Sunday 8 October 2017

சரும நோய் தீர்த்திடும் சர்வேஸ்வரன்


திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையிலுள்ள பாளையங்கோட்டை எனும் நகரின் மையப் பகுதியிலேயே திரிபுரம் எரித்த சிவபெருமானான  திரிபுராந்தகரின் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலான தொன்மையும் பெருமையும் கொண்டது. இறைவியின் திருப்பெயர்  கோமதி அம்பாள். அசுவக்ரீவன், விருஷபக்ரீவன், வியாளக்ரீவன் என்ற மூன்று அசுரர்களும் சிவபெருமானைக் குறித்து தவம் புரிந்தனர். அவர்கள்  வலிமை பெறுவதற்கு முன்பேயே அழித்துவிட வேண்டுமென்று தேவர்கள் அவர்களோடு கடும்போர் புரிந்தனர். அவர்களிடமிருந்து தப்ப  இயலாததை அறிந்த திரிபுரர்கள் பூவுலகிற்கு வந்து காடு மலைகளில் சுற்றித் திரிந்தனர். ஆங்கொரு வில்வ மரக் காட்டினையும் அதன் நடுவே ஒரு  சிவலிங்கத் திருமேனியையும் கண்டனர். உடனே கடுமையான தவமியற்றத் தொடங்கினர். அவர்களின் தவத்திற்கு இரங்கி சிவபெருமான்  அவர்களுக்கு காட்சியளித்தார். இவரிடம் மட்டுமல்லாது, தொடர்ந்து பிரம்மனை நோக்கியும் தவம் இருந்து இவரிடமிருந்தும் வரம் பெற்றனர்.  உடனே அசுரர் இயல்புப்படி திரிபுரர்கள் மீண்டும் தேவர்களையும் மற்றவர்களையும் துன்புறுத்த தலைப்பட்டனர். 

அவர்களை மீண்டும் அழிக்கக் கோரி, தேவர்கள் வில்வ வனத்திற்கு வந்து சிவபெருமானிடம் சரணடைந்தனர். இப்போது சிவபெருமானே  திரிபுரர்களை அழித்து ‘திரிபுர சம்ஹாரம்’ செய்தார். இதனால் எல்லோராலும் ‘திரிபுரேசுவரர்’ என்றழைக்கப்பட்டார். இதே பெயரில் ஒரு சில  ஆலயங்களும் கொண்டுள்ளார். பாண்டிய நாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்த உத்தாலன், ஒருநாள் உப்பரிகையில் தனது தேவியுடன் உலாவிக்  கொண்டிருக்கும்போது அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த கௌதம முனிவரை மதியாது கேலி செய்தான். அதனால் கோபமுற்ற முனிவர்  அவனை சபிக்க மன்னனின் அங்கங்கள் உருக்குலைந்து சோபையிழந்தன. தன் தவறினை உணர்ந்த மன்னன் முனிவரிடம் சாப விமோசனம் வே ண்டினான். அவரும் தாமிரபரணி நதிக்கரையில் செண்பக வனத்தில் சிவலிங்கம் அமைத்து பூசை செய்தால் இழந்த வனப்பை மீண்டும் பெறலாம்  என்றருளினார். அதோடு, மன்னனையும், பாண்டிமாதேவியையும் அழைத்துக்கொண்டு இந்தப் பாளையம்பதிக்கு வந்தார். அங்குள்ள செண்பக வன த்தின் செழுமையைக் கண்ட முனிவர் அங்கேயே சில காலம் தங்கவும் விரும்பினார். 

அப்போது, ஒருநாள் தனக்கு அங்கேயே சிவலிங்கம் அமைத்து திரிபுராந்தீஸ்வரர் என்ற பெயர் சூட்டுமாறு மன்னனின் கனவில் சிவபெருமான்  அறிவுறுத்த அவனும் காசிக்குச் சென்று சிவலிங்கம் எடுத்து வந்து இங்கே பிரதிஷ்டை செய்தான். பாண்டிய மன்னனும் தேவியும் தவமிருந்து மீ ண்டும் தாங்கள் இழந்த தேகப் பொலிவையும் கண்ணொளியையும் பெற்றனர். தங்களுக்குக் காட்சி தந்த ஈசனிடம் அவர், அதே இடத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக்க வேண்டுமென்றும், எப்பொழுதும் அவரை மறவாமல் தாம் பூசிக்க வேண்டுமென்றும், சந்திர-சூரியர் உள்ளவரை இத்தலத் திற்கு வந்து அவரை பூசிப்பவர்கள் அனைத்து நலனும் பெற்று இன்புற்றிருக்க வேண்டுமென்றும் மூவரும் கேட்டுக்கொண்டனர். இந்த திரிபுராந் தீஸ்வரர் கோயிலில் சிவபெருமான் கிழக்கு திசை நோக்கியும், இறைவி கோமதியம்மை தெற்கு திசை நோக்கியும் காட்சி தருகிறார்கள். பெரிய  கோபுரம், கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என ஆகம விதிகளின்படி அனைத்து சந்நதிகளும் இங்குள்ளன. நோய்கள் தீரவும், கடன்  நிவர்த்தி, பொருளாதார வளம் பெருகவும் பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

No comments:

Post a Comment