Sunday 8 October 2017

கலைமகளின் கவினுறு ஆலயங்கள்


கல்விக் கரையிலா கச்சி எனப்படும் காஞ்சிபுரத்தில் கச்சபேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சரஸ்வதி சிவனை பூஜித்து பேறு பெற்ற ஆலயமாகும். இங்கு சரஸ்வதி தேவிக்கு தனிச் சந்நதி உண்டு. இங்கு செய்யப்படும் பிள்ளைகளுக்கான கல்வித் தொடக்கம் தொழிற்சாலைக்குரிய தொடக்கம், பூஜைகள் வெகு பிரசித்தி பெற்றது. இவ்வன்னையை லலிதா திரிபுரசுந்தரியின் படைத்தலைவியருள்  ஒருவளான சியாமளாதேவியின் வடிவமாக வணங்குபவர்களும் உண்டு. இந்த அம்பிகை வீணை, கிளி, பாசம், அங்குசம், சாரிகை எனும் பறவை , தாமரை, நீலோத்பலம், மலரம்பு, கரும்புவில் ஆகியவற்றை ஏந்தி காட்சி தருகிறாள்.

தஞ்சை மாவட்டம், திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயிலில் ஆலயக் கருவறை கோஷ்ட தேவதையாக சரஸ்வதி அமைந்துள்ளதை காணலாம். இவள் மேலிரண்டு கரங்களில் அட்ச மாலையுடன் சுவடியையும் முன்னிரு கரங்களில் அபய ஊரு முத்திரையையும் கொண்டிருக்கிறாள். 

வேலூரின் ஒரு பகுதியாக விளங்கும் தோட்டப்பாளையத்தில் தாரகேஸ்வரர் ஆலயத்திலுள்ள கோஷ்ட தெய்வமான பிரம்மாவிற்கு எதிரில் சரஸ்வதி தேவியையும் தரிசிக்கலாம்.

திருமறைக்காடு: இங்கு சரஸ்வதி கலைகளில் வடிவமாக நின்று இறைவழிபாடு செய்தாளாம். இத்தலம் வந்திருந்து அம்பிகையை தரிசிப்பதோடு சிவபூஜை காண்பதால் வேதங்களைக் கற்றுணர்ந்த பலனைப் பெறலாம்.

ஆந்திர மாநிலம் பாசாரா என்ற ஊரில் வாக் தேவிக்கு ஒரு கோயில் உள்ளது. இது வியாசரால் வழிபடப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீசென்னகேசவர் கோயிலில் கலைமகள் நடன சரஸ்வதியாக திருக்கோலம் கொண்டிருக்கிறாள். 

குமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் சரஸ்வதி தேவிக்கு தனிக்கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலில் கம்பர் சரஸ்வதி தேவியை வழிபட்டார் என வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. இன்னும் இக்கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment