Sunday 8 October 2017

தடைகளை தகர்த்தெறியும் முத்தாரம்மன்

Image result for முத்தாரம்மன்

நெல்லையில் இருந்து சுமார் 68 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியிலும் குலசேகரப்பட்டினம் அமைந்துள்ளது. இத்தலத்தில் பல கோயில்கள் இருந்தாலும் முத்தாரம்மன் ஆலயமே மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். காரணம் மைசூருக்குப் பிறகு தசரா கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது இங்குதான். முன்னூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. குலசேகரபாண்டியன் ஆட்சி காலத்தில்தான் இக்கோயிலுக்கென்று தனிச்சிறப்பு ஏற்பட்டது. அம்பாளுக்கு அழகான கோயிலைக் கட்டினர். பின்னர், அவளுக்குச் சிறப்பான பூஜைகளைச் செய்து வழிபடத் தொடங்கினார்கள். இதனையடுத்து முத்தாரம்மனின் சக்தி அனைவருக்கும் தெரிய வரவே இந்த ஊர் பெருமைமிக்கதாக விளங்கத் தொடங்கியது.  

இங்கு அம்பாள் சுயம்புவாகத் தோன்றி எழுந்தருளியிருக்கிறாள் என்பது மிகப்பெரும் சிறப்பாகும். சுயம்புவாக லிங்கம் தோன்றுவதுதான் அனைவரும் அறிந்தது. பெரும்பாலான இடங்களிலும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால், அம்பாள் சுயம்புவாக இங்கு தோன்றியிருப்பது அதிசயங்களில் ஒன்று. அதனாலேயே இங்கு அம்பாள் மிகவும் சக்தி வாய்ந்தவளாக காட்சியளிக்கிறாள்.  இச்சந்நதியில் சுவாமியின் ஆற்றலை அம்பாள் வாங்கி இருக்கிறாள். எனவே அம்பாள் சிவமயமாகக் காட்சி தருகிறாள். இத்துடன் இல்லாமல், அம்பாளின் ஆற்றலை சிவனும் பெற்றிருக்கிறார். அதனால் இங்கு சிவன் சக்தி மயமாகக் காட்சி தருகிறார். இதனைப் பரிவர்த்தனை யோகநிலை என்று கூறுவர். இத்தலத்தில் அம்பாளின் ஆட்சியே மேலோங்கி இருக்கிறது. 

ஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மன் திருவுருவங்களுக்குக் கீழ், பீடத்தின் அருகில் முத்தாரம்மனின் சுயம்பு உருவம் உள்ளது. ஞானமூர்த்தீஸ்வரர் இடதுகாலை மடித்து, வலதுகாலை தொங்கவிட்டு, வலக்கையில் செங்கோலையும், இடக்கையில் திருநீற்றுப் பாத்திரத்தையும் ஏந்தியுள்ளார். சுவாமிக்கு இடப்புறம், முத்தாரம்மன் நான்கு திருக்கரங்களுடன், வலதுகாலை மடித்து, இடதுகாலை தொங்கவிட்டு அருள்பாலிக்கிறார். வலப்புறம் மேற்கையில் உடுக்கை, இடப்புறம் நாகபாசம், வலதுகீழ் திருக்கையில் திரிசூலம், கீழ இடக்கையில் குங்கும பாத்திரம் ஏந்தி அருள்கிறார். இந்தக் குங்குமப் பாத்திரத்தில் நந்தி, நாகம், சிவலிங்கம், திரிசூலம் ஆகிய உருவங்கள் மிக நுணுக்கமாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

மூன்று மண்டபங்களோடு திகழ்கின்ற இந்த ஆலயத்தில் கருவறையை அடுத்துள்ள மகா மண்டபத்தில் பேச்சியம்மனும், இடப்புறம் கருப்புசாமியும், தெற்கு நோக்கி பைரவரும் உள்ளனர். கொடிமர மண்டபத் தென்பாகத்தில் அஸ்திர தேவரும், கீழ்ப்பாகம் விநாயகரும், மேற்கே பாலசுப்பிரமணியரும் உள்ளனர். கன்னி மூலையில் மகா வல்லப விநாயகரும், தென்புறம் நோக்கி இரண்டு பூதத்தார்களும் காட்சி தருகின்றனர். மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில் ஆகிய தலங்களில் அன்னையின் ஆட்சியே நடைபெற்று வருகிறது. இந்த மூன்று ஆலயங்களிலும் மந்திரம், யந்திரம், தந்திரம் என்று மூன்று முக்கிய விஷயங்கள் தற்போதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இதில் மந்திரம் என்பது அன்னையைத் துதிக்கும் தோத்திரம். யந்திரம் என்றாலும் சுவாமி சிலைகள் ஸ்தாபிக்கப்படும்போது, சிலைக்கு அடியில் மருந்து சாத்தி வைக்கப்படும் செப்புத் தகடு ஆகும். 

தந்திரம் என்பது அங்கு நடைபெறும் பூஜை முறைகள் ஆகும். இதே முறைகள் சற்றும் மாறாமல் குலசேகரன்பட்டினம் திருத்தலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. முத்தாரம்மன் ஆலய தசரா விழாவின்போது எண்ணற்ற பக்தர்கள் 41 நாட்கள் விரதமிருந்து, பல்வேறு வேடங்கள் தாங்கி வீதிகளில் உலா வருகின்றனர். விநாயகர், சுப்பிரமணியர், சிவபெருமான், காளி, அனுமார், சிங்கம் போன்ற பல்வேறு வேடங்களைத் தாங்கும் பக்தர்களுக்கு உதவியாக இதுபோன்ற வேடங்களுக்குரிய ஒப்பனைப் பொருட்களை விற்கின்ற கடைக்காரர்களும், எண்ணற்ற ஒப்பனைக் கலைஞர்களும் குலசேகரன்பட்டினத்தில் கூடி விடுகின்றனர். இவ்வேடங்களைத் தாங்குகின்றவர்களில் பல கைகளுடன் கூடிய காளி வேடம் ஏற்பவர்கள் அதிகம். 

மகிஷாசுரனை வதம் செய்ய, போருக்குச் செல்கின்ற தேவியின் படைவீரர்களாக வண்ண ஆடைகள் அணிந்து இவர்கள் அணிவகுத்துச் செல்வதைப் பார்க்கவே ஏராளமானோர் கூடுகின்றனர். இவ்வாறு வேடமிடும் பக்தர்கள் இரவில்கூட வேடத்தைக் கலைக்காது உறங்குகின்றனர். காலையில் குளிக்கும்போது மட்டும் கலைத்துவிட்டு மீண்டும் பொறுமையாக வேடம் புனைந்து கொள்கின்றனர். ஒவ்வொரு நாளும் இவர்கள் அருகில் உள்ள ஊர்களுக்குச் சென்று காணிக்கை பெறுகின்றனர். தங்கள் பிரச்னைகள் தீர்ந்து தேவியின் அருள் கிட்டும் பொருட்டு நேர்த்திக் கடனாக வேடமேற்கொள்ளும் பக்தர்களும் உண்டு. இவ்வாறு வேடம் புனைந்து அம்மனோடு பவனி வருவது இத்தலத்தில் காணப்படும் ஒரு சிறப்பம்சமாகும்.

No comments:

Post a Comment