Wednesday 4 October 2017

காதற்ற ஊசியும் கடைவழிக்கு வாராதே


அர்த்தமுள்ள இந்துமதம்

சிவகலையும் நானும் சிவஸ்தலங்களுக்கு யாத்திரை போனோம். பிள்ளை இல்லாதவர்கள் கடைப்பிடிக்கும் இரண்டாவது வழி அதுதானே? அதிலும் பயனில்லை. சொத்துக்கு நான் வாரிசு தேடவில்லை. இல்லாததுகூட நல்லது என்று நினைத்தவன்தான். ஆயினும் தாய், என்னைப் பெற்றவள், இறந்துவிட்டால் என்னால் பெற முடியாதவள். அவளது ஆன்மத் துடிப்புக்காக இறைவனை இறைஞ்சினேன். பலன் இல்லை. ‘எங்கே மீண்டும் ஒரு சபலம் என் தாய்க்குத் தோன்றிவிடுமோ’ என்று சிவகலை அழுதாள். பனித்திருந்த அவளது கண்களை நான் துடைத்தேன். சரியாக அதைத் துடைக்கும்போது ஒரு குழந்தை அழும் சத்தம் என் காதுக்குக் கேட்டது. நான் திகைத்தேன். ‘‘ஒரு குழந்தை அழுகிறதே. உனக்குக் கேட்கிறதா?’’ என்றேன். ‘‘இல்லையே’’ என்றாள். ‘‘எங்கே மீண்டும் அழு’’ என்றேன். அவள் அழுதாள். நான் கண்ணீரைத் துடைத்தேன். கண்ணீரைத் துடைக்கும்போதெல்லாம் குழந்தை அழும் சத்தம் கேட்டது!

‘‘இறைவா, என்ன இது அதிசயம்!’’ இது ஏதோ ஒரு சோதனை என்று கருதி, அன்று இரவு அவளை விட்டுப் பிரியாமல் அவள் அருகிலேயே படுத்திருந்தேன். திடீரென்று அவள், ‘‘எனக்குப் பிள்ளை பேறு உண்டா?’’ என்று கேட்டாள். அப்படிக் கேட்ட உடனேயே மீண்டும் பிள்ளை அழும் சத்தம் கேட்டது. பிறகு நான் அவளைப் பேசவும் விடவில்லை. அழவும் விடவில்லை. ஆலிங்கனத்திலேயே தூங்கினேன்.ஒரு கனவு... ஒரு வயோதிக பிராமணரும், அவர் மனைவியும் எங்கள் வீட்டுத் திண்ணையில் உட்காருகிறார்கள். கால், கைகள் கழுவுவதற்காக ஒரு செப்புக் கலயத்தில் தண்ணீரோடு வந்த நான், அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். ‘‘என்ன வேண்டும்?’’ என்கிறேன். ‘‘எங்களுக்கு ஒன்றும் வேண்டாமப்பா, எங்கள் குழந்தையைக் காப்பாற்று’’ என்கிறார்கள். அப்படிச் சொன்னார்களே தவிர, அவர்கள் கைகளிலே குழந்தை இல்லை.

‘‘எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே குழந்தை?’’ என்கிறேன். ‘‘திருவொற்றியூரில் இருந்து வருகிறோம். குழந்தை திருவிடைமருதூரில் இருக்கிறது!’’ என்கிறார்கள். ‘என்ன இது! ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல்? திருவொற்றியூர் எங்கே? திருவிடைமருதூர் எங்கே?’ என்று நான் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது - ‘‘இந்தா! இந்தச் சேலையால் தொட்டில் கட்டு’’ என்று கூறி ஒரு பழைய சேலையைக் கொடுக்கிறார்கள். அந்தச் சேலையை நான் பிரித்து பார்க்கிறேன். அதில் சிதம்பரம் நடராஜன் கோயில் நந்தி உருவம் இருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு அவர்களைப் பார்த்தால், அங்கே அவர்கள் இல்லை. அங்கேயும், ஒரு நந்தி இருப்பது போல தெரிகிறது. என்ன இது! கூத்தன் கூத்தாடுகிறானோ? ‘‘ஐயா... ஐயா!’’ நான் கத்துகிறேன். ‘‘என்ன ஐயா?’’ என்று சிவகலை விழித்துக் கொள்கிறாள்.

