Sunday 8 October 2017

தீ மிதி விழா நடக்கும் ஆஞ்சநேயர் கோயில் : மெட்டாலாவில் அருள்பாலிக்கிறார்


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்ஆத்தூர் சாலையில் ஆனந்தாயா மலையடிவாரத்தில் அமைந்துள்ள  மெட்டாலா கணவாய் ஆஞ்சநேயர் கோயில் வியப்பூட்டும் அற்புதங்கள் நிறைந்தது. கோரையாற்றின் கரையில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் கோயிலின் தோற்றமே வித்தியாசமானது. உருண்டை பாறைக்கல்லை பிரதானமாக வைத்து மகா மண்டபம்  கட்டப்பட்டுள்ளது. அந்த பாறையில் இரண்டடி உயரத்தில் புடைப்புச் சிற்பமாக காட்சியளிக்கிறார் ஆஞ்சநேயர். நின்ற நிலையில், சாந்த சொரூபியாக காட்சியளிக்கும் ஆஞ்சநேயரை செப்பு பட்டையங்கள் கொண்டு அலங்கரித்துள்ளனர். நாமக்கல் நரசிம்மர் குடவறைக் கோயிலை கட்டிய  அதியன் குணசீலன் என்ற, எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னன்  உருவாக்கிய  கோயில் இது. குடவறைக் கோயில் காவல் தெய்வமாக இந்த  அனுமன் சிலை செதுக்கப்பட்டுள்ளது. 

சங்ககிரி மலையில் எண்திசைக்  காவலர்களாக,  இதே தோற்றத்தில் ஆஞ்சநேயரின் உருவங்கள் சிறியதும் பெரியதுமாக  காணப்படுகின்றது. பரமத்தி கோட்டையண்ணன் கோயிலிலும் இதேபோன்ற ஆஞ்சநேயரை பெரிய வடிவில் தரிசிக்கலாம். ஆஞ்சநேயர் கோயிலை அடுத்து சிவன், விநாயகர், நவக்கிரக கோயில்கள் இருக்கிறது. கோயிலுக்கு எதிரே கடும் கோடையிலும் வற்றாமல் சலசலத்து ஓடும் காவிரியை கோரையாறு என்கின்றனர் மக்கள். கோரைப் புற்களுக்கு இடையே ஓடிக்கொண்டிருப்பதால் கோரையாறு  என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. கன்னிமார் ஊற்று என்ற சிறு சுனை அருவியும் உண்டு. கொடிய மிருகங்கள் உலவும் வனமாக விளங்கிய மெட்டாலா கணவாய், ஆஞ்சநேயர் கோயில் கொண்டவுடன் அழகிய நந்தவனமாக மாறிவிட்டது. இதை நினைவு படுத்தும் வகையில், பூச்செடிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் அழகிய நந்தவனம் கண்ணுக்கு இதமளிக்கிறது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் குண்டம் இறங்குதல் என்னும் தீ மிதி திருவிழா நேர்த்திக்கடன் நடந்து வருகிறது. ஆனால் இதர தெய்வங்களுக்கு இந்த நேர்த்திக்கடனை பக்தர்கள் செய்வதில்லை. அதே ேநரத்தில் மெட்டாலா கணவாய் ஆஞ்சநேயர் கோயிலில் தீமிதி திருவிழா நேர்த்திக்கடன் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடக்கிறது. பங்குனி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நடக்கும் தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அக்னி குண்டத்தில் இறங்கி, மனமுருக ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர். இதன் மூலம் தமிழகத்திலேயே தீமிதி திருவிழா நடக்கும் ஒரே ஆஞ்சநேயர் கோயில் என்ற பெருமையும், மெட்டாலா ஆஞ்சநேயர்  கோயிலுக்கு உண்டு.

இந்த கோயிலில் மந்திகள் அதிகளவில் வாசம் செய்கின்றன. ஆஞ்சநேயரின் அவதாரங்களான மந்திகள், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்த இடையூறும் செய்வதில்லை.  ஆஞ்சநேயரின் பலதரப்பட்ட வடிவங்கள் கொண்ட சிறு சிலைகள் இருக்கின்றன. புளியமரமே, கோயிலின் தலவிருட்சமாக இருக்கிறது. கோயிலின் பின்புறத்தில் சிறு வடிவில் உள்ள ஆஞ்சநேயர் சிலைகளுக்கு எதிரில் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, சோட்டானிக்கரை பகவதி அம்மன், கொல்லூர் மூகாம்பிகை அம்மன், திருக்கடையூர் அபிராமி, காசி விசாலாட்சி காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன், சமயபுரம் மாரியம்மன், சரஸ்வதி பராசக்தி, லட்சுமி, புவனேஸ்வரி போன்ற சிற்பங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.  மெட்டாலா கணவாய் ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி,  சரீர  பலம், கீர்த்தி, அஞ்சாமை, நோயின்மை, தளர்ச்சி இன்மை, வாக்கு  சாதூர்யம் கிடைக்கும் என்பது ஆண்டாண்டு காலமாய் தொடரும் நம்பிக்கை.

No comments:

Post a Comment