Wednesday, 4 October 2017

கோபம் - உடனிருந்தே கொல்லும் அரக்கன்


கோபம் கொள்ளாதிருத்தல் மனிதர்களின் உயரிய நற்குணங்களில் ஒன்று. சீற்றத்தைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்தைச் சொல்லவென்றே வள்ளுவர் 'வெகுளாமை’ என்ற தனி அதிகாரத்தைப் படைத்திருக்கிறார். (அதிகாரம் 31). பத்துக் குறள்களில், சீற்றத்தைத் தவிர்க்க வேண்டும் என மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறார். வெகுளி என்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு சீற்றம் அல்லது கோபம் என்பது பொருள். (இன்று வெகுளி என்ற சொல்லின் பொருள் மாறிவிட்டது. அந்தச் சொல் அப்பாவி என்ற பொருளில் பயன்படுகிறது.)

செல்லிடத்துக் காக்கின் சினம் காக்க அல்லிடத்துக் 
காக்கிலென் காவாக்கால் என்?’

தன் கோபம் எந்த இடத்தில் செல்லுமோ அந்த இடத்தில் கோபம் கொள்ளாதிருக்க வேண்டும். மற்றபடி தன் கோபம் செல்லாத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன என்று வள்ளுவர் கேள்வி எழுப்புகிறார். கணவன், மனைவி, பிள்ளைகள் ஆகியோர் ஒருவருக்கொருவர் அடிக்கடிக் கோபித்துக் கொள்வதைப் பார்க்கிறோம். கோபம் செல்லுமிடம் அது. அங்கேதான் சினத்தைக் காட்டாமல் இருக்கவேண்டும். மேலதிகாரியிடம் யாரும் கோபத்தைக் காட்டுவதில்லை. காட்டினால் வேலை போய்விடும் என்று தெரியும்! வேதாத்ரி மகரிஷி அருமையான ஒரு கேள்வியை எழுப்புகிறார். நம்மால் அதிகம் நேசிக்கப்படுகிறவர்களிடம்தான் நாம் அதிக கோபம் கொள்கிறோம். 

அதனால் அந்த நேசத்தின் பரிமாணம் குறைகிறது. நேசிப்பவர்களிடம் கோபம் கொள்வது என்ன நியாயம் எனக் கேட்கிறார் அவர். கணவன்-மனைவி இருவரும் அன்பால் பிணைப்புண்டவர்கள். ஆனால், அவர்கள்தான் ஒருவருக்கொருவர் அடிக்கடி கோபம் கொள்கிறார்கள். இதனால் மனம் சாந்தி இழக்கிறது. வாழ்க்கை கசக்கிறது. கணவன் -மனைவி இருவரும் என்ன நேர்ந்தாலும் ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று பழகிவிட்டால் வாழ்க்கை எத்தனை இனிக்கும்! கணவனும் மனைவியும் இறுதிவரை ஒன்றாக வாழப் பிறந்தவர்கள், வாழ வேண்டியவர்கள், அவ்விதம் வாழ்வதைத் தவிர்க்க இயலாதவர்கள். அப்படியிருக்க கோபத்தால் வாழ்வின் நிம்மதியை இழக்க வேண்டிய அவசியம் என்ன?

'செல்லா இடத்துச் சினம்தீது செல்லிடத்தும் 
இல்லதனின் தீது பிற.’

தன் சினத்தால் வெற்றிகொள்ள இயலாத வலியவரிடத்தில் சினத்தைக் காட்டுவது கெடுதலாகவே முடியும். அதேநேரத்தில் சினத்தால் வெற்றி கொள்ளக்கூடிய மெலியவரிடத்தில் சினம் கொள்வதும் கெடுதல்தான். எனவே நம்மை விட வலியவரோ, மெலியவரோ இரு தரப்பினரிடமும் சினம் கொள்ளாதிருத்தலே நல்லது. கோபம் கொள்வதில் புகழ்பெற்ற துர்வாச மகரிஷி ஒருமுறை மன்னன் அம்பரீஷனைச் சந்திக்கச் சென்றார். திருமால் பக்தனான அம்பரீஷன் துவாதசி விரதம் இருந்த தருணம் அது. ஏகாதசி அன்று முழுப்பட்டினி இருந்து துவாதசியன்று உணவுண்டு அந்த விரதத்தை முறிப்பது என்பது விரத நியதி. ஆனால், விரதம் முடியும் நேரத்தில் வந்த துர்வாசர், தான் நீராடிவிட்டு வருவதாகவும் பின்னர் உணவுண்பதாகவும் சொல்லிவிட்டு நதியில் நீராடச் சென்றார். சென்றவர் சென்றவரே. அவர் வரக் காலதாமதம் ஆகியது. 

விருந்தாளியை விட்டுவிட்டு உணவுண்பது எப்படி? ஆனால், அவர் வரத் தாமதமானால் துவாதசியின் போது உணவுண்ண வேண்டும் என்ற விரத நியதி கெட்டுவிடுமே? குரு வசிஷ்டர் ஆலோசனைப்படி திருமாலைப் பிரார்த்தனை செய்து சிறிதளவு துளசி தீர்த்தத்தை உணவாக உண்டு விரதத்தை நிறைவு செய்து, பின் துர்வாச மகரிஷிக்காகக் காத்திருந்தான் மன்னன் அம்பரீஷன். வந்தார் துர்வாசர். அவர் கோபம் அவருக்கும் முன்பாக வந்தது! ‘எப்படி அதிதி உபசாரம் செய்யாமல் நீ துளசி தீர்த்தம் அருந்தலாம்?’ எனச் சீறினார். தன் முடியில் ஒன்றை எடுத்துப் போட்டு பூதத்தை உருவாக்கி அம்பரீஷனைக் கொல்லச் சொன்னார். பூதம் அம்பரீஷனை நெருங்கியது. திருமால் பக்தனல்லவா அந்த மன்னன்! அவன் மனம் திருமாலைச் சரணடைந்தது. 

ஒரு பூதத்தை உருவாக்கித் தன் பக்தன் மேல் ஏவிய துர்வாசர் மேல், ஐம்பூதங்களையும் உருவாக்கிய திருமாலுக்குக் கோபம் வந்தது! உடனே திருமால் ஏவிய சக்கராயுதம் பூதத்தைக் கொன்று துர்வாசரைத் துரத்தத் தொடங்கியது! துர்வாசர் செல்லா இடத்தில் சினம் கொண்டதால் ஏற்பட்ட பின்விளைவை அனுபவிக்கலானார். சக்கராயுதத்திற்குப் பயந்து ஓடலானார் துர்வாசர். சிவலோகத்திற்கும் பிரம்மலோகத்திற்கும் சென்று பாதுகாப்பு வேண்டினார். சிவனும், பிரம்மனும் அவரைக் கைவிட்டார்கள். திருமாலையே சரணடைந்தார். திருமாலோ தன்னைவிட தன் பக்தன் பெரியவன் என்றும் அதனால் அந்த அம்பரீஷனையே சரணடையுமாறும் உத்தரவிட்டார். அதன்படி அவர் அம்பரீஷனைச் சரணடையவே சக்கராயுதம் அவரைத் துரத்துவதை நிறுத்தியது என்றும் அவ்விதம் அவர் உயிர் தப்பினார் என்றும் சொல்கிறது புராணக் கதை. தம் சினம் யாரிடம் செல்லாதோ அவரிடம் சினம் கொள்ளக் கூடாது என்கிறதே வள்ளுவம், அந்தக் கருத்தின் விளக்கமாக அமைந்த சம்பவம் இது. 

'மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய 
பிறத்தல் அதனால் வரும்.’

சினம் கொள்வது தீமைகளையே கொண்டுதரும். அதனால் யாரிடத்தும் சினம் கொள்வதை அறவே மறந்துவிடுதல் நல்லது. 

'நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் 
பகையும் உளவோ பிற.’

முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்வது சினம். அதைவிட ஒரு மனிதனுக்குப் பெரிய பகை வேறில்லை. 

'தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் 
தன்னையே கொல்லும் சினம்.’  

ஒருவன் தன்னைத் துன்பம் நெருங்காமல் காப்பாற்றிக்கொள்ள விரும்பினால், சினம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்விதம் காக்கத் தவறினால் அந்தக் கோபமே அவனைக் கொன்றுவிடும். சினம் தன்னையே கொன்றுவிடும் என்ற வள்ளுவக் கருத்தை இன்றைய மருத்துவ விஞ்ஞானமும் ஆதரிக்கிறது. சினம் ரத்த அழுத்தத்தை மிகுதிப்படுத்திப் பல்வேறு நோய்கள் வரக்காரணமாகிறது. நோய்கள் காலப்போக்கில் மனிதனைக் கொல்லும் வலிமை படைத்தவை. எனவே ஆரோக்கியத்தோடு நீண்டநாள் வாழ விரும்புகிறவர்கள் கோபம் கொள்ளாமல் இருக்கப் பழகவேண்டும். 

'சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்  
ஏமப் புணையைச் சுடும்.’ 

சினம் சாதாரணமானது அல்ல. அது சேர்ந்தவர்களையெல்லாம் அழிக்கக் கூடியது. அது துன்பக் கடலில் தான் மூழ்கும்போது தன்னைப் பாதுகாக்கும் படகு போன்ற சுற்றத்தாரையெல்லாம் கூடச் சுட்டுவிடும். சினம் உறவு, நட்பு இரண்டையும் அழித்துவிடும்.

'சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு 
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.’ 

நிலத்தை ஓங்கி அறைந்தவன் கை என்னாகும்? அளவற்ற துன்பத்தை அடையும். அதுபோல தன் ஆற்றலை உணர்த்துவதற்காக சினத்தைக் கைக்கொண்டவனும் கட்டாயம் துன்பமடைவான். 

'இணரெரி தோய்வன்ன இன்னா செயினும் 
புணரின் வெகுளாமை நன்று.’ 

நெருப்பில் மூழ்க வைப்பது போன்ற கொடுமையை ஒருவன் நமக்குச் செய்வானாயினும் அவனிடமும் இயலுமானால் கோபம் கொள்ளாதிருப்பதே நல்லது. 

'உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் 
உள்ளான் வெகுளி எனின்.’

ஒருவன் மனத்தாலும் சினம் கொள்ளாதவனாக இருப்பானென்றால், தான் பெறவேண்டும் என்று நினைத்த அனைத்தையும் அவன் 
பெறுவான்.   

'இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் 
துறந்தார் துறந்தார் துணை.’ 

அளவுக்கு மீறிச் சினம் கொள்பவர்கள் இறந்தவருக்குச் சமமானவர்கள். ஆனால் சினத்தைத் துறந்தவர்களோ துறவிகளைப் போலப் போற்றப்படுவர். சினம் கொள்பவர்கள் சற்றுச் சிந்தித்தால் சினத்தைத் தவிர்த்துவிட முடியும். சினம் வருகிறபோது புத்தி மழுங்குகிறது. எனவேதான் இன்றைய உளவியல் வல்லுநர்கள் சினம் வந்தால் எதுவும் பேசாமல் ஒன்றிலிருந்து நூறு முடிய எண்களை வரிசையாக மனத்திற்குள்ளேயே எண்ணுமாறு சொல்கிறார்கள். அப்படி எண்ணுகிறபோது மனம் வேறுபக்கம் திருப்பப்படுகிறது. அப்போது சினத்தின் தீவிரம் மட்டுப்படுகிறது. சிறைக் கைதிகளின் வரலாற்றை விசாரித்தால் அவர்கள் செய்த கொலைக் குற்றங்கள் யாவும் திடீரென்று எழுந்த சினத்தால் இழைக்கப்பட்டவை என்பதை அறியலாம். குற்றத்தைச் செய்த பின்னர் அவர்களே தாங்கள் செய்த குற்றங்கள் குறித்துக் கழிவிரக்கம் கொள்கிறார்கள். 

சினத்தைச் சற்றுநேரம் தவிர்த்திருந்தால் அவர்கள் குற்றம் இழைத்திருக்கமாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் குற்றம் செய்தது அவர்களே அல்ல. அவர்களுடைய கோபமே குற்றத்தைச் செய்தது! கோபத்தின் காரணமாக புத்தி மழுங்குகிறது. அளவற்ற கோபம் கொள்ளும் துர்வாசருக்கும் அப்படி புத்தி மழுங்கிய சந்தர்ப்பம் ஒன்று உண்டு. அவரது அர்த்தமற்ற கோபத்தால் பாதிக்கப்பட்டாள் ஓர் அபலைப் பெண். துஷ்யந்தனின் மனைவியான சகுந்தலைதான் அவள். மன்னன் துஷ்யந்தனைக் கானகத்தில் கண்டு காதல் கொண்டு காந்தர்வ விவாகம் செய்துகொண்டாள் சகுந்தலை. கருவுற்றாள். நாடுசென்று மீண்டும் வந்து அழைத்துச் செல்வேன் என உறுதிகூறி விடைபெற்றான் துஷ்யந்தன். ஆனால், அவன் வரத் தாமதமாயிற்று. பிரிவுத் துயரால் ஏங்கித் துஷ்யந்தன் நினைவில் தோய்ந்திருந்தாள் சகுந்தலை.

அப்போது அங்கு வருகை புரிந்தார் துர்வாசர். மனமெல்லாம் துஷ்யந்தனை நினைத்திருந்த அவள் துர்வாசர் வந்ததை உணரவே இல்லை. தனக்கு உரிய மரியாதையை அவள் தரவில்லை என்றெண்ணிய துர்வாசர் கடும்கோபம் கொண்டார். ஞானதிருஷ்டியால் அவள் துஷ்யந்தன் நினைவில் தோய்ந்திருப்பதை உணர்ந்தார். ‘நீ யாரை நினைத்திருக்கிறாயோ அவன் மனம் உன்னை மறக்கட்டும்,’ எனச் சபித்தார். தோழிகள் ஓடோடி வந்து சகுந்தலையை உலுக்கினார்கள். அப்போது தான் நினைவு மீளப்பெற்றாள் சகுந்தலை. நடந்ததை அறிந்து வருந்தினாள். சாப விமோசனம் வேண்டினாள். துஷ்யந்தன் அணிவித்த மோதிரத்தைப் பார்த்தால் அவனுக்கு அவள் நினைவு திரும்பும் எனச் சாப விமோசனம் அருளினார் மகரிஷி துர்வாசர். இப்படித் தொடர்கிறது காளிதாசனின் சாகுந்தலக் கதை. 

ஆனால், துர்வாசர் சபித்தது நியாயம்தானா? அவரே துஷ்யந்தன் நினைவில் சகுந்தலை தோய்ந்திருந்தாள் என்பதை அறிகிறாரே? அப்படியிருக்க, தான் வந்ததையே அறியாதவள் எப்படித் தனக்கு மரியாதை செய்வாள் என அவர் யோசித்திருக்க வேண்டாமா? அவர் வந்ததை அறிந்து அவள் மரியாதை செய்யாதிருந்தால் அது தவறு. ஆனால் வந்ததை அறியாது மரியாதை செய்யாதிருப்பது எப்படித் தவறாகும்? ஞான திருஷ்டியால் முக்காலமும் உணரவல்ல முனிவர் பெருமானுக்கு இந்தச் சாதாரண உண்மை தெரியாமல் போனது ஏன்? துர்வாசரின் கோபத்தால் சகுந்தலை இடர்ப்பட வேண்டும் என்பது விதி. அந்த விதியே துர்வாசரிடம் நியாயமற்ற கோபத்தைத் தோற்றுவித்ததோ? முனிவர்களில் துர்வாசரைப் போலவே அதிகம் கோபம் கொள்ளும் இன்னொரு முனிவர் விஸ்வாமித்திரர். ராமனையும் லட்சுமணனையும் பிரிய இயலாத தசரதர், விஸ்வாமித்திரர் வந்து கேட்டபோது அவரின் கோபத்திற்கும் அவர் தரக்கூடிய சாபத்திற்கும் அஞ்சித்தான் ராம, லட்சுமணரை அவருடன் அனுப்பிவைத்தார் என்கிறது ராமாயணக் கதை. 

கோபம் இருக்குமிடத்தில் காமமும் இருக்கும் என்றும் காமமும், கோபமும் இரட்டைக் குழந்தைகள் என்றும் சொல்கிறார்கள். அதிகக் கோபம் கொள்ளும் விஸ்வாமித்திரர், அதிகக் காமம் கொண்டவராகவும் இருந்தார். தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாமல்தான் மேனகையுடன் இல்லற வாழ்வு நடத்தினார். அந்த இல்லறத்தில் பிறந்த குழந்தைதான் சகுந்தலை. தாயாலும் தந்தையாலும் புறக்கணிக்கப்பட்ட அந்தக் கால 'தொட்டில் குழந்தை’ அவள்! கண்வ மகரிஷி அவளை எடுத்து வளர்த்தார். தாய் தந்தையால் புறக்கணிக்கப்பட்டவள், கணவனாலும் புறக்கணிக்கப்பட நேர்ந்தது அவள் வாழ்வின் சோகம். பாவங்களிலெல்லாம் பெரிய பாவம் கோபம். பல பாவங்கள் நிகழக் காரணமாக இருப்பதும் கோபம்தான். புத்தர், வள்ளலார், ரமணர், பரமாச்சாரியார் போன்ற மெய்ஞ்ஞானிகளின் வரலாற்றைப் பார்த்தால் அவர்கள் கோபம் கொண்டதாகவே தெரியவில்லை. 

ஐம்புலன்களை வெல்லும் ஆற்றல் படைத்தவர்கள் கோபத்தையும் வெல்கிறார்கள். கோபத்தை வென்றவர்களே மாறாத சாந்தியையும் மட்டற்ற நிம்மதியையும் அடைகிறார்கள். 'உங்களுக்குக் கோபம் சற்று அதிகம் வரும் என்று சொன்னார்களே!’ என்றேன் ஒரு நண்பரிடம். `யார் அப்படித் தவறான தகவல் தந்தது? சொல்லுங்கள். சொன்னவரை உண்டு இல்லை எனச் செய்துவிடுகிறேன். எனக்காவது கோபம் வருவதாவது! நான் எத்தனை அமைதியானவன் தெரியுமா? ஹூம்!’ எனக் கடும் கோபத்தோடு உறுமினார் அந்த நண்பர்!! 

No comments:

Post a Comment