Sunday, 1 October 2017

வீடு கட்டும் பணி தடையின்றி நடக்க!


"சொந்தமா வீடு கட்டணுங்கற ஆசை யாருக்குத் தான் இல்லை! ஆனால், "ஆனை அசைந்து தின்னும்! வீடு அசையாமல் தின்னும்!' "வீட்டைக் கட்டிப்பார்! கல்யாணம் பண்ணிப்பார்' என்றெல்லாம், வீடு கட்டும் பட்ஜெட் பற்றி அந்தக் காலத்திலேயே சுலவடைகள் சொல்லியிருக்கிறார்களே! எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், கட்டட வேலையைத் தொட்டு விட்டால் பட்ஜெட் இழுத்துக் கொண்டு போவதைத் தவிர்க்க முடியாது."பணம் புரட்ட படாதபாடு பட்டுட்டேன். இந்த வீட்டுவேலை எப்ப தான் முடியுமோ தெரியலை!' என்று வருந்தாத வீடு கட்டுவோரே இல்லை.

இத்தகைய பிரச்னைகள் குறைந்து நல்லபடியாக வீடு கட்டி முடிக்க.. இதோ! ஒரு சிறந்த பரிகாரம் இருக்கிறது. 

திருச்சி மலைக்கோட்டையில் கோயில் கொண்டிருக்கும் தாயுமான சுவாமி குறித்து திருஞானசம்பந்தர் பாடியுள்ள பாடல் ஒன்று உள்ளது. தினமும் காலையில் அதை12 முறை படித்து வாருங்கள். திங்கள்கிழமையில் சிவபெருமானை வில்வஇலையால் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். பணத்தட்டுப்பாடு நீங்கும். 

அந்தப் பாடல் இதுதான்.

""நன்று உடையானை தீயது இலானை நரை வெள்ளேறு
ஒன்று உடையானை உமை ஒருபாகம் உடையானை
சென்று அடையாத திரு உடையானை சிராப்பள்ளிக் 
குன்று உடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே'' 

கட்டிடவேலை முடியும் வரை பாடலைத் தொடருங்கள். நல்லமுறையில் வீடு கட்டுவதோடு, உங்கள் உள்ளம் குளிரும்படி கிரகப்பிரவேசம் நடத்திட சிவனருள் முன்னிற்கும். கிரகப்பிரவேசத்திற்குப் பிறகு மலைக்கோட்டை ஈசனை குடும்பத்துடன் வணங்கி வாருங்கள். 

No comments:

Post a Comment