சனி, ராகு, கேது போன்ற தீய கோள்களின் தாக்கத்தினால் நமது மூளையில் தீய எண்ணங்கள் உருவாகின்றன என்பதைக் கண்டோம். இந்தக் கோள்கள், தீய எண்ணங்களை மட்டும்தான் உருவாக்கும் என்று வலியுறுத்திச் சொல்ல முடியாது. ஒருவருடைய ஜாதகத்தில் இந்தக் கோள்கள் நல்ல இடத்தில் அமர்வதுடன் சுபகிரஹங்களின் அம்சத்தையும் பெற்றிருந்தால் நல்ல எண்ணங்களையும் தோற்றுவிக்கும். உதாரணமாக, மிகவும் சோம்பேறியாக, எந்த வேலையையும் செய்யாமல் வெறுமனே உட்கார்ந்திருப்பவனின் ஜாதகத்தில் சனி கிரஹம் வலிமையாக அமர்ந்திருக்கும் என்று வைத்துக் கொண்டால், கடுமையாக உழைப்பவனின் ஜாதகத்திலும் அதே சனி கிரஹம்தான் வலிமை பெற்றிருக்கும். ஆக, கடுமையாக உழைப்பவன் மற்றும் சோம்பேறி இருவர் ஜாதகத்திலும் சனியின் தாக்கத்தைக் காண இயலும்.
அதேபோல ராகு கிரஹம் அடுத்தவர் பொருளை அடையவேண்டும் என்ற ஆசையைத் தரும். அதே ராகு நல்ல அம்சத்தில் அமர்ந்திருந்தால், தன்னிடம் இருக்கும் மொத்த பொருளையும் அடுத்தவர்களுக்கு தானம் அளிக்கும் குணத்தினையும் தரும். கேதுவும் அப்படியே. விரக்தியான எண்ணங்களை மனதில் தோற்றுவித்து தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு ஒரு மனிதனைத் தூண்டுகின்ற கேது, நல்ல நிலையில் அமர்ந்திருந்தால், அதே மனிதனின் மனதில் தத்துவ சிந்தனைகளை இடம்பெறச் செய்து அவனை ஒரு ஞானியாக மாற்றி விடும். இவ்வாறு ஒவ்வொரு கிரஹத்திற்கும் நேரெதிரான இரண்டு குணங்களையும் தருகின்ற ஆற்றல் உண்டு. இந்த விதி சுபகிரஹங்களுக்கும் பொருந்தும். குரு, சுக்கிரன், புதன், சந்திரன் முதலான சுபகிரஹங்கள் சுபபலனைத்தான் தரவேண்டும் என்ற அவசியமில்லை. ஜாதகத்தில் இந்த கோள்கள் கெட்டிருந்தால் இவர்களும் கெடுபலனைத்தான் தருவர்.
இது அவரவர் ஜாதகத்தில் கிரஹங்களின் பலத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். உதாரணமாக, “குரு தசைதான் நடக்குது, ஆனால் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டியிருக்கு” என்று சொல்லும் ஒருவர் “சனி தசை ஆரம்பித்த பின்னர்தான் உடம்பு ஆரோக்கியமாக இருக்கு” என்று சொல்வதையும் காணமுடிகிறது. ஆக, மருத்துவ ஜோதிடத்தைப் பொறுத்தவரை சுபகிரஹங்களால் நன்மையும், தீய கிரஹங்களால் தீமையும் மட்டுமே விளையும் என்றும் அறுதியிட்டுச் சொல்ல இயலாது. இது அவரவர் ஜாதகத்தில் கிரஹங்களின் அமர்வு நிலையைப் பொறுத்து மாறுபடும். ஒன்பது கிரஹங்களும் எந்தெந்த நட்சத்திரக் கால்களில் அமர்ந்திருக்கின்றன, அந்த நட்சத்திரங்களின் அதிபதி கிரஹம் எது, அந்த கிரஹத்தினுடைய பணி என்ன, அந்த கிரஹம் எந்த பாவகத்தில் அமர்ந்துள்ளது, அந்த பாவகம் மற்றும் நட்சத்திர அதிபதி கோள் உடலில் உள்ள எந்த சுரப்பியோடு தொடர்புடையது என்பதைப் பொறுத்து நமது உடல்நிலையில் மாற்றம் உண்டாகும்.
சூரியனின் நட்சத்திரங்களில் ஒன்று (கார்த்திகை, உத்திரம், உத்திராடம்) பீனியல் சுரப்பியையும், சந்திரனின் நட்சத்திரங்களில் ஒன்று (ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்) பிட்யூட்டரி சுரப்பியையும், செவ்வாயின் நட்சத்திரங்களில் ஒன்று (மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்) மண்ணீரல் சுரப்பியையும், புதனின் நட்சத்திரங்களில் ஒன்று (ஆயில்யம், கேட்டை, ரேவதி) மூளையின் ஒரு பகுதியான தலாமஸையும், குருவின் நட்சத்திரங்களில் ஒன்று (புனர்பூசம், விசாகம், பூரட்டாதி) விந்து மற்றும் கருப்பையையும், சுக்கிரனின் நட்சத்திரங்களில் ஒன்று (பரணி, பூரம், பூராடம்) மூளையின் ஹைப்போதலாமஸ் சுரப்பியையும், சனியின் நட்சத்திரங்களில் ஒன்று (பூசம், அனுஷம், உத்திரட்டாதி) அட்ரினல் சுரப்பியையும், ராகுவின் நட்சத்திரங்களில் ஒன்று (திருவாதிரை, சுவாதி, சதயம்) கீழ்மண்ணீரல் சுரப்பியையும், கேதுவின் நட்சத்திரங்களில் ஒன்று (அஸ்வினி, மகம், மூலம்) தைராய்டு சுரப்பியையும் ஊக்குவிக்கின்றன. இவை, தங்களின் ஊக்குவிப்புத் திறனைக் கூட்டினாலும், குறைத்தாலும் உடலில் குறைபாடுகளும் நோய்களும் தோன்றும்.
உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும் எப்பொழுதும் சரியாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்று சொல்ல இயலாது. அதாவது ஒருவர் ஜாதகத்தில் ஒன்பது கிரஹங்களும் நல்ல நிலையில் அமர்ந்திருக்கின்றன என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு கிரஹமாவது பிரச்னையைத் தருகின்ற வகையில்தான் மனிதனின் ஜாதகம் அமையும். மனநிலையும், உடல்நிலையும் அதற்கேற்றவாறு மாற்றத்தைக் காணும். இதுவே இயற்கையின் நியதி.
சமீப காலத்தில் இந்த இயற்கை நியதியை மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எந்த ஒரு கிரஹம் வலிமையற்ற நிலையில் உள்ளதோ, அந்த கிரஹத்தின் பலத்தை ஊக்குவிப்பது, அந்த கிரஹத்திலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சை கிரஹித்து, செயற்கையான முறையில் மனித உடம்பில் செலுத்துவது, எந்த சுரப்பி சரியாக இயங்கவில்லையோ, அதை முறைப்படுத்த செயற்கை முறையில் தூண்டுவது என்று பல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த முயற்சிகளின் பின்னணியில் மனிதனை சாகாவரம் பெறச் செய்வது என்ற நோக்கம் இடம்பெற்றிருக்கிறது. ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் ‘2045 இயக்கம்’ என்ற ஓர் இயக்கத்தைத் தோற்றுவித்து மனிதனை சாகாவரம் பெறச்செய்ய முயன்று கொண்டிருக்கிறார் என்கிறது சமீபத்திய செய்தி. இவரும், இவரது குழுவினரும் கிரஹங்களின் தாக்கம் மனித உடலில் எவ்வாறான மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இவர் குழுவில் மருத்துவ ஜோதிடர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள். ஆனால் நமது சாஸ்திரம் இந்தக் கலியுகத்தில் ஒரு மனிதனின் முழுமையான ஆயுள் என்பது 120 வருடங்கள் மட்டுமே என்று அறுதியிட்டுச் சொல்கிறது.
இந்த 120 வருடங்களைத்தான் நமது ஜாதகத்தில் நடக்கும் தசைகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது: சூரிய தசை 6, சந்திர தசை 10, செவ்வாய் 7, ராகு 18, குரு 16, சனி 19, புதன் 17, கேது 7, சுக்கிர தசை 20 வருடங்கள் என மொத்தம் 120 வருடங்கள் மட்டுமே இந்த கலியுகத்தில் ஒரு மனிதனின் முழுமையான ஆயுட்காலம் என்று ஜோதிட சாஸ்திரம் உறுதியாக நம்புகிறது. சாகாவரம் என்பது புராண காலம் மட்டுமல்ல, இப்போதும், எப்போதும் சாத்தியமில்லை என்பதே நிதர்சனம். குறையில்லாத மனிதன் இந்த உலகத்தில் இல்லவே இல்லை. ஏதோ ஒரு குறை எல்லோருடைய ஜாதகத்திலும் இருந்துகொண்டுதான் இருக்கும். அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்தான் மனிதனுக்கு வேண்டும். இந்த மனப்பக்குவம் பெறத்தான் நாம் பரிகாரங்களைச் செய்து கொண்டிருக்கிறோம்.
No comments:
Post a Comment