Tuesday 3 October 2017

பேசா நாளெல்லாம் பிறவா நாளே


மன இருள் அகற்றும் ஞானஒளி - 26

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது
எந்தை பாடகத்து,
அன்று வெஃகணைக் கிடந்து
என் இலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன்;
பிறந்தபின் மறந்திலேன்;
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் 
என் நெஞ்சுளே.
- இது திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தப் பாசுரம்.

மனித மனங்களின் எண்ணங்களை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் ஆழ்வார். காஞ்சிபுரத்தில் உள்ள திவ்ய தேசங்களில் சிலவற்றை இப்பாடலில் பட்டியல் இடுகிறார். பெருமானின் நின்ற திருக்கோலத்தை திருஊரகத்தில் தரிசிக்கலாம்; இருந்த அதாவது, அமர்ந்த திருவுருவை திருப்பாடகத்தில் கண்குளிரக் காணலாம்; கிடந்த அதாவது, பள்ளிகொண்ட பெருமாளாக திருவெஃகாவில் சேவை சாதிக்கக் காணலாம். சரி, இதன்மூலம் என்ன சொல்ல வருகிறார் ஆழ்வார்? நான் ஜென்மம் எடுப்பதற்கு முன்பாகவே இத்தலங்களில் எல்லாம் எம்பெருமான் நீக்கமற நிறைந்திருக்கிறான். அப்போது நான் பிறக்கவில்லை. இப்போது நான் பிறந்து, வளர்ந்து இத் திருத்தலங்களில் உள்ள கடவுளையெல்லாம் கண்ணாறக் கண்டு என் நெஞ்சகத்தில் அந்த இன்ப வெள்ளத்தை தேக்கி வைத்துக் கொண்டேன். நின்ற, அமர்ந்த, கிடந்த திருக்கோலங்களை நான் எப்படி மறக்க முடியும்! 

அந்த உணர்வின் மேலீட்டால்தான் ‘பிறந்தபின் மறந்திலேன்’ என்கிற அற்புதமான சிந்தனையை நம் முன் வைக்கிறார். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் ஆழ்வார் மங்களாசாசனம் செய்த திவ்யதேச பெருமான்களை இன்னும் போய்ப் பாருங்கள் - ஆழ்வாரின் அதே உணர்வுகளை நம்மைப் போன்ற எளிய பக்தர்களாலும் உணர முடியும். காஞ்சிபுரத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள திருத்தலம், திருப்பாடகம். இத்தலத்தில் பகவான் கண்ணனின் விஸ்வரூப தரிசனத்தை கண்டு மலைக்காதவர்கள் இருக்க முடியுமா? அமர்ந்த திருக்கோலம் - 25 அடி உயரம்! இப்படி ஒரு காட்சியை நாம் வேறெங்கும் பார்க்க முடியாது. 

இத்தலப் எம்பெருமானின் திருநாமம் என்ன தெரியுமா? பாண்டவதூதன்! விளக்காமலேயே விளங்கிவிடுகிற பெயர். பாண்டவர்களுக்காக தூது போனவன் நம் போன்ற பக்தர்களின் எளிய கோரிக்கையை நிறைவேற்றமாட்டானா என்ன? திருமழிசையாழ்வாரைப் போலவே மூவர் முதலியில் ஒருவராக திகழும் அப்பர் பெருமானும் தேவாரப் பதிகத்தில் தன்னுடைய எண்ண உணர்வுகளை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார்: 

‘‘அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தான அணுவை யார்க்கும் 
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் 
திகழ் ஒளியை தேவர்கள் தங்கோனை மற்றைக் 
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் 
கனைக்கடலைக் குலவரையைக் கலந்து 
நின்ற
பெரியானை பெரும்பற்ற புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே! 

தொண்டு செய்து, உழவாரப் பணிக்கு எடுத்துக்காட்டாக திகழும் அப்பர் பெருமான் செல்லாத ஊர் உண்டா? பாடாத பரம்பொருள் உண்டா? ஆனால், அவர் எங்கு சென்றாலும் தில்லை என்கிற சிதம்பரத்தில் உள்ள அம்பலக் கூத்தனிடமே மையம் கொண்டு நிற்கிறார். என்ன உணர்வு இருந்தால் ‘உன்னைப் பேசாத நாள் எல்லாம் பிறவாத நாள்’ என்று சொல்ல முடியும்!