நான் சுற்றுமுற்றும் பார்க்கிறேன். பிறகு நடந்ததை அவளிடம் சொல்கிறேன். பிறகு, ஏதோ இது சிவசோதனை என்று ஆறுதலடைகிறோம். மறுநாள் எனக்கு நிம்மதி இல்லை. திருவொற்றியூரில் தொடங்கி, திருவிடை மருதூர்வரை யாத்திரை போகும்படி பரமன் பணிக்கின்றானோ என ஐயமுற்றேன். தாயிடம் இதைக் கூறினேன். ‘‘ஒற்றியூரானுக்குச் சாத்துவதற்கு ஒரு வைரமாலையும், வழிநெடுக உள்ள கோயில்களுக்குப் புலிக்காசு மாலைகளும் வாங்கிக் கொண்டு, மனைவியையும் அழைத்துக்கொண்டு போய்வா மகனே!’’ என்றார்கள். சிவகலை மகிழ்ந்தாள். திருத்தல விஜயம் என்றாலே எனக்கும் மகிழ்ச்சிதான். நாங்கள் இருவரும் தாயின் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொண்டு புறப்படும்போது, எதிரிலே வந்த தமக்கை ஒரு ‘நல்ல சொல்’ சொன்னாள். ‘‘இவ்வளவு நாளாகப் பிறக்காத குழந்தை, திருவொற்றியூர் சென்றா பிறக்கப் போகிறது?’’ என்பதே அது. அவளுக்கு மூன்று குழந்தைகள். 

எங்களுக்கு குழந்தைகள் இல்லை என்றால் எங்கள் சொத்தெல்லாம் ‘தன் குழந்தைகளுக்குத்தான்!’ என்று அவள் நினைத்தாள். நினைக்கட்டும்; பேசட்டும்; கூடப் பிறந்த ரத்தம்; குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. நாங்கள் புறப்பட்டோம். ரதம் போய்க்கொண்டே இருந்தது. திடீரென்று சிவகலையின் முகம் வியர்ப்பானேன்? நல்ல காற்றோட்டத்தில் வியர்ப்பானேன்? நான் முகத்தைத் துடைத்துவிட்டேன். ‘‘ஏதோ மயக்கம்’’ என்றாள் அவள். திடீரென்று அவள் மார்பகம் நனைந்தது. ரதத்தை நிறுத்தினேன். காரணமில்லாமல் அவள் அழுதாள். கண்ணீரைத் துடைத்தேன். அப்போதும் அதே குழந்தை கத்தும் சத்தம்! இதுவும் பிரமைதானா? ரதத்தின் திரைச்சீலையை விலக்கிக்கொண்டு வெளியில் எட்டிப் பார்த்தேன். 

சாலை ஓரத்தில் ஓர் ஆலமரம், அருகிலே ஒரு தொட்டில், அதன் பக்கத்தில் ஒரு வயோதிக பிராமணரும், அவர் மனைவியும். அவர்கள் முன்னாலே யாராவது காசு போடுவார்கள் என்று விரிக்கப்பட்ட துணி. அவர்களை உற்றுப் பார்த்தேன். கனவிலே வந்த அவர்களேதான்! சிவகலையை அழைத்துக்கொண்டு அவர்கள் அருகே சென்று ‘‘ஐயா, நீங்கள் யார்?’’ என்றேன். ‘‘நாங்கள் திருவிடைமருதூர்!’’என்றார் அவர். எனக்கு மெய்சிலிர்த்தது. தொட்டிலைப் பார்த்தேன். அதே சேலை, அதே நந்தி ஓவியம்! நான் அவர் காலில் விழுந்து வணங்கினேன். அவர் என்னைக் கைத்தாங்கலாக எடுத்தார். ‘‘குழந்தை...’’ என்று இழுத்தேன். ‘‘எங்களுடையதுதான், நீண்டகாலம் கழித்துப் பிறந்தது. வயிற்றுச் சோற்றுக்கே வழி இல்லை. இதை எப்படிக் காப்பாற்றப் போகிறோம்? யாரோ பட்டினத்துச் செட்டியாம். அவனிடம் இதைக் கொடுத்தால் எடைக்கு எடை பொன் கிடைக்கும் என்று யாரோ கனவிலே சொன்னார்கள். 

