Sunday 8 October 2017

அரண்மனை கோயில்களின் ஆனந்த தரிசனம்

Image result for swetha varaha temple

ஸ்ரீ ஸ்வேதவராக சுவாமி திருக்கோயில் கோட்டையின் தெற்குவாயில் அருகே உள்ளது ஸ்ரீஸ்வேத வராக சுவாமி திருக்கோயில். கி.பி. 1672 முதல் 1704 வரை ஆட்சி புரிந்த ராஜா சிக்கதேவ உடையாரால் ‘ஹொய்சாள’சிற்பக்கலை பாணியில் இத்திருக்கோயில் கட்டப்பட்டது. இது வானுயர்ந்த ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரமும் சிற்ப வேலைப்பாடுகளும் கொண்டது.ஸ்ரீரங்கப்பட்டணம் மைசூர் ராஜ்யத்தின் தலைநகரமாக இருந்தபோது மன்னர் சிக்கதேவராஜ உடையார், ஸ்வேத வராக சுவாமியின் சிலையை, தமிழகத்தில் நெய்வேலிக்கு அருகில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் எனும் திருத்தலத்திலிருந்து கொண்டு வந்து புதிய ஆலயம் ஒன்றை நிர்மாணித்து அதில் பிரதிஷ்டை செய்தார். திப்பு சுல்தான் காலத்தில் அழிக்கப்பட்ட பல கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

பின்னர், கி.பி. 1809ல் மூன்றாம் கிருஷ்ணராஜ உடையாரிடம் திவானாக விளங்கிய பூர்ணையா என்பவர் அரசரின் ஆணைப்படி, அழிவுபட்ட கோயிலில் இருந்த ஸ்வேத வராக சுவாமியின் சிலையை மைசூருக்கு எடுத்துவந்து, தற்போதுள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்து வழிபாடுகளை ஏற்படுத்தினார். கலையம்சம் நிறைந்த பிரமாண்டமான நுழைவு வாசலுடன் அழகிய கதவுகளும், தூண்களும், விமானமும் கொண்டு இத்திருக்கோயில் ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. இங்கு வைணவத் துறவிகளான தேசிகருக்கும், ஜீயர் சுவாமிகளுக்கும் தனித்தனியாக சந்நிதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ‘நவரங்கா’ மண்டபச்சுவர்களில் மூரல் வண்ண ஓவியங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் பெரும்பாலும் ராமாயணம் மற்றும் பாகவதக் காட்சிகளையே அதிகம் கொண்டிருக்கின்றன. தென்கிழக்காக உள்ள பெரிய சுவரில் பிரசித்தி பெற்ற ‘ராமர் பட்டாபிஷேகம்’ ஓவியம் முக்கிய இடத்தை வகிக்கிறது. 

கலை அம்சங்கள் பல கொண்ட இந்தக் கோயிலில் ஸ்ரீவைணவ சம்பிரதாயப்படி பூஜைகளும் விழாக்களும் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீ திரிநயனேஸ்வர சுவாமி திருக்கோயில் ராஜ உடையார் காலத்திற்கு முன்பே கட்டப்பட்ட மிகவும் பழமையான ஸ்ரீ திரிநயனேஸ்வர சுவாமி கோயில் ஆதியில் கோட்டைக்கு வெளியே தொட்டகரே நதிக்கரைக்கு அருகே இருந்தது. பின்னர் ஆட்சிக்கு வந்த கந்தீரவ நரசராஜ உடையார் மற்றும் தொட்ட தேவராஜ உடையார் காலத்தில், கோட்டையை விரிவுபடுத்தும்போது, இந்த ஆலயம் கோட்டையின் உள் வட்டத்திற்குள் வந்துவிட்டது. இத்திருக்கோயிலின் தல வரலாற்றில் ‘திரினபந்து’ என்ற முனிவர் இங்கு பெருந்தவம் செய்தாராம். சிவபெருமானை நோக்கி நெடுங்காலம் தவம் செய்ததால் பெருமான் மனம் மகிழ்ந்து, அவருக்குத் திருக்காட்சி அளித்து, அதற்கு அடையாளமாக அங்கு ஒரு சிவலிங்கத்தை விட்டுச்சென்றதாகவும் விபரங்கள் உள்ளன.

சிவபெருமானுக்கு மூன்று கண்கள் உள்ளதால் அவருக்கு ‘திரிநயனேஸ்வரன்’ என்ற திருநாமமும் உண்டு. திரினபந்து முனிவரின் சிறிய சிலை ஒன்று இக்கோயிலுக்குள் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு நோக்கி இருக்கும் சிவன் கோயில்கள் மிகவும் விசேஷமானதாகும். அந்த வகையில் இத்திருக்கோயிலும் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் கருவறையைச் சுற்றிலும் கட்டப்பட்டுள்ள பிராகாரத்தில் ஐந்து சிவலிங்கத் திருமேனிகளை மன்னர் கந்தீரவ நரச ராஜா உடையார் பிரதிஷ்டை செய்தார். அதைத் தவிர தட்சிணாமூர்த்தி, க்ஷேத்திர பாலகர், சிவகுமாரன் மற்றும் சூரியதேவனின் விக்கிரகங்களையும் அவர் பிரதிஷ்டை செய்தார். அரசரின் சிலை இருகரம் குவித்து அஞ்சலி செலுத்தும் வகையில் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. ‘மகா துவாரா’ என்ற பெரிய நுழைவு வாயிலுடன் கூடிய சுற்றுச்சுவர் ஆலயத்தைச்சுற்றி அமைந்துள்ளது.

ஸ்ரீபிரசன்ன கிருஷ்ணசுவாமி திருக்கோயில் மைசூர் மன்னர்கள் யது குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தும், யது குலத்தைத் தோற்றுவித்த கிருஷ்ண பகவானுக்காகத் திருக்கோயில் எதுவும் இல்லாத காரணத்தால், மன்னர் மூன்றாம் கிருஷ்ண ராஜ உடையார் பிரசன்ன கிருஷ்ணசுவாமி கோயிலை கி.பி. 1825ம் ஆண்டு தொடங்கி 1829ம் ஆண்டில் கட்டி முடித்தார். இந்தத் திருக்கோயிலில், தவழ்ந்த நிலையில் ஒரு கையில் வெண்ணெய் உருண்டையுடன் திருக்காட்சியளிக்கும் பாலகிருஷ்ணன் சிலை. மரகதம் போன்ற அபூர்வமானதொரு பச்சைக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. பஞ்சலோகங்களாலான பற்பல கடவுளர்களின் சிலைகளையும் மன்னர் கோயிலுக்கு வழங்கியுள்ளார். மேலும் பல மான்யங்களையும் கோயிலுக்கு அளித்துள்ளார். இம்மன்னர் ஆத்ரேய கோத்திரத்தில் பிறந்தவராதலால், அத்ரி மகரிஷியின் சிலா ரூபம் ஒன்று இக்கோயிலில் உள்ளது.

இக்கோயிலில் முதல் முதலாக பூஜை செய்த பட்டரும் ஆத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்தவரென்றும் வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. வராக சுவாமி கோயிலில் உள்ளது போன்றே இங்குள்ள நவரங்க மண்டபத்திலும் ஏராளமான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவை முழுவதும் பாகவதக் கதைகளையே பேசுகின்றன. கி.பி. 19ஆம் நூற்றாண்டில் மைசூர் மாநிலத்தின் கலைச்சிறப்பை இந்த ஓவியங்கள் அழகாக எடுத்துக்காட்டுகின்றன. இத்திருக்கோயிலுக்கு மாமன்னர் கிருஷ்ண ராஜ உடையார் அவரது பட்டத்து ராணிகளுடன் தினமும் காலசந்தி பூஜைக்கு வருகை தந்து பாலகிருஷ்ணனை தரிசித்துச் செல்வாராம். திருவேங்கட ரமணப்பெருமாள் திருக்கோயில் கி.பி. 1825ல் திப்புசுல்தான் ஆட்சிக்காலத்தில் மைசூர் அரச குடும்பம் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் வாசம் செய்தது. மன்னர் இரண்டாம் கிருஷ்ணராஜ உடையாரின் மனைவி மகாராணி லட்சுமாம்மன்னி மைசூர் அரச வம்சத்தின் எதிர்காலத்தைப்பற்றி மிகுந்த கவலையுடன் இருந்தாள். 

ஏனென்றால் திப்புவின் காலத்தில் பல இந்து சாம்ராஜ்யங்கள் ஒவ்வொன்றாக அழிந்துகொண்டிருந்த காலம் அது. அந்தக் கவலை மிகுந்த தருவாயில் ஒருநாள் மகாராணியின் கனவில் வேங்கடரமணப் பெருமாள் தோன்றி, பாலமூரி என்ற இடத்தில் இருக்கும் தனது சிலையை எடுத்துக் கொண்டு போய் மைசூர் அரண்மனையில் பிரதிஷ்டை செய்யுமாறு பணித்தார். திப்புசுல்தான் அறியாத வண்ணம் மகாராணி லட்சுமாம்மன்னி பாலமூரிக்குச்சென்று வேங்கட ரமணப் பெருமாளின் சிலையைக் கொண்டு வந்து, ஆலயம் ஒன்றைக் கட்டி அதில் பிரதிஷ்டை செய்தாள். தொடர்ந்து ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெறவும் வழிவகைகளைச் செய்தாள். இதனால் அவர்கள் வம்சம் அழிவைக் காணாமல் வளர்ச்சி பெற்றது. திப்புசுல்தானின் வீழ்ச்சிக்குப்பிறகு மைசூர் உடையார் வம்சம் மகோன்னத நிலையை அடைந்தது. இது கில்லி வெங்கடரமண சுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

புவனேஸ்வரி திருக்கோயில் ஐந்து நிலையுடைய ராஜகோபுரத்தோடு அரண்மனையின் வடக்குத் திசையில் அன்னை புவனேஸ்வரியின் திருக்கோயில் அமைந்துள்ளது. 1951ம்ஆண்டு மன்னர் ஜெயசாம ராஜேந்திர உடையாரால் அழகிய திருக்கோயில் ஒன்று கட்டப்பட்டது. சிற்பக்கலையில் வல்லுநரான புகழ்பெற்ற சிற்பி ‘மைசூர் சித்தலிங்க சுவாமியின் கைவண்ணத்தாலான அன்னை புவனேஸ்வரியின் திருவுருவத்தை அக்கோயிலில் பிரதிஷ்டை செய்தார். இக்கோயிலின் கோபுரம் திராவிடக் கலையம்சம் கொண்டு விளங்கியது. மேலும் சூரியன், மகாவிஷ்ணு, மகேஸ்வரன், ராஜராஜேஸ்வரி, கணபதி, சாமுண்டீஸ்வரி ஆகியோரின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவை அனைத்தையும் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும். மைசூர் அரண்மனைக்குள் வைக்கப்பட்டிருந்த செப்புத் தகடாலான ‘சூரிய மண்டல’ யந்திரத்தை எடுத்துக்கொண்டுபோய் அன்னை புவனேஸ்வரி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்தார் மன்னர் ஜெயசாம ராஜேந்திர உடையார்.

காயத்ரி தேவி திருக்கோயில் 1953ம் ஆண்டு மைசூர் மன்னர் ஜெயசாம ராஜேந்திர உடையார் அவர்களால் காயத்ரிதேவிக்கு ஒரு கோயில் அமைக்கப்பட்டது. இது திரிநயனேஸ்வர சுவாமி கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது. அழகும் ரம்யமும் கொண்டு அற்புத வடிவில் காட்சி தரும் காயத்ரி தேவியும், லட்சுமி தேவியும், சாவித்திரி தேவியும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவைகள் புகழ்பெற்ற சிற்பி சித்தலிங்க சுவாமியால் உருவாக்கப்பட்டவையாகும். கருவறையில் காயத்ரி தேவியை மையமாக வைத்தும், சாவித்திரி தேவி மற்றும் மகாலட்சுமியை இருமருங்கிலும் கொண்ட காயத்ரி தேவி திருக்கோயில் விசேஷ காலங்களில் பெண்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இதர கோயில்கள் சிருங்கேரி சாரதா பீடத்தின் சார்பாக மைசூரில் நிறுவப்பட்டுள்ள ஸ்ரீசங்கர மடத்தில் சாரதாதேவியின் திருக்கோயிலும் உள்ளது. இம்மாநகரம் விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால் ஸ்ரீசாரதா பீடம் இங்கு மைசூர் மன்னர்களுக்காக நிறுவப்பட்டுள்ளது.

மைசூர் மன்னர்களின் பரம்பரையில் வந்த ஸ்ரீ ஜெயசாம ராஜ உடையார் கலையார்வம் மிகுந்தவர். அவரது காலத்தில் நிறுவப்பட்டதுதான் ஸ்ரீகாம, காமேஸ்வரியின் திருக்கோயில். இங்கு சிவபெருமானின் மாபெரும் சிவலிங்கத் திருமேனி அமைந்துள்ளது. அதன் பின்புறமுள்ள சுவரின் மீது ரிஷப வாகனத்தில் சர்வாலங்கார திருக்கோலத்தில் இறைவனும், இறைவியும் அமர்ந்து உலாவரும் திருக்காட்சியைக் காணலாம். இத்திருக்கோயிலில் இறைவனும், இறைவியும் ‘காம, காமேஸ்வரி’ என்ற திருநாமங்களோடு அருளாட்சி புரிகின்றனர். அரண்மனையின் வடக்கு வாயிலில் விக்னங்களை அகற்றும் விநாயகப் பெருமானுக்கென்று ஒரு சிறிய கோயில் அமைந்துள்ளது. அன்றாடம் இங்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. சனிக்கிழமைகளில் இங்கு மக்கள் திரளாகக் கூடுகின்றனர். 

புது வாகனங்கள் வாங்குவோர், இங்கு அதனைக் கொண்டு வந்து பூஜித்த பின்பே வேறு எங்கும் எடுத்துச் செல்கின்றனர். மூர்த்தி சிறியதானாலும், கீர்த்தி மிகவும் பெரிது. அதனால் இங்கு பக்தர்களின் வருகை அதிகம்.இங்கு அன்னை மாரியம்மனுக்கு ஒரு சிறுகோயில் அமைந்துள்ளது. அன்னை கோபாவேசம் கொண்ட கோலத்தில் காணப்படுகிறாள். அம்மை வார்த்து குணமான பக்தர்கள், இங்கு வந்து இளநீர் அபிஷேகம் செய்து கொண்டு பிரார்த்தனையை நிறைவு செய்கிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் பக்தர் கூட்டம் நிரம்பி வழிகிறது. இங்குள்ள விநாயகர் கோயிலுக்கு அருகிலேயே, அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயருக்கும் ஒரு திருக்கோயில் அமைந்துள்ளது. வரப்பிரசாதியாகப் பக்தர்களுக்குப் பல நன்மைகள் அளித்து வருகிறார். சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த அனுமன் கோயிலிலிருந்து பார்த்தால் மைசூர் அரண்மனையின் பிரமாண்டமான காட்சி முழுவதும் நாம் கண்டு மகிழலாம்.

No comments:

Post a Comment