Tuesday 10 October 2017

கஷ்டத்தை போக்கும் கன்னியம்மன்

Image result for கன்னியம்மன்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகேயுள்ள நல்லூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் கன்னியம்மன், தன்னை நம்பி வணங்கும் பக்தர்களுக்கு கஷ்டத்தை போக்குகிறாள். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகேயுள்ள நல்லூர் கிராமத்தில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த கந்தையா கோனார் இருபதுக்கும் மேற்பட்ட பசு மற்றும் எருமை மாடுகளை வளர்த்து வந்தார். அப்பகுதியில் எழுதப்படிக்க தெரிந்தவர்களில் இவரும் ஒருவர். தமிழ்மேல் பற்று கொண்டவர். மாடுகள் மேய்க்கும்போது கூட, தன்னுடன் மாடுகள் மேய்ப்பவர்களிடம் பழம் புலவர்களின் பாடல்களைப் பாடி, அதற்கான விளக்கம்கூறி பொழுதைக் கழிப்பார். நியாய தர்மனாக நடந்தார். அப்பகுதியில் மட்டுமன்றி சுசீந்திரம், தேரூர் பகுதிகளில் கூட தயிர், மோர் அதிகளவில் வாங்குவதற்கு இவரைத்தான் நாட வேண்டும் என்கிற தன்மையை உருவாக்கி வைத்திருந்தார். 

அவரது மனைவி கன்னியம்மாள் மாடுகளிலிருந்து பெறப்படும் பாலை அருகேயுள்ள சுசீந்திரம், தேரூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்று வந்தார். மீதமாகும் பாலைக் காய்ச்சி தயிராக்கி, அதன் மூலம் கிடைக்கும் வெண்ணெய், நெய் முதலான பொருட்களை கால்நடையாக கொண்டு சென்று விற்று வந்தார். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமிக்கு கருட சேவை செய்வதற்காக தயிர், பால் வாங்க வேண்டி, மன்னரின் உதவியாளர் அப்புக்குட்டன் நல்லூர் வந்து கந்தைய கோனாரிடம் முப்பது பக்கா தயிருக்கும், ஐம்பது பக்கா பாலுக்கும் முன்தொகை கொடுத்துச் சென்றார். குறித்த நாளில் குறித்த நேரத்தில் தற்போதைய ஆஸ்ரமம் பகுதிக்கு கொண்டு வந்து அங்குள்ள மடத்தில் வைக்க வேண்டும். அங்கிருந்து அரண்மனை ஆட்கள் எடுத்துச் செல்வார்கள் என்று கூறிச்சென்றார். தயிரும், பாலும் கொடுக்க வேண்டிய நாள் வந்தது. கந்தையா ஒத்தையில் கொண்டு போக முடியாது என்பதால் தன்னுடன் இரண்டு நபர்களை கூலிக்கு அழைத்துச்சென்றார். 

மூவரும் தலையில் தயிரும், மோரும் கொண்ட இரண்டு அடுக்கு பானைகளை சுமந்து சென்றனர். மடத்துக்கு முன்னே வந்ததும். ‘‘ஐய்யய்யோ, போச்சு, போச்சு எல்லாம் போச்சு’’ என்று கத்தினார், அப்புக்குட்டன். கந்தையா கேட்டார் ‘‘நாயர் அய்யா ஏன், இப்படி கூப்பாடு போடுறீங்க,’’ என்று கேட்டதும் ‘‘தயிரும், மோரும், சுமந்து கொண்டு வந்த தீண்டத்தகாதவர்களால் தீட்டு பட்டுவிட்டது. எனவே, இந்தத் தயிரையும், மோரையும் கொட்டிவிட்டு வேறு நபர்களை வைத்து சுமந்து, வேறு தயிரும், மோரும் கொண்டு வா’’ என்றார். ‘‘உடனே அது சாத்தியமல்ல, பால் கறக்கணும், காய்ச்சணும், அது உறையணும் அதன்பின்தான் தயிராகும். எப்படியும் இதற்கு இரண்டு நாளாகும்.’’ என்றார். ‘‘அரண்மனை காரியம். தெய்வ நிகழ்ச்சிக்காக என்று தெரிந்தும் இப்படி நீ நடந்து கொண்டாயே, நீ இடையனா, இல்லை மடையனா..’’ என்று ஆத்திரத்துடன் பேசிய அப்புக்குட்டன்,  ‘‘என்னோடு வா,’’ என கூறியவாறு தனது ஆட்களுடன் கந்தையாவை அழைத்துக்கொண்டு திருவனந்தபுரம் அரண்மனைக்கு வருகிறான்.

