Tuesday 3 October 2017

மங்கல வாழ்வருளும் மனோன்மணி


சிவபெருமான் தன் கருணையினை அம்பிகை ரூபமாக கொண்டு ஆன்மாக்களிடம் விளையாடி அருட்தன்மையை தருவதால் லலிதா என்றழைக்கப்படுகிறாள். ஸ்ரீசக்ர ராஜசபை தர்பாரில் அரசாட்சி புரியும் வண்ணம்தானே ஸ்ரீநகர சாம்ராஜ்ய தாயினியாக எழுந்தருளியுள்ளாள். அறுபதுக்கு மேற்பட்ட மூலிகைப் பொருட்களால் (ரசாயனப் பொருட்கள் ஏதும் இல்லாமல்) ஆன சாந்துகளை கொண்டு பலநூறு ஆண்டுகளுக்கு பிறகு அம்பிகையின் ஆக்ஞ்ஞையாலும், ஞானிகளின் வழிகாட்டுதலாலும் மூலிகை திருமேனி பற்றிய ஆய்வுகள் செய்து சித்தர்களின் முறைப்படி குண்ட மண்டல யாகங்கள் செய்து பல ஆயிரமாயிரம் முறை மூலமந்திர ஜபம் செய்து செய்யப்பட்டுள்ளது திருமேனி முழுவதும் 560 பாணலிங்கங்கள், சாளகிராமங்கள், அம்பிகையின் ஆறாதார ஸ்ரீசக்கரங்கள், திரிபுரை சக்கர யந்திரங்கள் வைத்து அமைக்கப்பட்டுள்ளது ஸ்ரீமத் ஔஷத லலிதாம்பிகை தரிசனத்தில் ஹரி, ஹரன், அம்பிகையை வழிபட்ட பலனைத்தரும் மும்மூர்த்தி சொரூபிணி.

காஞ்சிபுரத்தின் இரண்டாவது ஆவரண எல்லையில் சக்ர ராஜ சிற்சபாவிலாச சொர்ண விமானத்துடன் அமைந்துள்ளது லலிதா திரிபுரசுந்தரியாக ஒன்பது அடி விஸ்வரூப மூலிகை திருமேனி, திதி நித்யா தேவதைகளை படிகளாகக் கொண்டு மேல்தள மாடியில் (கட்டுமலை கோயில் என்று சிற்பாகமம் கூறும்) அருள்பாலிக்கிறாள், கருவறையில் பத்ம பீடத்தில் அவசர கதியாக நின்ற திருக்கோலத்தில் மேற்கரத்தில் அங்குசம்) (ஸ்ரீஅஸ்வாரூடா), பாசம் (ஸ்ரீசம்பத்கரி), கீழ்கரத்தில் பஞ்சபாணம் (ஸ்ரீவாராகி), கரும்பு (ஸ்ரீமாதங்கி) தேவைகளை ஆயுதமாக ஏந்தி வழிபட்டவர்களுக்கு பலனைத் தருபவளாக இருக்கிறாள். தம் திருவடி தரிசனத்திலேயே உலக உயிர்களின் நலன் பொருட்டு தாய் மருந்து உண்பதுபோல கலிதோஷத்தை நீக்கி சௌபாக்யம், ஆனந்தம், ஆரோக்கியம் தந்தருள்கிறாள். சித்த மருத்துவச்சியாக அனுக்கிரகம் புரிகின்றாள். 

‘‘ஹரி அல்லால் தேவியில்லை’’ அம்பிகையின் புருஷ ரூபமே பெருமாள் (பாலா என்பது பெண்பாலை குறிக்கும்) திருமலை பாலாஜியை லலிதை தரிசனத்தில் உணர முடியும், ஹயக்ரீவர், அகத்தியரால் வழிபடப்பட்டவள். மூலிகை அம்பிகைக்கு திருமஞ்சனம் கிடையாது. பௌர்ணமியில் பாதபூஜை மட்டுமே வருடத்திற்கு 4 முறை காப்பு மட்டுமே, மூலிகையம்மனுக்கு 48 முழம் புடவை பிரத்யேகமாக செய்து அணிவிக்கப்படும். பௌர்ணமி திதியில் மட்டுமே சர்வ அலங்கார 27 ஆரத்தி விசேஷ சோடச மகா தீபாராதனையை தரிசிக்க முடியும், பௌர்ணமியில் மூலிகை தீர்த்த பிரசாதம் வழங்கப்படும். பிரதமை திதி முதல் அமாவாசை திதி காலத்தில் வலதுபுற படி வழியே ஏறி இடது படி வழியே இறங்க வேண்டும். பிரதமை திதி முதல் பௌர்ணமி திதி காலத்தில் இடதுபுற படி வழியே ஏறி வலது படி வழியே இறங்க வேண்டும். 

