Monday, 15 January 2018

சுகப்பிரசவம் தருவாள் குங்குமவல்லி



எந்தப் பெண்ணுக்கு வளைகாப்பு நடந்தாலும், முன்னதாக குங்குமவல்லிக்கு கைகள் நிறைய வளையல்களை அடுக்கி அழகு பார்த்துவிட்டுத்தான், கர்ப்பிணிக்கு வளைகாப்பு விழாவை நடத்துகின்றனர். அந்த அம்மன் குடிகொண்டிருக்கும் தலம், திருச்சி உறையூர்.

இங்கே உள்ள தான்தோன்றீஸ்வரர் கோயிலில், அழகு ததும்ப சந்நிதி கொண்டு, நம் சந்ததியையெல்லாம் வாழவைத்துக் கொண்டிருக்கிறாள் குங்குமவல்லி அம்பாள்.

தாயைப் போல் கருணையும் கனிவும் கொண்டு காட்சி தருகிறாள் குங்குமவல்லி அம்பாள். கர்ப்பிணிகள் தினமும் இவளை தரிசித்துச் செல்கின்றனர்.

அனுதினமும் வளையல் அணிவித்து வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் உண்டு என்றாலும், தை மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமை அன்று விமரிசையாக நடந்தேறுகிறது வளைகாப்புத் திருவிழா. இந்த நாளில், திருச்சி மற்றும் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து ஏராளமான கர்ப்பிணிகள், அடுக்கடுக்கான வளையல்கள், தேங்காய் - பழம் ஆகியவற்றுடன் வந்து, அம்மனை தரிசிக்கின்றனர்.

இந்த நாளில் அம்பாளுக்கு தீர்த்தம் எடுத்து வருதல் உள்ளிட்ட அத்தனை சடங்கு - சாங்கியங்களையும் கர்ப்பிணிகளே செய்வர் என்பது விசேஷம். இந்த நாளில், அம்பாளுக்கு வளைகாப்பு விழா நடத்தி பிரார்த்திக்க, சுகப்பிரசவமாகும்; நல்ல முறையில் குழந்தை பிறக்கும்; தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பர் என உணர்ச்சி பொங்கத் தெரிவிக்கின்றனர் பெண்கள்.

மறுநாள்... சனிக்கிழமை அன்று, குங்குமவல்லி, குகாம்பிகாவாக... பாலகன் முருகப்பெருமானை மடியில் வைத்திருக்கும் அலங்காரத்துடன் காட்சி தருகிறாள். ‘நமக்கொரு குழந்தை பொறக்கலியே...’ என்று வேதனையில் தவித்து மருக்கும் பெண்கள், பாலகனாக குமரனை மடியில் வைத்திருக்கும் அம்பாளைத் தரிசித்துப் பிரார்த்தித்தால்... குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர், சுகப்பிரசவம் நிகழும் என்பது ஐதீகம்!

மூன்றாம் நாளான ஞாயிற்றுக் கிழமை, திருமணப் பெண் போல காட்சி தருகிறாள் குங்குமவல்லி. இந்தக் கோலத்தில் அம்பாளை தரிசிக்க, தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும் , வீட்டில் சீக்கிரமே மங்கல காரியங்கள் நடைபெறும் என்கின்றனர் பக்தர்கள். அன்றைய தினம், மஞ்சள் சரடு, குங்குமம், தேங்காய் - பழம், பூ ஆகியவற்றுடன் வந்து எண்ணற்ற கன்னிப் பெண்கள் அம்மனை தரிசித்துச் செல்கின்றனர்.

குங்குமவல்லி அம்பாளைத் தரிசியுங்கள். வாழ்வில் குறைவறை வாழ்வாங்கு வாழ்வீர்கள்

No comments:

Post a Comment