இதே அப்பர் பெருமான்தான்,
‘‘பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத் 
தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ?
- என்று பாடிக் களிக்கிறார்.

பூலோகக் கயிலாயம் என்று பக்தர்களால் கொண்டாடப்படுகிற சிதம்பரத்தில் சபாநாயகரான புலியூரான் திருச்சிற்றம்பலத்தானை, சிவபெருமானை எப்போதும் மறக்கவே இயலாது என்கிறார் - ‘தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ?’ இதெல்லாம் சாதாரண வார்த்தைகளா? அனுபவித்துச் சொன்னவையல்லவா? மனம் முழுவதும் அவன் நினைப்பு இருந்தால்தானே இது சாத்தியம் ஆகும்? குடம் முழுவதும் தண்ணீர் நிரம்பியிருப்பது போல மனம் முழுவதும் பரம்பொருளைப் பற்றிய எண்ணம் நிரம்பியிருந்தால்தான் முடியும்! சிற்றின்ப வேட்கையில் மதிமயங்கிக் கிடப்பவரால் இப்படி எண்ணத்தான் முடியுமா? பற்றற்ற அந்தப் பரம்பொருளின் மீதுதான் எத்துணைப் பற்று! ஊர் முழுவதும் சுற்றி வந்தாலும் தேர் தன் நிலைக்கு வருவதுபோல் அப்பர் பெருமானின் மனம் தில்லை அம்பலத்தானிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறதை பார்க்க முடிகிறது. நிபந்தனையற்ற, சமரசம் செய்துகொள்ளாத ஈடுபாடு (core commitment) ஏற்பட்டால் ஒழிய இந்த எண்ணங்கள் உருப்பெறாது.

இதில் வேடிக்கை என்ன தெரியுமா? திருமழிசை ஆழ்வாரும் அப்பர் பெருமானும் ஆரம்பத் தடம் மாறி வந்தவர்கள். ஆனாலும் தாம் ஏற்றுக்கொண்ட கொள்கையில் மிக உறுதியாக இருந்ததனால்தான் இப்படிப்பட்ட அற்புதமான திவ்ய பிரபந்தங்களும், தேவாரமும் நமக்கு தங்கப் புதையல்களாக அரும் பெரும் பொக்கிஷங்களாக கிடைத்தன. ஓர் உண்மையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். காலப்போக்கில் எத்தனையோ பேர் வருகிறார்கள்,  படைப்புகளை தருகிறார்கள், சென்று விடுகிறார்கள். ஆனால், காலத்தையும் கடந்து அதன் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல், எத்துணை படைப்புகள் உயிர்ப்போடு திகழ்கின்றன! திவ்யபிரபந்தம், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருஅருட்பா…!

இதற்குக் காரணம் வேறு ஒன்றும் இல்லை. ஆழ்வார்களும், அப்பர் பெருமானும், திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும், வள்ளல் பெருமானும், அருணகிரிநாதரும் வெறும் ராயல்டிக்காக (Royalty) எழுதவில்லை. மாறாக இந்த மனித சமூகம் உய்ய வேண்டும், சிந்தையாலும், செயலாலும் உயரவேண்டும் என்கிற ஆவலில், இந்த சமூகத்தின் மீதுள்ள பற்றினால் (Loyalty) உருவாக்கியிருக்கிறார்கள். அதனால்தான் இந்த நல்படைப்புகள் தெய்வத் தன்மையோடு துலங்குகின்றன. எல்லாம் மாறலாம். விஞ்ஞான வளர்ச்சி, உச்சிக்குப் போகலாம். நவீனம் எல்லாத் துறைகளிலும் புகுந்து சாகசம் செய்யலாம். ஆனால், நாம் இன்னொரு அப்பர் பெருமானையும், திருமழிசை ஆழ்வாரையும் பெற முடியுமா? அறிவியல் முன்னேற்றங்கள் கண்டிப்பாகத் தேவைதான். ஆனால், அதுமட்டும் போதுமா?  இவை Moneyவளம் அதிகரிக்க உதவலாம்; ஆனால், மனவளம் மேம்பட ஆழ்வார்கள், அப்பர் பெருமான் போன்றவர்கள்தானே தேவை? அவர்கள்தானே நம்மைத் திருத்தி நேராக்கும் பணி மேற்கொண்டிருக்கிற தீர்க்கதரிசிகள்!

No comments:

Post a Comment