நடந்தே வந்தோம். பசி தாங்கவில்லை. யாசகத்துக்காகத் துண்டைக் கீழே விரித்துப் போட்டுவிட்டு உட்கார்ந்துவிட்டோம்!’’ என்றார் அவர். அவர் கண்களிலிருந்து தண்ணீர் வடிந்தது. எனக்கு அதைத் துடைக்கவேண்டும் போல் தோன்றிற்று. துடைத்தேன். என்ன அதிசயமோ, குழந்தை சிரிக்கிற சத்தம் கேட்டது. பெரியவரையும் அவர் மனைவியையும் அழைத்துக்கொண்டு புகாருக்குத் திரும்பினேன். அது இறைவன் அனுப்பிய குழந்தை என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. தத்து எடுக்கும் விழாவைப் பிரமாதமாக ஏற்பாடு செய்தோம். ‘‘வேறு ஜாதி குழந்தையை தத்து எடுப்பது செல்லாது’’ என்று தமக்கை வாதாடினாள். ‘‘தமக்கே வேண்டும்’’ என்றுதானே ‘‘தமக்கை’ நினைப்பாள்! தங்கையாக இருந்தால், ‘தன் கையில் உள்ளது போதும்’ என்று நினைப்பாள். இதை வேடிக்கையாகச் சொல்கிறேன், சாத்திரமன்று! எங்கள் பங்காளிகள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் ேவறு ஜாதிப் பிள்ளை என்பதில் எல்லோருக்கும் குறை இருந்தது.

துலாபாரம் நடத்தினோம். குழந்தை தன் எடையைவிட அதிகமாகப் பொன்னை இழுத்தது. கடைசியில் திருவிடைமருதூர் ேகாயிலுக்காகச் செய்த காசு மாலையை அதில் போட்டோம். துலாம் சரியாயிற்று. விழா முடிந்தது. திருவிடைமருதூரார் விடைபெற்றார். பையனுக்கு ‘மருதவாணன்’ என்று பெயரிட்டு வளர்த்தோம். தான் பெற்ற பிள்ளை போலவே சிவகலைக்கு அவன் தோன்றினான்; எனக்கும் அப்படியே. பருவம் வந்தது; பையனைப் பள்ளிக்கு அனுப்பினோம். அப்பனுக்கு ஏற்றபடி பிள்ளையும் தப்பாமல் இருந்தான். அவனும் படிக்க மறுத்தான். ‘ஆண்டவனே! நீ நேரடியாகக் கொடுத்த பிள்ளையும் இப்படியா?’ என்று அவனை நொந்து கொண்டேன். பள்ளிக்கூடத்தில் குரு எல்லோரையும் கேள்வி கேட்டால், இவன் குருவைக் கேள்வி கேட்பானாம்! ‘‘ஏண்டா ஒழுங்காகப் படிக்கவில்லை?’’ என்று ஒருநாள் அவனைக் கேட்டேன். ‘‘நீங்கள் படித்தால்தானே நான் படிக்க’ என்றான் அவன். அப்போது நான் பாடினேன்: துள்ளித் திரியும் பருவத்திலே என் துடுக்கடக்கி பள்ளிக்கு அனுப்பிலனே என் தந்தையாகிய பாதகனே! எங்கள் பரம்பரைக்கே கல்வி பாக்கியம் இல்லை என்று நான் முடிவு கட்டினேன். சொத்துகளையாவது பையன் காப்பாற்றட்டும் என்று கருதினேன். ஒருநாள் கடைக்குக் கூட்டிக்கொண்டு போனேன். அங்கே அவன் ஒரு மாணிக்கத்தை எடுத்து, ‘‘அப்பச்சி, இதை நெருப்பிலே போட்டால் என்னவாகும்?’’ என்று கேட்டான்.

‘‘சாம்பலாகும்’’ என்றேன். ‘‘காய்ந்த எரு முட்டையை நெருப்பிலே போட்டால்?’’ என்றான். ‘‘அதுவும் சாம்பலாகும்’’ என்றேன். கணக்கு எழுதச் சொன்னேன். ‘‘முப்பதிலே நாற்பது போனால் எவ்வளவு?’’ என்று என்னைேய கேட்டான். ‘‘நாற்பது எப்படியடா போகும்?’’ என்றேன். போகும் என்றான். ‘‘போனால் என்ன வரும் தெரியுமா?’’ ‘‘என்ன வரும்?’’ என்றான். நான் பேசாமல் இருந்துவிட்டேன். இந்தப் பிள்ளை தேறாது என்று முடிவு கட்டினேன். சொத்துகளைப் பத்திரப்படுத்தத் தொடங்கினேன்.‘‘பையனைக் கடல்கடந்து அனுப்பினால், வாணிபத்தில் புத்தி வரும். சொத்துகளைக் காப்பாற்றும் ஆசை வரும்’’ என்று என் ஆத்தாள் சொன்னார்கள். என்னுடைய தனிக் கப்பலில் அவனைக் கடாரத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன். அவனுக்கு அதிலே மிகவும் மகிழ்ச்சி. ‘‘அப்பச்சி, கடாரத்திலே இதுவரை நீங்கள் கொள்முதல் செய்யாத பொருளெல்லாம் நான் கொள்முதல் செய்வேன்!’’ என்று சூளுரைத்தான். ‘‘மகனே, அதைத்தானடா உன்னிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்று தட்டிக் கொடுத்தேன்.

கப்பலில் அவனை ஏற்றியபோது அவன் பேசிய பேச்சுகள், வயது வந்த செட்டிப் பிள்ளையின் அனுபவ ஞானம் அவனுக்கு இருப்பதாகவே காட்டின. ‘‘அப்பத்தாளைக் கவனித்துக் கொள்ளுங்கள் அப்பச்சி!’’ என்றான். ‘‘ஆத்தாள் மோர் ஊற்றிக் கொள்ளக் கூடாது!’’என்றான். அப்பப்பா! கடல் கடந்து போகிறோம் என்றவுடன் அவனுக்கு வந்த பாசமும், பரிவும், என்னையே திகைக்க வைத்தது. எண்பத்தியாறு நாட்களுக்குப் பிறகு என் மகனை என் கப்பல் சுமந்து வந்தது. சுட்டிப் பிள்ளையாகப் போன அவன், இப்போது சிவபக்தனாகத் திரும்பி இருந்தான். கப்பலில் நான் வைத்திருந்த திருநீற்றையெல்லாம் அவன் நெற்றிதான் தாங்கிக் கொண்டிருந்தது! கப்பலிலிருந்து ஒரு சிறு கைப்பெட்டியோடு இறங்கிவந்த அவன், ‘‘அப்பச்சி! பணியாட்களை விட்டு செல்வங்களையெல்லாம் இறக்கச் சொல்லுங்கள்; நான் அப்பத்தாளைப் பார்க்கப் போகிறேன்!’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். அவன் போனதும், நானே முன்னின்று அனைத்தையும் இறக்கச் சொன்னேன். அன்று பெட்டி பெட்டியாக இறக்க வேண்டிய பொருள்கள், மூட்டை மூட்டையாக இறங்கின. 

