அபூர்வ ஸ்லோகம்
(நாராயண பட்டத்திரி, குருவாயூரப்பனைப் போற்றிப் பாடிய ‘நாராயணீயம்’ தொகுதியிலிருந்து எடுக்கப்பட்ட வாமன-த்ரிவிக்ரம அவதார ஸ்லோகங்கள் இவை. குருவாயூரப்பனான கிருஷ்ணனிடமே அவன் தொடர்பு கொண்டிருந்த சம்பவங்களைச் சொல்லி நெகிழும் அற்புதமான ஸ்லோகங்கள். இந்த ஸ்லோகங்களைப் படித்தால் வாழ்வில் பல உயரங்களை எட்டும் பாக்யம் கிட்டும் என்பது ஆன்றோரின் அருள்வாக்கு.)
வாமன அவதாரம்
சக்ரேண ஸம்யதி ஹதோபி பலி: மஹாத்மா
சுக்ரேண ஜீவிததனு: க்ரது வர்த்திதோஷ்மா
விக்ராந்திமான் பயநிலீந ஸூராம் த்ரிலோகீம்
சக்ரே வசே ஸ தவ சக்ரமுகாந் அபீத:
பொருள்: கிருஷ்ணா, குருவாயூரப்பா, பரந்த மனம் உடைய பலி என்ற அசுரன் இந்திரனால் கொல்லப்பட்டபோதும், சுக்ராச்சாரியாரால் உயிர் பிழைத்தான். பின்னர் சுக்ராச்சாரியார் மேற்கொண்ட விஸ்வஜித் என்ற யாகம் மூலமாக மிகுந்த சக்தியையும், வலிமையையும் பெற்றான். அதனால் உன்னுடைய சக்ராயுதத்திற்குக் கூட பயப்படாமல் அனைத்து உலகங்களையும் தன் வசமாக்கினான். தேவர்களை ஓடி ஒளிய
வைத்தான்.
புத்ரார்த்தி தர்சன வசாத் அதிதி: விஷண்ணா
தம் காச்யபம் நிஜபதிம் சரணம் ப்ரபந்நா
த்வத் பூஜநம் ததுதிதம் ஹி பயோ வ்ரதாக்யம்
ஸா த்வாதசாஹம் அசரத் த்வயி பக்தி பூர்ணா
பொருள்: குருவாயூரப்பா, தனது புத்திரர்
களான தேவர்கள் நிலையைக் கண்ட அவர்கள் தாயான அதிதி, வருத்தம் கொண்டாள். (காசியப முனிவருக்கும் திதிக்கும் பிறந்தவர்கள் அசுரர்கள்; அவருக்கும் அதிதிக்கும் பிறந்தவர்கள் தேவர்கள்.) தனது கணவரான காசியப முனிவரின் பாதங்களில் விழுந்து சரணம் அடைந்தாள். அவரும் பயோவ்ரதம் என்னும் பெயர் கொண்ட உன்னுடைய பூஜையை அவருக்கு உபதேசித்தார். அவளும் அந்தப் பூஜையை மிகுந்த பக்தியுடன் பன்னிரண்டு நாட்கள் செய்தாள்.
தஸ்ய அவதௌ த்வயி நிலீனமதே: அமுஷ்யா
ச்யாம: சதுர்புஜ வபு: ஸ்வயம் ஆவிராஸீ!
நம்ராம் ச தாம் இஹ பவத்தனய: பவேயம்
கோப்யம் மதீக்ஷணம் இதி ப்ரலபன் அயாஸீ:
பொருள்: குருவாயூரப்பா, அத்தகைய விரதத்தின் இறுதியில் அதிதி உன்மீது தனது மனதை முழுவதுமாக செலுத்தியிருந்தாள். அப்போது நீ அவளுக்கு முன்பாக கறுத்த உனது திருமேனியுடன், நான்கு திருச்சக்கரங்களுடன் கூடிய உருவமாகத் தோன்றினாய். அவள் உன்னைக் கண்டதும் துதித்து நின்றாள். நீ அவளிடம், ‘‘நான் உனக்கு மகனாகப் பிறக்கப் போகிறேன். இவ்விதமாக என்னை நீ இங்கு பார்த்த காட்சியை ரகசியமாக வைத்துக் கொள்’’ என்று கூறி மறைந்தாய்.
