Monday, 2 October 2017

வேண்டியதைத் தந்திடும் வேங்கடேசன்


கிருஷ்ணாவதாரத்தை முடித்து பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்தார். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி அநியாயங்கள் பெருகின. மீண்டும் இறைவன் பூமியில் அவதாரம் செய்ய வேண்டி, காஷ்யப முனிவர் தலைமையில் முனிவர்கள் யாகம் தொடங்கினர். யாகத்தை காண வந்த நாரதர், ‘‘யாகத்தின் பலனை யாருக்குத் தரப் போகிறீர்கள்? என்று முனிவர்களைக் கேட்டார். பலனை சாந்தமான மூர்த்திக்கு தருவதென்று முடிவு செய்தனர். மும்மூர்த்திகளில் சாந்தமானவரை தேடி பிருகு வைகுண்டம் சென்றார். திருமால் பிருகுமுனிவரை கண்டு கொள்ளாமல் இருக்கவே, அவர் மார்பில் எட்டி உதைத்தார். திருமால் கோபம் கொள்ளாமல் உதைத்த பாதத்தை தடவி கொடுத்தார். பொறுமையும், அமைதியும் நிறைந்த திருமாலுக்கே யாகபலனைத் தருவதென முனிவர்கள் முடிவெடுத்தனர். மார்பில் உதைத்த பிருகு முனிவரைத் தண்டிக்கும்படி லட்சுமி சொல்ல திருமால் மறுத்துவிட்டார்.

லட்சுமி கோபம் கொண்டு பாற்கடலில் இருந்து கிளம்பி, பூலோகத்தை அடைந்து தவத்தில் ஆழ்ந்தாள். திருமாலும் திருமகளை தேடி பூவுலகத்தைச் சுற்றி அலைந்து வேங்கடமலையில் வந்து ஒரு புற்றில் கண்மூடி அமர்ந்தார். அவருக்கு பசித்தது.இதுபற்றி, நாரதர் தவத்தில் இருந்த லட்சுமியிடம் சொன்னார்.
லட்சுமி வருத்தமடைந்தாள். நாரதர் அவளிடம் திருமாலின் பசியைப் போக்க உபாயம் சொன்னார். அதன்படி பிரம்மாவும், சிவனும் பசுவாகவும் கன்றாகவும் மாற, லட்சுமி தாயார் அவற்றின் எஜமானி போல் வேடமணிந்து, அப்போது அப்பகுதியை ஆட்சிசெய்த மன்னனிடம் விற்கச்சென்றாள். மன்னன் வாங்கிய பசு மேய்ச்சலுக்குச் செல்லும்போது திருமால் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது. பசுவினை மேய்த்த இடையன் பசுவின் பின்னால் சென்று புற்றில் பால் சொரிவதைக் கண்டான். கோடரியால் பசுவை அடிக்க முயன்றான். 

கோடரி தவறி புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு ரத்தம் சிந்தியது. தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள்ஆஸ்ரமம் ஒன்றினைக் கண்டார். அது வராஹ மூர்த்தியின் ஆஸ்ரமம். அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள்) தன் பிள்ளையான திருமாலின் முகத்தைக் கண்டவுடன் பாசத்தில் மூழ்கினாள். திருமாலும் அன்புடன் வகுளாதேவியை “அம்மா என்று அழைத்தார். வகுளாதேவி தன் பிள்ளைக்கு “சீனிவாசன் (செல்வம் பொருந்தியவன்)என்று பெயரிட்டாள். தன் பிள்ளையின் காயம் தீர மருந்திட்டு, பசிபோக்கிட கனிகளைத் தந்தாள். இந்நிலையில், சந்திரகிரி என்ற பகுதியை ஆகாசராஜன் என்பவன் ஆண்டு வந்தான். பிள்ளை வரம் வேண்டி தன் குலகுரு சுகமாமுனிவரின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்ய நல்ல நேரம் குறித்தான். 

யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. தாமரைக்கு “பத்மம் என்று பெயர் உண்டு. எனவே குழந்தைக்கு “பத்மாவதி என்று பெயரிட்டான்.ராமாவதாரத்தின் போது வேதவதி என்னும் பக்தை, ராமனை மணாளனாக பெற வேண்டி தவம் செய்தாள். ராமனும் அவளிடம், பின்னாளில் அவளை மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார். அதன்படியே வேதவதி பத்மாவதியாகப் பிறந்தாள். பிறந்து ஆகாச ராஜனின் மகளாக வளர்ந்து வந்தாள். சீனிவாசப் பெருமாளுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் இனிதே நடந்தது. அதன்பின் சீனிவாசப்பெருமாள் கலியுகம் முடியும் வரை திருமலையில் சிலாரூபமாக பக்தர்களுக்கு அருள் தரும் விதமாக திருமலையில் எழுந்தருளினார். 

சோழமன்னன் தொண்டைமான், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் பெருமாளுக்கு கோயில் ஒன்றை எழுப்பினார். பத்மாவதி அலமேலுமங்காபுரத்தில் அருளாட்சி செய்கிறாள். சீனிவாசப் பெருமாள் தினமும் திருச்சானூர் வந்து தங்கிவிட்டு காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஐதீகம் நிலவுகிறது. இந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோயில். முடி காணிக்கை மூலம் மட்டுமே பல கோடிகளை சம்பாதிக்கும் தலம். திருப்பதி லட்டு உலகப்பிரசித்தி பெற்றது. புரட்டாசி சனி விரதம் இந்தப்பெருமாளை முன்னிட்டே அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தியாவில் மிக அதிகமான மக்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். புரட்டாசி பிரமோற்ஸவத்தின் ஐந்தாம் திருநாளில் கருட சேவை நடக்கும். அன்று சுவாமி பவனியின் போது மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம். இதன் காரணமாக ஒரு காலத்தில் சுவாமி பவனி முடியும் வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. 

தற்போது கூட்டம் அதிகமாக இருப்பதால், பெயரளவுக்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் நடை அடைக்கப்படுகிறது. இந்த விழாவின் போது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுகிறார்கள். பொதுவாக பெருமாளை பசுக்களை மேய்க்கும் கோலத்தில் தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் திருப்பதியில் உற்சவப் பெருமாள் மட்டுமே “ஆடு மேய்க்கும் கோலத்தில் காட்சியளிப்பார். இந்த காட்சியை ஊஞ்சல் உற்சவத்தின் போது தரிசிக்கலாம். பெருமாள் ஆனந்த விமான நிலையத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருட்பாலிக்கிறார். திருப்பதி வெங்கடாசலபதி என்றால் பலருக்கும் அவர் பணக்காரக்கடவுள் என்று தான் தெரியும். ஆனால் உண்மையில் வெங்கடாசலபதி கடன்காரர். அவரது வரலாற்றுப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் மறுபிறவி கிடையாது.

இங்குள்ள ராஜகோபுரம் நாற்கோண அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்து கட்டிட கலை வடிவமைப்பில் உள்ள இந்த கோபுரம் 13ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. “படிகாவலி மஹா துவாரம் என்று இந்த கோபுரத்தை அழைக்கின்றனர். கோயிலுக்குள் மூன்று பிராகாரங்கள் உள்ளன. இதில் ஒரு பிராகாரத்தை “சம்பங்கி பிரதட்சிணம் என்று அழைக்கின்றனர். இந்த பிராகாரத்திற்குள் பக்தர்கள் செல்ல முடியாது. இங்கு பிரதிமை மண்டபம், ரங்க மண்டபம், திருமலை ராய மண்டபம், சாளுவ நரசிம்மர் மண்டபம், ஐனா மகால், த்வஜஸ்தம்ப மண்டபம் ஆகியவை உள்ளன. கோபுரத்தை கடந்ததும் நாம் நுழையும் மண்டபத்தை கிருஷ்ண தேவராய மண்டபம் அல்லது பிரதிமை மண்டபம் என்று அழைக்கிறார்கள். 

இந்த மண்டபத்தில் விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் மற்றும் அவரது துணைவியர்களான திருமலா தேவி (இடது), சின்னா தேவி (வலது) ஆகியோர் உள்ளனர். இந்த மண்டபத்தின் தென்பகுதியில் வெங்கடபதி ராயர் மன்னரின் சிலை உள்ளது. 1570ல் சந்திரகிரி பகுதியை இவர் ஆண்டார். கிருஷ்ணதேவராயரை அடுத்து விஜயநகரை ஆண்ட அச்யுத ராய மன்னர் அவரது மனைவி வரதாஜி அம்மாவுடன் காட்சியளிக்கிறார். 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் ராமர் வில்லை உடைக்கும் காட்சி, ராம பட்டாபிஷேகம், கிருஷ்ண லீலை காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது. சம்பங்கி பிரதட்சிண பிராகாரத்தில் ரங்க மண்டபம் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கத்தில் அன்னியர் படையெடுப்பின் போது, ரங்கநாதரின் உற்சவர் சிலை திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டது. அந்த சிலை இந்த மண்டபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 

13201360 களில் இப்பகுதியை ஆண்ட ஸ்ரீரங்க நாத யாகவ ராயர் காலத்தில் விஜய நகர பாணியில் இந்த மண்டபம் அமைக்கப் பட்டுள்ளது. ரங்க மண்டபத்தின் மேற்கு பகுதியில் திருமலை ராயர் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி ஆண்டுக்கு ஒருமுறை அமர்ந்து கோயிலின் கணக்கு வழக்குகள் பற்றி விசாரிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இங்குள்ள தூண்களில் மோகன தேவி மற்றும் பிதாபீபி ஆகியோரின் சிலைகள் உள்ளன. திருமலை ராய மண்டபத்தின் வடக்கு பகுதியில் இரண்டு பிரிவுகளை கொண்ட ஐனா மகால் உள்ளது. வரிசைக்கு ஆறு தூண்கள் வீதம் ஆறு வரிசைகளில் 36 தூண்கள் கொண்ட மண்டபம் இது. மண்டபத்தின் மத்தியிலுள்ள அறையில் ஊஞ்சல் ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. இதில் மலையப்ப சுவாமி அமர்ந்து ஊஞ்சல் உற்சவம் நிகழ்த்துவார்.

வைகானஸ ஆகம விதிகளின்படி துவஜஸ்தம்ப (கொடிமரம்) மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. மற்ற கோயில்களில் உள்ள கொடிமர மண்டபங்களில் எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் உற்சவங்களை நிகழ்த்த முடியாது. ஆனால், இந்த மண்டபத்தில் சீதோஷ்ணம் எப்படி இருந்தாலும் உற்சவங்களை நடத்த முடியும். நடிமி படி காவிலி. இப்படி ஒரு வித்தியாசமான பெயருடன் கூடியதே இக்கோயிலின் உள்கோபுரம் ஆகும். கொடிமர மண்டபத்தை அடுத்து இந்த கோபுரவாசல் உள்ளது. கோபுர கதவுகள் வெள்ளி தகடுகளால் மூடப்பட்டுள் ளது. வெளி கோபுர கதவுகளைவிட இந்த கோபுர கதவுகள் சிறியது. இந்த கதவுகளின் அருகில் நின்று எந்த பிரார்த்தனை செய்தாலும் அது உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. “வெண்டிவாகிலி என்று இந்த கதவுகளுக்கு பெயர். இந்த கதவுகளை ஒட்டியுள்ள சுவரில் ஜடா வர்மன் சுந்தரபாண்டியன் 1251ல் இக்கோயிலுக்கு அளித்த உபய விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதினைந்தாம் நூற்றாண்டில் சந்திரகிரி பகுதியை ஆண்ட மல்லண்ணா என்பவர், இந்த மண்டபத்தை உருவாக்கினார். 16 தூண்கள் உள்ள இந்த மண்டபம், மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கொலுவு சீனிவாசமூர்த்தி இந்த மண்டபத்தில் அமர்ந்து, சேவை சாதிப்பார். இந்த மண்டபத்தில் திருமணி, திருமாகமணி என்னும் இரண்டு மணிகள் உள்ளன. நைவேத்திய நேரத்தில் இந்த மணிகள் ஒலிக்கப்படும். இதன் காரணமாக இந்த மண்டபத்திற்கு, “திருமாமணி மண்டபம் என்ற பெயர் ஏற்பட்டது. “முக மண்டபம் என்றும் இதைச் சொல்வர். மண்டபத்தின் கிழக்கே கருடர் சந்நதியும், வடக்கே உண்டியல் மண்டபமும் உள்ளது. திருமாமணி மண்டபத்தைக் கடந்து “பங்காரு வகிலி எனப்படும், தங்க நுழைவுவாயில் வழியாகவே பெருமாளைத் தரிசிக்க நாம் செல்கிறோம். இதன் வாசலில் ஜெயன், விஜயன் எனப்படும் துவாரபாலகர்கள் உள்ளனர். இந்த வாசலில் உள்ள மரக்கதவை, தங்க முலாம் பூசிய தகடுகளால் போர்த்தியுள்ளனர். அந்த தகடுகளில் தசாவதார சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதனுள் நுழையும்போது, சுப்ரபாதம் எந்நேரமும் காதில் ஒலிக்கும்.

வெங்கடாசலபதி கருவறைக்கு செல்லும் முன் ஒரு சதுரவடிவ அறை இருக்கும். இதை ஸ்நாபன மண்டபம் என்று அழைக்கிறார்கள். இதை அடுத்துள்ள செவ்வக அறையை “ராமர் மேடை என்கின்றனர். இதில் ராமர், சீதா, லட்சுமணர் ஆகியோரின் சிலைகளும், விஷ்வக்ஸேனர், கருடன் ஆகிய உற்சவ மூர்த்திகளின் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. குலசேகர ஆழ்வார் படியை ஒட்டி போக சீனிவாசர் சயனிக்கும் சயன மண்டபம் அமைந்துள்ளது. இதை அர்த்த மண்டபம் என்றும் அழைப்பர். இதையடுத்து கர்ப்பகிரகத்தில் வெங்கடாசலபதி ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறார். இவரை காணும் முன்பு நம்மை அறியாமலே ஒரு படியின் மீது காலை வைக்கிறோம். அந்த படிக்கு “குலசேகர படி என்று பெயர். இந்த படியில் கால் வைத்ததும் நமக்கு குலசேகர ஆழ்வார் நினைவுக்கு வருவார். அப்போது,

“செடியாய வல்வினைகள் தீர்க்கும்
திருமாலே!
நெடியானே! வேங்கடவா!
நின் கோயில் வாசல்
அடியாரும் வானவரும்
அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன்
பவளவாய் காண்பேனே!”
என்ற பாடல் நம் நினைவில் நிழலாடும்.

No comments:

Post a Comment