தங்கத்தையோ, நவமணிகளையோ, மூட்டை கட்டக்கூடாதே! ஒரு மூட்டையை நான் பிரித்துப் பார்த்தேன். உள்ளே எல்லாம் எரு முட்டைகள். தவிட்டு உமிகள்! எனக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. ஒரு மூட்டையை அப்படியே தூக்கச் சொல்லி வீட்டுக்குப் போகச் சொன்னேன். ஆத்திரத்தோடு அவனைத் தேடினேன். அதிசயமாக எனக்கு ஆத்திரம் வந்ததைப் பார்த்த என் ஆத்தாள், ‘‘என்ன ஐயா ஏன் இந்தப் பதற்றம்?’’ என்றார்கள். ‘‘ஆத்தா! உன் பேரன் கொள்முதல் செய்த செல்வத்தைப் பார்த்தாயா?’’ என்று சினத்தோடு மூட்டையைக் காலால் உதைத்தேன். ஒரு மூட்டை பந்து போல் எழுந்து சுவரில் மோதி விழுந்து உடைந்தது. நான் திகைத்தேன். திணறினேன்; உள்ளே அத்தனையும் நவமணிகள்.கொட்டிக்கிடந்த தவிட்டு உமிகள் வெறும் உமிகள் அல்ல, தங்க உமிகள்! எனக்கு ஆனந்தம் தாங்கவில்லை; ஒரே கப்பலில் கோடிக்கணக்கில் செல்வம் வந்துவிட்டது; சொத்து குவிந்துவிட்டது. 

ஆசையோடும் பாசத்தோடும், ‘‘மகனே! மகனே!’’ என்று அவனைத் தேடினேன். உடனே என் ஆத்தாள், அவனது கைப்பெட்டியை என்னிடம் கொடுத்து, ‘‘இதோ பாரப்பா, அது மருக்கொள்ளிப் பிள்ளை! ‘அப்பத்தா, அப்பச்சி வந்ததும் இதைக் கொடுத்துவிடு! என்னை இனித் தேடவேண்டாம் என்று சொல்லிவிடு’ என்று சொல்லிவிட்டு போய்விட்டது!’’ என்றார்கள்.‘மறுபடியும் இது என்ன மாயவேலை?’ என்று எண்ணியவாறு நான் அந்தக் கைப்பெட்டியைத் திறந்து பார்த்தேன்.உள்ளே ஒரு காதற்ற ஊசியும் ஓர் ஓலை நறுக்கும் இருந்தன. அந்த ஓலை நறுக்கில் ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’ என்று எழுதப்பெற்றிருந்தது. என் மாளிகை என் கண்முன்னே சுழன்றது. அதிலிருந்து பொடிப்பொடியாக மாணிக்கங்கள் உதிர்ந்தன. என் தாயார் சக்திபோலத் தோற்றமளித்தார்கள். கந்தன் போலவே என் மகன் கற்பனையில் தோன்றினான். கைலயங்கிரியில் ருத்ர தாண்டவம் நடப்பதுபோல கண்ணுக்குத் தெரிந்தது.

அதுவரையில் எவ்வளவோ கண்டிருந்த எனக்கு, மிகச் சாதாரணமாகத் தெரிந்திருக்க வேண்டிய விஷயம் தெரியவில்லையே? ‘‘மகனே..!’’ என்றழைக்க நா எழுந்தது. ‘அம்மையே அப்பா’ என்றுதான் வார்த்தை வந்தது! எனக்கு ஞானம் பிறந்தது. செல்வத்தின் நிலையாமை, பளிச்சென்று, என் கண்களுக்குத் தெரிந்தது. அங்கிருந்து வீட்டுக்கு ஓடினேன். என் இல்லத்தரசி சிவகலையைப் பார்த்தேன். அந்த உருவம் எனக்குத் தெரியவில்லை; ஒரு எலும்புக்கூடே தெரிந்தது.கொஞ்சம் திருநீற்றைக் கையில் அள்ளினேன். சாம்பலாகப் போகும் கையோடு அந்தச் சாம்பல் சொந்தம் கொண்டாடிற்று. காயத்தின் நிலையாமையும் அப்போது தான் எனக்குப் புரிந்தது. ‘‘உலகியல் ஆதாரங்கள் எல்லாமே பொய்! பொய்!’’ என்று யாரோ என் தலையில் அடிப்பது போலிருந்தது. மனைவி என்றொரு விலங்கு! அவளுக்கு செல்வம் என்றொரு பேராசை! இவற்றில் எது நிலையானது?