த்வம் காச்யபே தபஸி ஸந்நிததத் ததானீம்
ப்ராப்த: அஸி கர்ப்பம் அதிதே: ப்ரணுத: விதாத்ரா
ப்ராஸுத ச ப்ரகட வைஷ்ணவ திவ்ய ரூபம்
ஸா த்வாதசீ ச்ரவண புண்யதினே பவந்தம்
பொருள்: குருவாயூரப்பா, அதன் பின்னர் காசியப முனிவரின் தவ வலிமையால் உண்டான வீரியத்தில் நீ புகுந்தாய். அதன்மூலம் அதிதியின் கர்ப்பத்தில் புகுந்தாய். அப்போது பிரம்மதேவன் உன்னைத் துதித்தான். அதிதியானவள் ஒளி வீசும்படியான சங்கு சக்கரம் கொண்ட திருமேனி உடைய உன்னை, துவாதசி திதியன்று, சிரவண நட்சத்திர தினத்தில் பெற்றாள்.
புண்யாச்ரமம் தம் அபிவர்ஷதி புஷ்பவர்ஷை:
ஹர்ஷாகுலே ஸுரகுலே க்ருததூர்ய கோஷே
பத்வா அஞ்சலிம் ஜய ஜயேதி நுத: பித்ருப்யாம்
த்வம் தத் க்ஷணே படுதமம் வடுரூபம் ஆதா:
பொருள்: குருவாயூரப்பா, நீ பிறந்ததால் மிகுந்த புண்ணியம் அடைந்த காசியபரின் ஆசிரமத்தை அனைத்து திசைகளில் இருந்தும் மலர்கள் தூவி ஸ்தோத்திரம் செய்தனர். உனது பிறப்பால் மிகுந்த மகிழ்வுற்ற தேவர்கள் இப்படிச் செய்தனர். உனது தாய், தந்தை உன்னை வாழ்த்தினர். அந்த நொடியிலேயே நீ பிரம்மச்சாரியாக உனது உருவத்தை மாற்றிக்கொண்டாய்.
தாவத் ப்ரஜாபதிமுகை: உபனீய மௌஞ்ஜீ
தண்ட அஜின அக்ஷ வலயாதிபி: அர்ச்யமாந:
தேதீப்யமாந வபு: ஈச க்ருத அக்னிகார்ய:
த்வம் ப்ராஸ்திதா: பலிக்ருஹம் ப்ரக்ருத அச்வமேதம்
பொருள்: குருவாயூரப்பா, அப்போது உனது தந்தையான காசியப பிரஜாதிபதி உனக்கு உபநயனம் செய்துவைத்தார். நீ மௌஞ்சி என்னும் இடுப்பில் உள்ள கயிறு, பலாசதண்டம், கிருஷ்ணாஜினம் என்னும் மான்தோல், ருத்ராட்ச மாலை ஆகியவற்றை அப்போது அணிந்தாய். அதன் பின்னர் நீ உனது அக்னி ஹோமத்தைச் செய்தாய். தொடர்ந்து, மகாபலி நடத்தும் அஸ்வமேத யாகம் நடைபெறுகின்ற இடத்தை நோக்கிப் புறப்பட்டாய்.
காத்ரேண பாவி மஹிமோசித கௌரவம் ப்ராக்
வ்யா வ்ருண்வதா இவ தரணீம் சலயந் அயாஸீ:
சத்ரம் பரோஷ்மதிரணார்த்தம் இவ ஆததாந:
தண்டம் ச தானவ ஜனேஷு இவ ஸந்நிதாதும்
பொருள்: குருவாயூரப்பா, பின்னால் உனக்கு உண்டாகப் போகும் பெருத்த மகிமையை இப்போதே இந்தப் பூமி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக உனது உடல் அசைவின் மூலம் பூமியே நடுங்கும்படி நடந்தாய். அரக்கர்களின் பெருமையை மறைப்பது போன்று உனது கைகளில் குடை இருந்தது. அசுரர்களை ஒடுக்குவதற்காக கையில் தண்டம் இருந்தது. இப்படியாக நீ சென்றாய்.
தாம் நர்மதோத்தரதடே ஹயமேதசாலாம்
ஆஸேதுஷி த்வயி ருசா தவ ருத்ததேத்ரை:
பாஸ்வாந் கிம் ஏஷ: தஹனோ நு நைத்குமாரோ
யோகீ நு கோ அயம் இதி சுக்ரமுகை: சசங்கே
பொருள்: குருவாயூரப்பா, நர்மதை ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டிருந்த அந்த அஸ்வமேத யாகசாலையை நீ அடைந்தாய். அப்போது உனது உடலில் இருந்து தோன்றிய ஒளி மிகவும் பிரகாசமாக இருந்தது. அந்த ஒளியால் தங்கள் கண்கள் கூசியதால் பார்வை பாதிக்கப்பட்டு விளங்கிய சுக்ராச்சாரியார் போன்ற முனிவர்கள் உன்னைக் கண்டு, ‘இந்தச் சிறுவன் யார்? சூரியனா, அக்னி தேவனா? முனிவரான ஸனத் குமாரரா?’ என்று சந்தேகத்துடன் கேட்டனர்.
ஆநீதம் ஆசு ப்ருகுபி: மஹஸா அபிபூைத:
த்வாம் ரம்யரூபம் அஸுர: புலகாவ்ருதாங்க:
பக்த்யா ஸமேத்ய ஸுக்ருத: பரிபூஜ்ய பாதௌ
தத்தோயம் அந்வத்ருத மூர்த்தநி தீர்த்த தீர்த்தம்
பொருள்: குருவாயூரப்பா, உன்னுடைய ஒளியைக் கண்டு திகைத்து நின்ற சுக்ராச்சாரியார் போன்றவர்கள் சுதாரித்துக் கொண்டு உன்னை வரவேற்றனர். மிகுந்த அழகிய உருவம் படைத்த உன்னைக் கண்டவுடன் மஹாபலிக்கு மெய் சிலிர்த்தது. அவன் விரைந்து உன்னிடம் வந்து உனது திருவடிகளை நீரில் கழுவினான். எந்தவித சுத்தமான நீரையும் புனிதமாக்கும் அந்த நீரை தனது தலையில் தெளித்துக் கொண்டான்.
ப்ரஹ்லாத வம்ச ஜதயா க்ரதுபி: த்வஜேஷு
விச்வாஸத: து ததிதம் திதிஜோபி லேபே
யத்தே பதாம்பு கிரீசஸ்ய சிரோ பிலால்யம்
ஸ த்வம் விபோ குருபுராலய பாலயேதா:
பொருள்: எங்கும் உள்ளவனே, குருவாயூரப்பா, உனது பாதங்கள் கழுவப்பட்ட நீரானது சிவனின் தலையில் வைத்துக் கொண்டாடும் அளவிற்கு உயர்ந்தது. அத்தனை உயர்வான நீரை திதியின் மகனான அசுரன் தனது தலையில் தெளித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது என்றால், அது அவன் பிரஹலாதனின் குலத்தில் தோன்றியதால் அல்லது யாகம் செய்தால் அல்லது அந்தணர்களை மதிப்பதால் ஆகும். இவ்வாறு அவனுக்கு அருள்புரியும் ஸ்ரீஅப்பனே, என்னையும் காக்க வேண்டும்.
த்ரிவிக்ரம அவதாரம்
ப்ரீத்யா தைத்ய: தவ தனுமஹ:
ப்ரேக்ஷணாத் ஸர்வதாபி
த்வாம் ஆராத்யந் அஜித ரசயந்
அஞ்ஜலிம் ஸஞ்ஜகாத
மத்த: கிம் தே ஸமலபிஷிதம்
விப்ரஸுனோ வத த்வம்
வ்யக்தம் பக்தம் பவனம் அவனீம்
வாபி ஸர்வம் பிரதாஸ்யே
பொருள்: குருவாயூரப்பா, யாராலும் வெல்லப்பட முடியாதவனே! உனது உடலில் இருந்து வெளிப்பட்ட கம்பீரமான ஒளியைக் கொண்டு உன்மீது மிகுந்த அன்பு கொண்ட மகாபலி, உன்னை நோக்கி கைகளைக் கூப்பினான். அதன்பிறகு உன்னிடம், ‘‘அந்தணச் சிறுவனே, உனக்கு வேண்டியது என்ன? உணவா, வீடா, நிலமா அல்லது இவை அனைத்துமா, எது வேண்டும், கேள், தருகிறேன்’’ என்று கூறினான்.
தாம் அக்ஷீணாம் பலிகிரம் உபாகர்ண்ய
காருண்ய பூர்ண: அபி
அஸ்ய உத்ஸேகம் ச மயிதுமனா:
தைத்யவம்சம் ப்ரசம்ஸன்
பூமிம் பாதத்ரய பரிமிதாம்
ப்ரார்த்தயாம் ஆஸித த்வம்
ஸர்வம் தேஹீதி து நிகதிதே கஸ்ய
ஹாஸ்யம் நவாஸ்யாத்
பொருள்: குருவாயூரப்பா, மகாபலியின்
வார்த்தைகளைக் கேட்ட, எந்த செல்வக் குறையுமில்லாத நீ, கருணையுடன் அமைதியாக நின்றாய். அவன் கர்வத்தை அடக்குவதற்காக அவனது குலத்தை உயர்வாகப் புகழ்ந்து பேசினாய். பின்னர் அவனிடம், ‘‘என் கால்களில் மூன்று அடி அளவு நிலம் வேண்டும்’’ என்று நீ கேட்டாய். உனது சிறிய வடிவத்தைக் கண்டும், உனது கால்களின் அளவு கண்டும், உனது இந்த யாசகத்தை நினைத்தும் யார்தான் சிரிக்க மாட்டார்கள்?
விச்வேசம் மாம் த்ரிபதம் இஹ கிம்
யாசஸே பாலிச: த்வம்
ஸர்வாம் பூமிம் வ்ருணு கிம் அமுனா
இதி ஆலபத் த்வாம் ஸ த்ருப்யந்
யஸ்மாத் தர்பாத் த்ரிபத ப்ரிபூர்த்ய
க்ஷம: க்ஷேமவாதான்
பந்தம் ச அஸௌ அகமத்
சுததர்ஹோபி காடோபசாந்த்யை
பொருள்: குருவாயூரப்பா, இதனைக் கேட்ட மகாபலி உன்னிடம், ‘நான் மூன்று உலகங்களுக்கும் தலைவன். என்னிடம் வெறும் மூன்று அடிகளையா யாசிப்பது? இத்தனை சிறிய இடத்தினைப் பெற்று என்ன பயன்? நீ கேட்பது பேதைத்தனமாக உள்ளதே’ என்று மிகுந்த கர்வத்துடன் கூறினான். இந்தக் கர்வத்தினால் மட்டுமே அவனால் அந்த மூன்றடிகளைத் தர இயலாமல் போனது; அதனால் பழிச் சொல்லுக்கு ஆளானான். இத்தகைய அவமானங்களை அவன் கர்வத்தால் அடைந்தான்.
பாதத்ரய்யா யதி ந முதித: விஷ்டபை
ந அபி துஷ்யேத்
இதி உக்தே அஸ்மின் வரத பவதே
தாது காமே அத தோயம்
தைத்யாசர்யத்: தவ கலு
பரீக்ஷார்த்தின: ப்ரோணாத்தம்
மா மா தேயம் ஹரி: அயமிதி
வ்யக்தமேவ ஆபபாஷே
பொருள்: குருவாயூரப்பா, நீ மகாபலியிடம், ‘அரசனே! மூன்று அடி நிலம் தரவில்லை என்றால், தான் யாசித்ததை பெறாமல் போகும் ஒருவன், மூன்று உலகங்கள் கிடைத்தாலும் மகிழ்வு கொள்ள மாட்டான்,’ என்றாய். உடனே மகாபலி நீ விரும்பியபடி நிலத்தை அளிக்க தான நீருடன் தயாராக நின்றான். அப்போது அவன் குருவான சுக்கிராச்சாரியார், உனது தூண்டுதல் காரணமாக, ‘அரசனே, கொடுக்காதே! இவன் அந்த ஹரியே ஆவான் என்றார் அல்லவா?
யாசத்யேவம் யதி ஸ பகவான்
பூர்ணகாம: அஸ்மி ஸ: அஹம்
தாஸ்யாமி ஏவ ஸ்திரம் இதி வதந்
காவ்ய சப்தோபி தைத்ய:
விந்த்யாவல்யா நிஜதயிதயா
தத்தபாத்யாய துப்யம்
சித்ரம் சித்ரம் ஸகலம் அபி ஸ:
ப்ராப்பயத் தோய பூர்வம்
பொருள்: குருவாயூரப்பா, சுக்கிராச்சாரியாரின் சொற்களைக் கேட்ட மகாபலி அவரிடம், ‘அந்தப் பகவானே இங்கு வந்து என்னிடம் யாசிக்கிறான் என்றால் எனது விருப்பம் அனைத்தும் நிறைவேறியவனாகவே நான் உள்ளேன். எனவே நான் தானம் அளிக்கவே போகிறேன்’ என்றான். உடனே சுக்கிராச்சாரியார் ‘நீ உனது நாட்டை இழக்கப் போகிறாய்,’ என்று சபித்தார். சுக்கிராச்சாரியாரின் சாபத்தை ஏற்ற மகாபலி, தனது மனைவியான விந்தியாவளீ என்பவள் தானநீரை அவன் கைகளில் விட, அவனும் நீ கேட்டவற்றை தானமாக அளித்தான்.
நிஸ்ஸந்தேஹம் திதிகுலபதௌ
த்வயி அஷோர்ப்பணம் தத்
வ்யாதன்வாநே முமுசு:
ருஷய: ஸாமரா: புஷ்ப வர்ஷம்
திவ்யம் ரூபம் தவ ச தத் இதம்
பச்யதாம் விச்வபாஜாம்
உச்சை: உச்சை: அவ்ருதத்
அவதீக்ருத்ய விச்வாண்ட பாண்டம்
பொருள்: குருவாயூரப்பா, திதியின் குலத்தின் வழிவந்த மகாபலி சிறிதளவும் சந்தேகமே இல்லாமல் உன்னிடம் நீ கேட்டவற்றை அர்ப்பணம் என்று அளித்தான். அவனது இந்தச் செயலைக் கண்ட தேவர்கள், ரிஷிகள் அவன் மீது மலர்களைத் தூவினர். அப்போது இந்த உலகில் உள்ள அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, குருவாயூரப்பா, உனது இந்த சிறிய உருவம் அனைத்து அண்டங்களுக்கும் மேலே மேலே வளரத் தொடங்கியது.
த்வத் பாதாக்ரம் நிஜபதகதம்
புண்டரீ கோத்பவ அஸௌ
குண்டீ தோயை: அஸிசத்
அபுநாத் யஜ்ஜலம் விச்வலோகான்
ஹர்ஷோத் கர்ஷாத் ஸுபஹு
நந்ருதே கேசரை: உத்ஸவே அஸ்மின்
பேரீம் நிக்நந் புவனம் அசரத்
ஜாம்பவாந் பக்திசாலீ
பொருள்: குருவாயூரப்பா, இப்படி நீ வளர்ந்தபோது உனது திருவடியானது ஓர் அடி எடுத்து வைக்க, அது ப்ரும்மலோகமான ஸத்யலோகத்தை அடைகிறது. உடனே பிரம்மா தனது கமண்டலத்தில் உள்ள நீரினால் உனது திருவடியைக் கழுவினார். அந்த நீரானது இந்த பூமியை கங்கையாக வளப்படுத்தியது. இதனைக் கண்ட தேவர்கள் நடனம் ஆடினர். உன்னிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த ஜாம்பவான் தனது வாத்தியத்தை முழங்கியபடி இந்த உலகத்தைச் சுற்றி வந்தான்.
