Friday, 6 October 2017

வாணியம்பாடியில் அருளும் கலைவாணி

வாணியம்பாடியில் அருளும் கலைவாணி

சரஸ்வதி தேவி யாழை இசைத்து, தனது இனியக் குரலில் பாடினாள். வாணி பாடிய தலம் என்பதால் இது ‘வாணியம்பாடி’ என்றானது.

பிரம்மனின் சாபத்தால் பேசும் சக்தியை இழந்தாள் கலைவாணி என்று அழைக்கப்படும் சரஸ்வதிதேவி. இதையடுத்து பூலோகம் வந்த சரஸ்வதி, வேதங்கள் ஈசனை வழிபட்ட வேதாரண்யம் திருத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டாள். அப்போது வேதாரண்யம் அம்பாளிடம் சரஸ்வதி தேவி வீணையை இசைக்க வந்தாள். ஆனால் அம்பாளின் குரல், தனது யாழை (வீணை) காட்டிலும் இனிமையானதாக இருந்ததைக் கண்ட சரஸ்வதி, தனது யாழை மூடி வைத்து விட்டாள். எனவே, வேதாரண்யம் அம்பிகையின் திருநாமம் ‘யாழைப் பழித்த மென்மொழியான்’ என்று ஆயிற்று.

இந்த நிலையில் தன் சாபத்தால் பேசும் சக்தியை இழந்த கலைவாணியைத் தேடி, சத்தியலோகத்தில் இருந்து பூலோகம் வந்தார் பிரம்மா. அங்கே கலைவாணி சிருங்கேரி என்னும் தலத்தில் இருந்து தவம் செய்து கொண்டிருந்தாள். கலைவாணியை சமாதானம் செய்து அங்கிருந்து வாணியம்பாடி என்னும் ஊரில் உள்ள சிவதலத்திற்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள அதிதீஸ்வரரையும், பெரியநாயகி அம்பாளையும் வழிபட்டு, கலைவாணிக்கு மீண்டும் பேசும் சக்தியை வழங்க கேட்டுக் கொண்டார்.

பிரம்மாவின் வேண்டுதலை நிறைவேற்ற எண்ணிய அதிதீஸ்வரரும், பெரியநாயகி அம்பாளும் அங்கு தோன்றி, ஹயக்ரீவர் முன்னிலையில் வீணையை மீண்டும் சரஸ்வதி இசைக்க அருளினர். மேலும் கலை வாணிக்கு பேசும் சக்தியையும் அளித்தனர். இதையடுத்து சரஸ்வதி தேவி மீண்டும் யாழை இசைத்து, தனது இனியக் குரலில் பாடினாள். வாணி பாடிய தலம் என்பதால் இது ‘வாணியம்பாடி’ என்றானது.

இத்தல அதிதீஸ்வரர் சுயம்புவாக தோன்றியவர். அவர் மேற்கு நோக்கி எழிலாக அருள்புரிகிறார். அம்பாள் பெரியநாயகி தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு சரஸ்வதி தேவி தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில், மடியில் வீணையுடன் வலது காலைத் தொங்க விட்டு, இடதுகாலை மடித்து ஒய்யாரமாக வீற்றிருக்கிறாள். இந்த ஆலயத்தில் சிவனும், விஷ்ணுவும் இணைந்த வடிவமான சங்கரநாராயணர் அருள்கிறார். இவரை பிரதோஷ காலங்களில் அபிஷேகம் செய்து வழிபட்டால் கிடைக்கும் பலன் நூறு மடங்கு என்கிறார்கள்.

இத்தலத்தில் பைரவர் எடுப்பான தோற்றத்தில் அருள்கிறார். இவரை ராகு காலங்களில் வழிபட்டால், சர்ப்ப தோஷங்கள் அகலும். சனிக்கிழமைகளில் வழிபட்டால் ஏழரைச் சனி, கண்டகச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, அஷ்டமச்சனி உள்ளிட்ட சனி தோஷங்கள் விலகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சிறப்புத் தலம் இது.

இந்த ஆலயத்தில் நவராத்திரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜையன்று இத்தல ஈசனையும், அம்பாளையும், கலைவாணியையும் முறையே ஐந்து தீபங்கள் ஏற்றி வழிபட்டால் கல்வி அறிவு பெருகும். சொல்லாற்றல் மேம்படும். ஞானம், தெளிவு பிறக்கும். கல்வியிலும், நேர்முகத் தேர்வுகளிலும் முதலிடம் பெறலாம். கலைவாணிக்கு பேசும் சக்தி கிடைத்த வாணியம்பாடிக்கு, சரஸ்வதி பூஜை அன்று வந்து அதிதீஸ்வரர், பெரியநாயகி, சரஸ்வதி தேவியின் அருளை ஒருங்கேப் பெறலாம்.

வேலூரில் இருந்து 65 கிலோமீட்டர் தூரத்திலும், ஜோலார்பேட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது வாணியம்பாடி திருத்தலம்.

No comments:

Post a Comment