மாடத்தின்மீது ஏறித் திறந்தவெளி மாடத்துக்குப் போனேன். புகார் நகரத்தை உற்றுக் கவனித்தேன். என் பொருள் எங்கே என்று கேட்பவனும் கையைத்தான் நீட்டுகிறான்; யாசிப்பவனும் கையைத்தான் நீட்டுகிறான். கோடி வராகனுக்குச் சொத்துள்ளவனும் ஓடிஓடித் தேடுகிறான். கும்பியை நிரப்பக் கூழுக்கு அலைபவனும் ஓடி ஆடுகிறான். பொய்பேசும் வணிகன்தான் பொருளைக் குவிக்கிறான்; உண்மையே பேசுகின்றவன் உருப்படாமல் போகிறான்.மனைவிக்குக் காவல் என்று சொத்து; சொத்துக்குக் காவல் என்று மனைவி. இந்த கொண்டாட்டத்தில் பிள்ளையோ, பிள்ளை; பொருள் அற்றுப்போனாலோ குடும்பத் தொல்லை; ஓடிவிடலாம் என்றாலோ  பாசம் போடுகிறது எல்லை. ஆப்பு அசைத்த குரங்கல்லவா மனிதன்? நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி, நலனொன்று மறியாத நாரியரைக் கூடிப் பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப் புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர் காப்பதற்கும் வகையறியீர்; கைவிடவு மாட்டீர்கவர்பிளந்த மரத்துளையிற் கால்நுழைத்துக் கொண்டே ஆப்பதனை யசைத்துவிட்ட குரங்கதனைப் போல அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே! கடல் அலைகள் நகரத்தை மோதுவதைக் கண்டேன். மோதுகின்ற அலைக்கு ஆசை வெறி; திரும்பிப் போகும் அலைக்கு ஞான வெறி.

நான் திரும்பிப்போக விரும்பினேன். எனது சமுதாய தர்மம் பூர்த்தியாகிவிட்டதாகக் கருதினேன். மனைவிக்கு மகிழ்ச்சி, சொத்து; இனி எனக்கென்ன கடமை? நான் என் சுயதர்மத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாக யாரும் சொல்லமுடியாது. நான் துறவியாக முடிவு கட்டினேன். சிவகலையிடம் சொன்னேன். அழுதாள்; கதறினாள். அவளே சிவகலை; துறவுக் கலையில் வீட்டில் இருக்க முடிவு கட்டினாள்; என் பாதங்களிலே விழுந்து வணங்கினாள்.என் மூதாதையர்களில் ஒருவர் துறவியாகப் போனவர். அவர் எங்கள் வீட்டில் விட்டுப் போன காஷாயம் ஒன்றை வைத்து, அவர் நினைவாகப் படைப்பு நடத்தி வருகிறோம். அதே காஷாயத்தை சிவகலையின் கையிலிருந்து நான் பெற்றுக்கொண்டேன். பெற்றது மனைவியிடம்; அணிவது தாயின் முன்பு என்று கருதித் தாய் தனியாக இருந்த எங்கள் பெரிய மாளிகையை நோக்கி நடந்தேன். முதலில் நான் துறந்தது, என் மனைவியை; இரண்டாவது நான் துறந்தது என் ரத்தத்தை.

