சொந்தமாய் ஒரு வீடு என்பதுதான் பெரும்பாலான மக்களின் கனவு, ஆசை. விருப்பம். இந்தக் கனவையும் ஆசையையும் விருப்பத்தையும் ஈடேற்றித் தந்தருள்கிறார் வீரவநல்லூர் பூமிநாதர்.
நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் 28-வது கிலோமீட்டரில் அமைந்து உள்ளது வீரவநல்லூர் திருத்தலம். ஊரின் மையப்பகுதியில் அற்புதமாகவும் அழகாகவும் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீபூமிநாத சுவாமி. அவருக்கு இணையாக கருணையே வடிவெனக் கொண்டு காட்சி தந்தருளும் அம்பாளின் திருநாமம் ஸ்ரீமரகதாம்பிகை.
ஒருகாலத்தில், அதிவீரவழுதி மாறன் எனும் பாண்டிய மன்னனை, வகுளத்தாமன் எனும் மன்னன் போரில் தோற்கடித்தான். தேசத்தை இழந்து, தோல்வி அவமானத்தில் இருந்து மீளமுடியாமல் தவித்து மருகிய அதிவீரவழுதி மாறன் ஒவ்வொரு தலமாக வந்தான். தோல்வியை விட தோல்வி அடைந்த அவமானமே பெரிய வலியாகி விட்டிருந்தது மன்னனுக்கு!
பிறகு இங்கே, இந்தத் தலத்துக்கு வந்து, லிங்க வடிவில் உள்ள சிவனாரைத் தரிசித்தான். கண்ணீர்விட்டு தொழுதான். கரையேற வழியில்லை செய்யமாட்டீரா என்று கதறினான்.
அப்போது, ‘உன் சிறிய படையைக் கொண்டு, தைரியமாக எதிரியுடன் போர் செய். எதிரியின் கண்களுக்கு உன் சிறுபடை, பெரும்படையெனத் தெரியும். போரில் வெல்வாய். வெற்றி உனக்கே! வெற்றி நிச்சயம். இழந்த தேசத்தை மீட்பாய்’ என அசரீரியா சிவவாக்கு ஒலித்தது.
அதன்படியே போரில் வென்றான் மன்னன். வீரவநல்லூர் கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகள் செய்தான் என்கிறது ஸ்தல வரலாறு!
சோமவாரம் (திங்கள்), பிரதோஷம், மாத சிவராத்திரி, வெள்ளிக்கிழமை முதலான நாட்களில் இங்கு வந்து சிவனாருக்கு வில்வம் சார்த்தி வேண்டிக்கொண்டால், பூமி தொடர்பான சிக்கல்கள் நீங்கும். வீடு மனை வாங்கும் யோகம் கிட்டும்! இழந்ததைப் பெற்று இனிதே வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள்!
No comments:
Post a Comment