Tuesday 3 October 2017

அடியார்களுக்கு வாழ்வளிக்கும் பெருமாளே


வழுவூர் வீரட்டானேஸ்வரர் கோயிலின் அழகிய, கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்தின் கீழ் நிற்கிறோம். கூரையில் கஜசம்ஹாரமூர்த்தியின் அரிய ஓவியத்தைக் காணலாம். கோபுரத்தைக் கடந்து உள்ளே நுழையும்போது கோயிலின் முகப்பிலுள்ள சுத்தமான பஞ்ச பிரும்ம தீர்த்தமும், விரிந்து பரந்து கிடக்கும் மைதானமும் நம்மை அதிசயிக்க வைக்கின்றன. ஒரு மூலையிலுள்ள அரசமரம் எண்ணற்ற பக்தர்கள் கட்டிய தொட்டில்களைத் தாங்கி நிற்கிறது. உள்ளே நந்தியும், முன்னால் கணபதியும் உள்ளனர். குளத்தைச் சுற்றி வரும்பொழுது கோயில் நுழைவாயிலருகே துவார விநாயகரும், துவார சுப்பிரமணியரும் காட்சி அளிக்கின்றனர். இடப்புறம் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள வழுவூர் திருப்புகழைப் படித்து மகிழ்கிறோம். கொடிமரம், பலிபீடம், நந்தி, விநாயகரை வலம் வருகிறோம். கொடிமரத்தின் வலப்புறம் ஸஹஸ்ர லிங்கமும், வலது கோடியில் நூற்றுக்கால் மண்டபமும் உள்ளன. சிறிய கோபுரத்ைதக் கடக்கும்போது வாசலில் பின்னமடைந்த கையை உடைய முருகனைக் கண்டு மனம் நோகிறது.

அம்பிகை இளமுலைநாயகி தனிக்கோயிலில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறாள். அபய வரதம் காட்டி, அட்சமாலை, பத்மம் ஏந்தி, நான்கு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறாள். அன்னை பாலாங்குராம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள். நுழைவாயில் விநாயகரும், முருகனும் உள்ளனர். உட்பிராகாரத்தில் வரிசையாகச் சண்டேஸ்வரர், விநாயகர், நால்வர், இரு கணபதிகள், அறுபத்துமூவர் தலவிநாயகர் உள்ளனர். ஜேஷ்டாதேவி, நாகர்கள், பிடாரி, சப்தமாதாக்கள் வழிபட்ட லிங்கங்கள் மற்றும் பைரவர் சந்நதி உள்ளன. கருவறைக்கு நேர் பின்னால் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் காட்சி அளிக்கிறார். அருகில் ஆஜானுபாகுவான பாலசுப்பிரமணியரின் தனிச் சந்நதியும் உள்ளது. வழுவூரில் அருணகிரியார் பாடிய இரண்டு பாடல்களையும் இங்கு சமர்ப்பிக்கிறோம்:

‘‘தருவூரிசையார் அமுதார் நிகர்
குயிலார் மொழி தோதக மாதர்கள்
தணியா மயலாழியில் ஆழவும் அமிழாதா
தழலே பொழி கோர விலோசனம்
எறிபாச மகாமுனை சூலமுள்
சமனார் முகில் மேனி கடாவினில் அணுகாதே
கருவூறிய நாளு முநூறெழு
மல தேகமும் ஆவலும் ஆசை
கபடமாகிய பாதக தீதற மிடிதீரக்
கனிவீறிய போத மெய் ஞானமும்
இயலார் சிவநேசமுமே வர
கழல் சேரணி நூபுர தாளினை நிழல்தாராய்’’ 
- என்பது பாடலின் முற்பகுதி.

குழலுக்கும் குயிலுக்கும் ஒப்பான மொழியை உடைய வஞ்சகமாதர்கள் மீதான இச்சையில் அழிந்து போகாமலும், நெருப்புமிழ் கண்கள், பாசக்கயிறு, முளமுனை சூலம் இவை கொண்டு, கருநிற எருமைக்கடா மீது ஏறிவரும் யமன் அணுகாமலும், முந்நூறு நாட்கள் கருவில் ஊறியபின் வெளிவந்து, மும்மலங்கள், மூவாசைகள் மற்றும் வஞ்சகத்தால் ஏற்படும் பாவத் தீமைகள் அற்றுப்போகவும், இனிமைமிக்க மெய்ஞ்ஞானமும் தகுதிமிக்க சிவநேசமும் எனக்கு உண்டாக, உனது நூபுரமணிந்த தாளிணைகளின் நிழல் தருவாயாக’’ என்று முருகனை வேண்டுகிறார்.

பாடலின் பிற்பகுதியில்,
‘‘புருகூதன் மினாள் ஒரு பாலுற
சிலைவேடுவர்மான் ஒரு பாலுற
புதுமாமயில் மீதணையா வரும் அழகோனே
புழுகார் பனிர் மூசிய வாசனை 
உரகாலணி கோலமென் மாலைய!
புரிநூலும் உலாவு துவாதச புயவீரா!
மருவூர் குளிர் வாவிகள் சோலைகள்
செழிசாலி குலாவிய கார்வயல்
மகதாபத சீலமுமே புனை வளமூதூர்
மகதேவர் புராரி சதாசிவர்
சுதராகிய தேவ சிகாமணி
வழுவூரில் நிலாவிய வாழ்வருள் பெருமானே’’!
(புருகூதன் = இந்திரன்)

இந்திரன் மகள் தேவசேனை மற்றும் வள்ளி ஆகியோருடன் இணைந்து மயில்மீது ஏறி வரும் அழகனே! புனுகுசட்டம், பன்னீர் இவற்றின் வாசனையுடன் கூடிய மாலைகளை மார்பிலும் திருவடிகளிலும் சூடியவனே! முப்புரி நூல் அசைகின்ற பன்னிரு புயங்களை உடைய வீரனே! குளிர்ந்த குளங்கள், சோலைகள், வயல்கள் மிகுந்துள்ள வளப்பமுடையதும், பல தவசீலர்கள் வசிப்பதுமான அழகும், பழைமையும் கூடிய வழுவூரில் வீற்றிருப்பவனே! மகாதேவர், த்ரிபுராந்தகர், சதாசிவர் ஆகிய சிவபெருமானது தேவ சிகாமணியே, வழுவூரில் வீற்றிருந்து அடியார்களுக்கு வாழ்வளிக்கும் பெருமாளே என்று விளிக்கிறார். வழுவூரில் அருணகிரியார் பாடிய மற்றொரு பாடல், அருணகிரிநாதர், திருவடி தீக்ஷை, உப தேசம் முதலான பேறுகளைப் பெற்ற சரித்திர வரலாற்றைக் கூறுகிறது.

‘‘தலைநாளிற் பதமேத்தி, அன்புற 
உபதேசப் பொருளூட்டி, மந்திர 
தவஞானக் கடலாட்டி, என்றனை அருளால் உன்
சதுராகத் தொடு கூட்டி, அண்டர்கள் 
அறியா முத்தமிழ் ஊட்டி, முண்டக
தளிர் வேதத்துறை காட்டி, மண்டலம் வலமேவும்
கலை ஜோதிக் கதிர் காட்டி, நன்சுட
ரொளி நாதப் பரமேற்றி, முன்சுழி
கமழ் வாசற்படி நாட்டமுங்கொள விதிதாவிக்
கமலாலைப்பதி சேர்த்து, முன்பதி 
வெளியாகப் புக ஏற்றி அன்பொடு 
கதிர் தோகைப்பரி மேற்கொளும் செயல் மறவேனே’’

பொருள்: ‘‘எனது வாழ்வின் தொடக்கத்தில் உனது திருவடிகளை என் தலைமீது வைத்து அன்புடன் உபதேசப் பொருளை போதித்தாய், சிவ மந்திரங்களாலே என்னைத் தவ ஞானக்கடலில் புகுவித்தாய்; உன் திருவருளினாலே உன்னைச் சார்ந்த தேர்ச்சி ெபற்ற அடியார் கூட்டத்தினரொடு கூட்டி வைத்தாய்! தேவர்களும் அறியாத முத்தமிழை எனக்குப் போதித்தாய்; முண்டக உபநிஷதம் முதலான உபநிடத உண்மைகளையும், வேதவழிகளையும் புலப்படுத்தினாய், இடைகலை, பிங்கலை எனும் நாடிகளின் மார்க்கமாக ஏற்படும் ேஜாதி ஒளியைத் தரிசிக்க வைத்து, நல்ல சுடரொளியுள்ள பரசிவத்தொடு கூட்டினாய்.

ஸுஷும்னா நாடி விளங்கும் வாயிலில் கவனம் கொள்ள, பிரம்ம பீடமாகிய ஸ்வாதிஷ்டான ஆதாரத்தைக் கடந்து, மூலாதாரதலமான திருவாரூர் முதலான ஐந்து தலங்களும் (ஆனைக்கா, அருணை, காளத்தி, சிதம்பரம்) புலப்படும்படி யோக ஒளியை ஏற்றி வைத்தாய். இறுதியில் உனது மயில்வாகனத்தில் வந்து தரிசனமும் தந்தாய். இவையனைத்துச் செயல்களையும் நான் மறவேன் முருகா!’’ என வரும் பாடல் வரிகள் நம்மைப் புளகாங்கிதம் அடையச் செய்கின்றன!

பாடலின் பிற்பகுதியில் தன் இஷ்ட தெய்வமான முருகனை மேலும் பலவாறாகப் போற்றி மகிழ்கிறார். ‘‘கடல் போன்ற அசுரக் கூட்டத்தை அழித்து தேவர்களை அவர்களது வீட்டில் குடிபுக வைத்த வேலனே! சிவகாமியின் ஒப்பற்ற நேசனும் என் தந்தையும், வரிகளுள்ள பாம்புகளை மாலையாக அணிந்தவனும் ஆகிய சிவபிரானுக்கு ஒப்பற்ற பிரணவத்தை உபதேசித்த அழகனே! தினைப்புனம் காத்த அழகுக் கிளியாகிய வள்ளியின் மணாளனே! கோழிக்கொடி மேலே திகழும்படி நடனமாடித் தேவர்கள் துதிக்கின்ற, குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த வழுவூர் எனும் நற்பதியில் வீற்றருளும் பெருமாளே!’’ என்று விளிக்கிறார். 

‘‘சிலை வீழக் கடல் கூட்டமுங்கெட 
அவுணரைத் தலைவாட்டி அம்பர
சிர மாலைப் புக ஏற்றவுந் தொடு கதிர்வேலா
சிவகாமிக்கொரு தூர்த்தர் எந்தையர் 
வரி நாகத் தொடையர்க்குகந் தொரு
சிவஞானப் பொருளுட்டு முண்டக அழகோனே
மலைமேவித் தினை காக்கும் ஒண்கிளி
அமுதாகத் தனவாட்டி இந்துள 
மலர் மாலைக் குழலாட்டிணங்கிதன் மணவாளா
வரி கோழிக் கொடி மீக் கொளும்படி
நடமாடிச் சுரர் போற்று தண்பொழில்
வழுவூர் நற்பதி வீற்றிருந்தருள் பெருமாளே’’ 

- என்பது பாடலின் பிற்பகுதி. கந்தர் அலங்காரச் செய்யுளொன்றில் கஜசம்ஹாரமூர்த்தி பற்றிய குறிப்பு வருகிறது: ‘‘... இரு கோட்டு ஒரு கை பொரு பூதரம் உரித்து ஏகாசமிட்ட புராந்தகற்குக் குரு பூத வேலவ...’’ (இரண்டு தந்தங்களையும், ஒரு துதிக்கையும் கொண்டதும், சண்டைக்கு வந்ததுமான மலையன்ன யானையை உரித்து அதன் தோலை மேற்போர்வையாகக் கொண்ட திரிபுராரியாம் சிவபெருமானுக்கு குரு எனும் புனித ஸ்தானத்தைக் கொண்ட வேற்சுரமூர்த்தி) திருப்புகழால் முருகனைத் துதித்து, கஜலட்சுமியைத் தரிசித்து, பிராகார வலம் வரும்போது விக்ரம சோழன் அருள் பெற்ற வரலாறு அழகான வண்ண ஓவியங்களாக வரையப்பட்டுள்ளதைக் காணலாம். சனிபகவானுடன் யுத்தம் செய்த விக்ரம சோழன் தோற்றுப்போய் இங்குள்ள தீர்த்தத்தில் விழுந்துவிட்டார். சோழன் வெளிவந்து சுவாமியை வழிபட்டபோது, சனிபகவானின் காலை முடமாக்கிவிடுகிறார் ஈசன். சனியும் இறைவனை வழிபட்டு சாப நிவர்த்தி பெற்ற தலம் இது. சனிபகவானுக்குத் தனி சந்நதி உள்ளது. 

துர்க்கா பரமேஸ்வரி, மூலநாதர், சண்டிகேசர், நவகிரஹங்கள், சூரிய-சந்திரர் ஆகியோரைத் தரிசிக்கலாம். தலவிருட்சம் (தேவதாரு), கிணறு இவற்றைக் காண்கிறோம். முன் மண்டபத்தில் வலப்புறம் பிட்சாடனரும் மோகினியும் உள்ளனர். கோயிலுக்கு வரும் ஒவ்வொருவருமே இங்குள்ள கஜசம்ஹார மூர்த்தியைத் தரிசித்து மகிழ வேண்டியது மிக அவசியம். சிற்பியின் கைகளைப் பற்றிக் கண்ணில் ஒற்றிக் கொள்ளத் தோன்றுமளவு தெய்வீக அழகு படைத்தது. மூலவரின் சுயம்புத் திருமேனியைத் தரிசித்தபின் கஜசம்ஹார மூர்த்திக்கருகில் வருகிறோம். இதில் யந்திரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. யானையின் தோலை உரித்து தலை மீது சுற்றிக் கொண்டு பெருமான் வீரநடனமாடினார். தலைமீது யானையின் வால் தென்படுகிறது. கைகளை வீசி, கால்களை மடித்துக் கொண்டு பாதங்களின் உட்பாகம் (புறங்கால்) தெரியுமாறு நடமாடுகிறார். அடியெடுத்து வைப்பது போன்று அம்பிகையும், அவரது இடுப்பில் முருகப்பெருமானும் நிற்கும் அழகைக் கண்கொட்டாமல் பார்க்கிறோம். குழந்தையின் ஆட்காட்டி விரல், யானைக்குள்ளிருந்து வெளிப்படும் மூர்த்தியை சுட்டிக்காட்டியபடி உள்ளது.

வாசற்புறத்தில் நன்கு பராமரிக்கப்படாத ஒரு விசாலமான மண்டபத்தில் நுழைகிறோம். விஸ்வகர்மாவால் நியமிக்கப்பட்ட வியாக்யா பீடத்தில் கிருத்திவாசர், ஞானசபேஸ்வரராய் அமர்ந்து 45,000 ரிஷிகளுக்கு ஞானோபதேசம் செய்யும் அரிய காட்சி கூரையில் பெரிய ஓவியமாக வரையப்பட்டுள்ளது பிரமிப்பிற்குரியது! ஆனால், சிதிலமடைந்து காணப்படும் ஓவியமும், மண்டபமும் நன்றாகப் பராமரிக்கப்படாவிட்டால் வரும் தலைமுறையினருக்குப் பல புராணச் செய்திகள் தெரியாமலே போய்விட வாய்ப்புள்ளது. தேவாரப் பாடல்கள் இத்தலத்திற்குரியவை. நமக்குக் கிடைக்காமல் போய்விட்டன. அப்பர் பெருமான் ஈசன் கரி உரித்ததை வேறு பல தலங்களில் பாடியுள்ளார்:

‘‘உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு 
ஒழுகி ஓட 
விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கித்
தரித்திட்டார் சிறிது போது தரிக்கிலர் ஆகித்தாமும்
சிரித்திட்டார் எயிறு தோன்றத் 
திருப்பயற்றூரனாரே’’ - திருப்பயற்றூர்

‘‘உரித்தானைக் களிறு அதன் தோல் போர்வை ஆக உடையானை...’’ -திருஆலம்பொழில் ரிஷிகள் ஆபிசார ஹோமம் செய்ததனால் கிட்டிய சாபம் தீர்க்க 48 நாட்களில் 1008 சிவாலயத்தை தரிசிக்க வேண்டும் என்றார் இறைவன். அவ்வாறு செய்வது கடினம் என்பதால் ரிஷிகள் ஒரே பாணத்தில் 1008 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வணங்கினர். இந்த ஸஹஸ்ர லிங்கேஸ்வரருக்குத் தனிச் சந்நதி உள்ளது. வழுவூரில் கஜசம்ஹாரத் திருவிழா நடத்தப்படுகிறது. விழாவின் போது பிக்ஷாடனரை அருகிலுள்ள பெருஞ்சேரிக்கு எடுத்துச் செல்கின்றனர். தாருகாவனம் அங்கிருந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. திருமாலும் உடன் செல்ல, இருவரும் முன்னிரவில் ஆலயத்திற்குத் திரும்புகின்றனர். நள்ளிரவில் முனிவர்கள் யாகம் செய்து அதில் தோன்றும் பாம்பு, முயலகன், மண்டையோடு முதலியவற்றைப் பெருமான் மீது ஏவி அவரை அழிக்க முயல்வது ஐதீக விழாவாக நடத்தப்படுகிறது.

இறுதியாக யானையை ஏவுகின்றனர். யானை பெருமானை விழுங்கியதைக் குறிக்கும் வகையில் பெரிய யானையின் உருவத்தைச் செய்து அதன் வயிற்றில் சிவனாரை வைத்து மூடிவிடுவர். எங்கும் இருள் சூழ்ந்ததைக் குறிக்க விளக்குகள் எல்லாம் அணைக்கப்படுகின்றன. வலியால் துடிக்கும் யானையின் வயிற்றைப் பிளந்துகொண்டு பெருமான் வெளிப்படுவார். உடனே விளக்குகள் யாவும் ஏற்றப்படுகின்றன. சிறிது நேரத்தில் சூரியன் உதயமாக, இறைவன் கோயிலின் உட் பிராகாரத்தில் வலம் வருவார். கஜசம்ஹாரத்தின் தத்துவம் என்ன? ஐம்புலன்கள் காரணமாக நாம் யானையைப் போன்று செருக்கி நிற்கிறோம். நமது ஐம்புலச் சேட்டையை இறைவன் ஒருவனால் மட்டுமே அடக்க முடியும். ‘‘ஆணவக் களிறாக இல்லாமல் ஞானச் செல்வனாகக் கந்தனைப் போன்று அருட்சக்தியின் கரங்களில் நாம் தவழ்தலையே விழைய வேண்டும். இதுவே இவ்வடிவம் கூறும் படிப்பினை’’ என்கிறார் அமரர் முனைவர் ரா. செல்வகணபதி அவர்கள். சதாசிவ குடும்பத்தினரை மனமாற வணங்கி வழுவூர் வீரட்டானேஸ்வரர் கோயிலிலிருந்து புறப்படுகிறோம்.

No comments:

Post a Comment