Thursday, 4 January 2018

அந்தக் கால மாட்டுப்பொங்கல்


அந்தக் காலத்தில் நடந்த மாட்டுப்பொங்கல் பற்றி பலருக்குத் தெரியாது. இதோ! அந்த விசேஷமான "மாட்டுப்பொங்கல்' இங்கே படைக்கப்படுகிறது. மாட்டுப்பொங்கல் அன்று மாலையில், ஊரிலுள்ள மாடுகள் எல்லாம் ஒரு மந்தையில் கூடும். ஊர்ப்பெரியவர்கள் வீடுகளுக்குச் சென்று வெல்லம், அரிசி, தேங்காய், தயிர், பழம், சீயக்காய், எண்ணெய் வாங்கி வருவர். மந்தையின் ஒதுக்குப்புறத்தில், சேகரித்த அரிசியைக் கொண்டு பொங்கலிடுவர். பிறகு தயிர், வாழைப் பழம், தேங்காய்ப் பல், வெல்லத்தை பொங்கலுடன் கலக்குவர். 
பொங்கல் குவிக்கப்பட்டு சிவலிங்கம் போல் காட்சி தரும். குவிக்கும் போது, வாயில் துணி கட்டி செய்வார்கள். எச்சில் தெறித்து, புனிதம் கெடக்கூடாது என்பதற்காக தான்.

மந்தையின் மேற்புறம் மண்ணால் கட்டிய பெரிய மேடை இருக்கும். அதில் வெள்ளைத் துணி விரித்து, அதன் மேல் வாழை இலைகளை வரிசையாக விரிப்பார்கள். இலைகளில் பொங்கலைப் பரப்புவார்கள். அந்த மேடைக்குத் "திட்டாணி' என்று பெயர். அதற்கு நேராக, கிழக்கே "கள்ளி வட்டம்' என்ற அமைப்பு இருக்கும். அங்கே கிளை கிளையாகப் படர்ந்திருக்கும் திருகுக் கள்ளியை ஒடித்து வந்து, அவற்றில் எண்ணெய்யில் நனைக்கப்பட்ட திரிகளைச் செருகுவார்கள். ஒரு பெரிய சட்டியில் சாம்பிராணி புகைந்து கொண்டிருக்கும். இவற்றுக்குப் பாதுகாவலாக "திட்டாணிக்காவலர்' இருப்பார்.

பொங்கல் கொட்டி வைத்திருக்கும் மேடைக்கும், கள்ளி வட்டத்துக்கும் நடுவே மாடுகள் கொண்டு வரப்படும். அவற்றின் வாலில் இருந்து சிறிதளவு முடியை நறுக்கி எடுப்பர். அதன்பின், அவற்றின் முதுகில் கொஞ்சம் எண்ணெய் தடவி, சீயக்காய்த் தூளைத் தேய்ப்பர். பிறகு தண்ணீர் நிரம்பிய செம்புகளில், மாவிலையை நனைத்து மாடுகள் மீது வீசி குளிப்பாட்டுவர்.

பிறகு, மாடுகளுக்கு பொங்கல் ஊட்டுவர். மாவிலை, ஆவாரம் கொத்து, பிரண்டை, பீளைப்பழம் ஆகியவற்றை கோரைப்புல் கொண்டு மாலையாகக் கட்டி மாடுகளுக்கு அணிவிப்பர். கற்றாழை நாரால் ஆன வண்ணக் குஞ்சங்களை சிறுவர்கள் மாடுகளின் கொம்பு, கழுத்து, கால்களில் கட்டுவர். 

ஒருவர் கையில் தீச்சட்டி இருக்கும். மற்றொருவர் சேகண்டியை (தோசைக்கல் போன்ற வெண்கல இசைக்கருவி) அடிப்பார். இன்னொருவர் திருச்சங்கு ஊதுவார். ஒருவர் நீர் நிறைந்த செம்பில் மாவிலை செருகி நிற்பார். குரல்வளம் மிக்க ஒருவர் மாட்டுப்பொங்கல் பற்றி பாடுவார். அதை மற்றவர்கள் எல்லோரும் சேர்ந்து பாடுவார்கள். பிறகு மாடுகளை வலம் வருவார்கள். அப்போது "பொங்கலோ பொங்கல்' எனக் கூவுவார்கள்.

இந்த வைபவத்தின்போது பெண்கள் மந்தைக்கு வருவதில்லை. வீட்டில் இருக்கும் அவர்களின் காதில் "பொங்கலோ பொங்கல்' சத்தம் கேட்டவுடன், அவர்கள் பலகாரங்களை தெய்வத்துக்குப் படைப்பார்கள். இந்த நிகழ்ச்சி மாலையில் துவங்கி, நள்ளிரவு மூன்று மணி வாக்கில் முடியும். அதுவரை பெண்கள் தூங்கமாட்டார்கள்.

இதன் பிறகு மாடுகள் மந்தையில் இருந்து வீடு திரும்பும். ஆனால், வீட்டுக்கு ஒருவர் மந்தையிலேயே இருப்பார்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒரு பாத்திரம் இருக்கும். திட்டாணியில் இருக்கும் பொங்கல் ஆளுக்கு ஒரு கவளம் வீதம் பாத்திரத்தில் போடப்படும். மீதியிருக்கும் பொங்கலை அங்கு இருக்கும் மற்றவர்களுக்கும் சிறு சிறு உருண்டைகளாகக் கொடுப்பார்கள். 

"பெருமாள் சோறு' என்று சொல்லி, அதை எல்லாரும் சாப்பிடுவார்கள் மந்தையில் இருந்து, விழா முடிந்து மாடுகள் வீடு திரும்பும்போது, பெண்கள் தங்கள் வீட்டின் எல்லையில் சிறிதளவு வைக்கோலைப் போட்டுக் கொளுத்தி, ஓர் உலக்கையையும் குறுக்காகப் போட்டு வைப்பார்கள். மாட்டுக்கு திருஷ்டி, வியாதி வராமல் இருக்கவும், நல்ல விளைச்சல் கிட்டும் என்ற நம்பிக்கையிலும் இவ்வாறு செய்வர். வித்தியாசமான இந்தப் பொங்கலை, கிராம ஒற்றுமை கருதி இப்போதும் நடத்தலாமே!

No comments:

Post a Comment