தாவத் தைத்யா: து அவமதிம்
ருதே பாத்து: ஆரப்த யுத்தா:
தேவ: உபேதை: பவதனுசரை:
ஸங்கதா பங்கமாபந்
காலாத்மா அயம் வஸதி புரதோ
யத்வசாத் ப்ராக்ஜிதா: ஸ்ம:
கிம் வோ யுத்தை: இதி பலிகிரா
தே அத பாதாலமாபு:
பொருள்: குருவாயூரப்பா, அந்தநேரம் அசுரர்கள் தங்கள் அரசனான மகாபலியின் உத்தரவு இல்லாமல் உன்னைத் தாக்கத் தொடங்கினர். அவர்கள் உனது அடியார்களால் தடுக்கப்பட்டனர். மகாபலி அசுரர்களிடம், ‘நாம் யாருடைய தயவால் முன்பு வெற்றியை அடைந்தோமோ, அந்த பகவானே இதோ நம் கண்முன்னே காலத்தை கடந்து நிற்கிறான். நாம் யுத்தம் செய்து என்ன பயன்?’ என்றான். இதனைக் கேட்ட
அசுரர்கள் பாதாளலோகத்திற்கு ஓடிவிட்டனர்.
பாசை: பத்தம் பதக பதினா
தைத்யம் உச்சை: அவாதீ:
தார்த்தீயீகம் திச மம பதம்
கிந்த விச்வேச்வரோஸி
பாதம் மூர்த்னி ப்ரணய பகவந்
இதிஅகம்பம் வதந்தம்
ப்ரஹ்லாத: தம் ஸ்வயம் உபகத:
மாநயந் அஸ்தவீத் த்வாம்
பொருள்: குருவாயூரப்பா, அப்போது கருடனால் வருணன் என்ற பாசக்கயிற்றால் மகாபலி கட்டப்பட்டான். அதன் பின்னர் நீ அவனை நோக்கி, ‘நீ இந்த உலகம் அனைத்திற்கும் அதிபதி என்றாயே! எனக்கு உரிய மூன்றாவது அடி நிலத்தைக் கொடு!’ என்றாய். அப்போது மகாபலி சிறிதும் பயமோ கோபமோ கொள்ளாமல், ‘பகவானே, நாராயணா, எனது தலைமீது உனது மூன்றாவது அடியை வைத்துக்கொள்,’ என்றான். இதனைப் பாராட்டியபடி பிரஹலாதன் அங்கு வந்து உன்னைப் பாராட்டினான்.
தர்ப்போசித்யை விஹிதம் அகிலம்
தைத்ய ஸித்த: அஸிபுண்யை:
லோக: தே அஸ்து த்ரிதிவ
விஜயீ வாஸவத்வஞ்ச பச்சாத்
மத்ஸாயுஜ்யம் பஜ ச புன: இதி
அன்வ க்ருஹ்ணா பலிம் தம்
விப்ரை: ஸந்தாநிதமகவர:
பாஹி வாதாலயேச
பொருள்: குருவாயூரப்பா, நீ மகாபலியை நோக்கி, ‘திதியின் குலத்தில் உதித்தவனே, உனது கர்வத்தை அடக்கவே நான் இப்படிச் செய்தேன். நீ செய்த புண்ணிய காரியங்களால் நீ நன்மை பெற்றவனாக உள்ளாய். சொர்க்கத்திற்கும் மேலான ஸுதலம் எனும் பாதாள கீழ்லோகம் உண்டாகட்டும். அதன் பின்னர் இந்திரப் பதவியும் நீ அடைவாய். இறுதியில் எனது மோட்ச ராஜ்ஜியமும் அடைவாய்’ என்றாய். இப்படியாக நீ என்னையும் காப்பாற்ற வேண்டும்.
No comments:
Post a Comment