பட்டினத்துச் செட்டி நடந்து போவதைப் பட்டினமே வேடிக்கை பார்த்துத் திகைத்தது. தாயிடம் சென்றேன். என் ஞானத்தைச் சொன்னேன். அவர்கள் அழவில்லை; ‘எதிர்பார்த்தேன்’ என்றார்கள். அறிவிலே குரு பேசுகிறான். அனுபவத்தில் இறைவன் பேசுகிறான். ‘‘நான் காஷாயம் அணியப் போகிறேன்; ஆசீர்வதியுங்கள்!’’ என்றேன். ‘‘அதை என் கண்முன்னாலேயே பிரித்துப் பார் மகனே!’’ என்றார்கள். பிரித்தேன்! முழுக் காஷாயமாக இல்லை. ஆறு கோவணமாக இருந்தது. ‘‘மகனே, இது என் மாமனார் சொத்து, ‘முற்றும் துறந்தவனுக்கு முழு ஆடை ஆகாது’ என்று அவர் சொல்லுவார்; அதனால் தான் உன்னைப் பிரித்துப் பார்க்கச் சொன்னேன்’’என்றார்கள். எனக்கு இரண்டாவது ஞானம் பிறந்தது. முழு ஆடையே ஒரு சொத்தல்லவா? சுமையல்லவா? நான் தனியறையில் சென்று ஆடைகளைக் களைந்து, கெளபீனதாரியாகத் தாயின்முன் வந்து நின்றேன். ‘‘மகனே, உடல்சுமை இறங்கிவிட்டது; மனச்சுமை இறங்கிவிட்டதா?’’ என்று கேட்டார்கள்.

என்ன இது அதிசயம்? லெளகீகத்தைத் தவிர ஒன்றுமே தெரியாத என் தாயாரா இப்படிப் பேசுகிறார்கள்? ‘‘மனம் ஒரு நாய்; அது கூடவே வரும்’’ என்று மேலும் உரைத்தார்கள். நான் கண்ணீரோடு, ‘‘போய் வரட்டுமா ஆத்தா?’’ என்றேன். ‘‘துறவி எங்காவது போய் வருவானா?’’ என்றார்கள். எனக்கு மூன்றாவது ஞானம் பிறந்தது. நான் அதிர்ந்த நிலையில், ‘‘ஆத்தா! நான் போகிறேன்!’’ என்றேன். ‘‘சுயதர்மத்தை முடிக்காதவன் எங்காவது போய்விடுவது உண்டா?’’ என்றார்கள்.‘‘இன்னும் எனக்கென்ன சுயதர்மம்?’’ என்றேன். ‘‘தாய், தந்தை ஒரு பிள்ளையிடம் கடைசியாக எதிர்ப்பார்ப்பது, கொள்ளி வைப்பதைத்தானே மகனே’’ என்றார்கள். ‘‘அப்படி என்றால் ‘போய் வருகிறேன்’ என்று சொல்வதுதானே ஆத்தா சரி!’’ என்றேன். ‘‘இல்லை. ‘வருகிறேன்’ என்று மட்டும் சொல்லவேண்டும். மகன் போகிறான் என்ற உணர்வு தாய்க்கு ஏற்படக் கூடாது. எப்போது வருவான் என்ற உணர்வு ஏற்பட வேண்டும். போய் வருகிறேன் என்றால் அது மனித வார்த்தை. ‘வருகிறேன்’ என்றால், அது நினைத்தால் வருவேன் என்கிற ஈஸ்வரலயம். ஒரு துறவிக்கு அந்த லயம்தானே வேண்டும்?’’ என்றார்கள்.

எனக்கு நான்காவது ஞானம் பிறந்தது. அவர்கள் காலில் விழுந்து வணங்கினேன். நான் புறப்படும்போது ஒரு சிறு சேலைத் துணியில் எதையோ முடிந்து என் இடுப்பிலே கட்டிவிட்டார்கள். அது என்னவென்று எனக்கு அப்போது தெரியவில்லை. ‘‘இந்த முடிச்சு அவிழ்ந்து விழுந்தால், நான் மரணமடையப் போகிறேன் என்று அர்த்தம். எங்கிருந்தாலும் வந்துவிடு!’’ என்றார்கள். ஈஸ்வரன் அவர்களோடு என்ன பேசினானோ அவனுக்கே வெளிச்சம்! நான் திரும்பினேன். ‘‘மகனே! உன் ஐயாவுக்கு (தாத்தாவுக்கு) ஞான தீட்சை அளித்த குருவுக்கு இப்போது நூற்றிப் பத்து வயதாகிறது. மாயூரம் சாலையில் சிவானந்த மடத்தில் இருக்கிறார். அவரிடம் தீட்சை பெற்றுக் கொள்!’’ என்றார்கள். நான் பாதி வெந்த சோறாக மாயூரம் சாலையை நோக்கிப் புறப்பட்டேன்.

