Tuesday 10 October 2017

திருமணப் பேறளிக்கும் பெருமாள்


விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் உள்ள கிளியனூரில் ஸ்ரீவைகுந்தவாசப் பெருமாள் கோயில் உள்ளது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் சோழ பல்லவ ராஜா இக்கோயிலை நிர்மாணித்திருக்கிறார் என்ற செய்தியை கோயிலிலுள்ள கல்வெட்டுகள் சொல்கின்றன. கலைநயம் மிக்க இக்கோயிலுள் நான்கு சிங்க கால் மண்டபம் அமைந்துள்ளது, தனிச் சிறப்பு. இந்த ஆலயத்தின் சுற்று மதில் மற்றும் சில மராமத்துப் பணிகளை 16ம் நூற்றாண்டில் பரகேசரிவர்மன் என்ற மன்னன் செய்ததை கல்வெட்டுகளிலிருந்து அறியமுடிகிறது. அந்நாளில் சுகபுரி என்று இத்தலம் அழைக்கப்பட்டது. சுகபிரம்மரிஷி இங்கு தங்கி தவம் செய்ததால் இந்தப் பெயர். இதுவே கிளிவளநல்லூர் என்றாகி, தற்போது கிளியனூர் என்று மருவிவிட்டது. 

இந்தக் கோயிலில் பெருமாளுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம் மட்டுமே செய்யப்படுகிறது. மேலும் இவ்வளவு பெரிய வடிவில் அமர்ந்த கோலத்தில் வேறு எங்குமே பெருமாள் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. மேற்கு நோக்கிய கோபுரம் அழகிய சுதை சிற்பங்களைக் கொண்டிருக்கிறது. கருவறையில் பெருமாளும் மேற்கு நோக்கியே வீற்றிருக்கிறார். வேறெங்கும் காணவியலாதபடி ஸ்ரீதேவி-பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். மேற்கு நோக்கிய இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டால் பக்தர்கள் நினைத்தது கைகூடும் என்பது ஐதீகம். பெருமாளுக்கு நேரெதிரே உள்ள கருடாழ்வாரும் அமர்ந்த கோலத்திலேயே உள்ளது விசேஷம். ‘இந்த கருடாழ்வார் பத்து நாகங்களைத் தனது திருமேனியில் ஆபரணமாக அணிந்துள்ளார். 

திருமண கோலத்தில் ஸ்ரீவைகுந்தவாசப் பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் காட்சி தருவதால் பக்தர்களுக்கு விரைவில் தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்று நம்புகிறார்கள். கோயிலின் இடதுபுறத்தில் ஜனகவள்ளித் தாயார் தனி ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். வைகாசி விசாகத்தில் திருக்கல்யாண வைபோகம், பிரதி மாதம் அமாவாசை இரவில் சுவாமி உள்பிராகார புறப்பாடு, புரட்டாசி மாதத்தில் ஸ்ரீவைகுண்ட ஏகாதசி ஆகியவை முக்கிய விழாக்களாக நடத்தப்பட்டு வருகின்றன. இக்கோயிலின் தலவிருட்சம் துளசி. சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், புதுச்சேரி முதலான அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து பெருமாளை உளநிறைவாக தரிசிக்கின்றனர். அமாவாசை தினத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment