Saturday, 20 January 2018

தைப்பூசத்துக்கு தோரணமலை வாருங்கள்

தைப்பூசத்துக்கு தோரணமலை வாருங்கள்

யானை வடிவிலுள்ள தோரணமலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கும் கோவிலுக்கும் இன்றே திருத்தொண்டுகள் புரிந்து, முருகன் அருள்பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழுங்கள்.

தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உகந்த நாள். பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடிவரும் நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூசம் ஆகும். தமிழ் பஞ்சாங்கப்படி தை மாதம் பத்தாவது மாதம் ஆகும். இதைப் பூஸா மாதம் என்பர். தைத்திங்கள் பூச நாளும்கூடிய வியாழக்கிழமையன்றுதான் வசிஷ்ட மகரிஷியும் பதஞ்சலி முனிவரும் கனகசபையில் தில்லைநாதரின் திருநடனம் கண்டுகளித்தனர். 

தைப்பூசத்தன்றுதான் உலகம் தோன்றியதாக ஐதீகம். அசுரர்களை வென்று தேவர்களைக் காக்க முருகப்பெருமானிடம் அன்னை பராசக்திவேல் வழங்கிய நாள் தைப்பூசம். முருகனது வேல் ஞானசக்தி வடிவானது ‘வேல்’ என்பதற்கு எல்லாவற்றையும் வெல்வது எனப்பொருள். ஞானம் ஒன்றே எல்லாவற்றையும் வெல்லக் கூடியது. ஞானம் என்றால் அறிவு. அறிவுக்கு மூன்று லட்சணங்கள் உண்டு. அவை ஆழம், அகலம், கூர்மை. 

வேலின் அடிப்பகுதி ஆழ்ந்தும், இடைப்பகுதி அகன்றும், நுனிப்பகுதி கூர்மையாகவும் உள்ளது. ஆணவத்தையும் தீவினையையும் ஞானம் எனும் வேலைத்தவிர வேறு எதனாலும் வெல்லமுடியாது. நம்மிடம் உள்ள இச்சா சக்தி (விழைவாற்றல்), கிரியா சக்தி (செயலாற்றல்), ஞான சக்தி (அறிவாற்றல்) மூன்றையும் வெளிப்படுத்தி வெற்றிகாண வேண்டும்.

வாழ்வில் ஏற்படும் மலைபோன்ற தடைகளைத் தகர்ந்தெறிந்து நலம்பெறச் செய்வது ‘வேல்’. ‘வெல்’ என்பதே ‘வேல்’ என்றாகி வெற்றியைத் தந்தது. சங்க காலத்தில் ‘வேல்’ வழிபாடு சிறப்புடன் நிகழ்ந்துள்ளதை ‘வெறி அறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும்’ என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். சிறப்புகள் மிகுந்த தைப்பூச நாளில் வேல் வழங்கி, தோரணமலை முருகனை வணங்கினால் எதிரிகள் தொல்லை ஒழியும், எதிர்பாராத உயர்பதவி கிட்டும் என்பது ஐதீகம்.

புராண காலத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பொதிகை மலைக்குச் செல்லும் நுழைவாயிலாக தோரணமலை விளங்கியுள்ளது. அப்போது தென்திசை வந்த அகத்தியர் தோரணமலையின் இயற்கைப்பேரழகில் ஈர்க்கப்பெற்று சிறிதுகாலம் மலையில் தங்கியிருந்தார். முருகப்பெருமான் சிலையை நிறுவி வழிபட்டார் சித்த மருத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். அவருக்கு உதவியாக ஒளவையார் பரிந்துரைத்த பொன்னரங்கன் என்ற ஊமைச்சிறுவன் இருந்தான். அகத்தியரின் ஆராய்ச்சி திக்கெட்டிலும் பரவியது. இரண்டாம் தமிழ்ச்சங்கம் அமைந்திருந்த கபாடபுரம் என்ற ஊரிலிருந்து திரணதூமாக்கினி என்ற தொல்காப்பியர் அகத்தியரிடம் வந்தார்.

தமக்கு 12 ஆண்டுகளாகத் தீராத தலைவலி இருப்பதாகவும் அதனைக் குணப்படுத்தும்படியும் வேண்டினார். அவரின் தலைவலிக்கு என்ன காரணம் என்பதை தம் ஞானப்பார்வையாலேயே அகத்தியர் தெரிந்து கொண்டார். ஒரு நாசி வழியாக தண்ணீரை ஏற்றி அதனை மூளையின் எல்லாப் பக்கங்களிலும் செலுத்தி சுத்தம்செய்துவிட்டு மறுநாசி வழியாக நீரை வெளியேற்றும் ‘ஜலநேத்தி’ பழக்கம் மேற்கொண்டபோது தண்ணீரில் நுண்ணுயிராய் இருந்த தேரை ஒன்று மூளைக்குள் புகுந்து தங்கிவிட்டது. அது பெரிதாக வளர்ந்து வெளியேறமுடியாமல் அங்குமிங்கும் அசைவதனாலேயே தலைவலி ஏற்படுகிறது என்பதை உணர்ந்த அகத்தியர் அறுவைச் சிகிச்சை செய்து தேரையை அகற்ற முடிவு செய்தார்.

தொல்காப்பியருக்கு ‘சம்மோஹினி’ எனும் மூலிகை மயக்கமருந்து செலுத்தப் பட்டது. ஐந்தே நிமிடத்தில் மயக்கத்தில் ஆழ்ந்தார். கபாலத்தைச்சுற்றி ஒருவகை மெழுகு தடவப்பட்டு மண்டையோடு இரண்டாகத் திறக்கப்பட்டது. மூளையை இறுகப்பிடித்தவாறு ஒரு தேரை இருந்தது. அகத்தியர் அதனை குறடாவால் எடுக்க முயன்றார். 

