Tuesday 10 October 2017

சங்கடங்கள் விலகி விநாயகரின் அருள் கிடைக்க சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

Related image

விநாயகப்பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப்பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம். சங்கடம் என்றால் தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள். ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.

ஆனை முகனின் அருளை எளிமையாக பெற்றிட சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது சிறப்பாகும். இந்த விரதத்தை கடைபிடித்து அங்காரகன் என்னும் செவ்வாய் நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை பெற்றான். எனவே செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்று போற்றப்படுகின்றது. அன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் அங்காரகனுடைய அருளினையும் பெறலாம். நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது. 

சங்கட ஹர சதுர்த்தியன்று காலையில் குளித்து முடித்து, விநாயகருக்கு பூஜை செய்து விரதம் இருந்து அவருக்கு பிடித்தவற்றை நைவேத்யம் செய்து விநாயகர் ஸ்லோகங்களை பாராயணம் செய்து மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சணை செய்து வழிபட்டு வீடு திரும்பி இரவில் உதயமாகும் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருள் கிடைக்கும். விநாயகரை மாணவர்கள் பக்தி சிரத்தையுடன் வழிபட்டால் தடைகள் நீங்கி கல்வியில் ஏற்றமும், ஞானமும், புலமையும் ஏற்படும். அரச மரத்தடி விநாயகரை வணங்கினால் குழந்தைப்பேறு விரைவில் உண்டாகும். வன்னி மரத்தடி விநாயகர், கிரஹ தோஷங்கள் விலக்குவார். ஆலமரத்தடி விநாயகரை வழிபடுவதால் சூன்யங்கள் அகலும். 

No comments:

Post a Comment