சிவானந்த மடம் எங்கள் சமூகத்தினராலேயே கட்டப்பட்டது. அதை ‘ஓயா மடம்’ என்றும் கூறுவார்கள். ஞானிகள் தங்குவதற்காக மட்டுமின்றி, வழிப்போக்கர்களுக்கு அன்னமிடுவதற்காகவும் அது ஏற்படுத்தப்பட்டது. என் தந்தை, அதற்கு ஏராளமான பொருளுதவி புரிந்துள்ளார். நான் அதன் உள்ளே நுழைந்து பார்த்ததில்லை. முதன்முதலாக அதற்குள்ளே நுழைந்ததும், உள்ளே இருந்து வெளிவந்த சாதாரணப் பரதேசியிடம்கூட எனக்கு மரியாதை ஏற்பட்டது. வாசனைப் புகை கமழ்ந்தது. இளநீர், முல்லைப் பூக்களின் வாசனை வந்தது. மங்கலகரமான ஓர் எண்ணம் அதில் வேரோடியது.புனித மண்டபத்திற்குள் இந்த பூத உடல் நுழைந்தது. சமணர்களும், பிறரும்கூட காலில் விழுந்து வணங்கக் கூடிய துறவியாக, புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்திருந்தார் சிவானந்த யோகி. நான் அவர் காலில் விழுந்து வணங்கினேன். அவர் கண்ணைத் திறந்து பார்த்தார். நான் விவரங்களைச் சொல்லவே இல்லை; அவரே சொன்னார். ‘‘தண்ணீரில் குளிப்பவனுக்கு நெருப்புச் சுடும்; நெருப்பிலே குளிப்பவனுக்கு தண்ணீர் சுடும்; இரண்டுக்கும் நடுவிலே உட்கார்ந்திருப்பவனுக்கு இரண்டுமே சுடும். 

போகி நீரிலே குளிக்கிறான், யோகி நெருப்பிலே  குளிக்கிறான், ரோகி நடுவிலே நிற்கிறான். நீ போகத்துக்குத் திரும்ப நினைத்தால் முடியாது, ரோகத்திலேதான் விழ வேண்டி இருக்கும்’’ அவர் பேசி முடித்தார். என்னை ஆசீர்வதித்தார். இடது காதிலே ஒரு மந்திரத்தைச் சொன்னார். அது சைவ மந்திரம். அவர் அதைச் சொல்லும்போது, வலது காதிலே ஒரு வைணவ மந்திரம் கேட்டது. ‘பிரம்மம் ஒன்றே’ என்பதை அது உணர்த்திற்று.அந்த லயத்திலேயே நான் புறப்பட்டேன். மடத்தின் வாசலில் திருவோடு இல்லாதவர்களுக்கு அழகான திருவோடுகளை இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு வகை தர்மம். அந்தத் திருவோட்டை கையில் வாங்கிக்கொண்டு ஊரே என்னை வேடிக்கைபார்க்கும் நிலையில் நேரே என் தாயாரின் இல்லத்துக்கு வந்தேன். முதல் பிச்சையைத் தாயின் கையிலேதான் வாங்க வேண்டும்.

வீடிருக்க, தாயிருக்க, வேண்டுமனை யாளிருக்க, 
பீடிருக்க, ஊணிருக்க, பிள்ளைகளுந் தாமிருக்க, 
மாடிருக்க, கன்றிருக்க வைத்த பொருளிருக்க, 
கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமே?

- என்று ஆயிரக்கணக்கானவர்கள் வேடிக்கை பார்க்க, தாயின் இல்லத்தின் முன்னாலே நின்று, ‘தாயே பிச்சை’ என்று கோஷம் கொடுத்தேன்.

No comments:

Post a Comment