அவரைத்தடுத்த பொன்னரங்கன் ஒரு வாயகன்ற மண்பாண்டம் ஒன்றில் தண்ணீர் நிரப்பி எடுத்துவந்தான். அதனை கபாலம் அருகே வைத்து கையைவிட்டு அளைந்தான். சத்தம் கேட்டு திரும்பிய தேரை தண்ணீருக்குள் குதித்தது. சட்டென மண்டை ஓட்டை மூடி ‘சந்தான கரணீ’ மூலிகைக் கலவையால் நன்கு ஒட்ட வைத்தார் குறுமுனி. பின்னர் ‘சஞ்சீவினி’ மூலிகையைப் பயன்படுத்தி மயக்கம் தெளியவைத்தார். மயக்கம் தெளிந்த தொல்காப்பியர் தலைவலி நீங்கி புத்துணர்வுடன் இருந்தார். அகத்தியர் அறிவுரைப்படி நீண்ட காலம் வாழ்ந்தார்.

இந்த சிகிச்சையின்போது சமயோசிதமாக செயல்பட்ட பொன்னரங்கனை ‘தேரையர்’ என்றழைத்தார் அகத்தியர். பின்பு முருகப்பெருமானி டம் வேண்டியதும் தேரையரின் பிறவி ஊமைத்தன்மை உடனே நீங்கியது. இதன்பிறகு அகத்தியர் பொதிகை மலைக்குச் சென்றார். அங்கு சென்றதும் வட திசை தாழ்வு, தென்திசை உயர்வு நீங்கி சமன் ஆனது. 

அகத்தியர் விருப்பப்படி தோரணமலையில் ஆராய்ச்சியைத் தொடர்ந்து சுமார் 800 ஆண்டுகள் வாழ்ந்து சேவை புரிந்த தேரையர் இறுதியில் தோரணமலையிலேயே ஜீவ சமாதி அடைந்து விட்டார். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அகத்தியர், தேரையர் இருவரும் மேற்கொண்ட இந்த அறுவைச் சிகிச்சையே உலகின் முதல் மண்டை ஓட்டு அறுவைச்சிகிச்சையாகக் கருதப்படுகிறது. இந்த கபால அறுவைச் சிகிச்சை காசிவர்மன் என்ற பாண்டிய மன்னனுக்கும் செய்யப்பட்டு தேரை அகற்றப்பட்டு தலைவலி நீக்கப்பட்டது.

ராமாயண காலத்தோடு தோரணமலை தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. ராமபிரான் தோரணமலை முருகனை வணங்கியபிறகே மாய மானைத் தேடுவதைக் கைவிட்டாராம். பிற்காலத்தில் இதனையறிந்த பாரதியார் தோரணமலை முருகனை ‘குகையில் வளரும் கனவே’ என்று சிறப்பித்துப் பாடியுள்ளார்.

தோரணமலையில் 64 சுனைகள் உள்ளன. இவை அனைத்தும் மருத்துவ ஆற்றல் உடையவை. உச்சியிலுள்ள குகைக்குள் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளான். மயில்வாகனத்துடன் ஞானசக்தி வடிவில், வலக்கரம் வேலையேந்தி அரசனைப்போல் தலையில் கிரீடம் சூட்டி மற்றோர் வலக்கையினால் ஆசிர்வதிக்கும் வரதஹஸ்தனாக அருள்பாலிக்கிறான். முருகன் கவலையற்றவன். பக்தர்களின் கவலைகளைப் போக்குபவன், புன்சிரிப்புடன் காட்சி தரும் முருகனின் இந்த எழில் கோலத்தை தரிசனம் செய்ததும் பக்தரின் கவலைகள் பறந்தோடிவிடுகின்றன.

வேலை, திருமணம், மகப்பேறு கிட்டவும், சொத்துத் தகராறு, நீதிமன்ற வழக்கு முடிவுறவும் வழிபட்டு வருகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் பால் குடம் எடுத்தும், காவடி சுமந்தும், தலைமுடி காணிக்கை செலுத்தியும், கல் திருப்பணி செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தைப்பூசம் இங்கு வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று தோரணமலை முருகனை வணங்கினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். முருகப்பெருமான் அமைத்த இந்த மூவர் கூட்டணி (அகத்தியர் + தேரையர் + சித்த மருத்துவம்) வெற்றி பெற்றதுபோல உலகையும் வெற்றி கொள்ளலாம். 

மூர்த்தி, தலம், தீர்த்தம், தவம், தியானம், விருட்சம் ஆகிய ஆறு அம்சங்களைக் கொண்ட ஒரே முருகன் கோவிலான தோரணமலையில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அன்பர்கள் உதவலாம். படிகளின்மீது மேற்கூரை கட்ட, சூரிய மின்விளக்குப் பொருத்த, மலைமீது மகா மண்டபம் ஏற்படுத்த பொருளுதவி செய்து வசதிகளை அதிகப்படுத்தினால் எந்நேரமும் தரிசனம் செய்ய ஏதுவாயிருக்கும்.

முருகன் வரம்தரும் தெய்வம். பக்தர்கள் தம்மை வழிபட வரும்போது யானைமீது வீற்றிருந்து அருள்பாலிப்பது முருகப்பெருமானின் வழக்கம் என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது. யானை வடிவிலுள்ள தோரணமலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கும் கோவிலுக்கும் இன்றே திருத்தொண்டுகள் புரிந்து, முருகன் அருள்பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழுங்கள்.

No comments:

Post a Comment