பழநி போகர் முருகனை செய்தது போல, சதாசிவ பிரம்மேந்திரர் புன்னைநல்லூர் மாரியை தனது கையால் செய்ததுபோல் உபாசகரே செய்த அம்பிகை மூலிகை திருமேனி இது. லலிதா தேவியின் உபாசனையினால் வாக்குவன்மை, தெளிவான அறிவு, கல்வி ஞானம், குபேரன் போன்ற செல்வம், உலகத்தில் எதனையும் வெல்லும் ஆற்றல், அமைதி, வீடு பேறு ஆகியவற்றை அடையலாம். திரிபுரசுந்தரியின் திருவடிகளைத் தொழுபவர்களுக்கு நீண்ட ஆரோக்கியமும் குறைவற்ற செல்வமும் கிடைக்கும். இவளை வழிபட்டால் அகால மரணம் நேராது. கொடுமையான காய்ச்சலும் போகும். நீண்ட ஆயுள் உண்டாகும். மக்கட்பேறு இல்லாதவர்
களுக்கு மக்கட் செல்வம் உண்டாகும்.

கோடி பிறவிகளில் கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனும், காசியில் கோடி சிவலிங்கங்களை நிறுவிய பலனும் இவளை வழிபட்டாலே கிடைத்து விடும் என்கிறது தேவி புராணம். இங்கு எழுந்தருளியுள்ள பாலா திரிபுரசுந்தரி, தருணீ திரிபுரசுந்தரி, ஸ்ரீமத் ஔஷதலலீதா திரிபுர ஸ்ரீசக்ரமேரு ஆகியவற்றை அம்பாள் உபாசகரும் சுவாமிஜி சுவாமிஜீ ராஜசேகர இளம்பூரண சிவனார் (சிற்ப ஆகமம் பயின்றவர்) தம் திருக்கரங்களால் செய்யப்பட்டுள்ளது பெரும் சிறப்பபாகும். மூலிகை அம்பாளை உபாசகரே 7 ஆண்டு காலமாக செய்த திருமேனி. லலிதா உருவ பேதங்கள்  திரிபுரசுந்தரி, காமாட்சி, லலிதாம்பிகை, ராஜராஜேஸ்வரி அனைவரும் ரூபத்தால் குணத்தால் ஒன்றே. லலிதா உபாஸகர்கள்  அகஸ்தியர், குபேரன், மன்மதன், சந்திரன், இந்திரன், துர்வாஸ முனிவர், லோபாமுத்ரா மற்றும் எண்ணிலடங்காதவர்கள்.

லலிதா அங்க தேவதை  அச்வாரூடா, சம்பத்காரி, ராஜமாதங்கி, வாராஹி, பாலா, அன்னபூரணி இந்த ஆறு சக்திகளையும் வழிபட்டால் லலிதையை வழிபட்ட பலன் உண்டாகும். ‘‘ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே’’ 1000 இதழ் தாமரையில் விளங்கும் சாட்சாத் ஆதிபராசக்தியின் ரூபமே ஸ்ரீசக்ரம். இதில் ஒன்பது முக்கோணங்கள் உள்ளன. மேல்நோக்கி உள்ள நான்கு சக்கரங்கள் அம்பிகைக்குரியது. கீழ்நோக்கிய ஐந்து சக்கரங்கள் சிவபெருமானைக் குறிக்கும். இவ்விரண்டு முக்கோணங்கள் இணைந்து நாற்பத்து மூன்று முக்கோணங்கள் உருவாகின்றன. சகல இகபர நலனை தந்தருளும் சிவசக்தி ஐக்கியமான சக்ர மேரு மகான் சற்குரு சேஷாத்திரி சுவாமிகள் சூட்சமமாக உணர்த்தியதால் வேப்பமரத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

அம்பிகைக்கு பிரியமான வேப்பமரத்தாலான சக்ரம் வேறு எங்கும் இல்லை. ஸ்ரீசக்ரத்தில் ஒன்பது ஆவரண சக்கரங்களும் ஒவ்வொரு பலனை அருளிடும். பரதேவதையாக அம்பிகை வீற்றிருந்து நவாவரண பூஜை மூலம் அருள்கின்றாள்.ஸ்ரீசக்ரத்தில் 64 கோடி யோகினிகளின் மகாராணியாய் ஸ்ரீமத் லலிதாம்பிகை வீற்றிருக்கிறாள். மற்ற யுகங்களில் அம்பிகையை ஆராதித்து பலன் அடைவது மிக கடினம். ஆனால், கலியுகத்தில் அம்பிகையை ஆராதனை செய்து சரணாகதி அடைந்தால் சகல செல்வங்களையும் வாரி வழங்குகின்றாள். திருமூலப் பெருமான் தன் திருமந்திரத்திலே அம்பிகையின்வழிபாட்டால் அடைய முடியாதது என்று சொல்லுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறுகிறார். காஞ்சியிலே ஒட்டியாண பீடத்திலே ஸ்ரீ லலிதையே கருணை பொழியும் காமாட்சியாகவும், இவளே தென்பகுதியின் ஆம்னாய சக்தியாகவும் விளங்குகின்றாள். 

ஸ்ரீவித்தையின் ரகசியமே பீடத்தின் மூன்று முக்கிய சந்நதியாக அம்பிகையே தானே விரும்பி எழுந்தருளி இருக்கிறாள். தாய் வடிவிலும், குழந்தை வடிவிலும், குமரி வடிவிலும் அம்பிகையை பக்தர்களைக் காக்க வேண்டுமென்று, பீடத்தில் அம்பிகை அற்புதப் பிரதிஷ்டையாக மூன்று திருமேனியில் எழுந்தருளியுள்ளாள். இதன் தத்துவம் ஒரு மனிதன் வாழ்வில் குழந்தை, மனைவி, தாய் என்ற இவர்கள் இல்லாமல் சிறக்காது என்பதற்கு மூப்பெரும் சந்நதியாக அமைந்துள்ளது. இங்கு முக்கோண வடிவில் 16 திதி நித்யா தீபம் ஏற்றி வழிபடுதல் சிறப்பாகும்.  வருடத்தில் நான்கு நவராத்திரிகள் நடைபெறும் லலிதாவின் ஸ்ரீசக்ர ராஜ சபை இங்கு மட்டுமே. பாலாவின் மூலமந்திரமான ஐம் க்லீம் ஸௌ என்ற பீஜங்களை மந்திரங்களாக கொண்டவள்.

ஐம் என்ற மகா சரஸ்வதி பீஜமும்,
க்லீம் என்ற மகா காளியின் பீஜமும்

ஸௌ என்ற லலிதா பரமேஸ்வரியின் பீஜங்களை மந்திரமாகக் கொண்டவள். சித்தர் பாடலில் வாலை மந்திரத்தில் ஐம் என்ற மந்திரத்தை இதயத்திலும், புருவ மத்தியில் சிரசில் வைத்து வாலையை தியானித்து வந்தார்கள். ஞான சொரூபிணியான சிறு குழந்தையாகிய பாலாம்பிகையே மாணவர்களின் மனநிலையை உணர்ந்த  மகாசக்தி. தை மாதம் முழுதும் பாலாவிற்கு ஸ்ரீவித்யா அபிவிருத்தி சங்கல்ப ஸஹஸ்ரநாம அர்ச்சனையும், மந்திரசுத்தி செய்த அபிஷேகத் தேனை பெற்று ஞாயிறு தோறும்  மாணவர்கள் பலன் பெற்று வருகின்றனர். நவராத்திரி பத்து நாட்களிலும் கன்யா குழந்தைகளை பூஜிப்பது மிகவும் விசேஷமாகும். சந்தான பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் இந்த குமாரி பூஜையை செய்தும், ஸ்ரீபாலா ஹோமம் செய்து அம்பிகையின் அருளால் புத்திர பேறும் பெறுகின்றனர். 

சின்னஞ்சிறு சிறுமியாக ஓடித் திரிந்த ஸ்ரீபாலை இங்கே அதிபக்குவமாகி பருவம் எய்தி நாணம் வந்த நிலையில் ஓரிடத்தில் இருப்பதுபோல, தருணீ திரிபுரசுந்தரி எனும் வாலை மனோன்மணி இச்சாசக்தி அம்சமாக வீற்றிருக்கிறாள். ஒன்பது பௌர்ணமி திதிகளில் அம்பிகை எதிரில் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுவதால் மங்கள காரியங்கள் விரைவில் கைகூடும். சென்னைக்கு அருகேயுள்ள திருப்போரூரிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் செங்கற்பட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவில் வடதிருவனைக்கா என வழங்கும் செம்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீஜம்புகேஸ்வரர் திருக்கோயில் அருகேயே இத்தலமும் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment