தின் கதவுகள் எப்போதுமே மூடப்படுவதில்லை. ஆகையால், வங்கதேசத்து சந்நியாசி ஒருவர் அந்த நேரத்திலும் அங்கே வந்தார். காவி ஆடையால் உடம்பு முழுக்கப் போர்த்தி இருந்தார். சோளிய பிராமணர்களைப் போல் முன்குடுமி வைத்திருந்தார். நெற்றியில் சந்தனக் கோடுகள் போட்டிருந்தார். இரண்டு கன்னத்திலும் குங்குமம் பூசி இருந்தார். புருவங்களுக்கு மேலே கரும்புள்ளி செம்புள்ளி குத்தி இருந்தார். எனக்குக் கொஞ்ச தூரத்தில் அவர் வந்து உட்கார்ந்தார். நான் சிவபுராணம் படிக்கும்போது அவர் சிருங்காரப் பாட்டுபாட ஆரம்பித்தார். 

மூடிய ஆடை முற்றக் களைந்து முகம் தழுவி சூடிய கொங்கை சுற்றிப் பிடித்துச் சுடர் பரப்பி வாடிய ரோமக் கால்களை மெல்ல வருடிவிட்டு நாடிய இன்பம் மாந்தருக் குண்டு நமக்கில்லையே! - எனக்குக் கோபம் வந்தது; திரும்பிப் பார்த்தேன். உடனே மற்றொரு பாட்டைப் பாடினார். செப்பளவு கொங்கைச் சேயிழை யாரைத் திரட்டி வந்து முப்பொழுதென்றும் முகத்தோடு சேர்த்து முத்தமிட்டுக் கொப்புளத் தொட்டிக் குளத்தினில் மூழ்கிக் குளிப்பதைப்போல் அப்பனைப் பாடித்துதிப்பதில் ஏது ஆனந்தமே! நான் அவரை அடக்க விரும்பவில்லை. உடனே நான் ஒரு பாட்டுப் பாடினேன்:

பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசம் பிடித்தெனையே
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி, என் போதப்பொருள் பறிக்க 
எண்ணா துனைமறந் தேனிறைவா! 
கச்சி யேகம்பனே!

- அந்தப் பாட்டைக் கேட்டவர் சிரித்தார்; பதிலுக்கு நானும் சிரித்தேன். ‘‘ஒக்கச் சிரித்தால் வெட்கமில்லை!’’ என்றார். ‘‘மாதொருத்தி இல்லை என்றால் நாம் பிறப்பதில்லையே!’’ ‘‘யாம் பிறந்த அவ்விடத்தை யாம் கலப்பதில்லையே!’’ என்று கீழ்காணும் வெண்பாவைப் பாடினேன்:

சிற்றமும் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம்தேடி விட்டோமே - நித்தம்
பிறந்த இடம் தேடுதே பேதை மடநெஞ்சம்
கறந்தஇடம் நாடுதே கண்.
‘‘சிற்றம்பலத்திற்கும் சிவகாமி உண்டு’’ 

என்றார். ‘‘சிவன் காமம், மண் படைக்கும், இவன் காமம், என் படைக்கும்?’’ என்றேன். ‘‘ரத்த அணுச் செத்தவன்தான் தத்துவத்தில் விழுவான்!’’ என்றார். ‘‘தத்துவத்தை மறந்தவன்தான் ரத்தத்தால் எரிவான்!’’ என்றேன். ‘‘ஆண்மை இலான் தத்துவங்கள் அவனுக்கே பொருந்தும்’’ என்றார். ‘‘ஆண்மையினைச் சோதித்த அனுபவமே ஞானம்’’ என்றேன். ‘‘நாளைக்கோர் பெண் கிடைத்தால் நான் கூடச் சம்சாரி’’ என்றார். ‘‘வேளைக்கொன்று கிடைத்தாலும் வெறுப்பவனே சந்நியாசி’’ என்றேன். ‘‘நதிமூலம், ரிஷி மூலம் நான் கேட்டதுண்டு; இது எவர் மூலமோ? அறியேன்!’’ என்றார். ‘‘வாதற்ற பொண்டாட்டி வாய்த்ததுண்டு; என்றாலும், காதற்ற ஊசிதான் காட்டியது மூலம்!’’ என்றேன். ‘‘ஊசியினால் ஆசை ஓடிவிட்டால், மீண்டுமொரு பாசியினால் இந்தப் பந்தம் திரும்பாதோ!’’ என்றார். ‘‘வேசியினால் கெட்டால் விரைவில் திரும்பி விடும்; மெய்ஞான மெய்யழுத்தம் விண்வரையில் கூட வரும்’’ என்றேன்.

‘‘சுற்றம் தவறு, துணை தவறு; அதனால்தான் முற்றும் தவறென்று முனிவர் புலம்புகிறார்.’’ என்றார். ‘‘சுற்றும் தெளியாதான் காண்பதெல்லாம் தவறென்பான்! முற்றும் தெரிந்த பின்னே முழுச்சுமையை நான் துறந்தேன்!’’ என்றேன். ‘‘பத்தினியாய் ஓர் மனைவி, பாராதான் ஞானி’’ என்றார். ‘‘சித்தர்கள் கதையல்ல; திருவருள்சேர் ஞானி’’ என்றேன். ‘‘ஒரு மனது நமக்கிருந்தால் யாருக்கும் ஒரு மாது!’’ என்றார்.‘‘எந்த ஒரு பெண்ணுக்கும் இரண்டு மனம் உண்டு!’’ என்றேன். ‘‘மொத்தத்தில் சொல்வது முட்டாள்கள் ஞானம்’’ என்றார். ‘‘முட்டாள்தனமே முழு ஞானம்!’’ என்றுரைத்தேன். ‘‘சக்தி கதை அதுதானா? தத்துவமும் அதுதானா?’’ என்றார். ‘‘சக்தி ஒரு ஞானக்கலை; சம்சாரக் கலை அல்ல’’ என்றேன். ‘‘அரசனது பத்தினிகள்...?’’ என்றார். ‘‘அவர்களுக்குப் பல மனது...!’’ என்றேன்.

அப்போது அவர் நேரடியாகவே திரும்பினார். ‘‘அறிந்து பேசு!’’ என்றார். ‘‘ஆண்டவனைக் காணுமிடத்தும் நான் அறிந்துதான் பேசுவேன்’’ என்றேன். ‘‘மன்னர் குலத்தை இகழ்ந்ததற்கு மரியாதையாக மன்னிப்புக் கேள்’’ என்றார். ‘‘மகேசனிடம் கூட அதை நான் கேட்டதில்லை’’ என்றேன். ‘‘என்னைப் பார்!’’ என்றார். பார்த்தேன்; பர்த்ருஹரி மகாராஜா! ‘‘துறவிக்கு வேந்தன் துரும்பு’’ என்றேன். ‘‘வேந்தன் சீறினால்...’’ என்றார்.‘‘வேதத்தை என் செய்ய முடியும்...?’’ என்றேன். (இப்போது அவர் பக்கத்தில் இருந்த பத்ரகிரியார் பயத்தோடு அவர் பாதத்தை தொட்டார்.) ‘‘இல்லை, சுயவரலாற்றில் உண்மையை மறைப்பவன், தான் ஏன் பிறந்தேன் என்பதையே அறியாதவன்’’ என்று சொல்லி மேலும் தொடர்ந்தார் பட்டினத்தார்: ‘‘வீடு விட்டவனுக்கு ஓடு எதற்கு?’’ என்று சொல்லிக் கொண்டே போய் விட்டார்.

உடனேயே என் சீடர்களெல்லாம் என்னைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு என்ன நடக்குமோ என்று அஞ்சினார்கள். ‘‘அரசன் சீறினால் மரணம் கிடைக்கிறது; ஆண்டவன் சீறினால் நரகம் கிடைக்கிறது. மரணத்திற்குப் பயப்படாதீர்கள். நரகத்திற்குப் பயப்படுங்கள்!’’ என்றேன். அவர்கள் நினைத்ததில் தவறில்லை; எதிர்பார்த்ததும் நடந்தது. சிறிது நாழிகைக்கெல்லாம் அரண்மனைக் காவலர்கள் எங்களைச் சிறைப்படுத்தினார்கள். சிறிதளவும் எங்கள் உடலுக்குத் துன்பம் தராமல் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றார்கள். எங்களைத் தனித்தனி அறைகளில் அடைத்துப் பூட்டினார்கள். அடுத்தது என்ன நடந்தது? பத்ரகிரியாரே சொல்வார்.

No comments:

Post a Comment