Monday 16 October 2017

தீராத நோய் நீக்கும் நீலகண்டர்


நெல்லு நீள் வயல்கள் சூழ்ந்த திருத்தலமாகத் திகழ்வது திருநீலக்குடியாகும். கும்பகோணம்காரைக்கால் நெடுஞ்சாலையில் கும்பகோணத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தென்னலக்குடி என்று வழங்கப்படும் இத்தலம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.  பஞ்ச வில்வ வனம் என்றும் இத்தலத்தை அழைப்பர். அம்பிகை தனது திருக்கரங்களினால் கயிலாயத்திலிருந்து 5 வில்வ விருட்சங்களைக் கொண்டு வந்தாள். இத்தலத்தில் ஐந்து வில்வங்களுக்கும் நடுவே சிவலிங்கத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்தாள். அதனால் பஞ்சவில்வ வனம் என்றழைக்கப்பட்டது. எந்தத் தலத்திலும் இல்லாத தனிச்சிறப்பு இங்கு உண்டு. அது மூலவருக்குச் சாத்தப்பெறும் எண்ணெய்க் காப்பே  ஆகும். இத்தலத்துள் இக்காப்பு சாத்தப்பெறுவதற்கு ஒரு புராணச் செய்தியும் சொல்லப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அப்போது அங்கு ஆலகால விஷம் பொங்கியது. 

உடனே, ஆலகால விஷத்தை ஈசன் அருந்தி எல்லோரையும் காப்பாற்றினார். அப்போது விஷமானது உடலுக்குள் செல்லாமல் தடுக்க அம்பிகை ஈசனின் கண்டத்தில் கை வைத்து நிறுத்தினாள். அக்கொடிய விஷத்தால் ஏற்பட்ட வெம்மைக் குறைய பார்வதி, இத்தலத்தில் சிவனுக்குத் தைலத்தினால் அபிஷேகம் செய்து வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. எனவே, இன்றும் தீரா நோய்களால் துன்புறுவோர் இத்தலத்துப் பெருமானுக்குத் தைலாபிஷேகம் செய்து வழிபட நோய் நீங்கும் என்று ஐதீகமாகவே உள்ளது. மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் எண்ணெய் முழுவதும் மூலவரின் திருமேனியில் படிந்துவிடும் அதிசயத்தை இக்கோயிலில் இன்றும் காணலாம். இத்தலத்தில் இரண்டு அம்பிகையர் அருள்பாலிக்கின்றனர். ஒருவர் அநூபமஸ்தனியம்மன். அழகுத் தமிழில் அழகாம்பிகை. திருமுகத்தில் கருணையும் உதடுகளில் புன்னகையும் கொண்டு அருள்பாலிக்கின்றார். இந்த அம்பிகையின் சந்நதியின் அருகிலேயே நின்று தவமியற்றும் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறாள் தவக்கோலம்மை.                                                                                                                                     
நான்கு மாட வீதிகள் சூழ, அவற்றின் நடுநாயமாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இக்கோயில். இரண்டு திருச்சுற்றுக்களைக் கொண்டது.  கோயிலுக்கு முன்னேயுள்ள திருக்குளம் தேவ தீர்த்தம் என்றழைக்கப்படுகின்றது. அழகிய சிறு கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கொடி மரம், பலி பீடம் ஆகியவற்றைத் தரிசிக்கலாம். வடகிழக்கிலுள்ள யாக சாலைக்குப் பக்கத்தில் பஞ்ச வில்வ தலவிருட்சம் உள்ளது. கருவறையில் மூலவர் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். ஆலகால விஷத்தினால் ஏற்பட்ட வெம்மை, தைலாபிஷேகத்தால் நீங்கப் பெற்று, அழகிய நீலநிற கண்டத்துடன் விளங்குவதால் ஈசனுக்கு நீலகண்டன் என்ற பெயரும், அவர் எழுந்தருளியிருக்கும் தலத்திற்கு நீலக்குடி என்ற பெயரும் ஏற்பட்டன. திருநாவுக்கரசரால் பாடல் பெற்றது இத்தலம்.  

‘‘அழகியோம் இளையோம் எனும் ஆசையால் ஒழுகிஆவி உடல்விடு முன்னமே          நிழலதார் பொழில் நீலக்குடியரன் கழல்கொள் சேவடி கைதொழுது உய்ம்மினே.’’  

இளமையும் அழகும் இறைவனை வழிபட நமக்குக் கொடுக்கப்பட்டதாகும். உயிர் உடலை விட்டுச் செல்லும் முன் நீலக்குடி ஈசனை வழிபடுக என்கிறார். 
திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆளுகையின் கீழுள்ள இத்திருக்கோயிலில் நிகழும் சித்திரை சப்தஸ்தானப் பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

No comments:

Post a Comment