Monday 2 October 2017

விபூதி என்பதும் ஐஸ்வர்யம் என்பதும் ஒன்றே!


ஞானம் எனும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவத்தத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது. விறகுக் கட்டையை அக்னி பஸ்பமாக்குவது போல், ஞானம் என்கிற அக்னி எல்லாக் கருமங்களையும் பஸ்பமாக்குகிறது என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் அருள்கிறார். விபூதியே பஸ்மம். அதுவே சிவம். ‘‘விபூதி பூதிரைச்வர்யம்’’ என்று அமர கோசத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது, விபூதி என்பதும்  ஐஸ்வர்யம் என்பதும் ஒன்றுதான். எந்த வஸ்துவானாலும் அதை எரித்தால் முதலில் கறுப்பாக மாறும். பிறகு இன்னும் அக்னியால் புடம் போட் டால் நீற்றுப் போய், சுத்த வெளுப்பாக மாறும். இந்த வெண்மை மாறாது -மீண்டும், மீண்டும் தீயில் போட்டாலும்! 

அதுவே விபூதியின் முழு மையான நிலை. இப்படி நீற்றுப்போனதே திருநீறு. இதுவே பஸ்மம் ஆகும். ஈஸ்வரனே மஹா பஸ்பம் -எல்லாம் அழிந்த பின்னும் அழியாத மஹாபஸ்மம். மெய்யான ஆத்மாவிற்கு அடையாளமாக இருப்பதே விபூதிதான். வில்வம் லட்சுமி வசிக்குமிடம். லட்சுமி வாசம் செய்யும் இன்னொரு ஸ்தானம் பசு. விபூதி என்பது பசுவின் சாணத்தை அக்னியிலிட்டு பஸ்பமாக்கு வதிலிருந்து உண்டாகிறது. கருநிற, செந்நிற, பொன்னிற விபூதியை தரிக்கலாகாது. விபூதியை பட்டுப் பைக்குள்ளும், சம்புடத்தினுள்ளும், வில்வக் குடுக்கையிலும், சுரைக் குடுக்கையிலும் சேர்த்து வைத்துக் கொண்டு உடலில் தரிக்கலாம். வடக்கு அல்லது கிழக்கு நோக்கியே இவ்வாறு தரித்தல் வேண்டும். 

சூரிய உதய காலத்திலும், சந்தியா காலத்திலும், ஸ்நானம் செய்த பின்பும் நிச்சயம் தரித்தல் வேண்டும். விபூதி தரித்தலை திரிபுண்டரம் என்பார்கள். அதாவது, விபூதிக் கீற்றானது வளையாமலும், இடையறாமலும் ஒன்றை ஒன்று தீண்டாமலும், மிகுந்த இடைவெளி யில்லாமலும் தரிக்க வேண்டும். விபூதி நிலத்திலே சிந்தாவண்ணம் அண்ணாந்து பார்த்து, ‘சிவ சிவ’ என்று சொல்லி வலக்கையின் சுட்டுவிரல், நடுவிரல், மோதிரவிரல்களால் தரித்தல் வேண்டும். திருத்தொண்டர் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் ‘முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்’ என்று பாடியுள்ளார். இதிலிருந்து விபூதியின் மகிமை புரியும். விபூதியை உடலில் தரிப்பது என்பது ‘நமசிவாய’ என்ற மந்திரத்தையே ஒரு கவசமாக அணிவது போன்றது. அதைத்தான், ‘மந்திரமாவது  நீறு’ என்கிறார் திருஞானசம்பந்தர். 

No comments:

Post a Comment