Sunday 15 October 2017

திருமண தடைநீக்கும் திருவாமூர் பசுபதீஸ்வரர்


கடலூர் மாவட்டம் பல சிவாலயங்களை தன்னகத்தே கொண்டது. அந்த வகையில் பண்ருட்டி அருகே உள்ள திருவாமூரில் குடிகொண்டு அருள்பாலிப்பவர் பசுபதீஸ்வரர். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயில் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் திருப்பணி செய்த தலம் என்ற பெருமை கொண்டது. தேவாரம் பாடிய அப்பருக்கு தனியாக சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயிலின் எதிரே நின்ற திருக்கோலத்துடன் அப்பருக்கு சிலை உள்ளது. அவரது இடதுதோளில் உழவாரப்படை சாத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அப்பரின் அக்காள் திலகவதியாருக்கும், தந்தை புகழனாருக்கும், தாயார் மாதினியார் ஆகியோருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. 

அப்பர் அவதரித்த தலம்: அப்பருக்கு அவரது பெற்றோர் இட்டபெயர் மருள்நீக்கியார். இளம் வயதிலேயே பெற்றோர் இறந்து விட்டதால் அப்பர் தனது சகோதரி திலகவதியார் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார். உறவினர்கள் திலகவதிக்கு அதே ஊரைச்சேர்ந்த சேனைத்தலைவராக இருந்த கலிப்பகையாரை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்தனர். ஆனால் போரில் கலிப்பகையார் கொல்லப்பட்டார். இதனால் மனம் உடைந்த திலகவதியார் திருவதிகை தலத்திற்கு வந்து சிவத்தொண்டு செய்து வந்தார். அப்பரோ சமண மதத்தை தழுவி தர்மசேனா என்ற பெயரை சூட்டிக்கொண்டார். 

ஆனால் திலகவதியாருக்கு தனது தம்பியை தாய் மதமான சைவத்திற்கு கொண்டு வர ஆசை. அதன்படி இறைவனிடம் வேண்டினார். இதையடுத்து அப்பரை சூலைநோய் தாக்கியது. அவர் நோய்கொடுமையால் பெரிதும் அவதிப்பட்டடார். பின்னர் அக்காளின் அறிவுரைப்படி திருவதிகை சென்று இறைவனின் திருநீரை அப்பரின் வயிற்றில் பூசியதும் சூலை நோய் விலகியது. இதனால் மெய்சிலிர்த்துப் போன அவர் திருப்பதிகம் பாடி வழிபட்டார். அப்போதுதான் இறைவன் அவர் முன்தோன்றி அவருக்கு திருநாவுக்கரசர் என்று பெயரிட்டார். தொடர்ந்து பல தலங்களுக்கும் சென்று தேவாரம் பாடிய அப்பர் பெருமான் திருப்புகலூரில் சித்திரை சதயநாளில் இறைவனடி சேர்ந்தார். இவரது காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.

சித்திரை சதயத்தில் பெருவிழா: 

நாவுக்கரசர் அவதரித்த களரிவாகை மரத்தடியில் சுவாமிக்கு அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த மரத்தை அதிசய மரமாக கருதி மக்கள் வழிபட்டுச்செல்கின்றனர். இது செடியாகவும், மரமாகவும் இல்லாமல் புதுஅம்சத்துடன் காணப்படுகிறது. இதன் இலையை சுவைத்தால் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு, கார்ப்பு என அறுசுவையும் தரும் தன்மை கொண்டது. 

திருமண தடை நீங்கும்: 

இங்குள்ள ஈசன் பசுபதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் திரிபுரசுந்தரி. தல விருட்சம் கொன்றை மரம். இத்தலத்தின் பெருமையை சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் சிறப்பித்துக்கூறுகிறார். இங்குள்ள ஈசனை வழிபடுவோருக்கு மனநிம்மதி கிடைக்கும். பசுபதீஸ்வரரை மனதார வணங்கி வழிபட்டால் நினைத்த காரியம் எல்லாம் நிறைவேறும். திருமணதடை நீங்கும், குழந்தைப்பேறு கிடைக்கும், நோய் நொடிகள் எல்லாம் காற்றாய் பறந்து போகும், தொழில்முடக்கம் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள், நின்றகோலத்தில் அருள்பாலிக்கும் அப்பரை வணங்கினால் மனநிம்மதி கிடைக்கும், வாக்கு வன்மையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும், ஈசனின் அருளும் கிடைக்கும்.

நேர்த்திக்கடன்: 

சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள்பொடி, மரப்பொடி, பால், தயிர்,பழவகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாற்றலாம். மேலும் சுவாமிக்கு வேட்டியும், அம்மனுக்கு மஞ்சள்பொடி, புடவைசாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்யலாம்.

செல்வது எப்படி?

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து மடப்பட்டு செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் திருவாமூர் கிராமம் உள்ளது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மடப்பட்டு பிரிவில் இருந்து பண்ருட்டி மார்க்கமாகவும் திருவாமூரை வந்தடையலாம்.

No comments:

Post a Comment