Friday 19 January 2018

உனக்குள் ஒருவன்


ஒரு காட்டில் இருந்த பர்ணசாலையில் வசித்த எலி, தனக்குத் தேவையான உணவை அங்கேயே சாப்பிட்டு கொழுத்தது. ஆனால், அங்கிருந்த பூனையைக் கண்டு பயந்தது. ஒரு முனிவரிடம் சென்று, "எலியாய் இருப்பதால் தானே வெளி உலகத்திற்குச் செல்ல பயப்படுகிறேன். என்னையும் பூனையாக்கினால் தைரியமாக உலவி வருவேனே'' என்றது. எலியைப் பூனையாக்கினார் முனிவர். 

பூனையாக மாறிய எலி மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால், அந்த பர்ணசாலையில் நாய் இருப்பதை மறந்தே போய்விட்டது. நாய் பூனையை விரட்டியடித்தது. 

முனிவரிடம் தஞ்சம் அடைந்த பூனை, "முனிவரே! என்னையும் நாயாக்கி விடுங்கள். பூனையாக இருந்தால் நாய் துரத்துகிறதே!'' என்றது. முனிவரும் பூனையை நாயாக மாற்றினார். 

ஒருநாள் காட்டுக்குள் சென்ற நாய், அங்கிருந்த சிறுத்தையை கண்டு மிரண்டு ஓடியது. முனிவரிடம் தன்னை சிறுத்தையாக்கும் படி வேண்டியது. முனிவரும் அப்படியே செய்தார். சிறுத்தை சிங்கத்தைக் கண்டு அஞ்சியது. எனவே, முனிவரிடம் வேண்டி சிங்கமாகவும் தன்னை மாற்றிக் கொண்டது.

இதன்பிறகு, தன்னிலும் பலமிக்க சிங்கங்களை இந்த முனிவர் படைத்து விட்டால் என்ன செய்வது என்று பயந்தது. அதனால் முனிவரையே கொன்று விடும் முடிவுடன் பர்ணசாலைக்கு வந்தது. அதன் எண்ணத்தை அறிந்த முனிவர் மீண்டும் அதை எலியாக்கி விட்டார். 

"எலியே! உனக்குள் ஒருவனாக ஒளிந்திருக்கும் மனமே உன் உண்மையான எதிரி. இதை புரிந்து கொள்ளாததால் தான், உனக்கு எதிரிகள் இருப்பதாக எண்ணி நிம்மதியின்றி தவிக்கிறாய்,'' என்று அறிவுறுத்தி அனுப்பினார். அவரவர் நிலையை தக்க வைத்தாலே போதும். வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.

No comments:

Post a Comment