Monday 2 October 2017

அன்னையின் சிரசில் அரனின் முகம்


விக்கிரமாதித்தன் ஒரு மாமன்னன். உஜ்ஜைனியை ஆண்ட இவன் பெரும் காளிபக்தன். ஆறு மாதங்கள் நாடாளவும், ஆறு மாதங்கள் வனவாசம் புரியவும் காளியிடமிருந்து வரம் பெற்றான். அதன்படி அவன் வனவாசம் மேற்கொள்ளும்போதெல்லாம் தன்னுடன் மகாகாளியின் சிலையை எடுத்துச் செல்வான். தான் எங்கு தங்குகிறானோ அங்கேயே அன்னைக்கு ஆலயம் அமைப்பான். அந்தப் பயண வழியாகத் தமிழ்நாட்டிற்கும் வந்த அவன் தான் கொண்டுவந்த மகாகாளியை முன்னிருத்தி நிறைய ஆலயங்கள் அமைத்தான். இந்த ஆலயங்களில் அருள்பாலிக்கும் இறைவியர் அனைவரையுமே, மன்னனையும் அவன் ஆண்ட பகுதியையும் நினைவுறுத்தும்வகையில் உஜ்ஜைனி மகாகாளியம்மன் என்றே அழைக்கப்படுகிறார்கள். இத்தகைய ஆலயங்களில் ஒன்று கோவையில் உள்ளது.

இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அழகான முகப்பைக் கடந்து உள்ளே நுழைந்ததும் பெரிய அகன்ற மகாமண்டபம் காணப்படுகிறது. அம்மன் சந்நதியின் முன் சிங்க பலிபீடம் அரோகணித்திருக்கிறது. கருவறையில் அன்னை உஜ்ஜைனி மகாகாளியம்மன் அன்னை நான்கு  திருக்கரங்களுடன் அமர்ந்த நிலையில் இன்முகத்துடன்  அருள்பாலிக்கிறாள். கருவறை முகப்பில் வலதுபுறம் விநாயகரும், இடதுபுறம் மகாகாளியம்மனின் இன்னொரு திருமேனியும் உள்ளன. பிராகாரத்தின் மேற்குப் பகுதியில் துர்க்கையம்மனின் திருமேனி உள்ளது. இங்கு துர்க்கை எட்டு கரங்களுடன், கீழே விழுந்துகிடக்கும் மகிஷாசுரன் மேல் சூலத்தைக் குத்திய நிலையில், நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள். அன்னையின் சிரசில் சிவபெருமானின் திருமுகம் பதிக்கப்பட்டிருப்பது வித்தியாசமான அம்சமாகும். 

இந்த ஆலயத்தில் துர்க்கையே பிரதானமாக விளங்குகின்றாள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ராகுகால பூஜையில் நிறையப் பெண்கள் கலந்து கொள்கின்றனர். இங்கு அருள்பாலிக்கும் துர்க்கை, மங்கையர்களின் மனம் கவர்ந்தவள். ஆம், அவர்களின் பிரார்த்தனைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கும் இந்தத் தாயனைய துர்க்கைக்கு பெண்கள் எலுமிச்சை தீபமேற்றி தங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறார்கள். கோவை, உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ளது அருள்மிகு உஜ்ஜைனி மகாகாளியம்மன் ஆலயம்.

No comments:

Post a Comment