Wednesday, 17 January 2018

ஆடல்வல்லானே போற்றி


தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் திருத்தலம், பார்த்தவர்கள் சொல்லக் கேட்டாலும் அதிசயம். நாமே பார்த்தாலும் ஆச்சரியம்.

தில்லைக் கோபுரங்களைப் பொறுத்தவரை, நுழைவாயிலின் மாடங்களில் ஸ்ரீபைரவர், ஸ்ரீதுர்கை, அதிகார நந்தி, கோபுரங்களை எடுத்த கர்த்தா ஆகியோருக்கு மாடங்கள் அமைத்து, சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேற்குக் கோபுரத்தில் இரண்டாம் குலோத்துங்கனின் உருவச் சிலையும், கிழக்கில் கோப்பெருஞ்சிங்கனின் உருவச் சிலையும், வடக்கில் கிருஷ்ணதேவராயரின் உருவச் சிலையும் இருக்கின்றன!

இவற்றில், தெற்கில் இருந்த மன்னவனின் சிலையும், கிழக்குக் கோபுரத்தில் இருந்த பைரவர் சிலையும் பின்னாளில் காணாமல் போய்விட்டன. மாறாக, பிற சிற்பங்களை அங்கு இடம்பெறச் செய்துள்ளனர். கோபுரத்தை எடுத்த கர்த்தாவுக்கு எதிர்ப்புறம் அந்தக் கோபுரத்தை உருவாக்கிய சிற்பிகளின் உருவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

கிழக்குக் கோபுரத்தை எடுத்த சிற்பிகளுக்கு அருகே, அவர்கள் கட்டுமானத்துக்காகப் பயன்படுத்திய அளவுகோலின் சிற்பமும் அதில் அளவுக்குறியீடுகளும்கூட சிற்பங்களாக வடிக்கப்பட்டிருப்பது, தொழில்நுட்பத்தின் பிரமிப்பைக் கூட்டுகிறது! வடக்குக் கோபுரத்தில் இடம்பெற்றுள்ள சிற்பிகளின் உருவச் சிற்பங்களுக்கு மேலாக விருத்தகிரி (விருத்தாசலம்) சேவகப்பெருமாள், சேவகப்பெருமாளின் மகன் விசுவமுத்து, அவன் தம்பி காரணாகாரி, திருப்பிறைக்கொடை ஆசாரி திருமருங்கன் என்று அவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன!

தில்லைக் கோபுர நுழைவாயில்களில், இரண்டு பக்கச் சுவர்களிலும் நாட்டிய சாஸ்திரத்தை விளக்கும் புடைப்புச் சிற்பங்கள் இடம்பெறுகின்றன. மேற்குக் கோபுரத்தில், பரத சாஸ்திர ஸ்லோக கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கூடவே, ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் கீழாக அதற்குரிய நாட்டிய கரணத்தை ஓர் ஆடற்பெண் ஆடிக்காட்டும் சிற்பமும் வடிக்கப்பட்டுள்ளது.

அருகில், குடமுழா போன்ற தாள இசைக் கருவிகளை இசைக்கும் கலைஞர்களின் சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன. மேற்குக் கோபுரத்தில் 108 நாட்டியக் காட்சிகளும், கிழக்குக் கோபுரத்தில் 96 காட்சிகளும், தெற்குக் கோபுரத்தில் 104 காட்சிகளும், வடக்குக் கோபுரத்தில் 108 காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment