Sunday 15 October 2017

தொழில் சிறக்க அருள் தரும் யோக நரசிம்மர்


மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து 3 கிமீ தொலைவில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒத்தக்கடை உள்ளது. அருகில் உள்ள நரசிங்கம் கிராமத்தில் யோக நரசிம்மர் வீற்றிருக்கும் பெருமாள் கோயில் உள்ளது. ஆனை மலை அடிவாரத்தில் உள்ள இந்த கோயில் முன்பு சக்கர தீர்த்தக் குளம் உள்ளது. மூலவர் யோக நரசிம்மர் மேற்கு திசை நோக்கியும், நரசிங்கவல்லி தாயார் தெற்கு திசை நோக்கியும் அமர்ந்துள்ளனர்.  

மகாலட்சுமியை நெஞ்சில் தாங்கிய நிலையில் யோக நரசிம்மர் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது இந்த கோயிலின் சிறப்பம்சம். 

பொதுவாக கருவறையில் உள்ள விமானத்தின் அகலம், உயரத்தை பொறுத்தே கோயில்களில் கொடிமரம் நடப்படுகிறது. கோயிலின் பின்னணியில் உயரமான ஆனை மலை உள்ளதால் இங்கு கொடிமரம் அமைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இங்குள்ள கருவறை, அதன் முன்னே உள்ள உடையவர், நம்மாழ்வார் அர்த்தமண்டபம் ஆகியவை குடவறை கோயில் அமைப்பில் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இக்கோயில் உள்ளது. 

தல வரலாறு

யோக நரசிம்மர் கோயில் ஆயிரம் ஆண்டு பழமையானது என்பது வரலாற்று தகவல்.  பண்டைய காலத்தில் முனிவர் ஒருவர் புத்திர பாக்கியம் வேண்டி ஆனை மலை அடிவாரத்தில் உள்ள சக்கர தீர்த்தக் குளத்தில் நீராடினார். தொடர்ந்து யாகம் வளர்த்த அவர், பெருமாள் தன் முன்பு யோக நரசிம்மர் அவதாரத்தில் தோன்ற வேண்டி வணங்கினார். முனிவரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு பெருமாளும் யோக நரசிம்மர் அவதாரத்தில் தோன்றினார். இதனால் உலகெங்கும் கடும் வெப்பம் தகி்த்தது. 
வெப்பத்தை தாங்க முடியாமல் உயிரினங்கள் அனைத்தும் அழிய துவங்கின. 

இதனை கண்டு அஞ்சிய தேவர்கள், மகாலட்சுமியை அணுகி யோக நரசிம்மரால் ஏற்பட்ட வெப்பத்தை தணிக்கும்படி வேண்டினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அங்கு வந்த மகாலட்சுமி யோக நரசிம்மரிடம் வெப்பத்தை தணிக்கும்படி வணங்கி வழிபட்டார். இதனால் யோக நரசிம்மர்  சாந்தமடைந்ததால் வெப்பம் தணிந்தது. இந்த நிகழ்வுக்கு பின்னர் இங்கு யோக நரசிம்மருக்கு கோயில் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. 

மாசி மாதம் பவுர்ணமி தினத்தன்று இங்குள்ள சக்கர தீர்த்த குளத்தில் கஜேந்திர மோட்சம் நடைபெறும். திருவண்ணாமலை போன்று பக்தர்கள் இங்கும் கிரிவலம் வருகின்றனர். சிவன் கோயில்களில் நடக்கும் பிரதோஷ வழிபாடு போன்று இங்கு யோக நரசிம்மருக்கு பிரதோஷ பூஜை நடக்கிறது. கோயில் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கிறது. 

தேய்பிறை சதுர்த்தி பிரதோஷ காலத்தில் யோக நரசிம்மரை வழிபட்டால் தொழில் சிறக்கும். எதிரி பயம் மற்றும் மரண பயம் நீங்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் யோக நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். குடும்பத்தலைவியிடம் அடிக்கடி கோபமடையும் குடும்பத்தலைவர்கள் தேய்பிறை சதுர்த்தி பிரதோஷ காலத்தில் நரசிங்கவல்லி தாயாரை வணங்கினால், கோபம் தணிந்து சாந்த சொரூப குணத்தை அடைவார்கள் என கூறப்படுகிறது. 

மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் இருந்து கோயிலுக்கு டவுன் பஸ் மற்றும் ஆட்டோவில் சென்று வரலாம். 

No comments:

Post a Comment