நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளில் ராவணனை வதம் செய்ததை கொண்டாடும் இந்த தருணத்தில், ராவணனை பிரதான தெய்வமாக கொண்ட ஒரு ஆலயத்தைப் பற்றி அறிந்துகொள்வோம்.
நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளான விஜயதசமி (தசரா) இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வடமாநிலங்களில் ராவண வதம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தீமைகள் அழிந்து தர்மம் வென்றதை கொண்டாடும் வகையில், ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாதன் ஆகியோரின் உருவபொம்மைகளை தீயிட்டு எரிப்பது வழக்கம்.
இதிகாசங்களின்படி, ராவணன் தீமையே உருவான அரக்கனாக இருந்தாலும், சிறந்த சிவ பக்தனான ராவணன் ஒரு சில மக்களுக்கு இன்னும் தெய்வமாகவே விளங்குகிறான். ராவணனுக்கு கோவில் கட்டி வழிபாடும் நடத்துகின்றனர்.
அவ்வகையில் உத்தர பிரதேச மாநிலம், பதான் மாவட்டத்தில் உள்ள சாகுகரா பகுதியில் உள்ள ராவணன் கோவிலுக்கு தனிச்சிறப்பு உள்ளது. உள்ளூர் மக்கள் வழிபடும் இந்த கோவிலில் ராவணன் தான் பிரதான தெய்வம். 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலில் ராவணன், சிவபெருமானை வணங்குவது போன்ற முழு உருவச் சிலை நிறுவப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.
விஷ்ணு உள்ளிட்ட பிற கடவுள்களின் விக்ரகங்களும் இங்கு உள்ளன. ஆனால், அவை அனைத்தும் ராவணன் சிலையைவிட சிறியதாகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ராவணனை வணங்கினால் திருமண தடை நீங்கி வாழ்க்கைத் துணை கிடைக்கும் என உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.
ராவணனை வழிபடும் மக்கள் ராவணனை வதம் செய்யும் நாளான விஜய தசமியை கொண்டாடுவதில்லை. எனவே, அன்றைய தினம் முழுவதும் கோயில் மூடப்பட்டிருக்கும் என்கிறார் கோவில் பூசாரி.
No comments:
Post a Comment