மன்னன் நடந்ததை யாவையும் கேட்டு உணர்ந்த பின், கந்தையாவை அழைத்து ‘‘சரி, போகட்டும் இனி வருங்காலங்களில் இந்தத் தவறை செய்யாதே, நீ செய்த குற்றத்திற்காக, தயிருக்கும், மோருக்கும் வாங்கிய முன்தொகையை மூன்று மடங்காக திரும்ப கொடுக்க வேண்டும். இந்த அபராதம்தான் உனக்கு தண்டனை’’ என்றார்.‘‘என்னால் இவ்வளவு பெருந்தொகையை அபராதமாகச் செலுத்த முடியாது, வேண்டுமென்றால் வாங்கிய தொகையை கொடுத்து விடுகிறேன்.’’ என்று கந்தையா கூறியதும், மறுத்துப் பேசுகிறாயா என்றார் மன்னன். ‘‘இல்லை மன்னா, குடிமகன் சுமந்து வந்த தயிர் தீட்டு என்றால், உங்கள் சிர மயிர் சிரைக்கும் போது, அவன் தனது கரத்தால் சிகையை அலங்கரிக்கும் பொருட்டு உங்கள் சிரசையே ஆட்டிப்படைக்கிறானே, அவன் கரம் பட்டது தீட்டென்று கருதி, உங்கள் சிரத்தையே வெட்டி எறிவீர்களா’’ என்று கேட்டார் கந்தையா, மன்னன் திகைத்து நின்ற வேளை, ‘‘மன்னனையே எதிர்த்து பேசுகிறாயா,’’ என்று கேட்ட அப்புக்குட்டன், ‘‘யாரங்கே, ஆழக்குழி தோண்டி, அதில் தரை மேல் தலை தெரிய இவனை நிறுத்தி, பட்டத்து யானையை வரவழைத்து மிதித்து கொல்ல செய்யுங்கள். 

இது மன்னரின் ஆணை’’ என்று உத்தரவிட்டார். கந்தையா கத்தினார். தரைமேல் தலை தெரிய, குழிக்குள் நின்ற கந்தையாவின் தலையை யானை பதம் பார்க்க, மாண்டு போனார் கந்தையா. இந்த தகவல் நல்லூரிலிருந்த அவரது மனைவி கன்னியம்மாளுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து அலறி துடித்த கன்னியம்மாள் தனது உயிரை மாய்த்துக் கொண்டாள். கன்னியம்மாளின் ஆத்மாவை சாந்தப்படுத்த, அவளுக்கு நடுகல் வைத்து, பூஜை, படையல் செய்து கன்னியம்மாவின் உறவினர்கள் வழிபட்டனர். பின்னர் நாளடைவில் கன்னியம்மாள் தெய்வமாக வணங்கப்படலானாள். கஷ்டம் என்று அவளுக்கு வைக்கப்பட்டிருக்கும் நடுகல் முன்பு நின்று அழுதால் மறு கணமே அந்த கஷ்டத்திற்கு தீர்வு கிடைக்கிறது. தனக்கு நேர்ந்த நிலை வேறு எந்த பெண்ணுக்கும் நேரக்கூடாது என்ற எண்ணத்தில் தன்னை நம்பி வணங்கும் பெண்களுக்கு கன்னியம்மாள் கஷ்டத்தை போக்குகிறாள் என்கின்றனர் அப்பகுதியை சேர்ந்தவர்கள். இக்கோயிலில் பங்குனி மாதம் கொடை விழா நடைபெறுகிறது. குமரி மாவட்டம் சுசீந்திரத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவிலுள்ள நல்லூர் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment