மகாவிஷ்ணுவும் மகாலட்சுமியும் இத்தலத்து இறைவனை பூஜை செய்துகொண்டிருக்க அந்த நேரத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை சுமந்தபடி வானில் இத்தலத்தை கடந்து கொண்டிருந்தார். சதா ராமபிரானையே நினைத்துக் கொண்டிருந்த அனுமனுக்கு, கீழே பூஜை செய்துகொண்டிருப்பவர் ராமபிரான்போல் தோன்றியது. உடனே சஞ்சீவி மலையோடு கீழே இறங்கத் தொடங்கினார். ஆனால் சஞ்சீவி மலை கொண்டு செல்லும் அவரது நோக்கம் நிறைவேற காலதாமதம் ஆவதை உணர்ந்த இத்தல தேவி, அனுமன் கீழே இறங்காதவாறும் நேரே தன் பயணத்தைத் தொடருமாறும் செய்தார். ஒரு குறிக்கோளை மேற்கொண்டு போகும்போது இடையே எந்த காரணத்துக்காகவாவது, அது அனுமனே ஆனாலும் மனம் மாறக் கூடாது என்பதை இந்த சம்பவம் மூலம் அன்னை பால சௌந்தரி விளக்கினார்.
இந்த சம்பவத்துக்கு ஆதாரமாக இறைவியின் சந்நதிக்கு முன்னால் கல்தூண் ஒன்றில் அனுமன் சிற்பத்தைக் காணலாம். தன் பெற்றோர் மீது அபிரிமிதமாகப் பாசம் கொண்டிருந்த ஓர் அந்தணர், அவர்கள் இறந்துவிடவே, அவர்களது அஸ்தியை ஒரு கலயத்தில் சுமந்து கொண்டு காசியை நோக்கி பயணமானார். வழியில், ஒருநாள் ஓய்வெடுக்க ஒரு கிராமத்தில் தங்கினார். ஆலந்துறை என்ற அந்த கிராமத்தின் வடபுறம் காவிரி நதி ஓடிக்கொண்டிருந்தது. தென்புறம், வடதீர்த்த நாதர் அருள்பாலிக்கும் ஒரு சிவாலயம். கரையில் தான் கொண்டுவந்திருந்த அஸ்தி கலசத்தை வைத்து விட்டு நதியில் நீராடினார். நீராடி முடித்து கலசத்தை எடுத்தபோது அதன் எடை குறைந்திருந்ததை உணர்ந்தார். கலசத்தின் மேல் கட்டியிருந்த துணியைப் பிரித்து உள்ளே பார்த்தால், அஸ்திக்கு பதிலாக மல்லிகை மலர்கள் நிரம்பியிருந்தன. திகைத்து நின்ற அவரை வானில் தோன்றிய ஓர் ஒளி வெள்ளம் ஈர்த்தது. இறைவன் வடதீர்த்த நாதரும், இறைவி பாலசௌந்தரியும் அவருக்கு காட்சி தந்தனர். “உன் பெற்றோருக்கு முக்தி அளித்தோம். கவலைப்படாதே” என அசரீரியாகவும் ஆறுதல் தந்தார்கள்.
பெரிதும் மகிழ்ந்த அந்த அந்தணர், அந்தக் கிராமத்திலேயே தங்கிவிட்டார். தினசரி இத்தலத்து இறைவனுக்கு பூஜை செய்ய ஆரம்பித்தார். அந்தணர் தவம் செய்த ஊர் என்பதால் அந்தநல்லூர் என்றே அத்தலம் அழைக்கப்பட்டது. ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அழகிய முகப்பைத் தாண்டியதும் அகன்ற பிராகாரம். பலிபீடம், நந்தியம் பெருமானின் தனி மண்டபத்தைக் கடந்ததும் உள்ள மகாமண்டபத்தின் வலதுபுறம் அன்னை பாலசௌந்தரியின் சந்நதி. இந்த அன்னைக்கு நான்கு கரங்கள்.
மேல் இருகரங்களில் அங்குசத்தையும், பத்மத்தையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய-வரத முத்திரைகளோடு நின்ற கோலத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கிறாள். மகாமண்டபத்தை அடுத்து முக மண்டபமும் அர்த்த மண்டபமும் உள்ளன. அடுத்துள்ள கருவறையில் இறைவன் வடதீர்த்தநாதர் சிவலிங்கத் திருமேனியில் திருக்காட்சி நல்குகிறார். தேவக் கோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், மேல்புறம் லிங்கோத்பவரும், வடபுறம் துர்க்கையும் தரிசனம் அளிக்கிறார்கள். மேற்கு பிராகாரத்தில் மகா கணபதி, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, மகாலட்சுமி சந்நதிகளும், வடக்கில் சண்டீஸ்வரர் சந்நதியும் உள்ளன. வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள், கால பைரவர், சூரியன், சந்திரன் திருமேனிகள் உள்ளன. இங்கு பைரவரே பிரதானமாக காணப்படுகிறார்.
இந்த கால பைரவரின் திருமேனி உயர்ந்தும் தனித்தும் காணப்படுவது சிறப்பான அம்சமாகும். இத்தலத்து இறைவனையும் இறைவியையும் வழிபடுவதால் காசிக்கு போய் வந்த புண்ணியம் கிட்டும் என்கிறார்கள். இங்குள்ள இறைவன் மகாவிஷ்ணுவாலும் மகாலட்சுமியாலும் பூஜை செய்யப்பட்டிருக்கிறார். அதை விளக்கும் வண்ண ஓவியம் ஒன்று மகாமண்டபத்தில் உள்ளது. 900 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் இது. ஆலயத்தின் தலவிருட்சங்கள், நாகலிங்கம் மற்றும் ஆலமரம். அஷ்டமி தேய்பிறையில் இத்தலத்து இறைவனையும் இறைவியையும் பூஜை செய்து வணங்கினால் வயிற்று வலி போன்ற நோய்களும் பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகளும் குணமாவது நிச்சயம் என்கின்றனர். பால் தோஷத்தால் பீடிக்கப்படும் குழந்தைகளை, அவர்களது பிறந்த நாளில் அன்னையிடம் அழைத்து வந்து அர்ச்சனை செய்து வழிபட்டால் அந்த தோஷம் நிச்சயமாக விலகிவிடுகிறது. திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அந்தநல்லூர் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment